(இக்கட்டுரை மார்ச் 30, 2005 தேதியிட்ட 'துக்ளக்'கில் "எழுத்து என் ஜீவன், ஜீவனம் அல்ல - ஜெயகாந்தன்" என்ற தலைப்பில் வெளியானது. நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும் துக்ளக்கிற்கும் நன்றி சொல்லி இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஜெயகாந்தனைப் பற்றிய ஸ்ரீகாந்த்தின் புரிதலின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. சில மிகச்சிறிய பிழைகளும் இருக்கின்றன என்று நம்புகிறேன். உதாரணமாக, ஜெயகாந்தன் ஏழு வருடங்கள் சபரிமலைக்குப் போனதாகக் கட்டுரை சொல்கிறது. அதற்கு மேலும் (பதினோரு ஆண்டுகள்) சபரி மலைக்குச் சென்றிருக்கிறார் என்று நம்புகிறேன். )
[துக்ளக்கில் வெளியான முன்னுரை: ஞானபீட விருது பெற்றுள்ள எழுத்தாளர், நாவலாசிரியர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த், ஜெயகாந்தனைப் பற்றிய பல விஷயங்களைத் துக்ளக் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். - தொகுத்தவர். எஸ். ரமேஷ்]
ஜெயகாந்தனுடன் சுமார் 40 வருடங்களாக எனக்குப் பழக்கம். பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். இப்போது ஞானபீட விருது கிடைத்துள்ளது. ஒரு விழாவில் கலந்து கொண்டிருந்தபோதுதான் (அங்கு நானும் சென்றிருந்தேன்) அவரிடம் இந்தச் செய்தி கூறப்பட்டது. அவரிடம் இந்த விருது அளிக்கப்பட்டது பற்றி ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, "நான் ஏற்கனவே மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். இந்த விருது, அந்த அங்கீகாரத்துக்கான ஒப்புதல்" என்றார். அதுதான் உண்மை.
"நான் எழுதிய கதைகள், கட்டுரைகள், அத்தனையும் வாழ்க்கை எனக்கு உணர்த்தியதன் வெளிப்பாடு" என்பார். "நான் ஒவ்வொருவரையும் சந்திக்கும்போதும், உரையாடும்போதும் அவர்களிடமிருந்து ஏதாவது தெரிந்து கொள்கிறேன்" என்று சொல்வார். "விவாதிக்கும்போது புதிதாகச் சிந்திக்கிறேன்" என்பார். கதைக்காக அவர் தனியாக யோசிப்பதாகவோ, ஒரு கதைக்கரு கிடைத்தது என்றோ கூறி நான் பார்த்ததில்லை. திடீரென்று, ஒருநாள் அவர் ப்ரூ·ப் திருத்திக் கொண்டிருந்தால், அதைப் பார்த்துதான் ஒரு கதையை எழுதியிருக்கிறார் என்று தெரிந்து கொள்வோம். அவர் எப்போது படிக்கிறார், எவ்வளவு நேரம் படிக்கிறார் என்றே நண்பர்களுக்குத் தெரியாது.
அவருடைய கதைகளில் அவர் சந்தித்த மனிதர்களும் பாத்திரங்களாக இருப்பார்கள்; அதேபோல பல பாத்திரங்கள் அவரைப் போலவும் தோற்றம் அளிக்கும். சில நேரங்களில் சில மனிதர்கள் பிரபுவாகவும், கங்காவாகவும், ஒரு வீடு ஒரு மனிதம் ஒரு உலகம் கதையில் லாரி டிரைவர் துரைக்கண்ணுவாகவும், பிரம்மதேசத்தில் சங்கர சர்மாவாகவும், யுகசந்தியில் பாட்டியாகவும் அவர் தெரிவார். இப்படி பல கேரக்டர்களைச் சொல்லலாம்.
அவர் ஆஸ்திகரா, நாஸ்திகரா என்றூ பலருக்குச் சந்தேகம் உண்டு. ஆன்மீகம் என்பது வெறும் தெய்வம் சம்பந்தப்பட்டது அல்ல என்பது ஜெ.கே.யின் கருத்து. மனிதநேய உணர்வை அவர் ஆன்மீகமாகக் கருதுகிறார். பொதுவுடைமைக் கருத்துகளில் அவருக்கு ஈடுபாடு உண்டு. அந்தப் பொதுவுடைமைம் கருத்துகள் வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளன என்பது அவரது அழுத்தமான கருத்து. அதனால்தான் கம்யூனிஸ்ட்டுகள் வேதங்களை விமர்சித்தபோது, இவர் அதை எதிர்த்தார்.
கவிஞர் வாலி எழுதியுள்ள, புலனடக்கத்தின் பொன்விழா நூலுக்கு ஜெ.கே. எழுதியுள்ள அணிந்துரையில், "மெய்யான நாத்திகர்கள் தெய்வ நிதனை செய்பவர்கள் அல்ல; அவர்கள் துறவறத்தையும், துறவையும் பழிக்கிற துவேஷத்தைப் பரப்பிய ஒரு துரதிர்ஷ்டமான சூழலில், அந்த நாத்திகர் கூடாரத்திலிருந்தே அதை எதிர்த்துக் குரல் எழுப்பி இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய ஜெய சங்கர எழுதினார். சமீபத்தில் ஹர ஹர சங்கர எழுதினார். அவரை நாஸ்திகர் எனக் கூற முடியாது. ரெகுலராக கோவிலுக்குப் போகிறவர் அல்ல. ஆனால் ஏழு முறை சபரிமலைக்குப் போயிருக்கிறார்.
பாரதி மீது அவருக்குப் பெரிய ஈடுபாடும் மதிப்பும் உண்டு. பாரதியின் வசன கவிதையைப் பின்பற்றி வந்ததாகச் சொல்லப்படும் புதுக்கவிதைகள் அவரை ஈர்க்கவில்லை. மௌனி, லா.ச.ரா ஆகியோரது எழுத்துக்கள் அவருக்குப் பிடிக்கும். புதுமைப்பித்தன் கதைகள் பற்றிப் பேசியிருக்கிறார். பிற எழுத்தாளர்களை அவர் குறை கூறி நான் பார்த்ததில்லை. அதுபோலவே, அவரது எழுத்தை யாராவது விமர்சித்திருந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார். நாங்கள் இதுபற்றிச் சுட்டிக் காட்டினால், "சரி விடு; உனக்குப் பிடித்திருக்கிறது; அவருக்குப் பிடிக்கவில்லை; அது ஒரு கருத்து" என்றுதான் சொல்வார்.
இப்போது அவர் எழுதாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. "எழுத்தாளனுக்கு ஏது ஓய்வு? எழுத வேண்டும் என்று தோன்றும்போதே எழுதுகிறேன்" என்பார். ஒரு சரித்திர நாவல் எழுதக் கூடாதா என்று நான் அவரிடம் கேட்டிருக்கிறேன். "சரித்திர நாவல் எழுதினால் அது ஒரு டாகுமென்ட் போல, வரலாற்றுப் பதிவாக இருக்க வேண்டும்" என்றார். மேலோட்டமாகச் சொல்வது அவருக்குப் பிடிக்காது. "இலக்கியம், கதை எதுவானாலும், அது எழுதப்பட்ட காலத்தின் உரைகல்லாக இருக்க வேண்டும்" என்று கருதக் கூடியவர் ஜெ.கே. "எழுத்து என் ஜீவன் - ஜீவனம் அல்ல" என்று அவர் சொல்லியிருக்கிறார்.
சர்ச்சைகளை வளர்க்க விரும்ப மாட்டார். ஒருசமயம் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற தத்துவ அறிஞர், "உண்மை, ஒரு அனுபவம்" என்று கூறியிருப்பதாக ஜெயகாந்தன் சொன்னார். உடனே சிலர், "கிருஷ்ணமூர்த்தி அவ்வாறு கூறியதே இல்லை" என்று எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே ஜெயகாந்தன், "அப்படி அவர் சொல்லவில்லையா? சரி, சொல்லாமல் விட்டிருப்பார். நான் சொல்கிறேன். உண்மை ஒரு அனுபவம்" என்றார்.
ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த அவர், பிறகு பெருந்தலைவர் காமராஜ் மீதிருந்த பற்று, மரியாதை காரணமாகக் காங்கிரஸ¥க்குப் பிரச்சாரம் செய்தார். ராஜீவ் காந்தி கொண்டு வந்த நவோதயா திட்டத்தை ஆதரித்துப் பேசினார். அதைத் தமிழகத்தில் செயல்படுத்தாததில் அவருக்கு வருத்தம் உண்டு. மூப்பனார் மீது மரியாதை உண்டு. ஆனால் இப்போதைய அரசியல் போக்கு பிடிக்காமல் ஒதுங்கி விட்டார். "அரசியலோடு எனக்குத் தொடர்பு உண்டு; ஆனால் எந்தக் கட்சிக்கும் நான் தாலி கட்டிக் கொள்ளவில்லை" என்று அவர் சொல்வார்.
ஜெ.கே.வின் நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது. பலதுறைகளைச் சார்ந்தவர்கள் அவருக்கு நண்பர்களாய் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரிடமும் சமமாகத்தான் பழகுவார். எழுத்தாளரானாலும் அரசியல் அல்லது திரைப்படத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆட்டோ டிரைவர் ரிக்ஷாக்காரராக இருந்தாலும் (அவர்களிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு) எல்லோரையும் சமமாகத்தான் பாவிப்பார். மற்றவர்களையும் நிறைய பேசவிட்டுக் கேட்பார். இது அவரிடமுள்ள ஒரு சிறப்பு.
அவருக்குக் கோபம் அதிகம் என்று சிலர் கூறுவதுண்டு. பெரும்பாலும் எல்லோரிடமும் இருக்கக் கூடியதுதான். தவறு செய்யும் மகனை, தந்தை கண்டிக்கும்போது வரும் கோபம் போலத்தான் அவருடையதும். அவரது கோபம் நீண்ட நேரம் நீடிக்காது. அவர் முன்கோபியும் அல்ல.
நண்பர்களுடன் பேசுவதைத் தவிர, செஸ் ஆடுவது அவருக்குப் பிடிக்கும். அதேபோல கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு ஈடுபாடு உண்டு. ராகங்களை எல்லாம் கூறுவார். கர்நாடக சங்கீத முறையில் இசை அமைக்கப்பட்ட பாரதி பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவருக்குச் சுமாராக வீணை வாசிக்கவும் தெரியும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஜெயகாந்தன் தொடர்ந்து எழுதுகிறாரோ இல்லையோ அவர் எழுத்து என்றைக்கும் நிலைத்திருக்கும். "நான் இப்போதெல்லாம் பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டதாகப் பலர் பேசுகிறார்கள். நல்லதுதானே? பாம்பு, பல்லை இழக்காமல் இருந்தால் சரி. பெட்டிக்குள் இருப்பதால், பாம்பு புழுவாகி விடாது. துள்ளிக் குதிப்பதால், புழுக்கள் பாம்பாகி விடாது" என்று ஜெயகாந்தன் கூறியிருப்பதை, நான் இந்த சமயத்தில் நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
தொகுப்பு: எஸ். ரமேஷ்.
நன்றி: ஸ்ரீகாந்த், எஸ். ரமேஷ், துக்ளக்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Thanks for republishing this article.
Post a Comment