Friday, April 08, 2005

ஏப்ரல் 2005 காலச்சுவடு தலையங்கம்

(ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு என்ற தலைப்பில் ஏப்ரல் 2005 காலச்சுவடில் வெளியான தலையங்கத்தைக் காலச்சுவடுக்கு நன்றி சொல்லி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.)

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கி எண்பதுகள் வரையிலும் தொடர்ந்து எண்ணற்ற சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கலை - வாழ்க்கை - அரசியல் அனுபவக் கட்டுரைகள், கவிதைகள் எழுதியவர் ஜெயகாந்தன். அவரது ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்புக்காக 2002-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது இவ்வாண்டு வழங்கப்பட்டிருக்கிறது.

நகரத்து நடுத்தர, மேல் நடுத்தர, தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்ககையை - அவர்களின் துக்கங்களை, உறவுகளுக்கிடையேயான முரண்பாடுகளை, வாழ்தலுக்கான போராட்டங்களை மனிதநேயத்துடன் யதார்த்தமாக விமர்சனப் பார்வையுடன் படைப்புகளாக்கியவர் ஜெயகாந்தன். மேல் மட்டப் பிராமணர்களின் பேச்சு வழக்கை வெகுஇயல்பாகக் கையாண்டதைப் போலவே அடித்தட்டுச் சென்னைக் குடிசைப் பகுதி மக்களின் பேச்சு வழக்கையும் கச்சிதமாகக் கையாண்டவர்.

வெகுஜன இதழ்களின் வாசகர்கள் பலரைத் தீவிர எழுத்தின் பக்கம் திருப்பியதில் இவருக்குக் கணிசமான பங்கு உள்ளது. பலவீனமான அப்பிராணி என்பதாகத் தமிழ்ப் பொது புத்தியில் உறைந்து போயிருந்த எழுத்தாளன் குறித்த படிமத்தைக் கலைத்துப்போட்டு அவனுக்கென்று ஒரு கௌரவத்தை ஏற்படுத்தியதிலும் ஜெயகாந்தனின் பங்கு அளப்பரியது.

உரத்துப் பேசுவது, பாத்திரப் படைப்பில் தலையீடு, வாசகர்களின் கற்பனைக்கு இடம் கொடுக்காமல் அனைத்தையும் சொல்லிவிடுவது என்பது ஜெயகாந்தனின் குறைபாடுகளாகத் தீவிரப் படைப்பாளிகளாலும் விமர்சகர்களாலும் முன்வைக்கப் படுபவை. தீவிர வாசகர்களால் உணரப்படுபவையும் கூட. தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைப் படைப்பாளிகள் நால்வருள் ஒருவராக ஜெயகாந்தனைக் குறிப்பிட்டுச் சொல்லும் கு.அழகிரிசாமியாலும் இக்குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இருந்தாலும் ஜெயகாந்தனின் ஒட்டுமொத்தப் படைப்புகளை எடுத்துக் கொண்டால், இக்குறைபாடுகளைத் தவிர்த்த படைப்புகளும் உண்டு. பல சிறுகதைகள், சில குறுநாவல்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆகியவற்றைச் சொல்லலாம். ஜெயகாந்தனின் படைப்புகளுக்கு இணையானவை அவரது கலை - அச்சியல் - வாழ்க்கையனுபவக் கட்டுரைகள்.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தனுக்கு இந்தக் கௌரவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவரது சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டபோது, கசடதபற இதழ் இவாறு குறிப்பிட்டிருந்தது: "சில நேரங்களில் சாகித்ய அகாதெமி சில எழுத்தாளர்களையும் கௌரவித்து விடுகிறது." அவ்வகையில் காலம் கடந்தேனும் ஒரு தமிழ்ப் படைப்பாளியை முதன்முதலாகக் கௌரவித்து விருது வழங்கியிருக்கும் ஞானபீட அமைப்பைப் பாராட்டத்தான் வேண்டும். ஞானபீட விருது பெறும் ஜெயகாந்தனுக்குக் காலச்சுவடு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி: காலச்சுவடு

No comments: