தினம் ஒரு தமிழ்ச்சொல் எத்தனை பேருக்கு உபயோகமாக இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு உபயோகமாக இருக்கிறது. அதில் எனக்குள்ள ஒரே குறை, அந்தந்த நாளுக்கான சொற்களை அன்றே சொல்ல இயலாமல், சேர்த்து வைத்தோ முன்கூட்டியோ சொல்ல வேண்டியிருக்கிற நிலை. நேரமின்மையால் அப்படி நேர்கிறது. மேலும் ஒரு சொல்லுக்காக மட்டும் ஒரு பதிவு போடுவதில் எனக்கு உடன்பாடும் இல்லை.
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு இன்னொரு தேவையும் உண்டானது. மரத்தடி இணையதளத்தில் ஆர்வலர்களில் ஒருவனாக படைப்புகளை வலையேற்றும் பணி செய்கிறேன். அப்படிச் செய்யும்போது தட்டச்சுப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி வலையேற்ற வேண்டும். எது இலக்கணப் பிழை (முக்கியமாக ஒற்று மிகும், மிகா இடங்கள்) பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதால் அதை நான் செய்வதில்லை. மரத்தடி வேலைகளைச் சளைக்காமல் செய்கிற வரம் பெற்று வந்திருக்கிற ஜெயஸ்ரீ வழக்கம்போல் எனக்காகப் பிழை திருத்தி உதவுகிறார். ஜெயஸ்ரீயின் சிரமத்தைக் குறைப்பதற்காகவாவது நான் இப்போது இலக்கணம் படிக்க முடிவு செய்திருக்கிறேன். மொழியைப் பொருத்தவரை, கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவினால் போதும், இலக்கணம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான் என்பதே என் நிலை. அதனாலேயே, பிற விஷயங்களை அறிவதில் காட்டிய ஆர்வத்தை இலக்கணம் அறிவதில் காட்டியதில்லை. இப்போதும் என் நிலை அதுதான்.
ஒற்று மிகும், மிகா இடங்களைப் பற்றி மாணவப் பருவத்தில் படித்திருந்தாலும், முழுவதும் நினைவில்லை. இணையத்தில் எழுத ஆரம்பித்ததும் என்னிடமிருக்கும் புத்தகங்களின் உதவியுடன் பலமுறை படித்துப் பார்த்தேன். மனப்பாடம் செய்கிற, சூத்திரங்களை மனத்தில் நிறுத்திக் கொள்கிற வயதெல்லாம் தாண்டிவிட்டது போலும். அடிக்கடி மறந்து போகிறது. எனவே, இங்கு தினம் ஒரு சொல்லுடன், ஒரு ஒற்று மிகும் இடத்தையும், மிகா இடத்தையும் (அல்லது இரண்டில் ஒன்றையாவது) பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். எப்படி தினம் ஒரு தமிழ்ச் சொல்லை, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியைப் பார்த்து பகிர்ந்து கொள்கிறேனோ, அப்படி இதை என்னிடமிருக்கிற இலக்கணப் புத்தகங்களைப் பார்த்து பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
இணையத்தில் ஒற்று மிகும், மிகா இடங்களைப் பற்றி ஏற்கனவே பலர் விளக்கமாக எழுதியுள்ளார்கள் என்று நான் அறிவேன். முக்கியமாக மரபிலக்கியம் இணையக் குழுவை நடத்தும் திரு. ஹரிகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அவை மரத்தடி இணையதளத்தில் வலையேற்றப்பட்டுள்ளன. (சுட்டிகளைப் பின்னர் தேடி இணைக்க முயல்கிறேன்.). அப்புறம், நண்பர் "மரவண்டு" கணேஷ் கூட ஒருமுறை இணையக் குழுவில் ஒற்று மிகும், மிகா இடங்களைத் தொகுத்துத் தந்தார். இன்னும் பிறர் எழுதியிருக்கக் கூடும். எனக்குத் தெரியவில்லை. எனவே, தினம் ஒரு தமிழ்ச் சொல்லைப் போல இது ஒரு புதுமையான பகுதியில்லை. ஆனால், தினம் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்வது, நினைவில் நிறுத்திக் கொள்ள எனக்கு உதவும் என்பதால் செய்கிறேன். பிறருக்கும் உதவினால் மகிழ்ச்சியே. இந்தப் பகுதியில் மட்டும் யாருக்கும் சந்தேகம்/கேள்விகள் இருந்தால், அவற்றுக்கு எனக்குப் பதில் தெரியும் என்ற உத்திரவாதம் இல்லை. மேலும், இந்தப் பகுதியில் நான் தவறுகள் செய்ய நிறையவே வாய்ப்புள்ளது. அப்படி நான் இடறும்போதெல்லாம் முடிந்தவர்கள் தூக்கி நிறுத்துமாறு வேண்டுகிறேன். இந்த முன்னுரையுடன் தொடர்கிறேன்.
வல்லின ஒற்று மிகும் இடங்கள் - முன்னுரை
தமிழில் க், ச், ட், த், ப், ற் வல்லின மெய் எழுத்துகள் என்பது நாமறிந்ததே. இவற்றில் ட், ற் ஆகியன சந்தி எழுத்துகளாக வருகிற பழக்கம் இல்லை. இரண்டு வார்த்தைகள் சேரும்போது இடையில் அவற்றை இணைக்கத் (தேவையான நேரங்களில்) உதவுகிற எழுத்தை சந்தி எனலாம். (Euphonic combination of the final letter of a word, root or base with the initial letter of the succeeding word or suffix - OTL).
இரண்டு வார்த்தைகள் சேரும்போது, முதல் வார்த்தை நிலைமொழி என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது வார்த்தை வருமொழி எனப்படுகிறது. வருமொழியின் முதல் வார்த்தை க, ச, த, ப இவற்றின் வர்க்க எழுத்துகளில் (க, கா, கி, கீ, ...., ச, சா, சி, சீ, ...., த, தா, தி, தீ, ...., ப, பா, பி, பீ, ... ஆகியன) ஒன்றாக இருக்கும்போது, (தேவையான இடங்களில்) வர்க்க எழுத்துக்கேற்ப அதன் ஒற்று மிகும். வருமொழியின் முதல் எழுத்து இடையினமாகவோ, மெல்லினமாகவோ இருந்தால் ஒற்று மிகாது. எனவே, ஒற்று மிகும் இடங்கள் பெரும்பாலும் (90%-லிருந்து 95% என்று சொல்லலாமா?) வல்லின ஒற்று மிகும் இடங்களாகவே இருக்கும். (இந்தக் கடைசி வரி என் புரிதல். தவறெனில் திருத்தவும்.)
தமிழில் அ, இ, உ ஆகியன சுட்டெழுத்துகளாகும். ஒன்றைச் சுட்ட அவை பயன்படுவதால் இப்பெயர். கேள்வி கேட்கப் பயன்படும் எழுத்துகள் வினாவெழுத்துகள் எனப்படுகின்றன.
அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னாலும், எ என்ற வினாவெழுத்துக்குப் பின்னாலும் ஒற்று மிகும் (வருமொழி க, ச, த, ப ஆகியவற்றின் வர்க்க எழுத்தாக இருந்தால் - இதை ஒவ்வொரு முறையும் இனி சொல்லப் போவதில்லை)
உதாரணங்கள்: அக்காடு, அச்சிவகுமார், அத்தலம், அப்பீடம், இக்காடு, இச்சிவகுமார், இத்தலம், இப்பீடம், எக்காடு, எச்சிவகுமார், எத்தலம், எப்பீடம்
இனி, தினம் ஒரு தமிழ்ச் சொல்லுக்கு -
சென்ற செவ்வாய்க்கான வார்த்தை: சள்ளிடுதல். பொருள்: குரைத்தல் (to howl as a jackal, to growl). உதாரணம்: அந்தத் தெருநாயைப் பார்த்த இந்த வீட்டு நாய் கதவுக்குப் பின்னிருந்து சள்ளிட்டு எழும்பியது.
புதனுக்கான வார்த்தை: சள்ளுச்சள்ளெனல். பொருள்: நாய் குரைக்கும் ஒலிக்குறிப்பு, கோபங்காட்டிப் பேசுதல். உதாரணம்: "ஏன் என்மீது சள்ளுச்சள்ளுனு விழறீங்க" என்று கணவனைக் கேட்டார் மனைவி.
வியாழனுக்கான வார்த்தை: சுசுரூஷை. பொருள்: பணிவிடை. உதாரணம்: "உங்களுக்கு சுசுரூஷை பண்றத்துக்குனே பகவான் என்னை அனுப்பியிருக்கார்னு நெனைச்சிட்டீங்களா" என்று கணவரிடம் சள்ளென விழுந்தார் மனைவி.
இன்றைக்கான வார்த்தை: தலைபிணங்குதல். பொருள்: ஒன்றோடொன்று மாறுபடுதல் (to contend, compete, strive). உதாரணம்: கவிதை பற்றிய கருத்துகளில் அண்ணாச்சியும் தாசில்தாரும் தலைபிணங்குவார்கள்.
சனிக்கான வார்த்தை: சோபித்தல். பொருள்: பிரகாசித்தல், அலங்காரமாயிருத்தல், மேம்படுதல். உதாரணம்: என் எழுத்துகள் சோபிக்காவிட்டாலும், சோடைபோக மாட்டா.
ஞாயிறுக்கான வார்த்தை: தடபுடல். பொருள்: விரைவு, சந்தடி, ஆடம்பரம். உதாரணம்: 1. வளர்ப்பு மகனின் திருமணம் தடபுடலாக நடந்தது. 2. செய்தி கேட்டதும் மாடியிலிருந்து தடபுடலென்று இறங்கி வந்தார்.
(திங்களிலிருந்து, அன்றன்றைக்கான வார்த்தையையும், இலக்கணத்தையும் அன்றன்றே ஒரு தனிப்பதிவாகவேனும் போட்டுவிட முயல்கிறேன்.)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பிகேஎஸ்
இது நிரம்ப அத்தியவசியமான பதிவு. எனக்கு இந்த ப்-புவது க்-குவது எல்லாம் பயங்கர குளறுபடி. அதைப் போல தலைப்பிணங்குதல் என்றால் ஒத்துப்போவது என்று நினைத்திருந்தேன் :)).
நன்றி
டைனோ
நன்றி,அவசியமான பிரயோசனமான முயற்சி.மொழி என்பது தொடர்பாடலுக்குத் தான் இலக்கணம் என்பது இரண்டாம் பட்சமே என்பது ஒத்துக்கொள்ளக் கூடியதாயினும் இலக்கணமென்னும் வரம்பொன்று இல்லாவிட்டால் மொழி அழிந்து பேச்சுவழக்கு மட்டுமே எஞ்சும் அந்நேரம் யார் பேசுவது அல்லது எவருடைய பாவனையிலுள்ளது சரியான வடிவம் என்ற குழப்பமும் கூடவே எழும்.இலக்கணம் அறிவ்வும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்
சொல்லிப்பார் - புரிந்து கொள் என்னும் மு.வ வின் சூத்திரம் மிக எளிமை மற்றும் எனக்கு உபயோகமாக உள்ளது.
Suresh.
பெரும்பாலான ஒற்று மிகுமிடங்களை நாம் பேசிப் பார்த்து அதன் உச்சரிப்பை வைத்தே புரிந்து கொள்ளலாம். மிகமிகச் சில சந்தர்ப்பங்களே உணர்ந்து கொள்ளக் கடினமாக இருக்கும். உங்களது பணி வரவேற்கத் தக்கதே. தொடரவும்
"இன்னுமொரு முயற்சி"யும் நன்முயற்சியே, தொடர்க.
Post a Comment