Thursday, December 23, 2004

வலைப்பதிவில் விளம்பரம்

Blogger-ல் நுழைந்தவுடன் பல நாட்களாக (மாதங்களாக) நிரந்தரமாக Googleன் Adsense-க்கான அழைப்பு என்னை வரவேற்கிறது. அதை வைப்பதில் எனக்கு முதலில் ஆர்வமில்லை என்றாலும் நண்பர்கள் சிலர் அதைப் பயன்படுத்தி வந்தது அது குறித்து யோசிக்க வைத்தது. நண்பர் ஒருவர் Adsense வழியாக விளம்பரங்களைத் தன் வலைப்பதிவில் போட்டு ஒரு மாதம் இருக்கும் அப்போது. அவரிடம் எவ்வளவு பணம் வந்தது என்று ஜாலியாகக் கேட்டேன். 25 சென்ட்டுகள் என்றார் சிரித்தபடி. எனவே, Adsense உபயோகப்படுத்துகிற நண்பர்களுக்கு எல்லாம் அதில் வருகிற வருமானத்தை வைத்து மில்லியனர் ஆகிவிடக் கூடிய சாத்தியம் உடனடியாக இல்லை என்பது தெரிந்ததுதான்.

ஆனால், அவர்கள் அதைப் பயன்படுத்துவதற்குப் பணத்தைத் தவிர பிற காரணங்கள் உள்ளன. உதாரணமாக, என் நண்பர் ஒருவர் Google-ன் Adsense மூலம் கிடைக்கிற வலைப்பதிவுக்கு வருகிறவர்கள் பற்றிய புள்ளிவிவரம் counterகள் தருகிற புள்ளி விவரங்களைவிடத் துல்லியமாக இருப்பதாகச் சொன்னார். மேலும், Google போன்ற Search Engine-களில் ஒரு தளத்தைத் தேர்வு செய்வதற்கு, அத்தளம் எத்தனை பேரால் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு லிங்க் கொடுத்துள்ளது என்பது போன்ற விவரங்களைக் கணக்கில் கொள்கிறார்கள். (Page Rank Philosophy. Google தேடுதல் எந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி டொரண்டோ வெங்கட் அவர் பதிவில் முன்னர் எழுதியிருக்கிறார். அதை இங்கே காணலாம். சுட்டியைக் கொடுத்த வெங்கட்டுக்கு நன்றி.) Adsense வைத்துக் கொள்வது இப்படிப்பட்ட பிற காரணங்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும்.

சில நாட்களுக்கு முன் வலைப்பதிவுகளை வைத்து நடத்தப்படும் Fantacy Stock Market தளம் ஒன்றைப் பார்த்தேன். தளத்தின் பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. மன்னிக்கவும். நவன் பகவதிக்குத் தெரியும் என்று நம்புகிறேன். நவன் பகவதியை எனக்குத் தெரியாது என்றாலும், அவருக்குத் தெரியும் என்பது எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்காதீர்கள் :-) அதில் ஒரு வலைப்பதிவை மதிப்பிட அதற்கு வருகிற வருகையாளர்கள், அதற்கு எத்தனை லிங்க்குகள் பிறரால் கொடுக்கப்பட்டுள்ளன, அது எத்தனை லிங்க்குகளைக் கொண்டுள்ளது என்று பல விவரங்களைக் கணக்கில் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட விளையாட்டுத் தளங்களில் வலைப்பதிவின் மதிப்பை உயர்த்த Adsense நேரிடையாகவோ மறைமுகமாகவோ உதவலாம்.

எனவே, Adsense-ஐ என் வலைப்பதிவில் பயன்படுத்தினால் என்ன என்ற கேள்வி சமீபகாலங்களில் எழ ஆரம்பித்துள்ளது. கடவுளின் கிருபையாலும், போதுமென்ற மனம் இயற்கையாகவே கிடைக்கப் பெற்றுள்ள நல்லூழாலும் என் லௌகீக வாழ்க்கை சந்தோஷத்துடனும் திருப்தியுடனுமே எப்போதும் சென்று வருகிறது. இன்ஷா அல்லாஹ். எனவே, பிற காரணங்களுக்காக Adsense-ஐப் பயன்படுத்தினால் என்ன என்ற எண்ணமே இது குறித்து இவ்வளவு எழுதச் சொல்கிறது.

என் வலைப்பதிவில் என்னுடைய எழுத்துகள் இல்லாமல் - பிறர் எழுதியதையும் அவர்களுக்கும் அவர்களின் பதிப்பகங்களுக்கும் நன்றி சொல்லிப் பகிர்ந்து கொள்கிறேன். பெருந்தன்மையுடன் இதுவரை யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அதை அனுமதித்து வருகிறார்கள். 75% என் எழுத்தென்றால், 25% பிறர் எழுதி ஏற்கனவே வெளியானதைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று தோராயமாகச் சொல்லலாம். எனவே, Adsense பயன்படுத்தினால், பிறர் எழுத்துகளைப் போட்டு அதன் மூலம் காசு பார்க்கிறேன் என்ற கேள்வி எழுமோ என்று தோன்றியது. அதனாலும் இவ்வளவு நாட்கள் தயங்கினேன்.

இன்றைக்குத் தமிழ்மணத்தைப் பார்த்தேன். அதில் Adsense இருக்கிறது என்று நினைக்கிறேன். Advertisements by Google என்று இருந்ததை Adsense வழி வந்தது என்று நான் புரிந்து கொள்கிறேன். தவறெனில் திருத்தவும். தமிழ்மணம் தளத்தை நடத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் செலவுகள் இருக்கும். அவற்றை ஓரளவு ஈடுகட்டவாவது இப்படி விளம்பரங்கள் வைப்பது உதவும். அதனால் இது வரவேற்கத்தக்கது. இதுவும் நானும் ஏன் Adsense வைக்கக் கூடாது என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியது. தமிழ்மணம் போன்ற பிறரின் வலைப்பதிவுகளைப் பட்டியலிடுகிற தளம் Adsense-ஐ வைப்பது புரிந்து கொள்ளக் கூடியது என்னும்போது, நான் வைப்பதில் என்ன பிரச்னை இருக்க முடியும் என்றும் தோன்றியது.

Adsense பயன்படுத்துவதால் நான் ரசிக்கிற பிற எழுத்துகளை என் வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ள முடியாது என்றால், Adsense பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால், முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. எனவே, இனிவரும் நாட்களின் என் வலைப்பதிவில் Adsenseஐப் பயன்படுத்தி விளம்பரங்கள் வரலாம்.

பிறரின் எழுத்துகள் என் வலைப்பதிவில் 25 சதவீத அளவுக்கு இடம் பெறுகிறது என்கிற என்னுடைய "தாராளமான" கணிப்பின்படி, Adsenseன் மூலம் எனக்குக் கிடைக்கிற பணத்தில்(!) 25 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கும், பொதுக் காரியங்களுக்கும் தந்துவிடுகிற உறுதியுடன் Adsenseஐப் பயன்படுத்தப் போகிறேன்.

நான் யோசிக்கத் தவறிய பிரச்னைகள் ஏதும் இதனால் ஏற்படக் கூடும் என்பது விஷயமறிந்த நண்பர்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து சொல்லுங்கள்.

வேறு வேலை இல்லாமல், பிறரின் நோக்கங்களிலும் செய்கைகளிலும் குறை மட்டுமே காணுகிற வீணர்கள் எதிர்காலத்தில் நான் Adsense பயன்படுத்துவது பற்றிக் கேள்விகள் எழுப்பக் கூடும் என்ற எதிர்பார்ப்பிலும் இப்பதிவு இடப்படுகிறது. :-)

2 comments:

Venkat said...

சிவகுமார்.

நான் கூகிளைப்பற்றி எழுதியவை எல்லாம் இங்கே,

http://www.domesticatedonion.net/blog/?query=google&amount=0&blogid=1&x=0&y=0

இது என்னுடைய தளத்தில் இருக்கும் தேடல் பெட்டியில் google என்று அடித்துத் தேடியதில் கிடைத்தது. பழைய தளத்திலிருந்து புதிதாக மாறியதில் முறையான வகைப்பாடு இல்லை; மன்னிக்கவும்.

உங்களுக்குத் தனிப்பட்டு ஒரு அஞ்சல் எழுதியிருந்தேனே கிடைத்ததா?

PKS said...

Venkat, Thanks for your comment and link to your google article. I did not receive your personal mail. Did you send it to my yahoo id? Can you please resend. Thanks. I will give the link to your article in my post itself soon. Regards, PK Sivakumar