Wednesday, November 24, 2004

படிக்க வேண்டிய பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரை

அக்டோபர் 2004 உயிர்மை இதழில் பிரம்ம வித்யா என்ற தலைப்பில் பிரேம்-ரமேஷ் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் அதற்குப் பதிலளித்து நவம்பர் 2004 உயிர்மையில் எழுதியிருக்கிறார். மனுஷ்ய வித்யா என்ற தலைப்பிலான அக்கட்டுரை சில வாரங்களுக்கு முன் திண்ணை இணைய இதழிலும் வெளிவந்தது. படிக்க வேண்டிய கட்டுரை என்று அதை நான் சிபாரிசு செய்கிறேன்.

ஒரு மார்க்ஸிஸ்ட்டாக பி.ஏ.கிருஷ்ணன் அடையாளம் காணப்படுகிறார் என்று அறிகிறேன். தாங்கள் நம்புகிற தத்துவத்தின் நடைமுறைச் செயற்பாடுகள் (implementation) பொதுவாழ்வில் வென்றாலும் தோற்றாலும் நிஜமான மார்க்ஸிஸ்ட்டுகள் தங்களை இன்னார் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் தவறுவதில்லை. அந்த விதத்தில் பி.ஏ. கிருஷ்ணனைப் பாராட்டுகிறேன்.

இந்தியாவில் இந்துத்துவா சக்திகள் வலிமை பெறத் துவங்கிய காலகட்டத்துக்குப் பிறகு இந்து என்ற சொல்லே இடதுசாரிகளுக்குத் தீண்டத்தகாத சொல்லாகிவிட்டது. இடதுசாரிகளின் இந்த மனோநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும் இந்த மனோநிலை தவறானது என்றே நான் சொல்லுவேன். இந்து மதத்தில் சிறுமைகளோடு பெருமைகளும் உண்டென்பதை இடதுசாரிகள் மறந்துவிட்ட காரணமே இந்துத்துவா சக்திகள் வளர உதவியது என்றும் சொல்லலாம். மேலும் "பௌத்தம் ஒரு மேலான மாற்று மதம்" என்ற ஓர் நம்பிக்கையும் இங்கே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் "இந்து மதம்" குறித்த ஒரு சரியான இடதுசாரிப் பார்வையை மார்க்ஸிஸ்ட்டுகள் உட்பட யாருமே கடந்த இருபது ஆண்டுகளில் அதிக அளவில் தமிழில் வைக்கவில்லை. ஜெயகாந்தன், கோவை ஞானி போன்றவர்கள் அதை அவ்வப்போது செய்ய முயன்றபோது கூட, அவர்களையெல்லாம் அதற்காகக் கட்சி சார்ந்த இடதுசாரிகள் பழித்தே வந்தனர். பெரியார் வழி வந்ததாகச் சொல்லிக் கொள்கிறவர்கள் இந்து மதத்தை ஒரேயடியாய் தூக்கி எறியவும், ஒரு பிரிவினர் பௌத்தமே மேலான மதமென்று நினைக்கவும், மதரீதியான ஏகாதிபத்தியமே தீர்வு என்று இந்துத்துவா சக்திகள் முரசம் கொட்டவும் இவையெல்லாம் ஓரளவிற்காவது உதவின.

1950 மற்றும் 1960களில் இடதுசாரிகளில் பொதுப் பிரச்னைகள் குறித்தான விவாதங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். தங்கள் தரப்பு வாதத்தை தர்க்க ரீதியாகவும், சரித்திர ரீதியாகவும் எடுத்து வைத்தார்கள். எது குறித்தும் எந்தப் பார்வையும் இல்லாமல் இருந்தவர்களுக்குக் கூட, இவையெல்லாம் புதிய பார்வையைத் தந்தன. உதாரணமாக, திராவிட இயக்கங்களைக் குறித்து அந்தக் காலத்தில் இடதுசாரிகள் முன்வைத்த கறாரான விமர்சனங்களைச் சொல்லலாம். ஆனால், இப்போதெல்லாம் இணையத்தில் இந்துத்துவா சக்திகள் ஆர்வமாகவும் முனைப்பாகவும் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கிற அளவுக்கு இடதுசாரிகளைப் பார்க்க முடிவதில்லை. முக்கியமாகத் தமிழில் இது பெரிய குறை. தமிழ்நாட்டு இடதுசாரிகள் திராவிட இயக்கங்களுக்கு வால் பிடிக்கிற காரியத்தில் மும்முரமாக இருந்தால் போதுமென்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. தமிழ் தவிர பிற மொழிகளில் இடதுசாரிகள் முனைப்பாக இருக்கலாம். அங்கெல்லாம் இந்துத்துவாவும் முனைப்பாக இருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். ஆனால், தமிழில் அரவிந்தன் நீலகண்டனோ மற்றவர்களோ எழுதுகிற அளவுக்கு இடதுசாரிகள் முனைப்பாகவும் ஆர்வமாகவும் இல்லை என்பதே வருந்தத்தக்க உண்மை. இந்த இரண்டு பத்திகளில் நான் சொல்லியுள்ளவை, ஒரு சராசரி தமிழ் வாசகனாக நான் பார்த்தவை. இவையெல்லாம் தவறு, இடதுசாரிகள் இங்கே எழுதுகிறார்கள், அங்கே எழுதுகிறார்கள் என்ற பதில்கள் இருக்குமானால், அவையெல்லாம் எந்த அளவுக்கு வெகுஜனங்களைச் சென்று சேருகின்றன (முக்கியமாகத் தமிழ்ச் சூழலில்) என்பதே என் அடிப்படைக் கேள்வி என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

என்னைப் போன்ற வாசகர்களின் நிலையோ இன்னும் பரிதாபம். அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் முன்வைக்கிற மதரீதியான ஏகாதிபத்தியக் கொள்கைகளும், தலித்துகளில் ஒரு பிரிவினர் அதற்கு மாற்றாக முன்வைக்கிற பௌத்தமும் தவறு என்று உள்ளுணர்வு சொன்னாலும், அது குறித்த மாற்றுக் கருத்துகள் அதிகம் இல்லாத சூழலில் மேலும் அறிந்து கொள்வதற்குக் கூட நேரமும் சிரமமும் எடுக்கிற வாழ்க்கைச் சூழலில் என்னைப் போன்றோர் இருக்கிறோம். தமிழில் மட்டுமே அதிகம் வாசிக்கிற என்னைப் போன்றோருக்கு இது இன்னும் சிரமம் தருகிறது.

இச்சூழ்நிலையில் பி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரை நிறைய விஷய ஞானத்தையும் தெளிவையும் எனக்குத் தந்தது. பெரியார் பற்றி எழுதுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். பி.ஏ. கிருஷ்ணன்தான் அதைச் செய்ய வேண்டுமென்பதில்லை. ஆனால், இத்தகைய கட்டுரைகளைத் தமிழில் பார்ப்பதுதான் சிரமமாக இருக்கிறது. என்ன எழுதினாலும் தங்கள் சார்பை மாற்றிக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால், பி.ஏ. கிருஷ்ணன் மாதிரி மெத்தப் படித்தவர்கள், தங்கள் ஞானத்தைப், புரிதலை இத்தகையக் கட்டுரைகளின் மூலம் தொடர்ந்து பகிர்ந்து கொள்வது, எந்தப் பார்வையும் இல்லாத வாசகர்கள் தெளிவு பெறவும், தர்க்கரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும், மனிதநேய அடிப்படையிலும் என்ன பதிலென்று தேடுகிற வாசகர்கள் உண்மைகளை அறியவும் உதவும். பி.ஏ. கிருஷ்ணன் ஒரு தொடராகவே இந்துமதம் குறித்த தன் எண்ணங்களையும், புரிதல்களையும், மற்ற மதங்களுடன் அது எவ்வாறு அவர் பார்வையில் வேறுபடுகிறது என்பதையும் எழுத வேண்டுமென்று வேண்டுகிறேன்.

***** ***** *****

நேற்றைய தமிழ் வார்த்தை: நிலைகுத்துதல். பொருள்: மரணத் தறுவாயில் விழி முதலியன அசைவின்றி நிற்றல். (to be fixed or rigid, as the eye at the dying stage). உதாரணம்: அவள் அழகில் அவன் நிலைகுத்தி நின்றான்.

இன்றைய தமிழ் வார்த்தை: தொனுதொனுப்பு. பொருள்: 1. அலப்புகை (babbling, idle gossip), 2. துன்புறுத்துகை (worrying). உதாரணம்: தொனுதொனுப்பே கருத்துச் சுதந்திரம் என்று நம்புகிற தொனுப்பர்கள் இணையத்தில் உண்டு.

நாளைய தமிழ் வார்த்தை: பல்லவி பாடுதல். பொருள்: 1. பாட்டின் பல்லவியைத் தாளத்திற்கியையப் பாடிவருதல் (to sing pallavi), 2. ஒரு விஷயத்தை அடுத்தடுத்துக் கூறுதல் (to be harping on the same theme). உதாரணம்: எல்லாப் பிரச்னைகளுக்கும் பிராமணர்களே காரணம் என்ற பல்லவி பாடுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

1 comment:

பரி (Pari) said...

தொனுதொனுப்பு. பொருள்: 1. அலப்புகை (babbling, idle gossip), 2. துன்புறுத்துகை (worrying).
>>
தொனதொன-ன்னு பேசாதே-ன்னு சொல்வாங்களே, இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கா?