Monday, December 13, 2004

தமிழின் மறுமலர்ச்சி - 8

(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம்', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.)

"தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி" என்ற கட்டுரையிலிருந்து...

பகுப்பு நெறி, தொகுப்பு நெறி:

செங்கற்களை அடுக்கி, சுவர்களை எழுப்பி வீடு கட்டுகிறோம். இதுபோலவே, எழுத்துக்களை அடுக்கிச் சொற்களை முறைப்படி நிறுத்தி வாக்கியங்கள் அமைக்கிறோம். வீட்டிற்கு செங்கல் மாதிரி, வாக்கியத்துக்கு எழுத்துக்கள். ஆனால், இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. சுவர்களை இடித்துச் செங்கற்களை முதல்முதலில் அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால், வாக்கியங்களைத் துண்டித்து, சொற்களாக அடையாளம் கண்டு, பின் ஒலிகளை நிர்ணயித்து, பின் எழுத்துகளை முதன்முதலில் அமைத்திருக்கிறோம். இதுவே வரலாற்று முறை.

பகுப்பு நெறி (analysis), தொகுப்பு நெறி (synthesis) என்று நெறிகள் இரண்டு. பகுப்பு நெறியால் வந்தது எழுத்து; பின் தொகுப்பு நெறிக்குப் பயன்பட்டது. பகுப்பு நெறியேயின்றி, தொகுப்பு நெறிக்குப் பயன்படுவது செங்கல்.

'எழுத்துக்களால் ஆகியது சொல். சொற்களால் ஆகியது வாக்கியம்' என முறையை மாற்றி நீண்டகாலமாக நாம் மனப்பயிற்சி செய்து வந்திருப்பதால், உண்மை வரலாற்றை உணர்ந்து கொள்வதுகூட நமக்கு அருமையாய்ப் போய்விட்டது.

ஒலி இலக்கணம்:

இதைப்போலவே, இன்னோர் உண்மையும் நம் மனத்தைவிட்டு நழுவிவிட்டது. ஒவ்வோர் எழுத்தும் ஓர் ஒலியின் பிரதிநிதி என்பதுதான் இவ்வுண்மை. இதனை மறந்துவிட்டதனால், பிற மொழிகளைப் போலத் தமிழ் மொழியையும் முற்றும் ஆட்சி கொள்ளும் ஒலியிலக்கணத்தை உணராது, தமிழின் ஜீவிய சரித்திரத்தையும், அதன் வளர்ச்சி நெறியையும், அதன் ரூபாந்தரங்களையும், அதன் கிளைமொழிகள் தோன்றிய வரலாற்றையும் தெரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம். ஒலியானது ஆளுக்கு ஆள், இனத்திற்கு இனம், இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறிவிடுவது. மாறிக்கொண்டே செல்வதுதான் அதன் வாழ்க்கை நெறி. நிரந்தரமாக ஓடிக் கொண்டே இருக்கும் ஜீவநதிக்கு ஒப்பானது அது.

எழுத்து அப்படியில்லை. ஒலியை நோக்கும்போது எழுத்து நிலையாயுள்ளது. அதனாலேயே, அதற்கு அக்ஷரம் (அழிவில்லாதது) என்ற பெயர் வந்தது. எழுத்து எளிதில் பரவிச் செல்லத் தகுவது. இதனால் ஓரளவில் கால தேச நியதியின்றிப் பரந்து வழங்கும் தன்மை பெற்றுள்ளது. கண்ணால் பார்க்கத் தகுவது. இதனால் பேசுவோர் இன்றியும் கருத்துகளை உணர்த்தும் தன்மையுடையது. நமது அறிவு வளர்ச்சிக்கு எழுத்தே காரணமாயுள்ளது. "எழுத்தறித்தவன் இறைவன் ஆகும்" என்பது மிக ஆழ்ந்த உண்மை.

தமிழிலுள்ள எழுத்துகள் அதிலுள்ள ஒலிகள் அனைத்தையும் முற்ற உணர்த்துவன அல்ல. மக்களது கண்டத்தினின்றும் தோன்றக் கூடிய தனியொலிகள் கணக்கிட்டு முடியா. வீணை முதலிய வாத்தியங்கள் எதனாலும், அத்தனை ஒலிகளையும் உண்டுபண்ண முடியாது. இத்தனியொலிகளில் சிலவே மொழிக்கு உரியனவாகும். இவ்வொலிகளின் எண் மொழிதோறும் வேறுபடும். அதிகமாகப் போனால், அறுபது தனியொலிகளுக்கு மேல் ஒரு மொழியிலும் இல்லை. பெரும்பாலும் இதற்கு மிகக்குறைவு பட்டே மொழியொலிகள் காணப்படுகின்றன. இம்மொழி ஒலிகளைக் கூடத் தனித்தனி உணர்த்துவதற்கு எழுத்துக்கள் அமைதல் இல்லை.

ஆகவே, ஒவ்வொரு மொழியிலும், அதிலுள்ள எழுத்துக்களைக் காட்டிலும், அதன் ஒலிகள் மிகுதியாகவே காணப்படும். தமிழ் மொழியிலும் இவ்வாறே. உதாரணமாக, 'ஏன்' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இதன் முதலாவதாகிய ஏகார ஒலியை 'man' என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள உயிரொலியைப் போன்று நம்மிற் சிலர் உச்சரிக்கிறார்கள். இவ்வொலியை உணர்த்துவதற்குத் தமிழில் எழுத்தே இல்லை. மகன் என்ற சொல்லை 'மஹன்' என்றே பலரும் சொல்லுகிறார்கள். இடையிலுள்ள மெய் ஒலிக்குத் தமிழில் எழுத்தே இல்லை. இங்ஙனம் பல.

இக்குறைபாடுகளை நீக்குவதற்கு மூன்று வழிகள் கையாளப்பட்டன.

முதலாவது, நெருங்கிய தொடர்புடைய பிற ஒலிகளின் எழுத்துக்களைக் கொண்டு, இடத்தின் ஆற்றலால் சில ஒலிகள் உணர்த்தப்பட்டன. உதாரணமாக, பங்கு, பஞ்சு, பண்டு, பந்து, பண்பு என்பனவற்றைக் காட்டலாம். இச்சொற்களிலுள்ள பகரத்தைக் காட்டிலும், இவற்றிலுள்ள கு, சு, டு, து, பு என்பன மெலிந்து உச்சரிக்கப்படுவதைக் காண்கிறோம். தமிழறிஞர் வகுத்துள்ள மெல்லினங்களை நோக்க, இந்தக் கு, சு, டு, து, பு ஆகியன வல்லின வகையைச் சேர்ந்தவை. இதனால், 'King' என்ற ஆங்கிலச் சொல்லிலும் காவ்யம் என்ற வடசொல்லிலும் காணப்படும் ககர ஒலியே முற்காலத்தில் இருந்ததெனல் தவறாகும். 'go' என்ற ஆங்கிலச் சொல்லிலும், 'குரு' என்ற வடசொல்லிலும் உள்ள மிருதுவான ககர ஒலியும் முற்காலத்தில் இருந்தது. இதுபோன்ற பிற வல்லின எழுத்துக்களுக்கும் மிருதுவான ஒலிகள் உண்டு.

இரண்டாவதாக, வடமொழியிலுள்ள சில ஒலிகள், அவற்றிற்கு இனமான தமிழொலிகளாக மாற்றி உணர்த்தப்பட்டன. உதாரணமாக, வேஷம், வேடம் என்பதைக் காண்க.

மூன்றாவதாக, வடமொழி ஒலிகள் அம்மொழிக்கு உரிய எழுத்துக்களையே கையாண்டு உணர்த்தப்பட்டன. உதாரணமாக, 'வேஷம்' என்ற வடசொல்லை, 'வேஷம்' என்று தமிழில் ஷகரமிட்டு எழுதுவதைக் காணலாம். இம்முறைதான் இப்போது பெருவழக்கமாக உள்ளது. எனினும் மணிப்பிரவாள நடை தோன்றிய 9-ஆம் நூற்றாண்டு முதலே, இம்முறையும் கொள்ளப்பட்டதெனக் கூறலாம்.

இக்குறைகள் அல்லாமல், சில ஒலிகளைக் குறிப்பதற்கு இரண்டு குறியீடுகள் வழங்கவும் இடம் இருக்கிறது. உதாரணமாக, ஐகாரத்தை அகரமும் யகரமும் இட்டு எழுதலாம்.

ஒவ்வொரு மொழியைப் பேசிவரும் ஒவ்வோர் இனத்தவரும் தனிபட்ட இயல்புடைய ஒலிக்கணத்தையே வழங்குவர். ஆரிய மக்கள் ஒலிக்கணம் வேறு; தமிழ் மக்கள் ஒலிக்கணம் வேறு; ஜெர்மானியர் ஒலிக்கணம் வேறு; இப்படி இன்னும் சொல்லலாம். இக்கணத்தின் இயல்பு சொற்களில் ஒலி தொடர்ந்து வரும் முறையில் நன்கு புலப்படும். ஹார்ஸ் (horse) என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிக்கணம் தமிழில் வருதலில்லை. இங்ஙனமே, 'குதிரை' என்று பொருள் படும் ப்வெர்ட் (pfred) என்ற ஜெர்மானியச் சொல்லின் ஒலிக்கணம் ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளிற்கூட வருதலில்லை. ஒலிக்கணத்தின் இயல்பு இவ் உதாரணங்களால் தெளிவாய் விளங்கும். தமிழிலுள்ள ஒலிக்கணத்தின் இயல்பு நமது மூதாதையரின் பேச்சு வழக்கத்தைப் (speech habit) பொருத்துள்ளது. இங்ஙனமே, பிறமொழிகளின் ஒலிக்கணங்களின் இயல்பு, அவ்வம்மொழிக்கு உரியாரின் பேச்சு வழக்கங்களைப் பொருத்ததாம்.

இவ்வழக்கங்களை நுட்பமாய் ஆராய்ந்து, இன்ன இன்ன ஒலிகள் சொற்களைத் தொடங்குவன, இன்ன ஒலிகள் இறுதியில் வருவன, இன்ன ஒலிக்குப் பின் இன்ன ஒலிதான் வரும் என்ற நியதியை அறிந்து இலக்கணம் வகுத்த பெருமை முற்காலத்து ஆசிரியர்களுள் தொல்காப்பியனார் ஒருவருக்கே உரியது. மொழி மரபு முதலிய விஷயங்களில் இவ்விஷயம் கூறப்படுகிறது. இலக்கண உலகில் சக்கரவர்த்தி என்று கூறத்தகும் பாணினியாசிரியர் கூட இங்ஙனம் ஆராய்ந்தாரில்லை.

இக்கட்டுரை இன்னும் வளரும்.

எழுத்து, ஒலி இலக்கணம், எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி நான் அறியாத பல கருத்துகளை இக்கட்டுரை கூறுவதால், அக்கருத்துகள் மிகவும் முக்கியமானவை என்று நான் நினைப்பதால், இக்கட்டுரையைப் பெரிதும் சுருக்காமல் முடிந்தவரை அப்படியே தந்து வருகிறேன். கட்டுரையின் அடுத்த உபதலைப்பான ஒலிகள் பிறக்கும் வரலாறில் பேராசிரியர் தொல்காப்பியர் ஒலிகளின் பிறப்பைப் பற்றிச் சொல்லியுள்ளதை விளக்குகிறார்.

(தொடரும்)

2 comments:

Nambi said...

ÅÆì¸õ§À¡ø ¿øÄ ÀÂÛûÇ ¸ðΨÃ. Å¡úòиû.

செல்வராஜ் (R.Selvaraj) said...

பிகேயெஸ், பயனுள்ள கட்டுரை. எழுத்தில் இடத்திற்குத் தகுந்தாற்போல் ஒலி எழும் விதிகளைத் தமிழ் இலக்கணம் காட்டுவது சிறப்பானது தான். ஆனால், இந்த விதிகள் பேச்சுணரிச் செயலிகள் வடிக்கச் சிரமத்தைக் கொடுக்கும். தொல்காப்பியர் முதல் இந்த இலக்கணத்தை வடித்து வைக்க முயன்று வென்றிருக்கிறார்கள் என்கிற போது, இது போன்ற விதிகளைச் செயலிகளிலும் நிரலிகளிலும் அமைக்க இந்தத் தலைமுறையினர் முயன்று வெல்ல வேண்டும். அதற்கும் இது போன்ற கட்டுரைகள் உதவும். வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு நன்றிகள். பாராட்டுக்கள். தொடர்ந்து செய்யவும்.