வார்த்தை: குமுகுமுத்தல். பொருள்: மணம் வீசுதல் (to spread fragrance, to send whiffs of odour). உதாரணம்: பசுமஞ்சள் குமுகுமுக்கிறது. குமுகுமுவென என்பது கமகமவென மருவியதா? கமகம-வென என்பது குமுகுமுவென மருவியதா என்று எனக்குத் தெரியவில்லை.
வல்லின ஒற்று மிகும் இடம்: வன்றொடர்க் குற்றியலுகரத்துக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும். உதாரணம்: கணக்குக் கேட்டார். எழுத்துச் சிதைந்தது, பாக்குக் கடை, விழித்துப் பார்த்தார்.
எட்டுத் தொகை, பத்துப் பாட்டு ஆகிய சொற்களும் வன்றொடர்க் குற்றியலுகரங்களே. அந்தக் காரணத்தினாலும் அவற்றில் ஒற்று மிகுமென்று இப்போது அறிகிறோம் அல்லவா?
இதுவரை பார்த்த வல்லின ஒற்று மிகும் இடங்களை இங்கே தொகுப்போம்:
1. அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னாலும், எ என்ற வினாவெழுத்துக்குப் பின்னாலும் வல்லின ஒற்று மிகும்.
2. அந்த, இந்த, எந்த ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.
3. அப்படி, இப்படி, எப்படி ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.
4. அதற்கு, இதற்கு, எதற்கு ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.
5. அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் - அவை மென்றொடர்க் குற்றியலுகரங்களாக இருந்தாலும் - வல்லின ஒற்று மிகும்.
6. எட்டு, பத்து ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.
7. வன்றொடர்க் குற்றியலுகரத்துக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.
மேற்கண்ட ஏழு விதிகளும் எளிமையானவை. இவற்றில் நினைவில் வைத்துக் கொள்வதும் சுலபம் என்று நினைக்கிறேன்.
அடுத்து, வேற்றுமை உருபுகள் வரும்போது, ஒற்று மிகும் இடங்களைப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் வேற்றுமை உருபுகளைப் பற்றிச் சிறிது பார்த்துவிட்டுத் தொடர்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பீகேயெஸ்,
இந்த 'குமுகுமுங்குது' இன்னும் பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால் எழுத்தில் அதிகம் பார்த்ததில்லை. இந்த சொல்லாடல் ஒரு உணர்வோடு ஒன்றிய அனுபவத்தைத் தருவதாக என் எண்ணம்.
அன்புடன்,
-காசி
"சும்மா கும்முன்னு வாசனை அடிக்குதே". குமுகுமு-ங்கறது கும்-ன்னு சுருங்கிடுச்சோ!
Post a Comment