Tuesday, December 21, 2004

குளிர்காலம்

அமெரிக்க வடகிழக்கு மாகாணங்களில் குளிர்காலம் இன்று முதல் முறைப்படி தொடங்குகிறது. நேற்று வரைக்கும் இலையுதிர் காலம்தான். ஆனால், குளிர்காலம் முறைப்படித் தொடங்கிய பின்தான் வருவேனென்று குளிர் எப்போதும் காத்திருப்பதில்லை. செப்டம்பர்/அக்டோபர் முதற்கொண்டே சீதோஷ்ண நிலை குறைந்து கொண்டே வர ஆரம்பித்துவிடுகிறது. குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னேயே பனிப்பொழிவுகள் நிகழ்வது இங்கே சாதாரணம். நேற்று கூட இங்கே வெப்பநிலை 11 டிகிரி பாரன்ஹீட்டிலிருந்து 19 டிகிரி பாரன்ஹீட்வரைதான் இருந்தது. குளிருடன் சேர்ந்து அடிக்கிற காற்று வெப்பநிலையை இன்னும் பல டிகிரிகள் குறைத்துக் காட்டும். என்னைப் பொறுத்தவரை காற்று இல்லாவிட்டால், எந்தக் குளிரையும் தாங்கிக் கொள்வேன். காற்று மிதமான குளிரைக் கூட மோசமானதாக உணர வைக்கும்.

இந்தியா என்ற உஷ்ண நாட்டிலிருந்து வந்ததால் குளிர்காலம் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. இன்னொரு காரணம், துணிகளின் பொதி கொண்டு உடலைக் குளிரிலிருந்து காத்துக் கொள்கிற வழியை நான் கடைபிடிப்பதில்லை என்பதும். எப்போதுமே லேசான உடைகள் அணியவே எனக்குப் பிடிக்கும். குளிர்காலத்திலும் கூட டிசம்பர் ஜனவரி வரை லெதர் ஜாக்கெட்டுடன் ஓட்டி விடுவேன். காற்றும் குளிரும் நிறைய இருக்கிற நாள்களிலேயே குளிர்காலத்துக்கான உடைகள், தொப்பி, கையுறை அணிவது வழக்கம். எப்போதுமே உடைக்குள் அணிகிற உடலை சூடாக வைத்திருக்க உதவுகிற தெர்மல் உடையை அணியப் பிடிக்காது. ஆனால், குளிர்காலத்துக்கு ஏற்ற உடைகளையும் உபகரணங்களையும் பயன்படுத்திக் கொண்டு, பனிப்பொழிகிற காலங்களிலும், குளிர் உறைகிற காலங்களிலும் கூட இங்குள்ள மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் சந்தோஷங்களை பொழுதுபோக்குகளை விடாமல் அனுபவித்து வருகிறார்கள்.

பனிப்பொழிவுகளை நான் பொதுவாக விரும்புவதில்லை. அதற்குக் காரணம் தினமும் பல மைல்கள் (நிஜமாகவே பல) காரோட்டி அலுவலகத்துக்குப் போய்வருகிற என் நேரத்தைப் பனிப்பொழிகள் பல மடங்கு அதிகரித்துவிடுகின்றன என்பது. மூன்று இஞ்ச்சுகளுக்கு மேல் பனிப் பொழிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்வேன். அதற்குக் குறைவென்றால் அலுவலகம் செல்லவே முயல்வேன். என் மேலாளர் உட்பட அலுவலக நண்பர்களும் அப்படியே செய்வர் என்பதால். ஆனால், சிறுதூறலோ பனிப்பொழிவோ என்றால் போக்குவரத்துத் தாமதமும் நெரிசலும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். விபத்துகளிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் வேறு இன்னொரு புறம். சாதாரண நாட்களிலேயே நியூ ஜெர்ஸிதான் அமெரிக்காவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மாநிலம். மழையோ பனிப்பொழிவோ என்றால் கேட்கவே வேண்டாம்.

விடுமுறை நாட்களில் பனிப் பொழிந்தால் வீட்டிலிருந்தபடி ரசிக்கப் பிடிக்கும். குழந்தைகளைப் பனிமனிதன் செய்யவும், பனியில் விளையாட விட்டும் வேடிக்கை பார்க்கப் பிடிக்கும். பின்னர், குளிருக்கென்று சூடாக வடை, பஜ்ஜி, சமோசா, மசாலா பொரி என்று ஏதேனும் செய்து சாப்பிட்ட பின்னர், தொலைகாட்சியில் ஏதேனும் விளையாட்டையோ சினிமாவையோ பார்க்கப் பிடிக்கும். கூடவே, ஒயினோ பியரோ இருந்துவிட்டால், வேறொன்றும் தேவையில்லை.

வாடகை வீட்டில் இருந்தபோது, பனிப்பொழிவு நின்றவுடன், வெளியே சென்று, பனியில் மூழ்கிப் போயிருக்கிற காரைச் சுத்தம் செய்து, மீட்க வேண்டிய வேலையும் இருக்கும். நானும் மனைவியும் சேர்ந்து இதைச் செய்வோம். குழந்தைகளைப் பனியில் விளையாடவோ தொலைகாட்சி பார்க்கவோ விட்டுவிட்டு. காரை இப்படி உடனடியாக சுத்தம் செய்யாவிட்டால், பனியுறைந்து ஐஸ் ஆகிவிட்டால், பின்னர் சுத்தம் செய்வது கடினம்.

இப்போது சொந்த வீட்டுக்கு வந்தாகிவிட்டது. கார்களை நிறுத்த கராஜ் இருக்கிறது. வழக்கம்போல பொருள்களைப் போட்டுவைக்கிற இடமாக அது ஆகிவிட்டது. ஒரு கார் உள்ளே நிற்க முடியும். இரண்டாவது கார் வெளியேதான் நிற்கிறது. இரண்டாவது காரின் இடத்தைத் தட்டுமுட்டு சாமான்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. பனிப்பொழிவுக்குப் பின் காரைச் சுத்தம் செய்கிற வேலை இங்கேயும் தொடரும் என்று நினைக்கிறேன். கராஜில் இருக்கிற பொருட்களை ஏறக்கட்டி இடம் உண்டாக்க சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு, என் காரை வெளியே நிறுத்திக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பனிப்பொழியும் போது கராஜை ஏறக்கட்டிக் காரை உள்ளே நிறுத்தியிருக்கலாமோ என்று தோன்றப்போவது தவிர்க்க இயலாதது.

பனிப் பொழிந்தால் காரை மட்டும் சுத்தம் செய்கிற வேலை இல்லாமல், டிரைவ் வே, பேவ்மெண்ட் ஆகியவற்றையும் சுத்தம் செய்கிற (பனியை நீக்குகிற) வேலையும் புதுவீட்டில் சேர்ந்துவிட்டது. கடவுளின் கிருபையால் இதுவரை பனிப்பொழிவு ஒன்றும் இல்லை. ஒரு snow blower வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், பக்கத்தில் வசிக்கிற நண்பர்கள் இவ்வளவு சிறிய டிரைவ் வேக்கு snow blower எதற்கு என்று இரண்டு வருடங்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்கள் வீட்டில் விழுகிற பனியை அவர்களே showel வைத்து சுத்தம் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இந்த அசட்டு நம்பிக்கைதான் பல நேரங்களில் என் பலமும் பலவீனமும்.

குளிர்காலத்தில் குளிரும் பனியும் மட்டும்தான் பிரச்னை. வசந்த கோடைகாலங்களில் வருகிற pollen allergey அல்லது seasonal allergy ஆகிய தொல்லைகள் இருக்காது. flu வரலாம். ஆனாலும், குளிர்காலம் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. பலருக்கும் பிடிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

என் நண்பர்கள் பலர் டெக்ஸாஸ், கலிபோர்னியா, ப்ளோரிடா மாகாணங்களில் ஏறக்குறைய இந்தியாவின் தட்பவெப்பச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் நியூ ஜெர்ஸியின் குளிர்காலத்தை விரும்பாமலேயே இங்கே 8 குளிர்காலங்களைச் சந்தித்து விட்டேன். பனிப்பொழிவுகளும் பனிப்புயல்களும் இங்கே வருகிற காலகட்டங்களில் தவறாமல் தொலைபேசியில் நண்பர்கள் அனுதாபம் விசாரிக்கிறார்கள். அவர்கள் இருக்கிற மாநிலத்துக்கு மாறி வந்துவிடச் சொல்கிறார்கள். ஆனால், தட்பவெப்பத்தின் சாதகத்துக்காகக் கூட நியூ ஜெர்ஸியை விட்டுப் போவதற்கு ஏனோ மனம் வரவில்லை. இங்கிருந்து போவதென்றால், பேசாமல் இந்தியா போய்விடலாம் என்று தோன்றும்.

நியூ ஜெர்ஸி அவ்வளவு பிடித்துப் போனதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தொழில் பெயர்வதிலும் இடம் பெயர்வதிலும் எனக்கு இருக்கிற ஆர்வமின்மையும் சோம்பேறித்தனமும் நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

பி.கு.: தினம் ஒரு தமிழ்ச் சொல்லையும், இலக்கணக் குறிப்பையும் இரவு தருகிறேன்.

1 comment:

Anonymous said...

I still like those old snow falling days in NY. Here we miss snowfall. Hope at NJ you wont have much snowfall as in upstate. Here we've to drive 3 hours to Lahe Tahoe to enjoy snow. I like to watch all those snow covered homes decorated with beautiful color lights and ornaments. Every Dec 2nd, they install the tallest chirstmas tree, decorated with 30K color bulbs, straight below our office in rockefeller plaza, that would bring a sense festivity around that place. Once we are used to a place, we get inertia. Once I did not want to leave NY to CA. Now I think if i have to leave CA I'll better leave for India. Hmm.... all depends. Enjoy your winter.

Anbudan
S.Thirumalai