Thursday, April 07, 2005

கலையைத் தேடி வந்த கௌரவம் - பாவண்ணன்

(இக்கட்டுரை தினமணி இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. தினமணிக்கும் பாவண்ணனுக்கும் நன்றிகள் சொல்லி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.)

தேசிய அளவில் மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படும் ஞானபீட விருது நம் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தனுக்குத் தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஞானபீட விருதைப் பெற்ற சிவராம காரந்த், தகழி சிவசங்கரன் பிள்ளை, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், மகாஸ்வேதா தேவி, குர் ஆதுலின் ¨?தர், நிர்மல் வர்மா போன்ற மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தனுடைய பெயரும் இடம்பெறுவது தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயமாகும்.

அடித்தட்டு மக்களுடைய வாழ்வியக்கங்களின் சித்திரங்களை எழுத்தில் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவருடைய எழுத்தும் உரையாடலும் விவரணை முறையும் அந்த அழகியல் தன்மைகளைக் கொண்டவையாகவே விளங்குகின்றன. பிச்சைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், ஆண்டிகள், சாமியார்கள், சாப்பாட்டுச்சுமை தூக்கிகள், தள்ளுவண்டிக்காரர்கள், மேஸ்திரிகள், சித்தாள்கள், விடுதிகளில் வேலை செய்பவர்கள், விலைமாதர்கள், நாடகக்காரர்கள், போதையில் திளைப்பவர்கள் என வாழும் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களுடைய வாழ்வியக்கச் சித்திரங்களையே ஜெயகாந்தன் தன் படைப்புகளில் தீட்டி வைத்திருக்கிறார். இவர்கள் வாழும் வேட்கை கொண்டவர்கள். பெரிதும் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுடைய கருத்தியல்களையும் விழுமியங்களையும் கதைகள் மூலம் கண்டடைய முயற்சி செய்தவர் ஜெயகாந்தன்.

கதைகளில் தன் குரலையும் இடையிடையே ஒலிக்க அனுமதித்தபடி எழுதிச்சென்றவர் ஜெயகாந்தன். அதிசயமான விதத்தில் அக்குரல் கதைகளின் போக்கை அல்லது மையப் பாத்திரத்தின் எண்ணப்போக்கை திசைதிருப்பியதில்லை. மாற்றியதுமில்லை. கதைகள் தன்னிச்சையாகத் தம் திசையை நோக்கி நகர்ந்தபடியே இருக்கின்றன. மிக முக்கியமான தருணங்கள் வழியாக பாத்திரங்கள் தம்மை புத்தொளியுடன் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இயல்பாக நடந்துவந்த ஒருவர் சாலையை அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய பாறையை தன்னெழுச்சியுடன் மூச்சுக்கட்டி நகர்த்தித் தள்ளிவிட்டு மீண்டும் தன் போக்கில் சகஜமாக நடந்து சென்றுவிடுவதுபோல அப்பாத்திரங்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களுடைய ஆழ்மனப் பிரக்ஞை முழு அளவில் வெளிப்பட்டு ஆற்ற வேண்டிய செயல்களை முழு அளவில் ஆற்றத் துணையிருந்த பிறகு பின்னகர்ந்துவிடுகிறது. ஒரு பின்பாட்டுபோல கூடவே ஒலிக்கிற ஜெயகாந்தன் குரல் ஒருபோதும் பாத்திரங்களை இடற வைத்ததில்லை. வாசல்களையும் அடைத்ததில்லை. மாறாக, பாத்திரங்களின் ஆழ்மனப் பிரக்ஞை முழு ஆற்றலுடன் வெளிப்படத் துணைபுரியும் விதமாகவே உள்ளது. இதுவே ஜெயகாந்தன் வெற்றி. படைப்பாளியின் மௌனத்தைக்கூட மறைமுகமாக மட்டுமே அனுமதிக்கிற கதை வடிவங்கள் உருவாகிவிட்ட இன்றைய சூழலில் ஜெயகாந்தனைப் படிக்கும் ஓர் இளம் வாசகன் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் இதுவாகும்.

உலக அளவில் மாக்சிம் கார்க்கியையும் இந்திய அளவில் பிரேம்சந்த்தையும் இணைத்து ஒரு கோட்டை வரைந்து கொண்டு வந்தால் அக்கோட்டின் இன்னொரு புள்ளியாக இருக்க முற்றிலும் தகுதியானவர் ஜெயகாந்தன். இம்மூவருமே ஒருவகையில் அந்தந்த மண்சார்ந்த அடித்தட்டு மக்களுடைய ஆழ்மன இயக்கங்களை அக்கறையோடு கவனித்தவர்கள். மக்கள் மனம்சார்ந்த ஒருவித முற்போக்கு அழகியலை அந்தந்த மொழியில் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள். ருஷ்யமொழியிலும் இந்தி மொழியிலும் தமிழிலும் கதை கூறும் சாத்தியங்கள், இம்மூவருடைய முயற்சிகளைத் தாண்டி கட்டுக்கடங்காத வகையில் பெருகி வளர்ந்து நிற்கின்றன. வடிவங்கள் பலமுறை மாறிமாறி மொழியின் செழுமை பெருகியபடியே இருக்கிறது. சிறப்பம்சங்களும் சிறுகச்சிறுக சேர்ந்தபடியே இருக்கின்றன. ஆனால் ஒருகாலத்தில் கண்டடையப்படுகிற வடிவமுறைகள் ஒருபோதும் பழையனவற்றை அளக்கிற அளவுகோல்களாக ஆகவே முடியாது. வடிவமுறைகள் என்பவை வெளிப்பாட்டு முயற்சிக்கான ஒரு வழிமட்டுமே. வடிவமுறையை அளவுகோல்களாக மாற்றித் தவறாக கையாள்பவர்கள் தப்பான விடைகளின் திசைகளை நோக்கியே நகரக்கூடும். அவ்வடிவங்களிடையே ஒளிர்ந்தபடி இருக்கும் அடித்தட்டு மக்களின் ஆழ்மன வெளிப்பாடுகள் இன்றும் நம்மை ஈர்த்தபடியே இருக்கின்றன. அவை நாளைய தலைமுறையையும் ஈர்க்கும் வல்லமை உள்ளவை. அவை நட்சத்திரங்களைப்போல. மனித இயல்புகளில் அபூர்வமாகப் படிந்துபோன நிறங்களை இத்தருணங்களின் வழியாக உற்றுநோக்கி அறியும்போதுதான் விளங்கிக் கொள்ள முடியும். இவ்வகையில் கார்க்கி, பிரேம்சந்த், ஜெயகாந்தன் மூவருமே என்றென்றும் இலக்கிய வானத்தில் சுடர்விட்டபடி இருக்கும் விண்மீன்கள்.
ஒரு கம்பீரமான தோற்றத்தோடும் முகத்தெளிவோடும் எந்த மேடையிலும் தனித்துவம் பொலிய வீற்றிருப்பவர் ஜெயகாந்தன். தர்ம ஆவேசத்தின் குரலாக அவர் உரைகள் மேடைதோறும் அமைந்ததுண்டு. பொய்மையை எதிர்ப்பதிலும் அம்பலப்படுத்துவதிலும் அவர் ஆவேசமுடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். மனத்தை இயக்கியபடி ஆழத்தில் புதைந்திருக்கும் சூத்திரப்புள்ளியைக் கண்டடைந்து புலப்படுத்தும் உத்வேகமுடன் எழுத்துலகில் அவர் எவ்விதத்தில் இயங்கினாரோ அதே உத்வேகத்தோடு பொய்மைகளையும் போலிகளையும் எதிர்த்துத் தகர்ப்பதிலும் உத்வேகத்தோடு இயங்கியவர். அவருடைய கட்டுரைகள், உரையாடல்கள், முன்னுரைகள், மேடைப்பேச்சு, அனுபவப் பகிர்வுகள் அனைத்துக்குமே ஒருவித முக்கியத்துவம் இருந்தது. எங்கும் யாருக்கும் பணியாத, நிமிர்ந்து நிற்கிற சித்திரம் ஜெயகாந்தனுக்குச் சொந்தமானது. எழுத்தாளனுக்கே உரிய கட்டற்ற சுதந்திரத்தை அவர் ஒருவரே தமிழ் எழுத்துலகில் முழுஅளவில் அனுபவித்தவர் என்பது மிகையான கூற்றாகாது. அவர் செல்லுமிடங்களிலெல்லாம் தன் சுதந்திரத்தின் அடிச்சுவடுகளைப் பதித்தபடியே சென்றார்.

""அக்கினிப் பிரவேசம்'' சிறுகதை வழியாக அவர் உருவாக்கிய கங்கா என்னும் இளம்பெண்ணின் சித்திரம் தமிழ் எழுத்துலகம் உருவாக்கிய பெண் சித்திரங்களின் வரிசையில் மிக முக்கியமான ஒன்றாகும். படிப்பதற்காக வெளியுலகத்துக்கு வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவள் அவள். படிப்பறிவுள்ளவள் என்பதனாலேயே அறிந்துகொள்ளும் ஆவல் உள்ளவள். அதே சமயத்தில் எது சரி, எது தவறு என்று முடிவெடுப்பதில் குழப்பம் உள்ளவள். ஆணின் இச்சைக்கு இடம்கொடுத்துவிட்டவள். அம்மாவிடம் ஆறுதல் தேடி அழுபவள். கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியை ஒட்டி உருவான இந்தியப் பெண்ணின் படிமமாகவே அமைந்துவிட்டவள் கங்கா. இக்கதை திரைவடிவத்தில் வெளிவந்தபோது கங்காவின் பாத்திரம் மேலும் துலக்கம் பெற்றது. இன்றும் தமிழ்மனங்களில் பரிவோடு பதிந்திருக்கும் பாத்திரம் அது. ஜெயகாந்தனால் செதுக்கப்பட்ட கங்காவின் படிமம் எல்லாருடைய மனங்களிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது.

குருபீடம், விழுதுகள், தாம்பத்யம், சோற்றுச்சுமை, ரிஷிமூலம், யாருக்காக அழுதான், யுகசந்தி, சுயதரிசனம், நந்தவனத்திலோர் ஆண்டி, புதிய வார்ப்புகள், டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும் ஆகியவை அவருடைய மிகச்சிறந்த சிறுகதைகளின் பட்டியலில் அடங்குபவை. "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', "பாரிசுக்குப் போ' இரண்டும் அவருடைய முக்கியமான நாவல் முயற்சிகள். இலக்கிய அனுபவங்களையும் அரசியல் அனுபவங்களையும் எடுத்துரைக்கும் ஜெயகாந்தனுடைய கட்டுரைகள் அனைத்தும் எழுதப்பட்டிருக்கும் பாங்கினாலும் தனக்கேயுரிய தர்க்கத்தோடு வாதங்களை அடுக்கி அடுக்கி நகரும் போக்கினாலும் முக்கியான இலக்கிய அனுபவத்தைக் கொடுப்பவை.

ஜெயகாந்தனுடைய கலையைக் கௌரவத்திருக்கிற ஞானபீடம் ஒருவகையில் இலக்கியப் பரப்பில் அடித்தட்டு மக்களுடைய நடமாட்டத்தையே கௌரவித்திருக்கிறது எனலாம்.

நன்றி: பாவண்ணன், தினமணி

1 comment:

Vaa.Manikandan said...

ஜெயகாந்தனது படைப்புகளயும்,நிகழ்காலச்சூழலையும் இணைத்து சமீமபத்தில் ஏதேனும் கட்டுரை வந்துள்ளதா?