Friday, April 08, 2005

ஓட்டையை மறைக்க முயல்கிற லட்சியங்கள்

ஏப்ரல் மாத திசைகள் இணைய இதழில் மாலன் படைப்புலகம் பற்றி நடைபெற்ற கருத்தரங்கத்தைப் பற்றிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. மாலன் சிறுகதைகள் மற்றும் சொல்லாத சொல் ஆகிய நூல்களின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் என்று அக்கட்டுரையின் மூலம் அறிந்தேன். சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற தோப்பில் முகமது மீரான், பொன்னீலன் ஆகியோரும், பிரபல எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இளம் எழுத்தாளர் பாரதி பாலன், தொ.ப. என்று அழைக்கப்படுகிற பேராசிரியர் தொ.பரமசிவம், பிற பேராசிரியர்கள் இவர்களுடன் ஏறக்குறைய 150 ஆய்வு மாணவர்களும் கலந்து கொண்டார்கள் என்று திசைகள் கட்டுரை சொல்கிறது.

இவர்களில் தோப்பில் முகமது மீரான், பொன்னீலன், பா.செயப்பிரகாசம் ஆகியோரின் எழுத்துகளை நான் படித்திருக்கிறேன். அவர்கள் மீதும் அவர்களின் எழுத்துகள் மீதும் எனக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் உண்டு. கல்லூரியில் படிக்கிற காலத்தில் பொன்னீலனின் தலைமையில் ஒரு கவியரங்கத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன். தோழமையும் அன்பும் மிக்க குடும்ப நண்பர் அவர். தொ.ப.வின் எழுத்துகளுடன் நான் அடிக்கடி உடன்படாத போதிலும் அவர் ஓர் கல்வியாளர் என்ற அளவில் அவர் மீது பெரும் மதிப்புண்டு. அதில் பங்கேற்ற முனைவர் சு.வேங்கடராமன் பற்றியும் நண்பர் மூலம் கேள்வியுற்றிருக்கிறேன்.

எனவே, இவர்களும் தமிழ் ஆய்வு செய்கிற தற்கால மாணவர்களும் மாலன் படைப்புகளைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்கிற ஆர்வத்தில் கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தேன். கட்டுரை முழுக்க, மாலன் எழுத்துகளின் சிறப்புகளையும், பெருமைகளையும் மற்றவர்கள் பல கோணங்களில் அலசி பாராட்டியிருந்ததைச் சொன்னது. கட்டுரையில் ஒருவரும் மாலன் எழுத்தில் குறைபாடாக ஒன்றுமே சொல்லவில்லை. மாலன் எழுத்துகளைப் பற்றி மற்றவர்கள் பாராட்டி சொன்ன விஷயங்கள் மட்டுமே அக்கட்டுரையில் இருந்தன.

நான் எழுத்தாளர்களின் படைப்புலகம் பற்றிய தொகுப்புகளைப் படித்திருக்கிறேன். உதாரணமாக, காவ்யா பதிப்பகம், பல எழுத்தாளர்களுக்கு இலக்கியத் தடம் என்ற வரிசையில் புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. அவற்றில் இருக்கிற கட்டுரைகள் எல்லாம், ஓர் எழுத்தாளரை அலசி அவரின் நிறை குறை ஆகியவற்றை விமர்சனப் பாங்கில் அணுகுவதாய் இருக்கும். நான் இந்தியாவில் இருந்தபோது கலந்து கொண்டிருக்கிற இலக்கியக் கூட்டங்களும் அப்படியே இருந்தன. எழுத்தாளருக்கான பாராட்டு விழாவில்கூட, பாராட்ட மட்டுமே செய்யாமல் விமர்சனமும் சொல்லித் தங்கள் கருத்துகளை நாகரீகமாக வெளிப்படுத்துகிற மரபு தமிழில் உண்டு. அப்படித்தான் இருக்கவும் வேண்டும்.

அட, இவற்றையெல்லாம்கூட விடுங்கள். இப்போது ஞானபீட பரிசு பெற்றிருக்கிற ஜெயகாந்தனுக்கு வாழ்த்து சொல்கிறவர்கள் கூட, தத்தம் பார்வையில், ஜெயகாந்தனின் நிறை குறையென்று தாங்கள் கருதுவதைச் சொல்லிப் பின்னரே வாழ்த்துகிறார்கள். எனவே, வாழ்த்த வேண்டிய தருணத்தைக் கூட விமர்சனம் செய்கிற வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிற சூழலில் (இதில் நான் தவறும் காணவில்லை), மாலன் படைப்புகளைப் பற்றிய விமர்சனக் கூட்டம் அவரைப் பற்றிய பாராட்டுகள் மட்டுமே நிறைந்ததாக இருப்பதான ஒரு பிம்பத்தை இக்கட்டுரை ஏற்படுத்துகிறதே என்று தோன்றியது.

தன்னைப் பற்றியப் பாராட்டுகள் மட்டுமே கட்டுரையில் வருமாறு மாலன் பார்த்துக் கொண்டார் என்று மாலனைப் பற்றிக் குற்றம் சாட்டிவிட முடியுமா? மாலன் யார்? ஜனநாயகக் காவலர், எமர்ஜென்ஸியையே எதிர்த்தவர், கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர், மாற்றுக் கருத்துளுக்குக் கூட திசைகளில் இடம் கொடுத்துப் பிரசுரிப்பவர். இவையெல்லாம் இணையத்தில் மாலன் எழுத்துகள் மாலனைப் பற்றி மற்றவர்களிடையே உருவாக்கும் பிம்பங்கள். அவர் அவரைப் பற்றிச் சொல்வதைப் படித்துப் படித்து நானும் தன்னைப் பற்றி ஒருவர் ஏன் பொய் சொல்லிக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்வதை நம்பி வருகிறேன். அது மட்டுமா? மாலன் திசைகளை ஆரம்பித்த நோக்கம் என்ன? திண்ணை.காம் இருந்தாலும் அதன் செயல்பாடுகளில் திருப்தியுறாமல், உலகளாவிய அளவில் தமிழர்களுக்காக ஆரம்பித்த இதழ் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். கொச்சை மொழியில் தினமலர் போல வம்பு சண்டைகளைப் பிரசுரிக்கிற திண்ணையிலேயே அதன் ஆசிரியர்களையும் ஆசிரியர் குழுவையும் திட்டியும் விமர்சித்தும் வருகிற கருத்துகள் அப்படியே பிரசுரிக்கப்படுகின்றன. எனவே, திண்ணையைவிட மேலானதாக திசைகளை நடத்த வேண்டும் என்று விரும்புகிற மாலன், அவர் எழுத்தைப் பற்றிய குறைபாடுகள் மற்றும் பாராட்டு அல்லாத கருத்துகள் கருத்தரங்கில் சொல்லப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவற்றைத் திண்ணையைவிட ஒருபங்கு மேலே போய் "பாராட்டுகளுக்குக் கட்டம் கட்டிப் பிரசுரித்ததைவிடப்" பெரிய கட்டமாகக் கட்டித் திசைகளில் பிரசுரித்துத் தன் ஜனநாயகத் தன்மையை நிரூபித்திருப்பார் என்று நம்புகிறேன்.

இணையத்தில் நான் மாலன் எழுத்துகளைப் படித்து வருகிறேன். புனைகதைகள் அதிகம் அவர் இணையத்தில் எழுதியதில்லை. பெரும்பாலும் கட்டுரைகள். ஒரு சில கட்டுரைகள் மட்டுமே அவை கொணர்ந்த தகவல்களினால் எனக்குப் பிடித்திருந்தன. ஜெயகாந்தனிடம் முன்னுரை கேட்டு வாங்கி அவர் பிரசுரித்த புத்தகம் ஒன்றைப் பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன். அதன் பெயரும் என்ன படித்தோம் என்பதும் இப்போது மறந்துவிட்டது. எனவே, சிறுவயதில் படித்தவற்றைக் கணக்கில் கொள்ளாமல், இணையத்தில் படித்தவற்றை மட்டும் வைத்துக் கொண்டு சொல்லும்போது, எனக்கு மாலன் எழுத்துகள் மீது பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. சொல்லப்போனால், எழுத்து சார்ந்த மதிப்பீடுகளில் நண்பர் இரா.முருகன் போன்றவர்களின் எழுத்துகளை மாலன் எழுத்துகளைவிடவும் உயர்வாக நான் நினைத்து வருகிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இப்படி நான் மதிக்கிற பெரிய பெரிய எழுத்தாளர்கள், மற்றும் 150க்கும் மேற்பட்ட தமிழாய்வு செய்கிற இளைஞர்கள் கலந்துகொண்ட ஓர் அறிவுஜீவிக் கருத்தரங்கில், மாலன் எழுத்துகளைப் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து மட்டுமே சொல்லியிருப்பதைப் படித்ததும், எனக்குக் குற்றவுணர்வு உண்டாகி விட்டது. என்னடா இது, நாம் நம்முடைய ரசனைக் குறைவாலும் புத்திக் குறைவாலும், மாலன் எழுத்துகளைப் பற்றித் தவறாக நினைத்துவிட்டொமே என்று தோன்றியது. இந்தியா செல்லும்போது மாலனின் புத்தகங்களை வாங்கி வந்து மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

மேலும், சக எழுத்தாளரைப் புகழ மட்டுமே வேண்டும் என்கிற அவசியம் இல்லாத எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் (கல்வியாளர்கள் எழுத்தாளர்களை பார்க்கும்/அலசும் போக்கை வேறு அறிந்து வைத்திருக்கிறேனே!), யாமர்க்கும் குடியல்லோம் என்று தங்கள் கருத்தைச் சொல்கிற மாணவ இளைஞர்களும் கலந்து கொண்ட கருத்தரங்கில் அவரின் எழுத்துகளைப் பற்றி எதிர்மறையான விமர்சனமோ குறையோ ஒன்று கூட சொல்லப்படவில்லையெனில் (சொல்லப்பட்டிருந்தால்தான் அவற்றை மாலன் அப்படியே திசைகளில் பிரசுரித்திருப்பாரே!), அவர் எப்பேர்பட்ட எழுத்தாளர்! அவரைத் தமிழ் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. அவர் "எழுத்துத் திறமையை" உணர்ந்து அவரைச் "செய்தியாசிரியராக" வைத்துப் போஷிக்கிற சன் டிவி மீதும் நன்றியுணர்வு தோன்றியது. இப்படிப்பட்ட எழுத்தாளருக்குக் கொடுக்காமல் சாகித்ய அகாதெமியையும், ஞானபீடத்தையும் நீராவி என்ஜின்களுக்கும் கொள்கைநிலை மாறிப் போனவர்களுக்கும் கொடுக்கிறார்களே என்று யாரும் அப்போது என்னைக் கேட்டிருந்தால், எனக்குப் பதில் தெரிந்திருக்காது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் - ஏப்ரல் 2005 காலச்சுவடு வழக்கம்போல கடல்தாண்டிக் கைக்கு வந்தது. அதிலே, "மாலன் சிறுகதைகள்" புத்தகத்தைப் பற்றி சஞ்சயன் என்பவர் "லட்சியத்தில் விழுந்த ஓட்டைகள்" என்ற தலைப்பில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். மாற்றுக் கருத்துகளை வரவேற்க வேண்டும், மாற்றுக் கருத்துகளுக்கு இடம் தர வேண்டும், ஒரு பொருளைப் பற்றிப் பல கோணப் பார்வைகள் ஆகியன முக்கியம் என்று ஓர் செய்தியாசிரியருக்கு இணையாக ஒரு வாசகனாக நானும் விரும்புகிறேன். எனவே, அவ்வளவு பெரிய எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் சர்டிபிகேட் கொடுத்துவிட்ட மாலனைப் பாராட்டி அந்த மதிப்புரை இருக்கும் என்ற நம்பிக்கையில் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், இந்த மதிப்புரை, அவ்வளவு பெரிய எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், அத்தனை மாணவ மணிகளும் மாலன் எழுத்துகளைப் பற்றிக் கொண்டிருந்த்தாகத் திசைகள் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த கருத்துகளுக்கு நேரெதிராக இருந்தது. எனவே, முதல் வாசிப்புக்கு இந்த மதிப்புரை எனக்கு அதிர்ச்சியளித்தது. ஆனாலும், மாலன் எழுத்துகளைப் பற்றி நான் முதலில் கொண்டிருந்த மதிப்பீடு சரியோ என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்தியது. சிற்றிதழில் புத்தக மதிப்புரை எழுதுகிற பிரபலமாகாத பெயருடையவருக்கு மாலன் எழுத்துகள் குறித்துத் தோன்றிய எண்ணங்களை ஒத்த ஒரு சில விமர்சனக் கருத்துகள் கூட அத்தனை பெரிய எழுத்தாளர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், அறிவின் வளர்ச்சியில் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுப் பார்க்கத் துணிகிற மாணவ மணிகளுக்கும் தோன்றவில்லையே (அவர்களுக்குத் தோன்றி அவர்கள் அதைக் கருத்தரங்கில் சொல்லியிருந்தால்தான், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள, முகஸ்துதியை விரும்பாத இல்லாத மாலன் அப்படியே திசைகளில் பிரசுரித்திருப்பாரே!) என்று தோன்றியது. அடுத்தமுறை இந்தியா போகும்போது, மாலனின் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கிப் படித்துவிட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

திசைகளிலோ பிற பத்திரிகைகளிலோ வெளியாகும் ஒரு கட்டுரையையோ, பேட்டியையோ மட்டுமே படித்துவிட்டு எழுத்தாளர்களைப் பற்றிய மதிப்பீடுகளையும் பிம்பங்களையும் உருவாக்கிக் கொள்கிற அதிமேதாவிகள் இணைய உலகில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவசரடியான மதிப்பீடுகளை மாலனே கூட விரும்ப மாட்டார். அந்தக் காரணத்தால், இக்கட்டுரையைத் திசைகளில் பிரசுரிக்கிற சிரமத்தை மாலனுக்குத் தரக் கூடாது என்று அவர் வேலையைச் சுலபமாக்க, காலச்சுவடு மதிப்புரையைக் கீழே தருகிறேன். காலச்சுவடுக்கும் சஞ்சயனுக்கும் நன்றிகள்.

திசைகள் கட்டுரைக்கான இணைப்பு இக்கட்டுரையின் ஆரம்பத்தில் இருக்கிறது. காலச்சுவடு கட்டுரை கீழே இருக்கிறது. எனவே, மாலனைப் பற்றி நிறை குறைகள் இரண்டும் இப்பதிவில் இருக்கிறது. அந்த விதத்தில் திசைகள் இணைய இதழ் செய்யாத ஒன்றை என் பதிவு செய்திருக்கிறது (நிறை குறை இரண்டையும் விரிவாகச் சொல்லி முடிவை வாசகரிடம் விட்டுவிடுவது.) இதற்காக மாலன் மனம் மகிழ்ந்து, இளைஞர்களை ஊக்குவிக்கிற அவரின் லட்சியப்படி, என்னையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்துவார் என்று நம்புகிறேன். கருத்தரங்கின் பாராட்டுகளுக்கு மனம் உவந்து ஏற்புரை வழங்கிய மாலன், இந்த மதிப்புரையின் கருத்துகளுக்குத் தன் பதில்களை எழுதுகிற சிரமத்தை மேற்கொள்வாரேயானால், அவற்றையும் திசைகளின் வாசகனாகப் படிக்க விரும்புகிறேன்.

லட்சியத்தில் விழுந்த ஓட்டைகள்

- சஞ்சயன்

(ஏப்ரல் 2005 காலச்சுவடில் "மாலன் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்புக்கு" எழுதப்பட்ட மதிப்புரை, உரியவர்களுக்கு நன்றி சொல்லி கீழே.)

அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ இரண்டாகப் பிரிந்துபோன இலக்கியத்தில் சிற்றிதழ்கள் மூலமும் அது சார்ந்த படைப்பாளிகள் மூலமும் தீவிர எழுத்து அடைந்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றங்களும் அது விரித்திருக்கும் எல்லைகளும் பெரும் வெளிச்சத்திற்கு வராதிருக்கிறது. மலிவான ரசனையைக் கச்சாப் பொருளாகக் கொண்டு விளைந்த வெகுசன இலக்கியமோ செழித்துக் கொழுத்திருக்கிறது. இக்கண்ணியில் வெகுசில மாற்றங்களுடன் தனனையும் மற்றொரு கண்ணியாகப் பிணைத்துக் கொண்டிருப்பவர் மாலன். இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்டவை. இதன் தரம் குறித்த நிச்சயமின்மையே இத்தொகுப்பின் இருப்பிற்கான நியாயம் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. அ.முத்துலிங்கத்தின் கதைகள் கூட வாசிக்கச் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவை வெறும் சுவாரஸ்யம் மட்டுமேயல்ல. இக்கதைகள் வெற்றுச் சுவாரஸ்யத்தை மட்டுமே தருவது பரிதாபம்.

வாசிப்பு முடிந்து உண்டாகும் அலைக்கழிப்பினூடான பயணத்தில் அது நம்மிடம் ஏற்படுத்தும் விளைவுகளைக் கொண்டே அதன் மதிப்பைத் தீர்மானிக்க முடியும். இக்கதைகளைப் படித்து முடித்தவுடனேயே அவை தம் ஆயுளை முடித்துக் கொள்கின்றன.

வாழ்வனுபவத்தின் கீற்றுகளிலிருந்தும் சாரங்களிலிருந்தும் - அது புனைவாக இருப்பினும் - உருவாகும் கதைகளின் இயல்பிற்கு மாறாக, அக்கீற்றின் நுனியிலேயே இக்கதைகள் நின்றுவிடுகின்றன. மிகச்சிறிய நிகழ்வைக் கூட ஆர்வத்தாலோ அவசரத்தாலோ கதைகளாக்கிப் பார்த்திருக்கிறார் மாலன். சில கதைகள் அடைந்திருக்க வேண்டிய இடங்கள் கூடக் குறுகிப் போவதற்கு அக்கதைகள் எழுதப்பட்ட இதழ்களின் ரசனைக்கு மிக முக்கியமான பங்குண்டு. அவற்றினூடான சமரசங்களே அவறறை மேலோட்டமான வாசிப்பிற்குரியதாக நீர்த்துப் போகச் செய்திருக்கின்றன.

லௌகீக வேலிகளுக்குள் அடைபட்டிருக்கும் பலவற்றில், சில கதைகள், காயங்களைப் பொருட்படுத்தாமல் அவ்வேலியைத் தாண்டியிருப்பினும்கூட, அது வந்து சேர்ந்த புதிய இடத்தை மருட்சியோடு பார்த்துக் கொண்டிருப்பதிலேயே நேரத்தை விழுங்கி விடுகின்றன.

பாத்திரங்களின் உரையாடலில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் அறிவுரையாலோ போதனைகளாலோ சிறு விளக்கங்களாலோ தம்முடைய முந்தைய நெருக்கடியிலிருந்து தம்மை வெகு சாதாரணமாக விடுவித்துக் கொள்கின்றன. இவ்வளவு எளிமையாக மனத்தைப் பகுத்துக் கொள்ள மாலனால் முடியும் போலும். படைப்பு சார்ந்து எந்த நெருக்கடியையும் சவாலையும் இவர் சந்திக்கவேயில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

பெரும்பாலான கதைகளில் வேலையற்ற, குடும்பத்தால் அலட்சியம் செய்யப்பட்ட, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கோபாவேசம் கொண்ட இளைஞன் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறான். சுயநலங்களுக்கும் சமூக அழுக்குகளுக்கும் கலாச்சாரச் சீரழிவிற்கும் அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்திற்கும் எதிராக அமைப்பையே புரட்டிப்போட பெரும்பாலான பாத்திரங்கள் அவற்றை நோக்கி எண்ணற்ற கேள்விகள் கேட்கிறார்கள். இப்போது அக்கேள்விகளை மாலனே எதிர்கொள்ள நேர்ந்திருப்பது காலத்தின் விசித்திரம்தான்.

இத்தொகுப்பில் முகங்கள், அக்னி நட்சத்திரம், முக்காலிகள் போன்ற கதைகள் குறிப்பிடப்பட வேண்டியவை. தாளும் அச்சாக்கமும் தரத்துடன் அமைந்திருக்கின்றன.

யாருக்காக இக்கதைகள் எழுதப்பட்டனவோ அவர்களைத் திருப்திப்படுத்த இத்தொகுப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

நன்றி: சஞ்சயன், காலச்சுவடு.

4 comments:

மாலன் said...

அனபுள்ள சிவகுமார்,

>>மாலன் படைப்புகளைப் பற்றிய விமர்சனக் கூட்டம் அவரைப் பற்றிய பாராட்டுகள் மட்டுமே நிறைந்ததாக இருப்பதான ஒரு பிம்பத்தை இக்கட்டுரை ஏற்படுத்துகிறதே என்று தோன்றியது.தன்னைப் பற்றியப் பாராட்டுகள் மட்டுமே கட்டுரையில் வருமாறு மாலன் பார்த்துக் கொண்டார் என்று மாலனைப் பற்றிக் குற்றம் சாட்டிவிட முடியுமா?<<

விமர்சனமாக சொல்லப்பட வேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன். விமர்சனங்கள் என் எழுத்தை மாற்றிவிடும் என்பதற்காக அல்ல, ஓர் விவாதக் களம் உருவாகும் என்பதற்காக. ஆனால் சொல்லப்படவில்லை. இந்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் யாரும் நெருங்கிய நண்பர்கள் அல்ல. ஆனால் இலக்கிய/ எழுத்துலக/அறிவுலக வாசிகள் என்பதால் அறிமுகம் உண்டு. சிலர் இந்தக் கதைகள் எழுதப்பட்ட 70கள், எண்பதுகளில் எதிர் எதிர் முகாமில் இருந்தவர்களும் கூட. ஆனாலும் அவர்கள் விமர்சனங்களாக கருத்துக்களை வைக்கவில்லை. உங்கள் குடும்ப நண்பர் பொன்னீலனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கருத்தரங்க நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. கருத்தரங்கில் பங்கு கொண்டவர்களில் அநேகர் தங்கள் கருத்துக்களை கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார்கள். எல்லாக் கட்டுரைகளும் என்னிடம் இல்லை என்றாலும் திரட்டிவிடலாம். ஒலி நாடாக்களையோ, கட்டுரைகளையோ உங்களுக்கு அனுப்பத் தயார். நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம்.

என் படைப்புக்களைப் பற்றி விமர்சனமாக ஏதேனும் சொல்லப்படுமானல் அதைத் திசைகளில் வெளியிடுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்களே கூட எழுதலாம். மாலன் சிறுகதைகள் முதல் பதிப்பு முற்றிலும் விற்றுத் தீர்ந்தது என்றும், இரண்டாம் பதிப்பு இன்னும் ஓரிரண்டு மாதங்களில் வெளிவரும் என்றும் கிழக்குப் பதிப்பகத்தார் தெரிவிக்கிறார்கள். இரண்டாம் பதிப்பு தயாரானதும் அதை என் செலவில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

என்னுடைய மாலன் சிறுகதைகள், சொல்லாத சொல் ஆகிய நூல்கள் , ஏறத்தாழ ஓராண்டுகளுக்கு முன் 2004 ஜீன் மாதம் வெளியிடப்பட்டன. கடந்த ஓராண்டில் நான் அதைக் குறித்து திசைகளில் எந்த விமர்சனமும் வெளியிட்டதில்லை. விமர்சனம் எழுதச் சொல்லி யாரிடமும் கேட்டதும் இல்லை.
அதைக் குறித்துப் பாராட்டான சொற்களை ஆனந்தவிகடன் ('ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பு எப்படியிருக்கும்?' என்று கேட்பவருக்கு 'இதோ இப்படி இருக்கும்!' என்று காட்டக்கூடிய தொகுப்பு!), ஹிந்து (Malan sets down an authentic recordation of the social history of our times.) கல்கி ஆகிய இதழ்கள் விமர்சனங்கள் வெளியிட்டன. அவற்றை நான் திசைகளிலோ, இணையத்திலோ மறுபிரசுரம் செய்து கொள்ளவில்லை.

திசைகளில் மாதா மாதம் எழுதுவதற்கு எனக்கு வாய்ப்பு உண்டு என்றாலும் நான் அதை என்னைப் பற்றியோ. என் நூல்களைப் பற்றியோ எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

திசைகளையோ, அல்லது வலைபூக்களையோ, அல்லது வேறு எந்த ஊடகத்தையோ நான் என்னைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கிக் கொள்ளவோ, முன் வைக்கவோ முற்படுவதில்லை. யாரும் கேட்டால் ஒழிய என் சொந்த வாழ்க்கை பற்றிப் பேசுவதில்லை. என்னுடைய எழுத்துலக நண்பர்களுக்கே கூட என் சொந்த வாழ்க்கை பற்றித் தெரியாது. ஒரு வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையே, படைப்புகளுக்கு அப்பால் எந்த தனிப்பட்ட உறவும் கிடையாது, எழுத்தாளர்கள் பீடத்தில் வைத்து வணங்கத் தக்கவர்கள் அல்ல என்பது என் அபிப்பிராயம். இதைப் பல கூட்டங்களில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறேன்.

எனவே என்னுடைய பிம்ம்பங்கள் பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் எழுதலாம்.

என் கதைகளை நீங்கள் படித்ததில்லை. படித்த கதைகளும் இப்போது மறந்து விட்டன. ஆனால் என்ன் ஆச்சரியம்! காலச்சுவடு விமர்சனம் நீங்கள் என் எழுத்துக்கள் மீது கொண்டுள்ள மதிப்பீடுகள் சரியோ என்று உங்களை சிந்திக்க வைத்திருக்கின்றன. காலச்சுவடு விமர்சசனத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதோ அல்லது கேள்விகளோடு ஏற்றுக் கொள்வதோ, அல்லது நிராகரிப்பதோ உங்கள் விருப்பம். ஆனால் உங்களது அபிப்பிராயங்களை நீங்கள் உங்கள் சொந்த வாசிப்பின் பேரில், சொந்த அனுபவங்களின் பேரில், சொந்த மூளையின் பேரில் உருவாக்கிக் கொள்ளலாமே?

ஆனந்த விகடனோ, கல்கியோ, இந்துவோ (இவை இணையத்திலும் இருக்கின்றன) விமர்சனங்களை, அவை வெளிவந்து பல மாதங்களாகியும் எதிர்வினையாற்றாத நீங்கள் இப்போது காலச்சுவடு விமர்சனத்தைப் மறு பிரசுரம் செய்ய வந்திருக்கிறீர்கள். அப்படி உங்களை உந்தியது என்னுடைய ஜெயகாந்தன் என்ற நீராவி என்ஜின் என்ற கட்டுரைதான் என்பதை கீழ்காணும் உங்களது வரிகள், வரிகளுக்குப் பின்னுள்ள தொனி, எனக்கு உணர்த்துகின்றன:

>>இப்படிப்பட்ட எழுத்தாளருக்குக் கொடுக்காமல் சாகித்ய அகாதெமியையும், ஞானபீடத்தையும் நீராவி என்ஜின்களுக்கும் கொள்கைநிலை மாறிப் போனவர்களுக்கும் கொடுக்கிறார்களே<<

அந்தக் கட்டுரை குறித்து உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அதை நீங்கள் திசைகளுக்கு எழுதியிருக்கலாம். திசைகள் மீது நம்பிக்கை இல்லை என்றால் அதை வலைப்பதிவுகளில் வெளியிட்டிருக்கலாம். இந்தக் கட்டுரையின் சுருங்கிய ஆங்கில வடிவம் இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்தது. அதன் முழு தமிழ் வடிவம் சிங்கப்பூர் தமிழ் முரசில் வெளிவந்தது. அவர்களுக்கு எழுதியிருக்கலாம். வேறு இதழ்களில் எழுதியிருக்கலாம். அதை விட்டுவிட்டு எதற்கு இப்படி ஒரு அழுகுணி ஆட்டம்?.

>>அவர் "எழுத்துத் திறமையை" உணர்ந்து அவரைச் "செய்தியாசிரியராக" வைத்துப் போஷிக்கிற சன் டிவி <<
என்ற வரிகளில் எனக்கு எழுத்துத் திறமை கிடையாது என்ற எள்ளல் தொனிக்கிறது. நன்றி. ஆனால் அதுதான் உங்கள் அபிப்பிராயம் என்றால் அதை எள்ளல் இல்லாமல் நேரிடையாக சொல்லலாம். அதே நேரம் எழுத்துத் திறமை இல்லாத, சிந்திக்கும் திறமை இல்லாத, செயல்படும் திறமை இல்லாத ஒருவனை சன் டிவி போஷிப்பதைக் குறித்து நீங்கள் ஏன் கவலையோ, நன்றியோ பாராட்ட வேண்டும்?. அதைக் குறித்து சன் டிவி அல்லவா கவலை கொள்ள வேண்டும்?

வலைப்பதிவர்கள், அல்லது பல எழுத்தாளர்கள் எங்கு வேலை செய்கிறார்கள் எனப் பலருக்குத் தெரியாது. நான் எங்கு வேலை செய்கிறேன் என்பது உலகறிந்தது. அதன் காரணமாக என் படைப்புக்கள் அவற்றில் சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்கள், அவை எழுதப்பட்டிருக்கிற மொழி இவற்றின் அடிப்பபடையில் காலச்சுவடாலும், உங்களாலும் பார்க்கப்படுகின்றன. வேறு எந்த எழுத்தாளனுடைய படைப்பும் அப்படிப் பார்க்கப்படுவதில்லை. எல்லோருக்கும் ஒரு நியாயம், எனக்கு ஓரு நியாயமா?

உங்களது வலைப்பதிவு திசைகளின் வாராந்திர வலைப்பதிவுகள் பகுதியில் இடம் பெறும். காலச்சுவடு விமர்சனத்தை அப்படியே மறுபிரசுரம் செய்வதில் காபி ரைட் பிரசினைகள் எழலாம் என்பதால் அந்தப் பகுதி பிரசுரமாகாது. ஆனால் விருப்பமானவர்கள் காலச்சுவடு இதழுக்கே சென்று அதைப்பார்த்துக் கொள்ள வசதியாக, இணையத்தில் வெளியாகி உள்ள அந்தக் கட்டுரைக்கான சுட்டி அதில் இடம் பெறும் ( நீங்கள் உங்கள் கட்டுரையில் திசைகளுக்குக் கொடுத்திருக்கிற இணைப்புப் போல)

அன்புடன்
மாலன்

PKS said...

Anbulla Maalan,

Weekends are hectic to me due to personal commitments. I read your comment. I will reply when I get a breather.

Just as a quick response now (will expand it in my reply), my above post is not a response to your article on Jeyakanthan.

I have already started writing a detailed response to your article on JK :-). I am not finding time to complete it. Once I finish it, I will post it in my blog too. So, I need not use this post to reply for it.

Will write in detail about your comments soon. Probably on or before Monday. I know this reply will delay my reply to your JK article. However, I will try to reply to some of the "smart accusations" you have raised for my post and then go there.

Thanks and regards, PK Sivakumar

PKS said...

மாலன் சொன்னது: விமர்சனமாக சொல்லப்பட வேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன். விமர்சனங்கள் என் எழுத்தை மாற்றிவிடும் என்பதற்காக அல்ல, ஓர் விவாதக் களம் உருவாகும் என்பதற்காக. ஆனால் சொல்லப்படவில்லை.

திசைகளில் வெளியான உங்கள் ஏற்புரையை மீண்டும் ஒருமுறை படித்தேன். அந்த ஏற்புரையில் எங்கும் நீங்கள் இதைப் பதிவு செய்ததாகவோ மேற்சொன்ன கருத்தைச் சொன்னதாகவோ இல்லை. உண்மையான விவாதக் களத்தை விரும்புவர், அந்த விழாவிலேயே இதைப் பற்றிய அதிருப்தியை வெளியிட்டிருப்பார். நீங்கள் வெளியிட்டீர்களா என்று தெரியாது. ஆனால், இப்போது நான் இதைப் பற்றி எழுதியதும், மேற்சொன்னதை பதிவு செய்திருக்கிறீர்கள். இது எப்படியிருக்கிறது என்றால், தான் மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்று தெரிந்தவுடன் பழியை மற்றவர்கள் மேல் போடுகிற அப்ரூவர் மாதிரி இருக்கிறது. ஆனால், இதுவும் நல்லதுதான். இப்படிப்பட்ட ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை உங்கள் வாய் மூலம் பெற முடிந்ததே என் பதிவுக்குக் கிடைத்த வெற்றி. உங்களின் இந்தக் கருத்தை இப்போதாவது பதிவு செய்தமைக்கு நன்றிகள்!

யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் என்கிற அரசு சார்ந்த அல்லது அரசு மான்யத்தில் இயங்குகிற ஒரு நிறுவனத்தால் 14 ஆயிரம் கல்லூரிகளிலிருந்து 45-ல் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற, சிறப்பு மிக்க வரலாற்றைத் தாங்கி நிற்கிற, பல அறிஞர்களையும்/கலைஞர்களையும் உருவாக்கி வருகிற, கல்லூரியின் பெயர் சொன்னாலே தரம் விளங்குகிற அளவுக்கு நற்பெயர் பெற்றிருக்கிற புனித சேவியர் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்துகிற, புகழ்பெற்ற எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் கலந்து கொள்கிற, எதிர்கால சந்ததியினரான மாணவர்களிடம் படைப்பின், படைப்பாளியின் பன்முகத் தன்மையை எடுத்துச் செல்லும் முகமாக, நடத்தப்படுகிற படைப்புலகம் சார்ந்த கருத்தரங்குகளே "இந்த லட்சணத்தில்" (விமர்சனமாக ஒன்றுமே சொல்லப்படவில்லை என்ற உங்கள் வார்த்தைகள் சொல்கிற பொருளில்) இருக்கிறதென்பதும் என் பதிவின் மூலம் வெளிச்சமாகியிருக்கிறது. அது குறித்தும் சந்தோஷமே.

இதைப் பற்றிய குறைந்தபட்ச சமூகப் பிரக்ஞையோ மெலிதான வருத்தமோ கூட இந்தப் படைப்புலகம் பற்றி திசைகளில் வெளியான கட்டுரையில் காணப்படவில்லை என்பது வாசகர்களுக்குக் கூடுதல் செய்தியுமாகும்.

இதைத் தவிர உங்கள் பதிலிலும் கருத்துகளிலும் பொருட்படுத்திப் பதில் சொல்லத்தக்க அம்சங்கள் ஏதும் இல்லை. என்னை அழுகுணி ஆட்டம் ஆடுவதாகவும், உங்களைப் படிக்காமலேயே உங்கள் எழுத்தைப் பற்றி முடிவுக்கு வந்து விட்டதாகவும் சாட்டப்படுகிற குற்றச்சாட்டுகள் எல்லாம் என் பதிவின் நோக்கத்தை திசை திருப்புகிற முயற்சிகள். இவற்றுக்கெல்லாம் பதில்கள் சொல்வதும் இத்தகைய குற்றச்சாட்டுகளின் அபத்தத்தைக் கட்டுடைப்பதும் பெரிய வேலை அல்ல. ஆனால், அவற்றைச் செய்வதில் எனக்கு அயர்ச்சியும் ஆயாசமும் ஏற்படுகின்றன. ஆனாலும் பின்வருவனவற்றை மட்டும் இப்போதைக்குச் சுருக்கமாகச் சொல்லி வைக்கிறேன்.

என்னுடைய பதிவை முழுமையாகப் படித்திருந்தீர்கள் என்றால் - "இந்தியா செல்லும்போது மாலனின் புத்தகங்களை வாங்கி வந்து மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்." என்று ஓர் இடத்திலும், உங்களைப் போன்றவர்களுக்கு ஒருமுறை மட்டும் சொன்னால் புரியாதோ என்று "அடுத்தமுறை இந்தியா போகும்போது, மாலனின் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கிப் படித்துவிட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்." இரண்டாவதாக இன்னோர் இடத்திலும் எழுதியிருக்கிறேன்.

மேலும் - "அவர் "எழுத்துத் திறமையை" உணர்ந்து அவரைச் "செய்தியாசிரியராக" வைத்துப் போஷிக்கிற சன் டிவி <<
என்ற வரிகளில் எனக்கு எழுத்துத் திறமை கிடையாது என்ற எள்ளல் தொனிக்கிறது. நன்றி. ஆனால் அதுதான் உங்கள் அபிப்பிராயம் என்றால் அதை எள்ளல் இல்லாமல் நேரிடையாக சொல்லலாம்." என்றும் எழுதியிருந்தீர்கள்.

என் எழுத்தில் நகைச்சுவையும், அங்கதமும், நையாண்டியும், எள்ளலும் பல இடங்களில் பலவிதமான கலவைகளில் இருக்கலாம். ஆனால், அவற்றினால் மட்டுமே ஒரு எழுத்து நின்று விடாது என்றும் நான் அறிந்து வைத்திருக்கிறேன். மொழியையும் நடையையும் தீர்மானித்துக் கொள்வது எழுதுபவரின் உரிமையும் சுதந்திரமும். என் எழுத்தில் தரக்குறைவாக ஏதும் இருப்பதாக இருந்தால் எடுத்துக் காட்டுங்கள். அது தரக்குறைவா என்று பதில் சொல்கிறேன். மற்றபடி உங்களின் மேற்படி வாக்கியத்தில் ஒன்றுமே இல்லை.

சொல்லப்போனால், எள்ளலையும் நையாண்டியையும் விரும்பாதவரா என்ன நீங்கள்? ஆப்பு என்கிறவர் தமிழ்ப் புத்தாண்டு விருப்பம் என்ற தலைப்பில் செய்திருந்த எள்ளல் மிகுந்த பதிவில், உங்களுக்கு எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்று இருந்ததை நையாண்டி என்ற பெயரில் திசைகளில் வெளியிட்டு ஊக்குவித்தவர் தானே நீங்கள். மற்றவர்களைப் பற்றி ஆப்புவின் அந்தப் பதிவில் என்ன இருந்ததென்று அந்தப் பதிவைப் படித்தவர் அறிவர்.

துக்ளக்கில் வெளிவருகிற ஒன்றரைப் பக்க நாளேடு தரத்தில் படிக்கிற யாரும் அந்த நிமிடம் முறுவலிட்டுவிட்டுப் பின் மறந்து போகிற மாதிரி, கருத்து ரீதியான அலசலோ விமர்சனமோ எதுவும் இல்லாமல், ஜெயமோகனும் பிறரும் சொன்ன கருத்தை வைத்து, இணையக் குசும்பன் என்ற பெயரில் எழுதுகிற நண்பர், நையாண்டியும் எள்ளலும் செய்தபோது அதைத் தரமான parody என்று பாராட்டி ஊக்குவித்தவரும் நீங்கள் தானே.

மூன்றாவதாக - நண்பர் ரவி ஸ்ரீனிவாஸ் எழுதிய ஒரு பதிவுக்குப் பதிலளிக்கும் போது அவரை மொழியியல் வல்லுநர் என்ற எள்ளலுடன் ஆரம்பித்தும் நீங்கள் பதிலளித்து இருக்கிறீர்கள். மேற்சொன்ன மூன்றுக்கும் இணைப்புகளை தேடிப் போடுவது பெரிய விஷயமில்லை. தேவையில்லை என்றே போடாமல் விட்டிருக்கிறேன்.

எனவே, மற்றவர்களைப் பற்றி மற்றவர்கள் எள்ளல் செய்தால் உங்களால் ரசிக்க முடிகிறது அல்லது நீங்களாக மற்றவர்களை எள்ளல் செய்கிற மாதிரி எழுதலாம். உங்களைப் பற்றி யாரும் நையாண்டியுடனோ அங்கதத்துடனோ எழுதினால் கூட உங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நேரிடையாகச் சொல்லலாம் என்கிறீர்கள். சிதைவு அடையாத ஆரோக்கியமான மனங்கள் இப்படித்தான் செயல்படுமா மாலன்? அழுகுணி ஆட்டம் என்று சொல்கிறீர்களே, இதுதான் மாலன், அழுகுணி ஆட்டம்!

மற்றபடிக்கு வலைப்பதிவு ஆரம்பித்தபின் நான் எழுதுகிறவை எல்லாமும் என் வலைப்பதிவில் இடம் பெறுகின்றன. தட்ஸ்தமிழ்.காம் அவர்களாக விரும்புகிற என்னுடைய படைப்புகளை அவர்கள் தளத்தில் பிரசுரித்தார்கள். திண்ணை.காமின் ஜனநாயகத் தன்மையில் எனக்கு இருக்கிற நம்பிக்கையால் - என் படைப்புகள் சிலவற்றை திண்ணை நிராகரித்திருக்கிற போதும் - நானாக அதில் அவ்வப்போது எழுதி வருகிறேன். அச்சு ஊடகங்களில் நான் எழுதுவதைப் பெரும்பாலும் வேண்டுமென்றே தவிர்த்து வந்திருக்கிறேன். தவிர்க்க இயலாத சூழல்களில் மட்டுமே அச்சு ஊடகங்கள் அவர்களாக என் படைப்புகளை எடுத்துப் பிரசுரித்ததோ, நானாக எழுதியதோ உண்டு. எனவே, ஏன் என் பதிவை இதற்கு முன் வேறு ஊடகங்களில் எழுதவில்லை என்கிற மாதிரியான சப்பையான வாதங்களாக வைக்காமல் வேறு ஏதேனும் அடுத்த முறை எழுதுங்கள். எங்கே எழுதினால் என்ன, கருத்து வெளியானால் போதாதா?

நீங்கள் எழுதியது: "நான் எங்கு வேலை செய்கிறேன் என்பது உலகறிந்தது. அதன் காரணமாக என் படைப்புக்கள் அவற்றில் சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்கள், அவை எழுதப்பட்டிருக்கிற மொழி இவற்றின் அடிப்பபடையில் காலச்சுவடாலும், உங்களாலும் பார்க்கப்படுகின்றன."

ஜெயகாந்தனைப் பற்றி நீங்கள் எழுதியதால் நான் இந்தப் பதிவை எழுதினேன் என்ற எளிய தப்பித்தலுக்குப் போய் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மற்றவர்களையும் அதை நம்ப வைக்க ரொம்பவே சிரமப்பட்டிருந்தீர்கள். ஆனாலும் பாருங்கள்! நீங்கள் என் மீது மேலே வைத்திருக்கிற குற்றச்சாட்டை உங்கள் மீதே நானும் வைக்க முடியும். நான் ஜெயகாந்தனின் தீவிர வாசகன் என்பதாலேயே என் எழுத்துகளை நீங்கள் அந்த அடிப்படையில் மட்டுமே பார்க்கிறீர்கள் என் எழுத்துகளுக்கு நோக்கம் கற்பிக்கிறீர்கள் என்று சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? யார் யாருடைய அபிமானியாக இருப்பது பற்றியும் எனக்குக் கவலை இருந்ததில்லை. எதிர்த்தரப்பில் பேசுகிறவரின் கருத்துகள் எப்படிப்பட்டன என்பது மட்டுமே என் கவனம். எனவே, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் தயவுசெய்து முடிச்சு போடாதீர்கள். இப்படிப்பட்ட சில்லரைத்தனமான குற்றச்சாட்டுகளைப் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருப்பதைவிட்டு விட்டு, ஆரோக்கியமாக ஏதும் பேசவே நான் விரும்புகிறேன். ஜெயகாந்தன் பற்றிய உங்கள் கட்டுரைக்கான ஒரு விரிவான எதிர்வினை என் பதிவில் விரைவில் வெளியாகும்.

மேலும் - திரு. மு.கருணாநிதி சன் டிவி நேயர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோது, அதை நீங்கள் ஒருங்கிணைத்தபோது, உங்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. அதைப் பற்றிய என் பார்வையை திண்ணை.காமில் எழுதியிருக்கிறேன். நீங்கள் மேலே சொல்லியிருப்பதற்கான நேரடியான பதில் அதில் இருக்கிறது. தேடுங்கள் கண்டடைவீர்கள்!

நன்றிகள்!

என்றும் அன்புடன், பி.கே. சிவகுமார்

சீமாச்சு.. said...

அன்பின் மாலன்,
உங்கள் வேதனையான கட்டுரைக்குப் பிறகு சிவகுமாரின் பதிவையும் ("இலக்கிய அரசியலின் இரட்டை வேடங்கள்" ) எடுத்துப் படித்தேன்.
சிவகுமாரின் பதிவில் நிறையவே நியாயங்கள் இருப்பது தெரிகிறது. உங்கள் பதிவிலும் தேவைக்ககு அதிகமான
உணர்ச்சிவசப்படலும் தெரிகிறது. அவ்வப்பொழுது எழுதிய விஷயங்களுக்கு நேரடியாகவே சுடச்சுட பலர் முன்னிலையில், சென்சார் செய்யப்படாத விமர்சனம் கிடைப்பது உங்களைப்போல பத்திரிக்கையாளர்களுக்கு புதிது போலத்தெரிகிறது. இதுபோலத்தான்
இன்னொரு பத்திரிக்கையாளரும் செய்தார் சமீபத்தில். தாங்கள் இன்னொருவரைப்ப்ற்றி விமர்சனம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் எழுதலாம் என்னும் உரிமை இருக்கும் போது அடுத்தவர் உங்களைப்பற்றி எழுதும் விமர்சனங்களையும்
தாங்கும் பக்குவம் பெறுதல் வேண்டும். அது இல்லாமல் "ஒரு சீனியர் பத்திரிக்கையாளன் நான். என்னைப்பற்றி யாரும் எதுவும்
விமர்சிக்கக் கூடாது" என்ற மனோபாவத்துடன் அணுகாதீர்கள்.

//
எனக்கு எழுத்துத் திறமை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன அவமானம். எல்லா மனிதர்களுக்கும் எழுதும் திறமை இருக்க வேண்டுமா என்ன? ஒரே நேரத்தில் என்னை, என்னைப் பிரசுரித்த பத்திரிகைகளை, அதன் ஆசிரியர்களை, அதன் வாசகர்களை அவமானம் செய்கிறார்.
//
இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? சிவக்குமார் உங்களைப் பற்றித்தானே சொன்னார்? அண்மையில்
குஜராத் முதல்வர் மோடிக்கு விசா மறுக்கப்பட்டவுடன், "இது இந்திய அரசியலமைப்பின் இறையாண்மைக்கே களங்கம்"
என்று அவர் சொந்த அவமானத்தைத் தூக்கி பொதுவில் வைத்தார். அதற்கும் உங்கள் இந்த வார்த்தைகளுக்கும்
கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியவில்லை..
மனதளவில் இன்னும் முதிர்ச்சி பெற என் வாழ்த்துக்கள்,
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...