Tuesday, December 21, 2004

டிசம்பர் 21, 2004 - செவ்வாய்

வார்த்தை: கைகடத்தல். பொருள்: 1. வசப்படாமல் மீறுதல் (to pass beyond one's control), 2. கைக்கு எட்டாமல் போதல் (to escape; to pass out of one's hands). உதாரணம்: காரியம் கைகடந்து போய்விட்டது.

வேற்றுமை உருபுகள்:

மொழியில் சொற்கள் ஒன்றோடு ஒன்று கூடிச் சேருவதை புணர்ச்சி என்று அழைக்கிறார்கள். இப்படிச் சொற்கள் கூடித் தொடர்ந்து அமைவதுதான் வாக்கியம். அப்படிச் சொற்கள் தொடரும்போது அவற்றைச் சொற்றொடர் என்கிறோம். சொற்றொடர்கள் அமையும்போது அவற்றுக்கு இடையே பொருளைத் தெரிவிக்க சில உருபுகள் வருவதுண்டு.

உதாரணமாக, அவர் என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அவரை, அவரால், அவருக்கு, அவரின், அவரது, அவரிடம் என்று இச்சொல் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பொருள்களைத் தரும்விதத்தில் பயன்படுத்தப்படலாம். இப்படி ஒரு சொல் அடைகிற வேறுபாடே வேற்றுமை எனப்படுகிறது.

வேற்றுமை என்றால் பெயரின் (அல்லது சொல்லின்) பொருளை வேறுபடுத்துவது என்று இங்கே பொருள். அவ்வாறு வேறுபடுத்திக் காண உதவும் எழுத்தை/எழுத்துகளை வேற்றுமை உருபு என்று அழைக்கலாம்.

தமிழில் எட்டு வேற்றுமைகள் உண்டு. முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை.
பின்வருவன இதர வேற்றுமை உருபுகளாகும்:

இரண்டாம் வேற்றுமை உருபு: ஐ.
உதாரணம்: அருணைப் பார்த்தேன்

மூன்றாம் வேற்றுமை உருபு: ஆல், ஆன், ஒடு, ஓடு
உதாரணம்: பத்ரியால் முடியும்.

நான்காம் வேற்றுமை உருபு: கு
உதாரணம்: தேசிகனுக்குப் பாராட்டுகள் குவிந்தன.

ஐந்தாம் வேற்றுமை உருபு: இல், இன்
உதாரணம்: சிவகுமாரின் பேச்சுத் திறனை வெல்ல யாரால் முடியும்.

ஆறாம் வேற்றுமை உருபு: அது, ஆது, அ
உதாரணம்: அவரது எழுத்துகள் படிக்க உகந்தன.

ஏழாம் வேற்றுமை உருபு: கண்
உதாரணம்: நீர்க்கண் குளித்தார்.

இவற்றைச் சுருக்கமாக, ஐ-ஆல்-கு-இல்-அது-கண் என்று பள்ளி நாட்களில் மனப்பாடம் செய்தது நினைவுக்கு வருகிறது அல்லவா?

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை. முதலாம் வேற்றுமை என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக அது பெரும்பாலும் எழுவாய்த் தொடர் என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக, மூக்கர் கோபப்பட்டார் என்ற சொற்றொடரை எடுத்துக் கொள்வோம். மூக்கர் என்ற பெயர்ச்சொல்லில் வேற்றுமை உருபு எதுவும் இல்லை. அதாவது, எந்த வேற்றுமை உருபும் வெளிப்படையாகவும் இல்லை. மறைமுகமாகவும் இல்லை. எனவே, வேற்றுமை உருபு ஏற்காத பெயர்ச்சொல் முதல் வேற்றுமை ஆகும். ஆனால், அதை முதல் வேற்றுமைத் தொடர் என்று அழைக்கிற பழக்கம் இல்லை. மாறாக, எழுவாய்த் தொடர் என்று அழைக்கிறோம். முதல் வேற்றுமைக்கு எழுவாய் வேற்றுமை என்ற பெயரும் உண்டு. சிவகுமார் எழுதினார், முருகன் வந்தார், அனானிமஸ் திட்டினார் ஆகியன எழுவாய்த் தொடர்களுக்கு இன்னும் உதாரணங்களாகும்.

எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. எட்டாம் வேற்றுமை என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக அது விளித்தொடர் என்று அழைக்கப்படுகிறது. இதனை விளி வேற்றுமை என்றும் அழைக்கலாம். உதாரணமாக, கண்ணா வா என்ற தொடரை எடுத்துக் கொள்வோம். (இதன் எழுவாய்த் தொடர் கண்ணன் வந்தார் என்பது.) இதில் கண்ணன் என்ற பெயர்ச் சொல் கண்ணா என்று ஆகி, வா என்கிற வினைச்சொல் கட்டளை வடிவத்தில் வந்துள்ளது. மூக்கரின் உதாரணத்தைப் பார்க்கப் போனால், அது விளித்தொடரில், மூக்கா கோபப்படு என்று ஆகும். இப்படி மூக்கரைச் சொல்வது மரியாதை இல்லையென்பதால் கண்ணா வா என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டேன். :-) விளித்தொடருக்கும் வேற்றுமை உருபு இல்லை என்பதைக் காணலாம். தொடரில் வருகிற பெயர்ச்சொல் விளியேற்கிறது. வினைச்சொல் கட்டளை வடிவத்தில் வருகிறது. அவ்வளவுதான்.

இது வரை வேற்றுமை என்றால் என்ன, வேற்றுமை உருபுகள் யாவை, அவற்றுக்கான உதாரணங்கள் ஆகியவற்றைப் பார்த்தோம். நாளைக்கு வேற்றுமைத் தொடர்களின் வகைகளைப் பார்க்கலாம்.

1 comment:

ROSAVASANTH said...

well written! இது போல அழகாய் எழுத வருவதை தொடர்ந்து எழுதலாமே! எதற்கு சரியாய் புரியாத விசயங்களில் போய் அவ்யப்போது மட்டையடிக்க வேண்டும்?