Monday, December 20, 2004

திண்ணை தொகுப்பு

திண்ணையில் சிறுகதைகள், கவிதைகள், அரசியலும் சமூகமும், அறிவியல் கட்டுரைகள் மேலும் இலக்கியக் கட்டுரைகள் என்று பல பிரிவுகளில் படைப்புகள் வெளியாகின்றன. (வாசகர் கடிதம் மற்றும் அறிவிப்புகளை நான் இங்கே கணக்கில் கொள்ளவில்லை.) மேற்கண்ட பிரிவுகளில் வந்திருக்கிற நல்ல படைப்புகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலுமிருந்து குறைந்தபட்சம் 30 படைப்புகளைத் தேர்ந்தெடுத்தால் மொத்தம் 150 படைப்புகள் ஒரு நல்ல தொகுதியில் அடங்கும். சில பிரிவுகளில் 30 தேறவில்லையெனில், மீதமுள்ள எண்ணிக்கையை நிறைய தேறுகிற பிரிவொன்றுக்குக் கொடுத்துத் தேர்வு செய்யலாம். இல்லையெனில், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தொகுப்பு என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பிரிவிலும் 50 படைப்புகளைத் தேற்றப் பார்க்கலாம். அப்போது ஒரு புத்தகத்துக்குப் பதில் ஐந்து புத்தகங்கள் என்று ஆகிவிடும். திண்ணை கவிதைகள், திண்ணை சிறுகதைகள், திண்ணை இலக்கியக் கட்டுரைகள் இத்யாதி என்று.

இப்படி தொகுக்கப்படுகிற படைப்புகள், தொகுப்பவரின் ரசனையை ஒத்தே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. படைப்புகளைத் தொகுப்பவர் தன் ரசனை சார்ந்து அவற்றைத் தேர்ந்தெடுத்தாலும், எல்லா வகையான படைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் தர முயல்வார். இது உலக வழக்கு. ஒருவேளை இப்படித் தொகுக்கப்படுகிற படைப்புகளில் திருப்தியில்லாதவர்கள் தங்கள் ரசனைப்படி இன்னொரு தொகுதி கொண்டு வரலாம். நிறைய பேர் இப்படித் தொகுக்க தொகுக்க எல்லா ரசனைகளும் இடம் பெறும். மேலும், எல்லாத் தொகுப்புகளிலும் இடம் பெறுகிற பொதுப் படைப்புகளை அடையாளம் கண்டு கொள்ளவும் முடியும். எனவே, இப்படி திண்ணை தொகுப்பொன்றைக் கொண்டு வரவேண்டும் என்பது என் விருப்பம்.

இதைப் பற்றி திண்ணை ஆசிரியர் குழுவிடம் சொல்லிக் கொண்டே வருகிறேன். இப்படி திண்ணைத் தொகுப்பை யாரும் கொண்டுவருவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சொன்ன அவர்கள், அத்தகைய முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாதென்று தெரிவித்து விட்டனர். மேலும், அப்படிப்பட்ட தொகுப்பைக் கொண்டு வருபவர்கள் அத்தொகுப்பில் இடம்பெறும் படைப்புகளின் ஆசிரியர்களிடம் அனுமதி பெற்றுச் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள். என்னைப் போலவே, இன்னும் சிலரும் இத்தகைய தொகுப்பொன்றைக் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனையைச் சொன்னதாகவும் சொன்னார்கள்.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மூன்று நாட்கள் நண்பர்களைச் சந்திக்கப் போகிறேன். பணி நிமித்தத்தால் மடிக்கணினியையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையின் போதும், புத்தாண்டு விடுமுறையின் போதும் கிடைக்கிற நேரத்தை வைத்து என் ரசனையின் அடிப்படையிலான திண்ணை தொகுப்பைக் கொடுக்கலாம் என்று ஆசை. ஒவ்வொரு பிரிவிலும் நான் தேர்ந்தெடுக்கிற படைப்புகளின் பெயர்கள், ஆசிரியர், படைப்பின் சுட்டி ஆகியவற்றை என் வலைப்பதிவில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். இந்த இரண்டு விடுமுறைகளின் போதும் இரண்டு பிரிவுகளையாவது தொகுக்க வேண்டும் என்று திட்டம். முதலில் இலக்கியக் கட்டுரைகள், பின்னர் கவிதைகள், பின்னர் அரசியலும் சமூகமும், பின்னர் சிறுகதைகள், கடைசியாக அறிவியல் கட்டுரைகள் (இதற்கு நான் பொருத்தமான ஆளா என்று தெரியவில்லை. ஆனாலும் முயற்சிக்கிறேன்) என்று வைத்துக் கொள்ள விருப்பம். ஆனால், நேரம் கருதியும் என் வசதி கருதியும் இந்த வரிசை மாறலாம்.

இத்தொகுப்பில் தொடர்களைச் சேர்ப்பதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்களைச் சேர்க்காமல் இருப்பது நல்லதாக இருக்கும் என்று தோன்றுகிறது. தொடர்கள் தனியே பிரசுரம் காண அவை உதவும். உதாரணமாக, பாவண்ணன் எழுதிய அவருக்குப் பிடித்த சிறுகதைகள் தொடர் ஏற்கனவே நூல் வடிவம் பெற்றிருக்கிறது. ஆனாலும், என் ரசனையை கட்டி நிறுத்துகிற பகுதிகள் தொடரில் இருக்குமானால், அவ்வாரத்தை மட்டுமாவது கொடுக்க முயல்கிறேன்.

அதேபோல, பிற பத்திரிகைகளில் ஏற்கனவே பிரசுரம் கண்டு திண்ணையில் மறுபிரசுரம் ஆனவற்றைக் கணக்கில் கொள்வதா வேண்டாமா என்பது இன்னொரு கேள்வி. அத்தகையவற்றைக் கணக்கில் கொண்டாலும் தேர்ந்தெடுக்கும்போது அவற்றுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். உதாரணமாக, திண்ணையில் மட்டுமே பிரசுரமான படைப்பு ஒன்று, திண்ணையில் மறுபிரசுரம் ஆன படைப்பு ஒன்று இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வரும்போது, திண்ணையில் மட்டுமே பிரசுரமான படைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தொகுப்பை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வதன் சௌகர்யம் - படைப்பின் பெயர், ஆசிரியர், படைப்புக்கான சுட்டி ஆகியன மட்டுமே கொடுக்கப் போவதால் - புத்தகம் போடும்போது தேவையாயிருக்கிற படைப்பாசிரியர்களின் அனுமதி - இதற்குத் தேவையில்லை.

திண்ணையில் தாங்கள் ரசித்த படைப்புகளை விருப்பமுள்ளவர்கள் எனக்குப் பொதுவிலோ தனிமடலிலோ சொன்னால், தொகுக்கும் பொருட்டு, அவற்றை ஊன்றிப் படிக்க எனக்கு உதவும். மேலும் - இத்தொகுப்பு குறித்த பிற கருத்துகளும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் தொகுப்பு முழுக்க முழுக்க என் வாசிப்பு, ரசனை சார்ந்தது. அதே நேரத்தில், பிறரின் கருத்துகளுக்கும், ரசனைகளுக்கும் இயன்றவரை மதிப்பளிக்க முயல்வேன். எல்லா எழுத்தாளர்களுக்கும் எல்லா வகையான எழுத்துகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கவும் முயல்வேன். ஆனாலும், இது எல்லாரையும் திருப்தி படுத்துமா என்று எனக்குத் தெரியாது. எனவே, இதில் திருப்தியில்லாதவர்கள் இதைக் குறை சொல்வதைவிட இதைவிட ஒரு நல்ல தொகுப்பை தங்கள் ரசனையின் அடிப்படையில் கொண்டு வருவது மேலான காரியமாக இருக்கும்.

4 comments:

Badri Seshadri said...

நல்ல ஐடியா!

அதையே இன்னமும் ஒருபடி மேலே கொண்டுபோய் திண்ணையிலிருந்து கீழிறக்கிக் கொள்ளக்கூடிய மின்புத்தகமாகவும் வெளியிடலாம்.

அதற்குப் பிறகு அச்சில் புத்தகமாக வெளியிடுவதென்றால் மட்டும்தான் அனைத்து எழுத்தாளர்களையும் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும்.

மு. மயூரன் said...

புத்தகத்தை அல்லது தொகுப்பினை யுனிகோட் குறிமுறையில் செய்யுங்கள்.
பின்னர் அதனை தளையற்ற நிலையில் எல்லோருக்கும் பயன்படக்கூடியவாறு திறந்துவையுங்கள்.
html , pdf ஆகிய இரு கோப்பு அமைப்புக்களிலும் வெளியிடுவது நல்லது.

எதிர்காலத்தில் தமிழில் தேடுவதற்கு வசதியாக இருக்கும்
திண்ணை யுனிகோடில் இல்லை என்பதால் அதன் உள்ளடக்கங்களை கூகிளில் தேட முடிவதில்லை.

வாழ்த்துக்கள்

பிச்சைப்பாத்திரம் said...

Good Idea PKS

I love reading lit. in printed format only, eventhough i move with computer hours together.

Suresh Kannan

Chandravathanaa said...

நல்ல ஐடியா. வாழ்த்துக்கள்.