Tuesday, December 21, 2004

இரு புத்தகங்கள்

2004-ல் படித்தவற்றில் சிறந்த புத்தகங்கள் எவை என்று யோசிக்கிறேன். புத்தகம் தவிர சினிமா, பாடல், பத்திரிகை என்று பிற துறைகளைப் பட்டியலிட எனக்கு அத்துறைகளில் பாண்டித்யம் இல்லை. புத்தகங்களில் கூட பாண்டித்யம் இல்லையென்றாலும், தொடர்ந்து படிக்கிற வழக்கத்தை 2004 முழுக்க கைக்கொண்டிருந்தேன் என்ற எண்ணம் படித்தவற்றில் சிறந்த புத்தகங்கள் பற்றிச் சிந்திக்கச் சொல்கிறது.

ஜெயமோகனின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், சுஜாதாவின் ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம், பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை, Richard A. Clarke-ன் Aganist all enemies, Dan Brown-ன் The Da Vinci Code, வையாபுரிப் பிள்ளையின் தமிழின் மறுமலர்ச்சி, மு.வ. வின் தமிழ் இலக்கிய வரலாறு, பலரின் கவிதைத் தொகுதிகள் என்று 2004-ல் படித்த பல புத்தகங்களின் பெயர்கள் உடனடி நினைவுக்கு வருகின்றன. அதே மாதிரி - பல புத்தகங்களை பாதி மட்டும் படித்து வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது மீதியைத் தொடரலாம் என்ற எண்ணம். Barnes & Noble சென்று படித்த பல புத்தகங்களை முடிக்காமல் திரும்பியிருக்கிறேன். பெஞ்சமின் பிராங்க்ளினின் சுயசரிதை (இது இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது.), மால்கம் எக்ஸ்ஸின் சுயசரிதை (இதைத் தமிழில் ரவிக்குமார் மொழி பெயர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.) ஆகியன அப்படி ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்து, இன்னும் முடிக்காமல் வைத்திருப்பவை. புதிய வீட்டுக்கு வந்த பின்னர், வீடு சார்ந்த வேலைகளினால், வார இறுதிகளில் Barnes & Noble போக முடிவதில்லை. புத்தாண்டிலோ வசந்த காலத்திலோ அந்தப் பழக்கத்துக்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும். ஆங்கிலத்தில் நான் படிப்பது மிகவும் சொற்பம். அதை அதிகரிக்கவே புத்தகக் கடைகளுக்குச் சென்று படிக்கிற வழக்கத்தை ஆரம்பித்தேன். அதை விடாமல் தொடர வேண்டும்.

எல்லாப் புத்தகங்களும் எனக்கு ஏதோவொன்றைக் கற்றே தருகின்றன. எனவே, படித்தவற்றில் இரண்டை மட்டும் சுட்டிச் சொல்வது கடினமான செயல்தான். ஆனால், சந்தோஷ் குரு தன் வலைப்பதிவில் இந்த வருடத்தில் அவர் படித்த இரண்டு புத்தகங்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்ததும், எனக்கும் அது குறித்து யோசிக்கத் தோன்றியது.

வீட்டுக்குச் சென்று புத்தக அலமாரியை மீண்டும் ஒரு நோட்டம் விட்டால், படித்தவற்றில் உடனடி நினைவுக்கு வராத சில புத்தகங்களையும் பார்க்கக் கூடும். ஆனால், நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு புத்தகங்களின் முடிவை அது மாற்றிவிடாது என்று நிச்சயமாக என் உள்மனதுக்குத் தோன்றுகிறது. எனவே, 2004-ல் நான் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த இரண்டு புத்தகங்களை இப்போதே சொல்லி விடுகிறேன்.

1. புலிநகக் கொன்றை - பி.ஏ. கிருஷ்ணன் - தமிழ்
2. The Da Vinci Code - Dan Brown - ஆங்கிலம்

இவை ஏன் மிகவும் பிடித்தன என்பது பற்றி என்றைக்காவது வாசக அனுபவத்தை நான் எழுதக் கூடும் என்பதால் இப்போது ஒன்றும் சொல்லப் போவதில்லை.

6 comments:

Mookku Sundar said...

புலிநகக்கொன்றை - நான் வாங்கி, ஊருக்கு அனுப்பி வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்று. படித்த என் சகோதரி, இந்த மாதிரி எழுத்துக்களை படிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அவர் சூசகமாக சொன்னதை வைத்துப் பார்த்தால் நாவலில் கொஞ்சம் A சமாசாரங்கள் அதிகம் போல...

அப்படியா..??

Kangs(கங்கா) said...

1. புலிநகக் கொன்றை - பி.ஏ. கிருஷ்ணன் - தமிழ்
Barnes & Noble'l கிடைக்கிறதா?

Srikanth said...

hmmm, some co-incidence. I read these two books this year too and I would unhesitatingly say that they were the best of what I read too...Happy reading in 2005!

Anonymous said...

கடந்த நான்கைந்து வருடங்களாக மட்டுமே தமிழில் உருப்படியான படைப்புகளை படிக்கிற பேர்வழியான எனக்கு, பு.ந.கொன்றை அவப்போது ஆயாசத்தை கொடுத்தாலும்,2-3 மூச்சில் முழுதும் படிக்க வைத்தது.நிசமாய் இருக்கக் கூடிய மனிதர்களை பற்றி படிக்க அலுத்துப் போனதில்லை.இந்த வகையில் தலைசிறந்ததாய் படுகிறது பு.ந.கொ.

வதவதவென்று இருக்கும் பற்பல கதையின் பாத்திரங்களில் மனதில் நீங்காமல் நிற்பவர்கள் நம்பியும்,ரோசாவும்.

கதைதான் என்றாலும் நம்பியின் மரணம் பட்டென்று கண்ணில் நீரை துளிக்கச் செய்தது.பொதுவுடமை கொள்கையினருக்கும் மற்றவர்களுக்கும் உலகின் பல பாகங்களிலும் நிகழ்ந்த/கொண்டுள்ள/கூடிய போராட்டங்களில் எத்தனை நம்பிகள் இறந்து போகிறார்களோ எனும் எண்ணம் பெரிதும் வதைப் படுத்தியது.

பு.ந.கொன்றை பக்கம் 298-99

..காவல்துறைக்கு நம்பியின் மரணம் பற்றி அவனது குடும்பத்தினருக்கு தெரிவிக்க ஐந்து நாட்கள் எடுத்தன.அவனது உடல் ஒரு அனுபவம் மிகுந்த,அதிகமாகக் குடித்துத் தள்ளாடிக்கொண்டிருந்த பிணச்சாலைத் துணையாளரால் அறுக்கப்பட்டது.......நம்பி ஐந்து நாட்கள் பிணவறைத் தரையில் அமைதியாக அழுகினான்.அவனது காயங்களும் அடையாளம் தெரியாமல் கரைந்தன.அவனுடைய உடல் பனை ஓலையில் தாறுமாறாகக் கட்டப்பட்டு குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.புகையிலைக் கருப்பட்டி சிப்பம்.அதே வண்ணம்.அதே ஒழுகல்.நாற்றம்தான் வேறு மாதிரி...ஒரு கள்ளி படர்ந்த திருவனந்தபுரச் சுடுகாட்டில் நம்பி புகைந்து போனான்.பொன்னா பாட்டி போன்றொருவர் எனது தாய்வழி குடும்பத்திலும் இருந்திருந்ததால் அவளையும் மறக்க முடியாது.

நன்றி.


~வாசன்

Anonymous said...

As far as myself concerned,only minus point in Krishnan's novel is - too many characters. Every time we will have to check out chart which was printed in the beginning.

Suresh Kannan

Anonymous said...

PKS,
I know about a writer called C.S.Chellappa and I remember reading a novel by him named "Vaadi Vaasal". If you heard about that please do put some paragraphs on him. I think that novel was one of the greatest ever written in Tamil. I wonder why nobody know about him..