Thursday, May 26, 2005

ஜெயகாந்தன் பாராட்டு விழா உரைகள்

இளையராஜாவின் பேச்சைத் தவிர மற்ற உரைகளை இங்குக் காணலாம். இளையராஜாவின் உரையை விரைவில் தர முயல்கிறேன். இந்த உரைகளைப் பற்றிய என் கருத்துகளைத் தட்டச்ச கை பரபரக்கிறது. ஆனாலும், நீங்களே பார்த்து, உங்களின் அறிவுக்கும் சிந்தனைக்கும் பரந்த மனப்பான்மைக்கும் மனிதநேயத்திற்கும் ஏற்ற முடிவை எடுங்கள்! பார்த்துப் புரிந்து கொள்ள இயலாதவர்களும், பார்க்காமலேயே விமர்சனம் எழுதுகிறவர்களும் அதையே தொடர்ந்து செய்யுமாறு வேண்டுகிறேன்.

தமிழ் வலைப்பதிவின் மொத்த கவனமுமே ஜெயகாந்தன் சொல்கிற விஷயங்களின்பால் தொடர்ந்து திரும்பி நிற்பதும் அவர் தொடுகிற விஷயங்களைத் தொட்டுத் தொடர்வதும்கூட அவரோடு உடன்படாதவர்களும் மறக்க இயலாத ஆளுமையாக அவர் விளங்குவதையே காட்டுகிறது. ஜெயகாந்தனை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துகிற அவரின் வசைபாடிகளுக்கு ஜெயகாந்தன் வாசகனாக எனது நன்றிகள். ஜெயகாந்தன் நாவல்களின் ஐந்து தொகுப்புகளும் சேர்ந்து விலை ரூபாய் 1200 ஆகும். 1200 ரூபாய்கள் குறைந்த விலை அல்ல. ஆனாலும், இந்தத் தொகுப்பின் பதிப்பு விற்றுத் தீர்ந்துவிட்டது. AnyIndian.com மூலம் உலகெங்குமிருந்து இத்தொகுப்பைக் கேட்கிற அன்பர்களிடம் எல்லாம் இத்தொகுப்பு விற்றுத் தீர்ந்துவிட்டது என்று சொல்கிறோம். அந்த அளவுக்கு உலகெங்கும் ஜெயகாந்தனைத் தேடிப் படிக்கிற அளவுக்கு ஜெயகாந்தனைத் தொடர்ந்து விமர்சித்து வருகிற அன்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்தானே!

இதற்கு அடுத்த செயலாக, ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் கிடைத்தபின் தமிழ்ப் பத்திரிகைகளில் அதுபற்றி வெளிவந்த எனக்குப் பிடித்த கட்டுரைகளையும் இங்கே தொகுத்துத் தருகிற உத்தேசமிருக்கிறது என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயகாந்தன் கருத்துகளை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து அதை முரட்டுத்தனமான கோபத்தில் செய்யாமல், அறிவுபூர்வமான தளத்தில் செய்கிற அளவுக்கு வளர வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். அதேபோல, நான் இப்படித் தொடர்ந்து ஜெயகாந்தனைப் பற்றித் தருகிற செய்திகளின் கருத்துகளை விமர்சித்துத் தங்கள் அறிவுக்கும் பரந்த மனப்பான்மைக்கும் சிந்தனைக்கும் ஏற்ற கருத்துகளைத் தொடர்ந்து முன்வைக்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறேன். அப்படி அவர்கள் வைக்கிற கருத்துகளின் மூலம் ஜெயகாந்தனைப் பற்றி அறிந்து கொள்வதைவிடவும் அவர்களைப் பற்றித் தமிழர்கள் அறிந்துகொள்கிற வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அவர்கள் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன்.

ஜெயகாந்தன் பற்றி முன்வைக்கப்படும் எல்லா கருத்துகளுக்கும் நான் பதில் சொல்லப் போவதில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனாலும், அவற்றுக்குப் பதில் சொல்வது பெரிய விஷயமில்லை என்பதும் ஒரு காரணம்தான். எனவே, ஜெயகாந்தன் உரையைப் பார்த்தும் பார்க்காமலும் கருத்து சொன்ன அன்பர்கள் இந்த உரைகளைப் பார்த்தும் பார்க்காமலும்கூட கருத்து சொல்ல முன்வர வேண்டும் என்று நிஜமான அன்பின் மிகுதியால் சீண்டி அழைக்கிறேன்.

இன்னமும் தொடர்ச்சியாக மார்க்ஸிஸத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், இந்திய தேசியத்தைப் பற்றியும், தமிழ் தேசியத்தைப் பற்றியும், இந்தியாவின் மொழிகளைப் பற்றியும்கூட பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பெருங்கனவும் இருக்கிறது. பராசக்தி அருள் புரியட்டும்!

என் கருத்துகளுக்குப் பதில் சொல்ல இயலாமல், என் கருத்துகளைச் சொல்வது என் சுதந்திரம் என்பதைக்கூட உணராமல், அவற்றை நான் பேசுவதே தீண்டாமை போன்ற குற்றம் என்ற அளவுக்கு, என் நேர்மையைச் சந்தேகத்துக்குள்ளாக்கியும் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கியும் திட்டியும் என்னைப் பற்றிய மோசமாக எழுதுவதை ஒரு hobby-ஆக வைத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் ஒன்றிலிருந்து சமீபத்தில் இரண்டாக மூன்றாக நான்காக என்று தினமும் வளர்ந்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. விளம்பரத்துறையில் இருப்பவர்கள் சொல்வார்கள். மோசமான விளம்பரம் என்று ஒன்று இல்லை என்று. அதே மாதிரி, இப்படி என்னை மோசமாகத் திட்டுவதன் மூலம் எனது P.R.O-ஆகச் செயல்படுபவர்களுக்கும், என்னை வெளியுலகம் அதிகம் அறியச் செய்பவர்களுக்கும், எனக்கு நிறைய வாசகர்களைக் கொண்டு வருபவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி மறப்பது நன்றன்று என்பது ஐயன் வள்ளுவன் வாக்கு!

இனி உரைகளுக்குப் போவோம்...

விழா தொடங்குவதற்கு முன்

ஸ்ரீசெண்பகா பதிப்பகம் சண்முகம் அவர்களின் வரவேற்புரையும் சிற்பி அவர்களின் தலைமையுரையும்

வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் ஜெ.ஸ்ரீ சந்திரன் மற்றும் மீனாட்சி பதிப்பக உரிமையாளர் உரை

விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் உரையும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் உரையும்

ஜனசக்தியின் ஆசிரியரும் சி.பி.ஐ.யின் மூத்த தலைவருமான ஏ.எம். கோபுவின் உரை

இயக்குநர் கே.பாலசந்தரின் உரை

இந்த உரைகளையும் பேச்சுகளையும் உரைகளிலிருந்து எடுக்கப்படும் புகைப்பட, ஒலிப்படத் துண்டுகளையும் பயன்படுத்த விரும்புவோர் கவிதா பதிப்பக உரிமையாளர் சொக்கலிங்கம் அவர்களிடமோ AnyIndian.com இடமோ முன்னனுமதி பெற வேண்டும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

9 comments:

-/சுடலை மாடன்/- said...

அ.மார்க்ஸ் இந்திய (இந்து மத - பார்ப்பனிய) தேசியத்தின் பாசிஸத்தையும், அதற்கு எதிர்வினையாகத் தோன்றிய தமிழ் தேசியத்தின் பாசிஸத்தையும் பற்றி பல ஆண்டுகளாக எழுதி வருபவர். சிவக்குமார் தன்னுடைய குருநாதர் ஜெயகாந்தனைப் போல ஒருபக்க மட்டையடி மட்டுமே செய்பவர் என்பதால் நேர்மையின்றி தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துப் போட்டுக் கொண்டேயிருப்பார். இதையும் ஏற்கனவே ரோசா வசந்த் பின்னூட்டத்தில் கூறியிருந்தார்.

பி.கே.சிவக்குமாரின் நேர்மையின்மைக்கு இன்னும் ஒரு உதாரணம் இங்கே - அ. மார்க்ஸ், பொ. வேலுசாமி, இரவிக்குமார் ஆகியோர் சேர்ந்து நடத்திய நிறப்பிரிகை என்ற சிற்றிதழ் தொன்னூறுகளின் தொடக்கத்தில் சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் பல அறிவுப் பூர்வமான விவாதங்களை நடத்தியது. அப்பத்திரிகையில் "தமிழக வரலாறு - சில குறிப்புகள்" என்ற தலைப்பில் அவர்கள் சேர்ந்து ஒரு தொடரை எழுதிக் கொண்டிருந்தனர். நேரமின்மையால், அதன் முன்னுரையில் அ.மார்க்ஸ் எழுதிய இரு பத்திகளை மட்டும் இங்கு தருகிறேன்:


"கடந்த பல பத்தாண்டுகளாகத் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிற திராவிட இயக்கங்களின் மூல முன்னோடிகள் பார்ப்பனரல்லாத உயர் ஆதிக்க சக்திகளாகவே இருந்தனர் என்பது வெளிப்படை. பார்ப்பனியத்திற்கும், ஆரியமயப் பொற்காலத்திற்கும் எதிராக ஆரியமயத்திற்கு முற்பட்ட திராவிடப் பொற்காலத்தை இவர்கள் முன் வைத்தனர். இதற்காகத் தமிழின் தொன்மையை முற்றிலும் விஞ்ஞான விரோதமாகவும் முட்டாள்தனமாகவும் கொண்டு சென்றனர். கோடானு கோடி அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பார்ப்பன - சைவ இந்துமயப் பரவலையும் அந்தப் பண்பாட்டையும் தமிழகத்தின் பொற்காலமாய் முன் வைத்தனர். தங்களின் உள்நோக்கம் நல்லதாயினும் இத்தகைய விஞ்ஞான விரோத தொன்ம உயிர்ப்புகளுக்குப் பலியான பல அடித்தட்டு வர்க்க சாதிகளைச் சேர்ந்த தனித் தமிழறிஞர்களும் இதற்கு விதி விலக்காய் அமையவில்லை. பாவாணர், குணா போன்றோரை இவ்வகையில் அடக்கத் தோன்றுகிறது. இத்தகைய உயிர்ப்பித்தல்கள் உண்மையில் பார்ப்பனியத்தின் வேரை அறுக்கவும் பயன்படாது என்பதை உணராதிருந்தனர்
.

தமிழகத்தில் பார்ப்பனியம் உயிர் பெற்றுள்ள சூழலில், திராவிட இயக்கங்கள் தோலுரிந்து கிடக்கும் நிலையில், 'வேள்விக்குடி சாசனக்' காலத்திற்குத் தமிழகம் திரும்பியுள்ள தருணத்தில் புதிய எழுச்சியுடன் உருவாகும் இயக்கங்கள் தமிழக வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக அணுகுவதில் ஆர்வம் காட்டுவதை நிறப்பிரிகை நல்ல அறிகுறியாகப் பார்க்கிறது."

இந்த பத்திரிகை அ.மார்க்ஸ் - இரவிக்குமாருக்குள் ஏற்பட்ட விரிசலையும், அதன் பிறகு அவர்களின் கொள்கை வெளிப்பாடுகளும், எழுத்துக்களும் புதிய நட்புகளும் அவர்களுடைய மோதலின் அடிப்படையிலேயே அமைந்தன என்பதையும் சிற்றிதழ் அரசியலை புரிந்தவர்கள் நன்கு அறிவர். பின்னர் 'காலச்சுவடு' இரவிக்குமாரை அரவணைத்துக் கொண்டதும் இந்த மோதலின் அனுகூலமே. தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் 'உலகத் தமிழர்' இதழில் தொடர் எழுதி வரும் இரவிக்குமாரை மனத்தில் கொண்டு (காலச்சுவடின் எதிர்ப் பத்திரிகையான) உயிர்மையில் அ. மார்க்ஸ் தமிழ் தேசியத்தை எதிர்த்து தற்பொழுது எழுதுவதும் கூட அந்த அரசியலின் தொடர்ச்சியே. இந்த எழுத்தாளர்களும், சிற்றிதழ்களும் நடத்தும் அரசியல் பல நேரங்களில் அவர்களது சமூகத்தின் சுயனலம் சார்ந்தவையாகவும், சில நேரங்களில் தனிநபர் விறுப்பு வெறுப்பு சார்ந்தவையாகவும் உள்ளன.

ஆனால் அப்படிப்பட்ட அரசியலையும் தாண்டி - இப்பத்திரிகைகளும், எழுத்தாளர்களும் பல விவாதங்களை, அதன் அடிப்படையில் எழும் ஆழமான புரிதலை அளிக்கின்றன. சாதாரண வாசகர்கள் எந்த ஒரு எழுத்தாளரோடும், பத்திரிகைகளோடும், எப்பொழுதும் உடன் பட இயலா விட்டாலும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவையனைத்தையும் படிப்பது நம்மை நாமே அறிவுக்கண்ணாடியில் பார்த்து விமர்சித்துக் கொள்ள, புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில் ஆரியமயமான பார்ப்பனிய தேசியத்தையும், அதற்கு எதிர்வினையாகத் தோன்றிய திராவிட, தமிழ்த் தேசியத்தையும் பற்றியும், அவர்கள் இட்டுச் செல்லக் கூடிய பாசிஸ வழிகளையும் அ.மார்க்ஸும், இரவிக்குமாரும், இன்னும் பலரும் எழுதிக் கொண்டிருக்கின்றனர், மறைமுகமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதற்காக பயன் படுத்திக் கொண்டாலும் கூட.

ஆனால் பி. கே. சிவக்குமார் தன் அரசியலைத் தொடர்வதற்கு எழுத்தாளர்களின் ஒரு பாதி விமர்சனத்தை மட்டும் பயன் படுத்திக் கொள்வது நேர்மையற்றது. அதற்கு அவருக்கு முழு உரிமையும் உண்டு என்றாலுங்கூட. அடுத்து எஸ். வி. இராஜதுரை புலிகளை விமர்சித்து எழுதிய கட்டுரையைப் போடுவேன் என மிரட்டியிருந்தார். எஸ். வி. இராஜதுரை இந்திய அரசின், ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய ஆசையையும், அதற்காக ஈழமக்களின் வாழ்க்கையைப் பலி கொடுப்பதையும் புத்தகமாக வெளியிட்டுள்ளார். நேர்மையற்ற சிவக்குமார் அதைப் பற்றி மவுனமே சாதிப்பார், அதுவும் அவரது ஜனநாயக உரிமையே.

நன்றி - சொ. சங்கரபாண்டி

(பி.கு. - நான் அவருடைய பதிவில் பின்னூட்டமிடக் கூடாது என்று சொன்னார் சிவக்குமார் . வரதனுக்காகவும், பாலாவுக்காகவும் திறந்து வைக்கப் பட்ட பின்னூட்டப் பெட்டியை பயன்படுத்திக் கொள்கிறேன். என்னுடைய பின்னூட்டத்தை நீக்கி விட மாட்டார் என நம்புகிறேன்.)

PKS said...

இந்தப் "பகுத்தறிவுஜீவிகள்" நான் எழுதுவதைப் படிக்கிறார்களா என்றே தெரியவில்லை. படிக்காமலேயே அடுத்தவரை நேர்மையில்லாதவர் என்று சொல்வது எந்தத் தர்க்கமோ?

நான் என் கட்டுரையில் எழுதிய வரிகள் பின்வருமாறு:

"மேலும், அ.மார்க்ஸ் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையுடையவராக இருந்தவர். இன்றும் கூட, இந்திய தேசியம், தமிழ் தேசியம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியத்தை அதிகம் ஆதரிக்கிறவராக அவர் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஒருவர் எழுப்புகிற கேள்விகளை இந்துத்துவா என்று சொல்லியோ பார்ப்பனீயம் என்று சொல்லியோ ஒதுக்கிவிட முடியாத தர்மசங்கடத்தில் மூன்றாம் மொழிப்போரை முன்மொழிகிற கிணற்றுத் தவளைகள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லி வைக்கலாம்."

மேலே தெளிவாக இருக்கிறது. இந்திய தேசியமா, தமிழ் தேசியமா என்று வந்தால் தமிழ் தேசியத்தை அதிகம் ஆதரிப்பவராக அ.மார்க்ஸ் இருக்கக் கூடும் என்று.

இதைக்கூடப் புரிந்து கொள்கிற சிந்தனா சக்தி இல்லையென்றால் என்ன செய்வது? தமிழ் தமிழ் என்று கத்துகிற இவர்களால் தமிழைப் படிக்க முடியுமா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

சரி, நான் நேர்மையில்லாதவன், மோசமானவன் blah blah என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அதற்காக என் கேள்விகளைப் புறந்தள்ளி விடலாமா? இவர்களைக் கேள்வி கேட்கிறவர்கள் இவர்களைவிட மேலானவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அப்பட்டமான சனாதன புத்தியில்லாமல் வேறென்ன? தன் சிந்தனையின் பிற்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்ட இம்மாதிரி இவர்கள் எழுதுகிற கமெண்ட்டுகள் உதவுகின்றன என்ற அளவிலே சந்தோஷம்தான்.

நீ யார், நான் யார், உன் நோக்கம் என்ன, என் நோக்கம் என்ன, உன் ஜாதி என்ன, என் ஜாதி என்ன, உன் ஆதரவு என்ன, என் ஆதரவு என்ன, நீ நேர்மையா, நான் நேர்மையா, உன் யோக்கியதை என்ன, என் யோக்கியதை என்ன, உன் சிந்தனை எப்படி, என் சிந்தனை எப்படி இந்த இத்யாதிகள் எல்லாம் இங்கே யாருக்கும் முக்கியமில்லை. அப்படி அவற்றை முக்கியமென்று நினைக்கிறவர்கள் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள். எனவே, எந்த விவாதம், எந்தக் கேள்வியென்றாலும் இவற்றுள் மீண்டும் புகுந்து ஜல்லியடிக்காமல், பேசப்படுகிற விஷயத்தைப் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இருந்தால் சொல்லலாம். இல்லையென்றால், அடுத்தவர் உளறுகிறார் என்று போய்க் கொண்டிருக்கலாம். இரண்டையும் செய்யாமல், மாற்றுக் கருத்துகளைச் சொல்பவர் மீது சாணியடிப்பதுதான் ஜனநாயகம் என்றால் அதை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். அதை என் பதிவில் வந்து கழிந்து அசுத்தமாக்க வேண்டாம்.

எஸ்.வி.ராஜதுரையின் கட்டுரையை நான் உடனே இடவில்லையென்றால் என்ன? அது ரொம்ப முக்கியமென்றால் நீர் இடலாமே. ரவி ஸ்ரீனிவாஸ் விரும்பினால் அவருக்காக அதை இடுகிறேன் என்று சொன்னேன். இடச்சொல்லி அவர் கேட்கவில்லை. உண்மையிலேயே பகுத்தறிவு உள்ள மனிதருக்கு இதெல்லாம் புரியாதா என்ன? எதை வைத்து அடுத்தவனைப் பழி சொல்வது என்று அலைகிற கும்பல். காலையில் காலைக்கடன் வரவில்லையென்றாலும் கூட பழி சொல்வதற்கு யாரும் அகப்படுவார்களோ என்று அலைவார்கள் போலிருக்கிறது. அவர் என்னுடைய உதவி கேட்டு எழுதிய மடல் எனக்கு வந்ததா என்பதைக்கூட சரிபார்க்க முனையாமல் அதை அரசியலாகத் திரித்து பழி சொல்ல முனைந்த அற்ப மனிதர் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வருவது ஜனநாயகத் தன்மையை அதிகரிக்கும் என்று எழுதிவிட்டு, ஈழம் என்று வரும்போது மட்டும் விடுதலைப் புலிகளின் ஏக ஆட்சிக்குக் கொடி பிடிக்கிற சுயமுரண்பாடுகளின் மூட்டை, அடுத்தவரை நேர்மையில்லாதவர் என்று சொல்வது என்ன தர்க்கம் என்பதை வாசகர்களின் முடிவுக்கே விடுகிறேன்.

-/சுடலை மாடன்/- said...

கோபத்தில் என்னைத் திட்டியாவது எனக்குப் பதில் அளிக்கத் தோணுதே உங்களுக்கு. நான் பாக்கியசாலிதான்!

உங்களுக்கு கோபம் தலைக்கேறி விடுங்கிறதால நானும் தொடர வேண்டாம்னுதான் நினைக்கிறேன். இருந்தாலும் இந்த ஒரு விசயத்த அடிக்கடி நீங்க சொல்றதுன்னால ஒரு சின்ன கேள்வி மட்டும் கேட்டுடறேன்.

//தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வருவது ஜனநாயகத் தன்மையை அதிகரிக்கும் என்று எழுதிவிட்டு, ஈழம் என்று வரும்போது மட்டும் விடுதலைப் புலிகளின் ஏக ஆட்சிக்குக் கொடி பிடிக்கிற சுயமுரண்பாடுகளின் மூட்டை//

ஜனநாயகம்னா என்னங்க? மக்களாக விரும்புவதா அல்லது சோவும், ஜெயகாந்தனும், சிவக்குமாரும் முடிவு பண்ணுவதா? வரதராஜ பெருமாளின் (அவர் எங்க இருக்காருன்னு முதல்ல தேடிப் பாருங்க) ஏக ஆட்சிக்குக் கொடி பிடிக்கிற உங்களைக் காட்டிலும், புலிகளுக்கு கொடி பிடிக்கிறது ஜனநாயகத்தில் ஒன்றும் குறைந்து விடாது. இந்த வலைப் பதிவில் இருக்கும் ஈழத்தமிழர்களிடையே வேண்டுமானாலும் ஒரு கருத்துக் கணிப்பு வையுங்களேன். வரதராஜ பெருமாள் வேணுமா அல்லது புலிகள் வேண்டுமான்னு.

உங்களுக்குப் பிடித்ததுதான் ஜனநாயகமா? நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு வரதராஜ பெருமாள்களை திணிக்கும் போது நான் புலிகளை ஆதரிக்கத் தயங்க வேண்டியதில்லை. அதை விட்டு அந்த மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்று அறிய முயலுங்கள். அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வில்லை என்று ஆதாரப் பூர்வமாகச் சொல்லுங்கள், பின்னால நீங்க சொல்றதக் கேக்குறேன்.

மற்றபடி புலிகளைப் பற்றி இழுக்கும் பொழுதெல்லாம என்னைப் பயங்கரவாதின்னு அடையாளம் காட்டிட்டதா வெறும் பூரிப்பு மட்டும் அடைஞ்சுக்கோங்க, போட்டாவில் எல்லாம் போட முடியாது!

நன்றி - சொ. சங்கரபாண்டி

PKS said...

சூச்சூ! நீங்கள் யாரென்று தெரியவில்லை. உங்கள் கருத்துகளில் நியாயமான கேள்விகள் உள்ளன. ஆனாலும், சங்கரபாண்டியை ஜாதி என்கிற குறுகிய வட்டத்துக்குள் அடக்கி, அவர் செய்கிற அதே தவறைச் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்தான் மேட்டிமைத்தனத்துடன் அடுத்தவரை ஜாதி சிந்தனையுடையவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால், அதே தவறைத் தாங்களும் செய்ய வேண்டுமா? எனவே, அவரை ஜாதிக்குள் அடைக்க முயல்கிற முயற்சியை நான் செய்ய மாட்டேன். அப்படிப்பட்ட முயற்சிகளை அவர் போன்றவர்கள் என்மீது செய்தாலும், ஜாதியைச் சொல்லி அவரை விளிப்பதை நான் கண்டிக்கிறேன். சொல்லப் போனால், என் சொந்த வாழ்வில் நான் எப்படியிருக்கிறேன் என்பதைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமலேயே, என் ஜாதிய பின்புலம் என்று சங்கரபாண்டி போன்றவர்கள் லகுவாகக் குற்றம் சாட்டினாலும், தங்கள் சொந்த வாழ்வில் அவரைப் போன்றவர்கள் ஜாதி வெறியற்றும் ஜாதிய சிந்தனையற்றுமே இருக்கிறார்கள் என்பதையே நான் நம்ப விரும்புகிறேன்.

அடையாளம் தெரியாமல் புனைபெயரில் எழுதுவது கருத்துகளைச் சொல்வதற்கும், சொந்த பாதுகாப்பிற்கும் என்றால் புரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி எழுத வேண்டாமே.

அவரிடம் நான் காட்டுகிற கடுமையும் கோபமும் அவர் மீதுள்ள வெறுப்பினால் அல்ல. அவர் பின்பற்றுகிற கொள்கைகள் மீதுள்ள வெறுப்பினாலும் அல்ல. மின்னஞ்சல்களிலும் நேரிலும் அவருக்கு நான் தந்து வந்திருக்கிற தனிமனித மரியாதைகளையும் பரஸ்பர புரிந்து கொள்ளுதலையும்கூட புரிந்து கொள்ளாமல் கொள்கைக்கு சிங்கி அடித்துக் கொண்டு மனிதத்தையும் நட்பையும் தொலைத்துக் கொண்டு வருகிறாரே என்பதால்தான்.

"ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ அதைப் போன்றே அவனும் மற்றவனிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கமாகும்" என்று சொன்னவர் பெரியார். அவர் கருத்துகளுடன் உடன்படாவிட்டாலும், பரஸ்பர மரியாதையுடனும் அன்புடனும்தான் சங்கரபாண்டியை நான் நடத்தி வந்திருக்கிறேன். என்ன செய்வது, பெரியார் புகழ் பாடுவதாகச் சொல்லிக் கொள்கிற அவராலோ மற்றவர்களாலோ இப்படி அடுத்தவரை நடத்த முடியவில்லை என்றால், அது என் பிரச்னையில்லை.

எனவே, உங்கள் கமெண்ட்டை நீக்கி விடலாமா என்று இதன்மூலம் சங்கரபாண்டியிடம் கேட்கிறேன். அவர் சரியென்றால் உங்கள் கமெண்ட்டை நீக்கி விடுவேன். வேண்டுமென்றால், சங்கரபாண்டியின் கொள்கைகளைக் கிழிகிழியென்று கிழித்து இதே கருத்துடன் இன்னொரு கமெண்ட் போடுங்கள். சரியா?

நாமாவது முன்மாதிரியாக இருப்போம். இல்லையென்றால், அடுத்தவரைக் குறை சொல்கிற அருகதை அற்றவர்களாகிவிடுவோம்.

புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

- பி.கே. சிவகுமார்

PKS said...

சொல்ல மறந்து போனது. கடந்த சில பின்னூட்டங்களில் சங்கர பாண்டியிடம் நான் அவர் பாணியிலேயே பேசியது (கடுமையாகவும் தாட்சண்யமின்றியும்), பெரியார் சொன்னதுபோல, அவர் என்னை நடத்துவது மாதிரி அவரை நான் நடத்தினாலாவது அவருக்குப் புரியுமா என்ற ஆசையால்தான். ஆனால், அவரோ முற்றும் தெளிந்த ஞானி போல பேசுவதாகவும், நான் மட்டுமே கோபத்தில் பேசுவதாகவும் வழக்கம் போல பழி சொல்கிற வேலையிலேயே இருக்கிறார். எப்படிப் பேசினாலும் அவருக்குப் புரியப் போவதில்லை என்று நிரூபித்து வருகிறார். அவ்வளவுதான்.

- பி.கே. சிவகுமார்

-/சுடலை மாடன்/- said...

எனக்கு இந்தப் பதிவில் நடப்பதைப் பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது. நாகரீகத்தைப் பற்றிப் பேசுபவர்கள் இப்படியெல்லாமா நடந்து கொள்வார்கள் என்று!

இந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும் புதியவர்களுக்கு, நான் சொல்வது புரிய வில்லையென்றால், தெரிந்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் பொறுமையாக இந்தப் பதிவுக்கு முந்தைய மூன்று பதிவுகளையும் பின்னூட்டங்களையும், உள்ளே கொடுக்கப் பட்டிருக்கும் சுட்டிகளையும் படித்து விட்டு, இந்தப் பதிவையும் பின்னூட்டத்தையும் படியுங்கள். அப்படியும் புரியவில்லையென்றால் திரு. சிவக்குமார் சொல்வதை ஏற்றுக் கொண்டு, விட்டு விடுங்கள், ஒன்றும் குடி முழுகப் போவதில்லை. எனக்கு எனது பிம்பத்தைப் பற்றிக் கவலையுமில்லை. எந்த மரியாதையும் தேவையுமில்லை. அதை யாரும் பிச்சையாக அளிக்கவும் முன்வரவேண்டாம்.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

இங்கு திரும்பி வரப் போவதில்லை என்று விடை பெறுகிறேன், நன்றி, திரு.பி. கே. சிவக்குமார்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

ROSAVASANTH said...

//எப்படிப் பேசினாலும் அவருக்குப் புரியப் போவதில்லை என்று நிரூபித்து வருகிறார். //

நேர்மை குறைவை ஒரு உடல் ஊனம் போலவோ(அல்லது கவச குண்டலம் போல ஒரு பலமாகவோ) பெற்றவர்களுடன் பேசுவதை போன்ற அபத்தமான/ஆபத்தான செயல்பாடு இருக்க முடியாது என்று தெரிந்தும் செய்யும் சங்கரபாண்டியை பார்த்து எனக்கும் இப்படித்தான் தோன்றுகிறது.

இப்போதுதான் எல்லாவற்றையும் படித்தேன். என் எதிர்பார்ப்புகளை இம்மியளவும் பொய்யாக்காமல் காப்பாற்றும் சிவக்குமாருக்கு மீண்டும் என் நன்றிகள்.

ROSAVASANTH said...

பின் குறிப்பு: நான் புலிகளை கடுமையாய் விம்ர்சித்து வருவதும், அதி வெளிப்படையாய் செய்வதையும், அது குறித்த கருத்துக்களையும் என் பதிவை படிப்பவர்கள் அறியலாம்.

enRenRum-anbudan.BALA said...

சொ.ச.பா,
//வரதனுக்காகவும், பாலாவுக்காகவும் திறந்து வைக்கப் பட்ட பின்னூட்டப் பெட்டியை பயன்படுத்திக் கொள்கிறேன்
//
என் தலையை ஏன் உருட்டுகிறீர்கள், நண்பரே ? ;-)