Sunday, April 10, 2005

இலக்கிய அரசியலின் இரட்டை வேடங்கள்

ஜெயகாந்தன் என்றொரு நீராவி என்ஜின் என்ற தலைப்பில், ஏப்ரல் 2005 திசைகள் இணைய இதழில் மாலன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த கதையாக யாரையோ திருப்திபடுத்த எழுதப்பட்ட கட்டுரையாக அது தெரிகிறது. ஆனால், மாலனின் அந்தக் கட்டுரையில் தெரிகிற அபத்தங்களை எடுத்துக் காட்டுகிற முயற்சியே இந்த எதிர்வினை. மாலன் இன்றைக்குத் எந்த இயக்கத்தின் ஆதரவாளராக இருப்பதும் அவர் விருப்பமும் தேர்வும். ஆனால், அவரிடமிருந்து வெளிப்படுகிற அவரியக்கத்துக் கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை என்றால் அதைக் கட்டுடைப்பதும் வெளிச்சமாக்குவதும் என் தேர்வும் விருப்பமும். அப்படிக் கட்டுடைக்கும்போது அதற்கானக் காரணங்களைத் தந்திருக்கிறேனா என்று மட்டுமே பார்ப்பது சரியாக இருக்கும்.

மற்றவர்களின் மனச்சிதைவுகளை மாலன் அறிய முற்பட்டிருப்பது நல்ல ஆரம்பம்தான். அவர் சொல்வதைப் போல, தன் கொள்கைகளிலும் எழுத்திலும் சமரசம் செய்து கொள்ளாத ஆளாக மாலன் இருப்பாரேயானால், மனச்சிதைவுகளை அறியவும் வெளிச்சம் போட்டுக் காட்டவும் ஆரம்பிக்க வேண்டிய முதலிடங்களும் மனிதர்களும் வேறு வேறாக இருப்பதை அவரின் "ஆரோக்கியமான மனம்" அறிந்திருக்கும். அப்படி மனச்சிதைவில் முன்னுரிமை பெற வேண்டியவர்களை முதலில் பட்டியலிட்டுவிட்டுப் பின்னர் மற்றவர்களுக்கு மாலன் வந்திருந்தால் கூட, அவர் கருத்துகளுடன் ஒத்துக் கொள்ள இயலவில்லை என்றாலும், அவர் நேர்மையைப் பாராட்டியிருக்க முடியும். ஆனால், செலக்டிவ் அம்னீசியாவுடன் இலக்கியத்தையும் நேர்மையையும் விமர்சனத்தையும் அணுகுகிறப் பாங்கை கைக்கொள்வதாக அவரின் இந்தக் கட்டுரை காட்டுவதால், இந்த எதிர்வினை.

மாலனின் இன்றைய கலை-இலக்கிய அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்கிற நோக்கங்கள் கொண்ட மாலனின் கட்டுரையிலிருந்து - பொருட்படுத்தத்தக்க வாதங்களுக்கு மட்டுமே இக்கட்டுரை பதிலளிக்கிறது. இங்கே பதிலளிக்கப்படாத மற்றப் பகுதிகள், ஓர் எளிய மனதின் பொதுப் புத்தியின் சாதாரணமான தர்க்கத்தால்கூட புறந்தள்ளப்பட வேண்டியவை. எனவே, அவற்றுக்குப் பதிலளித்து என் நேரத்தை வீணாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

நடிகையின் புகைப்படத்தை மேலே எடுத்துப் போட்டுவிட்டு, அதன் கீழே இரண்டு வரி கவிதையைப் பற்றியோ அரசியலைப் பற்றியோ எழுதிவிட்டு இறும்பூதெய்து கொண்டிருக்கிற சிந்தனாவாதிகள் இணையத்தில் இருக்கிறார்கள். அந்தோ! அவர்கள் நடிகையைப் பற்றி கூட ஒரு முழுமையான சமூகப் பார்வையையோ முதிர்ச்சியான கருத்துகளையோ முன்வைக்கிற சொந்த சிந்தனையும் திராணியும் இல்லாதவர்கள். ஜெயகாந்தனைப் பற்றி மட்டுமல்ல அவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிற திராவிட இயக்கத்தைப் பற்றியோ, பெரியாரைப் பற்றியோ கூட பொருட்படுத்தி வாசிக்கத்தக்க திறனாய்வென்று எதையும் எழுதாதவர்கள். அப்படிப்பட்டவர்கள் உமிழுகிற வெறுப்பு அமிலங்கள் அவர்களையே ஒருநாள் பொசுக்கிவிடும் என்பதை அவர்கள் அறியாவிட்டாலும் நானறிந்திருக்கிற காரணத்தால் - அவர்கள் கருத்துச் சுதந்திரமென்று, கஜாலாவின் படத்தைப் போட்டுவிட்டு காமராஜரைப் பற்றி எழுதினாலும் (அந்த மாதிரி நான் எழுதவேயில்லை என்று இதைப் பகடி என்று அறியாதவர்கள் ஏதும் புலம்பலாம்!) அதை உதட்டின் ஓரத்தில் வருகிற ஒரு புன்னகையுடன் என்னால் ரசிக்க முடிகிறது. ஏனென்றால், அவர்கள் பாமரர்களைவிடவும் அறிவில் பாமரர்களாகவும், ஓர் ஆத்திரக்காரனை விடவும் உணர்ச்சியில் முட்டாள்களாகவும் இருக்கிறார்கள் என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

இன்னொரு சாராரின் எழுத்துகளைப் படிக்கும்போது வெற்றி கொண்டானின், தீப்பொறி ஆறுமுகத்தின் மேடைப் பேச்சுகளின் தரம் தெரிகிறது. இத்தகைய அடிப்பொடிகளின் பேச்சுகளை அவர்களின் தலைவர்களும் அவர்கள் ஊறிக் கொண்டிருக்கிற அதே குட்டையில் சேர்ந்து ஊறுகிற சகாக்களும் மென்முறுவலுடன் ரசிக்கக் கூடும். எல்லா விஷயத்தையுமே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதவர் என்று மட்டுமே பார்க்கக் கூடிய நசிவு மனப்பான்மைக்கு விரும்பித் தண்ணீர் விட்டு வளர்த்துக் கொண்டிருக்கிற இப்படிப்பட்டவர்களைப் பற்றியும் நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

ஆனாலும், மேற்குறிப்பிட்ட சாரார்கள் வளர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வளரவில்லை என்றாலும்கூட பிரச்னை அவர்களுடன் முடிந்த போகிற விஷயம். ஜெயகாந்தனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "பெட்டிக்குள் இருப்பதால் பாம்பு புழுவாகி விடாது. துள்ளிக் குதிப்பதால் புழுக்கள் பாம்பாகி விடாது" என்ற பதிலே அவர்களுக்கு இப்போதைக்குப் போதுமானது.

ஆனால், மாலன் விஷயம் அப்படியில்லை. ஓர் எழுத்தாளராகவும், இதழாளராகவும், செய்தியாசிரியராகவும் அறியப்பட்டிருக்கிற மாலன் கருத்துகளின் அபத்தத்தை முன்னெடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. அது ஜெயகாந்தனை மட்டுமல்ல, மாலனைப் பற்றியும் மட்டுமல்ல, தமிழின் "இலக்கிய அரசியலையும்" மற்றவர்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும் என்பதால் இதைச் செய்கிறேன்.

மாலன் எழுதியது: "சீலங்களையும் ஆசாரங்களையும் வலியுறுத்தும் மரபார்ந்த நடைமுறைகளிலிருந்து நவீன கால பிராமணர்கள் வழுவி வந்ததைக் கருணை நிறைந்த விமர்சனங்களாகவும், பகிரங்கமான எள்ளல்களாகவும் தனது புனைகதைகளில் வெளிப்படுத்தி வந்தார். அது பிராமண சமூகத்தைச் சேர்ந்த வாசகர்களிடயே அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தங்கள் ஜாதி அடையாளங்களைப் பகிரங்கப்படுத்திக் கொள்வதில் ஒருவிதக் கூச்சமும் ( குற்ற உணர்வு?) அந்தரங்கத்தில் அந்த அடையாளங்கள் குறித்து ஒரு பெருமிதமும், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அந்த சமூகத்திற்கு இருந்தது. அந்தச் சூழ்நிலையில் ஜேகேயின் இந்தக் குரல் அவர்களுக்கு இதமாக இருந்தது."

ஜெயகாந்தன் பிராமணர்களைப் பற்றி எழுதியவர் என்ற பாமரத்தனமான பார்வைக்கு - அதன் அபத்தம் பல இடங்களிலும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் - இந்த வாதத்தின் மூலம் இன்னமும் வலுச்சேர்க்க முயல்கிறார் மாலன். ஜெயகாந்தனுடைய ஆகச் சிறந்த கதைகள் எவை - அவற்றில் ஜெயகாந்தன் இதை இன்ன இடத்தில் வெளிபடுத்தியிருக்கிறார் என்ற உதாரணம் இல்லாமல், உடனடியாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மாலன் சொல்லும் விளக்கம் இது. இதன் மூலம் அவரை ஒரு பிராமணச் சார்பு எழுத்தாளராகவும் சித்தரிக்கச் சொல்லுகிற இந்தத் "தர்க்கத்துக்கு" ஆதாரம்? எத்தனை கதைகள் அவர் எழுதினார் அதில் எத்தனை சதவீதம் கதைகள் பிராமணர்களைப் பற்றியது, அதில் எத்தனை கதைகள் பிராமணியத்தை ஆதரித்து எழுதப்பட்டது என்று எந்த தகவலும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதப்பட்ட இந்த வரிகளுக்கும் இலக்கியத் தகுதிக்கும் அல்லது இலக்கிய விமர்சனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மாலன் எழுதியது: "சமூக விமர்சனங்களை உள்ளடக்கமாகக் கொண்டு, பேச்சு மொழிக்கு நெருங்கிய நடையில், பாரதி எழுதிய சிறுகதை மரபைப் புறந்தள்ளி, மறுமலர்ச்சி என்ற பெயரில் தனிமனித உளைச்சல்களையும், உறவுகளிடையே ஏற்பட்ட உரசல்களையும், பாலுணர்வையும் ஐரோப்பியப் பாணியில் எழுத முற்பட்ட மணிக்கொடி கோஷ்டியின் போக்கை நிராகரித்தார் ஜேகே. 40களிலிருந்து 70கள்வரை பிராமணர்களின் சாம்ராஜ்யமாக இருந்த சிறுகதை உலகு ஜெயகாந்தனின் வருகையால் தகர்க்கப்பட்டது."

ஒரே வாக்கியத்தில் எத்தனை திரிபுகளைச் சொல்லலாம் என்பதற்கு ஒரு போட்டி வைத்தால் மாலனுக்கு வெற்றி மிகச் சுலபமாய்க் கிட்டிவிடும். "40-லிருந்து 70-வரை பிராமணர்களின் சாம்ராஜ்யமாய் இருந்தது" என்ற பிரகடனத்தை எதிர்த்து ஏதும் எழுதினால் அதுவே இந்த விவாதக் களத்தில் மாட்டிக்கொள்கிற ஆபத்தில் கொண்டுபோய் விட்டு விடும். எந்தப் பொருளுமல்லாத ஒரு அ-தர்க்கத்தை, தர்க்கத்தின் மையப் புள்ளியாய் ஆக்கியதன் மூலம் திராவிட இயக்கங்கள் சமூக விவாதக் களத்திற்கு அளித்த திருகல் இது. "உன் மனைவியை அடிப்பதை எப்போது நிறுத்தினாய்?" என்ற கேள்விக்கு பதில் சொல்ல முற்படுவது போன்றது இது. அடிக்கவே இல்லை என்றால், என் கேள்விக்கு இது பதில் இல்லை என்று சுலபமாய்ச் சொல்லிவிடலாம். இந்த பிரகடனத்திற்கு ஏதும் பொருளிருக்கிறதா? இது ஏதோ பிராமணர்கள் எல்லாம் சேர்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களை விலக்கிவைக்கிற சதித்திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தார்கள் என்ற சித்திரத்தை இதன் மூலம் ஏற்படுத்திவிடலாம். ஒவ்வொரு துறையிலும் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்கள் வெவ்வேறு காரணங்களால் முன்னணிக்கு வந்தனர். தொழில் துறையில் செட்டியார்கள் சிறந்து விளங்கியது, விவசாய நிலவுடமையில் முதலியார்கள், ரெட்டியார்கள், கவுண்டர்கள் முன்னணியில் இருந்ததும் வரலாறு. இதையெல்லாம் விட்டுவிட்டு கலாசாரம், கல்வியில் பிராமணர்கள் பெற்ற முன்நிலை பற்றிய ஓர் உணர்வை ஏற்படுத்தி இந்தப் பொய்யையே அடிப்படையாய்க் கொண்டு ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கத்தின் ஊதுகுழலாய்த் தன்னைக் காட்டிக் கொள்வதற்கு மாலன் செய்யும் பரிதாபமான முயற்சி இது. உண்மையான சமூக நீதி என்பது கலாசாரத்தின், பொருளாதாரத்தின், நிலவுடமையின், மற்றும் சமூக மேம்பாட்டின் அனைத்துத் தளங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்தத் தளங்களில் இடம் மறுக்கப்பட்டவர்களுக்காக அல்லவா போராடியிருக்க வேண்டும்? அப்படிப் பட்ட பார்வை திராவிட இயக்கங்களுக்கு எப்போதாவது இருந்ததா?

தனிமனித உணர்வுகளையும் உரசல்களையும் ஜெயகாந்தன் எழுதவில்லையா? மாலன் ஜெயகாந்தனைப் படித்திருக்கிறாரா? படித்தால் அவருக்குப் புரிந்ததா? ரிஷிமூலம் பற்றி எழுந்த விவாதங்களை அவர் அறிவாரா? ஜெயகாந்தனின் பின்னாட்களின் இலக்கியத்தின் மீது எழுந்த விமர்சனமே அது தனிமனித உளைச்சல்களைச் சொல்கிறது என்பதுதானே? மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு ஐரோப்பிய பாணி எழுத்தாளர்கள் என்று மகுடம் சூட்டும் மாலன், மணிக்கொடி இதழ்கள் தொகுப்பு படிக்கும்படி சிபாரிசு செய்கிறேன். மணிக்கொடி என்ற பெயரே பாரதியின் "தாயின் மணிக்கொடி பாரீர்" என்ற பாடலிலிருந்து எடுக்கப்பட்டது என்பது மாலனுக்குத் தெரியவில்லை போலும்.

மாலன் எழுதியது: ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் ஏற்படுகிற ஈர்ப்பை, முரண்பட்ட இயல்புகள் கொண்ட மனிதர்களோடு ஏற்படுகிற குடும்ப உறவாக உவமிப்பது அபத்தம். தம்முடைய தந்தையைத் தேர்ந்து கொள்கிற உரிமையும் வாய்ப்பும் எந்த ஒரு மனிதனுக்கும் இல்லை. ஆனால் ஒரு சித்தாந்தத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரமும் ஞானமும் மனிதர்களுக்கு உண்டு.

மறுபடி ஜெயகாந்தனைப் படித்ததில்லை மாலன் என்பதன் நிரூபணம் இந்த வரிகள். தொடர்ந்து இடதுசாரி சிந்தனையை வலியுறுத்தி வந்திருக்கிற ஜெயகாந்தன், இடதுசாரி, காங்கிரஸ் இயக்கங்களை தம்முடைய தாய் தந்தை என்று உவமிக்கிறார். அறிவுபூர்வமாய் தேர்ந்து கொள்கிற சித்தாந்தம் ஒரு புறம், அந்தச் சித்தாந்திகளுடன் கொள்கிற நட்பும், உறவும் உணர்வு பூர்வமான தளத்தில் செயல்படமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர் மாலன். ஆனால் அந்த உணர்வு பூர்வமான நட்பு என்பது சித்தாந்த மாறுபாடுகளை வெளிப்படுத்தமுடியாத தளையல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை மாலனால்.

மாலன் எழுதியது: அறிவு பூர்வமான ஓர் தேர்வை, உணர்ச்சி பூர்வமான உறவாகத் திரிக்கிற, கட்சி உறவை குடும்ப உறவாகச் சித்தரிப்பது திராவிட இயக்கங்களின் பாணி.

முழுக்க முழுக்க திராவிட இயக்கங்களின் பக்கம் நின்று ஜெயகாந்தனை விமர்சிக்கும் - மாலனின் பாணியில் சொன்னால் - கரித்துக் கொட்டும் - இந்தக் கட்டுரையில் திராவிட இயக்கத்தின் மீது உள்ள ஒரே மெலிதான இந்த விமர்சனம் ஏன் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். தான் திராவிட இயக்கச் சார்புப் பார்வை இப்போது எடுத்திருப்பதற்கு அறிவுபூர்வமான பார்வை தான் காரணம் - மூப்பனார், காங்கிரஸ் என்று முட்டி மோதி தாமதமாகப் பெற்ற அறிவு - என்று யாருக்கோ சொல்வது போல் இருக்கிறது. ஒரு எச்சரிக்கையும் இதில் மறைந்து இருக்கலாம். நான் உங்களுடன் சாசுவதமாய் இருப்பேன் என்று சொல்லிவிட முடியாது, நாளைக்கே "அறிவுபூர்வமாய்" நான் வேறெங்கேயும் சென்றாலும் சென்று விடுவேன் என்று சொல்கிறாரா? உணர்வு பூர்வமாய் உங்களுடன் எல்லாம் என்னால் ஒன்ற முடியாது என்று யாரை நோக்கிச் சொல்கிறார் மாலன்?

மாலன் எழுதியது: ஒரு ரயில்வே காலனியில், ஒரு தொழிற்சங்கவாதியின் அரவணைப்பில் தன் இளம் பருவத்தில் வாழ்ந்த ஜெயகாந்தன், 70களில் ரயில்வே ஸ்டிரைக்கை விமர்சித்து, சக்கரங்கள் நிற்பதில்லையை எழுதியது ஏதோ ஒரு விபத்துப் போல நேர்ந்ததல்ல. புகழ் மயக்கம் எப்படி ஒருவரை நிலைதடுமாறச் செய்யும் என்பதன் ஓர் உதாரணம்.

மாலனால் தமிழைப் படித்துப் புரிந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியை இந்த வரிகள் எழுப்புகின்றன. சக்கரங்கள் நிற்பதில்லை, ரெயில்வே வேலைநிறுத்தத்துக்கு எதிரானதல்ல என்று எட்டாம் வகுப்பு படித்தவர் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் மாலனுக்குத் தான் இது எட்டவில்லை. மறுபடியும் சக்கரங்கள் நிற்பதில்லை கதையை மாலன் படிக்கட்டும். தொழிற்சங்க இயக்கத்திற்கு எதிராகவோ, உழைக்கும் மக்களுக்கு எதிராகவோ ஒரு வரியைக் கூட ஜெயகாந்தன் எழுதியதில்லை. அதுமட்டுமல்ல, இடதுசாரி இயக்கங்கள் திராவிட இயக்கங்களைக் கரித்துக் கொட்டின என்று இதே கட்டுரையில் இடதுசாரி இயக்கங்களின் மீது எரிச்சலை வெளிப்படுத்திய மாலன் திடீரென்று தன்னை இடதுசாரியாக வரித்திக் கொண்டு , ஜெயகாந்தனை இடதுசாரிகளுக்கு எதிராக நிறுத்துகிற மாய்மாலம் இது.

மாலன் எழுதியது: கம்யூனிஸ்ட்டாக வளர்ந்த ஜெயகாந்தன் காஞ்சி மடத்து ரசிகராக, ஜெயஜெய சங்கர, ஹர ஹர சங்கர எனக் கோஷ இலக்கியம் எழுத நேர்ந்தது காலத்தின் விபரீதம் மட்டுமல்ல, மனச் சிதைவும் கூட.

மாலனின் இந்த வாதம் ஜெயகாந்தனை சங்கர மடத்தின் ரசிகராய் முன்நிறுத்துகிறது. "ஜெய ஜெயசங்கர" வைப் படித்தவர்கள் , சங்கர மடம் பற்றிய மிக ஆழமான விமர்சனம் என்று தான் புரிந்து கொண்டார்கள். கோவை ஞானி இந்த நாவலை ஜெயகாந்தனின் மிக முக்கியமான நாவலாய்க் குறிக்கிறார். மேலும் கோவை ஞானி சொன்னவை பின்வருமாறு: "ஜெயஜெயசங்கர வில் வரும் சங்கரர். ஜெயகாந்தனுக்குள் தெரிகிற சங்கரர். நம் காலத்து சங்கராச்சாரியாரோடு இந்தச் சங்கரரை வைத்து நாம் மருள வேண்டியதில்லை. ஆதியும் சிங்கராயரும் தமக்குள் அணைத்துக் கொள்கிறவர்கள். கம்யூனிஸ்டு என்பவன் ஒரு செயின்ட் / சித்தன் என்று லெனின் கூறியிருக்கிறார். பெரியவர் ஜீவா அவர்களைத் தான் சிங்கராயர் என்ற பாத்திரப் படைப்பினுள் நாம் காண்கிறோம். தமிழகத்தில் சித்தர் மரபு சாகவில்லை என்பதைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். பொருளும் அதிகாரமும் சிதைக்கிற உலகச் சூழலில், இந்தச் சூழலுக்கு எதிர்வினையாக, மருந்தாய் இந்தச் சித்தர் மரபு மீண்டும், மீண்டும் தளிர்க்கவல்லது என்பதில் ஐயமில்லை. ஆன்மா அற்ற உலகின் ஆன்மா என்றும் இதயமற்ற உலகின் இதயம் என்றும் மதத்தை மார்க்சு வர்ணித்ததை நாம் இந்தச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். மதம் பற்றிய சரியான மார்க்சியப் புரிதல் கொண்டவர் ஜெயகாந்தனின் ஆன்மீகத்தை இனங்கண்டு கொள்ள முடியும். மதம் என்பது அபின், போதை, நஞ்சு எனக் காண்பவர், ஆன்மீகத்திற்கு எதிர்த்திசையில் சிலசமயம் மார்க்சியத்திற்கும் எதிர்த் திசையில் தான் செல்ல முடியும்."

படைப்பாக்கத்தின் உச்சங்களை ஜெயஜெய சங்கரவில் ஜெயகாந்தன் தொட்டார் என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். கலாபூர்வமான ஒத்திசைவும், மிகவும் ஆழமான சமூகச் செய்தியும் மிக அரிதான வகையில் கலந்திருந்த படைப்பு அது என்றும் அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். (அசோகமித்திரன் கருத்துகளின் இந்த மொழிபெயர்ப்பும் மொழிபெயர்ப்பின் குறைபாடுகளும் என்னுடையவை. அசோகமித்திரனின் ஆங்கில வாக்கியங்கள் பின்வருமாறு: I would personally feel that he touched great creative heights in a short novel titled "Jaya Jaya Sankara". Here was an exceptional blend of artistic harmony and deeply-laden social message. )

மாலனுக்கு மார்க்சியமும் ஆன்மீகமும் தெரிந்திருந்தால் இவற்றையெல்லாம் புரிந்து கொண்டிருக்க முடியும். எது மனச்சிதைவு? மனச்சிதைவிற்கு உதாரணம் வேண்டுமென்றால், கருணாநிதியின் "வெள்ளிக் கிழமை"யையும், அண்ணாதுரையின் "கம்பரச"த்தையும் மாலன் படிக்க வேண்டும். சங்கரமடத்து விவகாரங்கள் பற்றி கதை எழுதுவது என்ன மனச்சிதைவு? அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைக் கலாபூர்வமாய் எதிர்கொண்டு கதை எழுதுவது, எழுத்தாளன் உயிர்ப்புடன் இருப்பதன் அடையாளம். லாட்டரிச் சீட்டு வெளிவந்த புதிதில் கூட லாட்டரிச் சீட்டின் அறவியல் பரிமாணங்களைக் கதையாய் வடித்தவர் ஜெயகாந்தன். பொருட்படுத்த வேண்டாத நிகழ்வுகள் இல்லை, பொருட்படுத்த வேண்டாத எழுத்தாளர்கள் தான் உண்டு என்று ஒரு பார்வை உண்டு. (There are no insignificant subjects, only insignificant writers). அன்றாட வாழ்வின் நிகழும் மாற்றங்களை உயிர்ப்புடன், கலைப்பார்வையுடன் பதிவு செய்த முதல் கலைஞன் ஜெயகாந்தன் தான். ஜெய ஜெய சங்கர , ஹர ஹர சங்கரவும் கூட அப்படிப்பட்ட முயற்சிகளே. அந்தப் பதிவுகளை விமர்சனம் செய்யலாம், ஆனால் அந்தப் பதிவுகளே தவறு என்று சொல்லும் பார்வை மாலனுடையது. அவை கோஷ இலக்கியங்கள் என்று மாலன் சொல்வது தான் மனச்சிதைவு என்று தோன்றுகிறது. திராவிட இயக்கத்தின் பார்வையை வலியுறுத்தும் ஒருவர் ஜெய ஜெய சங்கரவை கோஷ இலக்கியம் என்று சொல்வார் என்றால் , அவருடைய இலக்கியப் பார்வை எப்படிப்பட்டதாய் இருக்கும்?

இதையெல்லாம் மீறிப் பார்க்க வேண்டிய விஷயம் ஒன்றும் இருக்கிறது. மாலன் ஜெயகாந்தனை சங்கரமட ரசிகராக நிறுத்துவது சரி என்று வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். இந்தியா டுடேவுக்கு ஜெயேந்திரர் கைதுக்குப் பின் திரு. கருணாநிதி அவர்கள் அளித்த பேட்டியில் இடம் பெற்ற கேள்வி-பதில் பின்வருமாறு:

கேள்வி: நீங்கள் முதல்வராக இருந்தால், ஜெயேந்திரர் மீது நடவடிக்கை எடுத்திருப்பீர்களா?

மு.கருணாநிதி: நான் முதல்வராக இருந்திருந்தால் இந்தக் குற்றச்சாட்டுகளே எழாமல் இருந்திருக்கலாம் அல்லவா?

மு.கருணாநிதி என்ன சொல்ல வருகிறார் இங்கே என்று தமிழ்ப் பத்திரிகைகளை மேலோட்டமாகப் படிக்கும் அனைவருக்கும்கூட புரிந்திருக்கும். ஆரம்பத்தில் ஜெயேந்திரர் கைதை ஆதரித்த அவர் அப்படியே ஒரு யு-டர்ன் அடித்து ஜெயேந்திரர் கைதை விமர்சித்து வருகிறார்.

அதுமட்டுமல்ல, அவர் குடும்ப இதழான குங்குமத்தின் முதல் இதழின் அட்டைப்படம் என்னவாக இருந்ததென்று மாலன் திராவிட இயக்கங்களின் ஆதரவாளராக மாறுவதற்கு முன்னிருந்த நாட்களிலிருந்தே திராவிட இயக்கங்களின் மீது பரிவான பார்வையுடைய இதழாளர் ஞாநி ஒரு பேட்டியிலும் சமீபத்தில் சொல்லியிருந்தார்.

ஜெயகாந்தன் சங்கரமட ரசிகர் என்றால், திரு.மு.கருணாநிதி யார்? சங்கர மடத்தின் வழக்கறிஞரா, காவல்காரரா இல்லை சங்கர மடம் எது செய்தாலும் குற்றச்சாட்டுகளே எழாமல் பார்த்துக் கொள்ள முனைகிற அளவுக்கு சங்கர மட பக்தரா? மாலனுக்கு மட்டுமே பதில் தெரிந்த கேள்விகள் இவை. அதனால்தான், அவற்றையெல்லாம் பொதுவில் அவர் எதிர்கொள்வதில்லை. எள்ளல் என்று அவருக்கு தர்மசங்கடமான எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாய் பொதுலேபிளிட்டு ஒதுக்கிவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். என்னுடைய எழுத்தில் கிண்டலும் நகைச்சுவையும் எள்ளலும் அங்கதமும் நையாண்டியும் பல்வேறு இடங்களில் பல்வேறு விகிதங்களில் இருக்கலாம். ஆனால், அவை மட்டுமே என் கருத்துகளைத் தூக்கி நிறுத்தப் போதுமானதல்ல என்றும் நான் அறிந்திருக்கிறேன். என் கருத்துகளில் இருக்கிற அவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தாலும் கூட, என் கேள்விகளும் கருத்துகளும் மாலனின் இந்தக் கட்டுரையை விடவும், அவை செய்கிற பிரகடனங்களைவிடவும் கனமானவை என்று நான் அறிந்தே இருக்கிறேன்.

மாலன் எழுதியது: இத்தனைக்கும் பிறகும் கூட ஜெயகாந்தனுக்குக் கிடைத்திருக்கும் ஞானபீட விருதுக்காக வாழ்த்துச் சொல்கிறேன். ஏனெனில் அது தமிழுக்குக் கிடைத்த விருது. தமிழ்ன் மேம்பாட்டிற்கு அவர் பங்களிப்பு செய்ததாகக் கருதி அளிக்கப்பட்ட விருது. தமிழ் செழுமையுற வேண்டுமென்று தமிழர் அல்லாதவர்கள் விரும்புவதை எந்தத் தமிழன்தான் விரும்ப மாட்டான்?

தான் திராவிட இயக்கச் சார்புள்ளவன் என்ற உண்மையை நிறுவுவதற்கு இப்படிப்பட்ட அபத்தமான - தமிழ் தமிழ் என்று வாக்கியத்தில் அங்கங்கே தெளித்துவிட்டு, மற்றபடி எந்தப் பொருளுமற்ற இந்த வாக்கியத்தை எழுதுவதைச் செய்து தான் மாலன் கஷ்டப்பட வேண்டுமா? இந்த வாக்கியத்துக்கு ஏதும் பொருள் இருக்கிறதா? தமிழின் மேம்பாட்டிற்கு ஜெயகாந்தன் பங்களிப்புச் செய்ததாகக் கருதி, அளிக்கப் பட்ட விருது என்றால் என்ன பொருள்? அப்படி மாலன் கருதவில்லை என்று பொருள். அதையே நேர்மையுடன் பதிவு செய்யலாமே. அகிலனுக்குப் பரிசு வழங்கப்பட்ட போது நேர்மையாய் இது தமிழுக்கு அவமானம் என்று சிறு பத்திரிகையில் பதிவு செய்தார்கள். அந்த நேர்மை இருந்தால் பரிசளித்தது தவறு என்று எழுதிவிட்டுப் போகலாமே? தமிழுக்குப் பரிசு கிடைப்பதில் எந்தப் பெருமையும் இல்லை. சரியான தமிழுக்குப் பரிசு கிடைப்பதில் தான் பெருமை இருக்கிறது.

மாலன் எழுதியது: ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம்.

சங்ககாலத்து மாட்டுவண்டியை வலியுறுத்தும் திராவிட இயக்கத்தின் பழமையை வலியுறுத்தும் கருணாநிதியை இலக்கியகர்த்தாவாய் முன்னிறுத்தும் மாலன் ஜெயகாந்தனை நீராவி என்ஜின் என்று சொல்வது என்ன விதமான நகை முரண்? ஜெயகாந்தன் நீராவி என்ஜின் என்றால், கான்கார்டு விமானம் போல எழுதுபவர்கள் யார் என்று மாலன் குறிப்பிட்டிருக்கலாம். கருணாநிதியா. வைரமுத்துவா, அப்துல் ரகுமானா அல்லது மாலனா?

மாலன் இதுவரை ஜெயகாந்தனைப் படித்ததே இல்லை என்பது தான் அவர் கருத்துகளின் மூலாதாரம் என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே குழந்தைப் புத்தகமான "பாரதி பாடம்" என்ற ஜெயகாந்தனின் புத்தகத்திலிருந்து மாலன் படிக்கத் தொடங்கலாம். மாலனுக்கு பாரதியைப் பற்றி தெரிந்து கொண்டமாதிரியும் இருக்கும், ஜெயகாந்தனைப் படிக்கத் தொடங்கியதாகவும் இருக்கும்.

5 comments:

எம்.கே.குமார் said...

அன்பு பி.கே.எஸ்,

இலக்கிய உலகு என்ன, 'எல்லா இடத்திலும் அரசியல்தான்' என்பது இன்றைய உலகில் யாருக்கும் தெரியாமல் இல்லை. சில பெரிய விருதுகளுக்குக்கூட சில நல்ல எழுத்தாளர்கள், கட்சிக்கரை வேட்டி கட்டவேண்டிய காலமாகிவிட்டது. இதிலெல்லாம் புதிது என்று எதுவுமில்லை. (சில சிற்றிதழ் 'சிங்கங்களெல்லாம்' கூட வார இதழ்களில் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்!)

அதெல்லாம் இருக்கட்டும். ஜே.கே.யின் சிகரங்களைக் காட்டுகிறேன் என்று ஜெயஜெய சங்கராவை, அ.மியையும் கோவை ஞானியையும் கொண்டு காட்டியிருப்பது சரியானதல்ல என்பது என் கருத்து. அதே நாவலை மிகக்கேவலமாக இகழ்ந்தவர்கள் என்று ஒரு இலக்கியவாதிகள் லிஸ்ட் நான் தரட்டுமா? (அ.மி பயங்கரமான கிண்டல் பேர்வழி என்பது வேறு விஷயம்!)

எனது கருத்துப்படி, அந்த நாவல் நடுநில விமர்சனப்பார்வையில் எழுதப்பட்டது அல்ல. (அது கட்டுரை இல்லையே, நாவல் தானே! புனனவடிவம் தானே! அதிலென்ன நடுநிலைப்பார்வை என்று நீங்கள் கேட்டால் அது உண்மை என்பேன்.!)

அதற்கு சங்கரரை வைத்து எழுதாமல் யாராவது 'புதுச்சாமியார்' அல்லது 'புதிதாக சாமியாரனவர்' பற்றி கதை எழுதியிருந்தால் பதினைந்து ரூபாய்க்கு பரவாயில்லை என்று விட்டிருக்கலாம்.

சர்ச்சைக்குரிய நேரத்தில் சர்ச்சைக்குரியவரைப் பற்றி சர்ச்சைக்குப்பெயர்போன நாவலாசிரியர் இப்படி, அதாவது 'அவரது தரத்தில்' எழுதாதுதான் வருத்தமளிக்கிறது. (படிக்கும்போது அப்படி நினக்கத் தோன்றுவது வேறு வருத்தமான விஷயம்!) கதையின் ஆரம்பத்தில் "என்ன நடந்தாலும் ஹீரோ நல்லவன்" என்ற முடிவோடு கதையின் போக்கு எழுதப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. இது எனது விமர்சனம். இதுதான் சரி என்று சொல்லவில்லை.

இந்த விஷயத்தில் மாலனின் வரிகள் எனக்குப்பிடித்தன. தீப்பொறி பறக்கும் ஜெயகாந்தன் எங்கே? இவர் எங்கே? என்றுதான் நானும் நினைத்தேன். நிற்க.

இப்பதிவில் ஜெகேயை தூக்கிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று மாலனை, ஒண்ணுந்தெரியாத பாப்பா' ரேஞ்சுக்கு கொண்டு சென்றிருப்பது தவறென நினைக்கிறேன். தமிழ் எழுத்துலகில் அவருக்கும் ஒரு நல்ல இடம் இருக்கிறது!

உங்களது வாதப்படி, மாலன், ஜெகேயைப் பற்றி அப்படி எழுதியது தவறானால், நீங்கள், மாலனைப் பற்றி இப்படி எழுதுவதும் எவ்விதத்திலும் சரியாகாது என்பதும் நீங்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தானோ என்பதும் நடுநிலைமையாளர்களின் இன்னொரு பார்வை!

மற்றபடி மாலனியத்தியலோ ஜெயகாந்தியத்திலோ உங்களளவுக்கு எதுவ்ம் தெரியாது எனக்கு!

எம்.கே.குமார்.

Srikanth Meenakshi said...

Well written essay - thanks for writing it.

Maalan's (over)reaction in his blog is surprising. He has to accept the fact that his opinions will be viewed as a reflection of his politics. That is the price one pays for his overt political affiliations.

Maalan, seems like you can dish it out but you can't take it.

enRenRum-anbudan.BALA said...

அன்பில் PKS,

இலக்கியத்தில் அரசியல் புகுந்து பல காலம் ஆகி விட்ட நிலையில், பொதுவாக, சார்பில்லாமல் ஒன்றைப் பற்றி எழுதுவது என்பது கடினமான ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள்! அப்படி முயன்றாலும், சார்பு முத்திரை எப்படியும் குத்தப்பட்டு விடுகிறது!!!

ஒருவரின் கருத்துக்களுக்கு எதிர்வினை வைப்பது உங்கள் உரிமை (அல்லது கடமை!) என்பதை யாரும் மறுக்க முடியாது. தங்கள் கருத்துக்கள் (ஜய ஜய சங்கர'வின் சிறப்பு/தரம் போன்ற) அனைத்திலும் உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட, பொதுவாக, உங்கள் கருத்துக்களில்/தர்க்கத்தில் ஒரு தெளிவும் நேர்மையும் தெரிகிறது. பாராட்டுக்கள்!

இருந்தாலும், மதிக்கப்படுகிற ஒரு மூத்த பத்திரிகையாளருக்கு எதிராக பொதுக் களத்தில் கருத்துக்களை முன்வைக்கும்போது தாங்கள் கூடுதல் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து! சில இடங்களில் திரு.மாலனின் கருத்துக்களுக்கு மறுவினை என்ற நிலையிலிருந்து தனிமனித விமர்சனம் என்ற நிலைக்கு இறங்கியிருப்பதை உணர முடிகிறது.

கலங்கிய குட்டையை மேலும் கலக்கியிருக்கிறீர்கள் :-) நல்ல மீன் பிடிக்க என்றால், குட்டையில் மீன்களே இல்லை!!!

//நடிகையின் புகைப்படத்தை மேலே எடுத்துப் போட்டுவிட்டு, அதன் கீழே இரண்டு வரி கவிதையைப் பற்றியோ அரசியலைப் பற்றியோ எழுதிவிட்டு இறும்பூதெய்து கொண்டிருக்கிற சிந்தனாவாதிகள் இணையத்தில் இருக்கிறார்கள். அந்தோ! அவர்கள் நடிகையைப் பற்றி கூட ஒரு முழுமையான சமூகப் பார்வையையோ முதிர்ச்சியான கருத்துகளையோ முன்வைக்கிற சொந்த சிந்தனையும் திராணியும் இல்லாதவர்கள். ஜெயகாந்தனைப் பற்றி மட்டுமல்ல அவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிற திராவிட இயக்கத்தைப் பற்றியோ, பெரியாரைப் பற்றியோ கூட பொருட்படுத்தி வாசிக்கத்தக்க திறனாய்வென்று எதையும் எழுதாதவர்கள். //

நீங்களே ஒரு முறை கூறியபடி, "நன்றாக அடித்து ஆடியிருக்கிறீர்கள்!" !!! 'A Flat six over Point' என்பார்களே, அதைப் போல!

//எல்லா விஷயத்தையுமே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதவர் என்று மட்டுமே பார்க்கக் கூடிய நசிவு மனப்பான்மைக்கு விரும்பித் தண்ணீர் விட்டு வளர்த்துக் கொண்டிருக்கிற இப்படிப்பட்டவர்களைப் பற்றியும் நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

ஆனாலும், மேற்குறிப்பிட்ட சாரார்கள் வளர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.//

இது தான் வலைப்பதிவுகளில் தற்போதைய Trend! நவபார்ப்பனீயம், நவதிராவிடம் (அல்லது நவதேவரீயம், நவகவுண்டரீயம்! நவநாகரீகம் மட்டும் கிடையாது!) என்று ஏதாவது ஒன்றைப் பற்றி வியாக்கியானம் எழுத வேண்டும்! அதோடு, குழுக்களாக பிரிந்து, அடித்துக் கொள்ளாத குறையாக வசை பாட வேண்டும்! அதனால், எனக்கென்னவோ நீங்கள் தான் இன்னும் வளரவில்லையோ என்ற ஐயப்பாடு எழுகிறது :))

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
ஜென்ராம் said...

முதலில் மாலன் வலைப்பதிவிலிருந்து விலகுதல் முடிவு குறித்த கட்டுரை படித்தபிறகே இதைப் படித்தேன். சில இடங்களில் ஆவேசம் அதிகமாக இருக்கிறது. மதிப்பிற்குரிய மாலனின் எழுத மறுக்கும் முடிவு அதீதமாகவே தோன்றுகிறது.நான் ஜெயகாந்தனைப் போலவே மாலனின் எழுத்துக்களையும் ரசித்துப் படித்தவன்.
விலகி நின்று படிப்பதாலோ என்னவோ
உங்கள் எழுத்துக்கள் கோபப்படுத்தவில்லை. மாறாக தமிழக அரசியல் சூழலில் கலாச்சாரத்தை முதன்மைப்படுத்துபவர்களுக்கும் பொருளாதாரத்தை பிரதானப்படுத்துபவர்களுக்கும் உள்ள முரண்பாட்டின் கூர்மை தெரிந்தது.

ராம்கி
http://stationbench.blogspot.com