இன்றைய வார்த்தை: காந்துதல். பொருள். 1. எரிவெடுத்தல் (to burn, smart, as a sore). உதாரணம்: கைப்புண் காந்துகின்றது. 2. வெப்பங்கொள்ளுதல் (to feel burning sensation in the body) 3. கருகுதல் (to be scorched, charred, reduced to cinder) உதாரணம்: சோறு காந்திப் போயிற்று. 4. மனங்கொதித்தல் (to be hot with indignation) உதாரணம்: புத்திபோய்க் காந்துகின்றது. 5. பிரகாசித்தல் 6. பொறாமை கொள்ளுதல். உதாரணம்: அவளைக் கண்டு காந்துகிறாள். 7. வீணாய் எரிதல், 8. கோபித்தல்
குற்றியலுகரம்:
குற்றியலுகரத்தைப் பற்றி இப்போதே தெரிந்து வைத்துக் கொள்வது பின்னாலும் உதவும் என்பதால் அதைப் பார்த்துவிட்டு, ஒற்று மிகும் இடத்துக்குச் செல்வோம்.
ஓர் எழுத்தை உச்சரிக்க ஆகும் கால அளவுக்கு மாத்திரை என்று பெயர். கண்ணை ஒரு முறை நொடித்தல் அல்லது கண்ணை ஒருமுறை இமைத்தல் ஒரு மாத்திரை எனப்படும். தமிழில் குறில் எழுத்துகளை (அ, இ, உ, எ, ஒ மற்றும் க, கி, கு, கெ, கொ, ச, சி, சு, செ, சொ, ... முதலியன) உச்சரிக்க ஆகும் கால அளவு ஒரு மாத்திரையாகும். நெடில் எழுத்துகளை (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ, மற்றும் கா, கீ, கூ, கே, கை,கோ, கௌ, சா, சீ, சூ, சே, சை, சோ, சௌ, ... முதலியன) உச்சரிக்கும் கால அளவு இரண்டு மாத்திரைகளாகும். அளபெடைகளை (இன்னிசை அளபெடை முதலியன) உச்சரிக்கும் கால அளவு மூன்று மாத்திரைகளாகும்.
ஒரு சொல் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருந்து, சொல்லின் இறுதியில் கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வார்த்தைகளில் ஒன்று வந்து, அந்த இறுதியெழுத்து தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலித்தால் அதைக் குற்றியலுகரம் எனலாம். இந்த இறுதியெழுத்து தன் மாத்திரை அளவான ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.
(இரண்டு எழுத்துகளைக் கொண்ட குற்றியலுகரமும் உண்டு. அதற்குப் பெயர் நெடில்தொடர்க் குற்றியலுகரம். அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம்.)
உதாரணமாக, நோக்கு, பாக்கு, கொக்கு, கச்சு, மச்சு, வீச்சு, நோட்டு, பாட்டு, கேட்டு, பாதுகாப்பு, நேற்று, அங்கு, இங்கு, எங்கு முதலியன குற்றியலுகரங்களாகும்.
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். ஒரு குற்றியலுகரத்தில் அதன் இறுதி எழுத்துக்கு முன்னுள்ள சொல் எந்த இனத்தைச் சார்ந்ததோ, அந்தச் சொல்லும் அந்த இனத்தைச் சார்ந்த குற்றியலுகரம் எனப்படும்.
1. வன்றொடர்க் குற்றியலுகரம். உதாரணம்: கச்சு, மச்சு, பாட்டு, கேட்டு, நேற்று
2. மென்றொடர்க் குற்றியலுகரம். உதாரணம்: நுங்கு, பஞ்சு, பண்டு, அங்கு, இங்கு
3. இடைத்தொடர்க் குற்றியலுகரம். உதாரணம்: சால்பு, சார்பு, வீழ்து, போழ்து, கொய்து
4. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். இவற்றில் இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து உயிர்மெய்யெழுத்துகளாக இருக்கும். அந்த உயிர்மெய்யைப் பிரித்தால், இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து உயிரெழுத்தாகும். எனவே, இது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். உதாரணம்: வரகு (வ ர்+அ கு), வறிது (வ ற்+இ து), பாலாறு (பா ல்+ஆ று)
5. நெடில்தொடர்க் குற்றியலுகரம். இறுதியெழுத்துக்கு முன்னெழுத்து நெடிலாகவும், இரண்டெழுத்துச் சொல்லாகவும் இருக்கும். உதாரணம்: நாகு, காசு, ஆடு, தூது
6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்: இறுதியெழுத்துக்கு முன்னெழுத்து ஆய்த எழுத்தாக இருக்கும். உதாரணம்: அ·து, எ·கு
இந்த முன்னுரையை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ஒற்று மிகும், மிகா இடங்களில் குற்றியலுகர வகைகளைப் பற்றிப் பேசப் போகிறோம்.
வல்லின ஒற்று மிகும் இடம்: அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் வல்லின ஒற்று மிகும். இந்த இடப்பெயர்களைப் பார்த்தீர்களேயானால், இவை மென்றொடர்க் குற்றியலுகரங்களாகும். ஆனால், இவை இடப்பெயர்களாக இருப்பதால் வல்லின ஒற்று மிகும். ஆனால், பொதுவாக மென்றொடர்க் குற்றியலுகரங்களில் ஒற்று மிகாது. இதைப் பற்றி ஒற்று மிகா இடங்களைப் பற்றிப் பேசும்போது விவரமாகப் பார்ப்போம்.
உதாரணம்: அங்குப் பார்த்தேன், இங்குப் பார்த்தேன், எங்குப் பார்த்தேன், ஆங்குப் பார்த்தான், ஈங்குப் பார்த்தான், யாங்குப் பார்த்தான், ஆண்டுக் கண்டேன், ஈண்டுக் கண்டேன், யாண்டுத் தந்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
காந்துதல் - திருநெல்வேலித் தமிழில் வெகு சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை இது. அதே அர்த்தம்தான். கறுப்பே அழகு காந்தளே ருசி என்பதில் வரும் காந்தள் இதேதானா வேறா?
வெண்கல உருளியில் செய்யப்படும் அரிசி உப்புமா,உருளியின்
உள்ளடியில் ஒட்டியிருக்கும்-சுரண்டி தின்றால் ருசியாக இருக்கும் அதனை "காந்தல்" என அழைப்பார்கள் கீழத்தஞ்சை பகுதிகளில்.
~வாசன்
காந்தள் (பெயர்சொல்)
இதன் பொருள்,
இலக்கியங்களில் பெண்களின் கை விரல்களுக்கு உவமையாகக் கூறப்படும்,நெளிவுகள் உடைய சிவப்பு பூ (Glory Lily) என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
~ வாசன்
"குற்றியலுகரம்" என்ற சொல்லை வாசித்ததும், "குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆயுதக் குறுக்கம்" என்று பள்ளியில் புரிந்தோ புரியாமலோ கடம் அடித்த பெயர்கள் வாயில் தானாக வருகின்றன. :)
Post a Comment