Tuesday, January 11, 2005

சாணக்யாவும் சல்மாவும்

கதாவும் காலச்சுவடும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி நினைவிருக்கும். பெருமாள் முருகன், பாவண்ணன், ராஜமார்த்தாண்டன் ஆகியோர் நடுவர்களாக இருந்து பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று நினைவு. ஜே.பி. சாணக்யா முதல் பரிசும், சல்மா இரண்டாம் பரிசும் வென்றார்கள். இப்போட்டிக்கு வந்த கதைகளுள் பரிசு பெற்றவை, குறிப்பிடத்தக்கவை ஆகியவற்றைத் தொகுத்து காலச்சுவடு பதிப்பகம் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகத்தை நண்பர் வீட்டில் புரட்டிப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. அரவிந்தன் முன்னுரை எழுதியிருக்கிறார். இன்றைக்கு முதல் இரண்டாம் பரிசு பெற்ற கதைகளை காலச்சுவடு தளத்திலும் பார்த்தேன். அத்தளத்தில் ஆதவன் தீட்சண்யா, ஹனீபா ஆகியோர் கதைகளும் உள்ளன. அவர்களும் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்ற நினைவு. ஆனால், தளத்தில் உள்ள கதைகள் போட்டிக்கு அவர்கள் அனுப்பிய கதைகளா என்று எனக்கு நினைவில்லை. அதனால், முதல், இரண்டாம் பரிசு பெற்ற கதைகளை மட்டும் படிக்காத நண்பர்களுக்காக இங்கே சுட்டி தருகிறேன்.

ஜே.பி. சாணக்யாவின் எழுத்தில் பாலியல் தாக்கம் அதிகம் என்ற சர்ச்சை எழுவதைப் படித்திருப்பீர்கள். இக்கதையிலும் பாலியல் விவரணைகள் அதிகமாகவே உள்ளன. ஆனால், முடிவு நெஞ்சை அடைத்து நிறுத்தியது. பட்டவர்த்தமான பாலியல் விவரணைகள் இல்லாமல், இப்படிப்பட்ட ஒரு கதையை எழுதுவது குதிரைக் கொம்பா என்ன என்ற கேள்வியும் எழுந்தது. அப்படி எழுதப்பட்டிருந்தால் இக்கதை இன்னமும்கூட நன்றாக வந்திருக்குமோ என்னவோ. இப்போதோ தவிட்டில் தொலைந்துபோன வைரக்கல் மாதிரி குஜால் மேட்டர்களிடையே ஓர் உலுக்குகிற முடிவை வைத்தது போல இருக்கிறது. முடிவைத் தவிர இக்கதையின் பிற பகுதிகள் என்னை ஈர்க்க வில்லை. விடலைப் பருவத்தில் படித்துக் "களிக்க" வேண்டிய வர்ணனைகளும் காட்சிகளுமாகவே தோன்றியது.

சல்மாவின் கதையை மூன்று நான்குமுறை முயற்சித்துப் படிக்க ஆரம்பித்தேன். இரண்டு மூன்று பத்திகளுக்குமேல் எனக்கு ஓடவில்லை. இனியும் முயற்சிக்கிறேன். சல்மாவின் எழுத்து நடைக்கு என் வாசிப்பைப் பழக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆண்களின் படித்துறை - ஜே.பி. சாணக்யா
இழப்பு - சல்மா

2 comments:

சீமாச்சு.. said...

>>
சல்மாவின் எழுத்து நடைக்கு என் வாசிப்பைப் பழக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
>>
எவ்வளவு பெரிய மனசு pks உங்களுக்கு!! என்னுடைய 10-ம் வகுப்பு தேர்வுத்தாள்களைத்
திருத்திய ஆசிரியப்பெருமகனார்களும் இந்த மாதிரி நினைத்திருந்தார்களென்றால் நானும்
state-first வாங்கியிருப்பேன்..!!

என்க்கென்னவோ இந்த மாதிரியெல்லாம் எழுத்து நடைக்கு வாசிப்பைப் பழக்க்கிக்கொள்ளும்
பெருந்தன்மையெல்லாம் இருக்காது...
சீமாச்சு...

பரி (Pari) said...

'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் ஒரு கிளைக்கதையை நினைவூட்டுகிறது (படாஃபட்?)