Wednesday, June 08, 2005

புக் மிமி - கே.வி. ராஜாவின் தொடர்ச்சி

நண்பர் K.V. ராஜா கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த விளையாட்டில் என் பங்களிப்பு இதோ. நண்பர் K.V. ராஜாவுக்கு நன்றி.

என்னிடம் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை:

தமிழில் - ஏறக்குறைய 750.
ஆங்கிலத்தில் - ஏறக்குறைய 40.

சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்:

வந்து பலவாரங்கள் ஆகி என் வேலைப் பளுவால் பிரிக்கப்படாமல் கிடந்த புத்தகப் பார்சலை இந்தப் பதிவிற்காகப் பிரித்துப் பார்த்ததில் அவற்றுள் இருந்தவை. இப்புத்தகங்களுள் பலவற்றை எனக்குச் சிபாரிசு செய்து உதவிய சோதிப் பிரகாசம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

1. வாழ்க்கையின் கேள்விகள் - சோதிப் பிரகாசம்
2. திராவிடர் வரலாறு - சோதிப் பிரகாசம்
3. வரலாற்றின் முரண் இயக்கம் - பாகம் I (முதலாண்மைப் புரட்சி) - சோதிப் பிரகாசம்
4. வரலாற்றின் முரண் இயக்கம் - பாகம் II (தேசியத்தின் எழுச்சி) - சோதிப் பிரகாசம்
5. Pre-Aryan Tamil Culture - R.T. Srinivasa Iyengar
6. The Stone Age in India - R.T. Srinivasa Iyengar
7. Life in Ancient India - R.T. Srinivasa Iyengar
8. History of the Tamils (From the earliest times to 600 A.D.) - R.T. Srinivasa Iyengar
9. Vaiyapuri Pillai's History of Tamil Language and Literature (Introduction by Karthikesu Sivathamby)
10. A History of Ancient Sanskrit Literature (so far as it illustrates the primitive religion of the brahmins) - F. Max Muller
11. இரவு - எலி வீஸல்

சமீபத்தில் படித்தவை/படித்துக் கொண்டிருப்பவை:

ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக வாசக அனுபவம் எழுதலாம். நேரமில்லை. ஆதலால், போகிற போக்கில் ஒன்றிரண்டு அவதானிப்புகளைச் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன். இக்குறிப்புகள் முழுமையானவை அல்ல. தெளிவானவையாகவும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களைப் படிக்கிற பழக்கம் எனக்குண்டு என்பதைப் புத்தகங்கள் குறித்து நான் முன்னர் எழுதியப் பதிவுகளைப் படித்தவர்கள் அறிந்திருப்பார்கள்.

1. இறந்த காலம் பெற்ற உயிர் - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமியின் எழுத்துகளைப் பத்திரிகைகளில் அவ்வப்போது படித்ததுண்டு. தொகுப்பாக அவர் கட்டுரைகளை நான் படித்த முதல் தொகுதி - காற்றில் கலந்த பேரோசை. அதற்கப்புறம் இந்தத் தொகுதியைப் படிக்கிறேன். காற்றில் கலந்த பேரோசைக்கும் இறந்த காலம் பெற்ற உயிருக்குமிடையே சுந்தர ராமசாமியின் எழுத்து நடையில் நுட்பமான வேறுபாடுகள் காண்கிறேன். முக்கியமாக - அவர் தமிழ் லகுவாகியிருக்கிறது. சொல்ல வந்ததை முன்போல அதிகம் சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டுச் சொல்லாமல், நேரடியாகச் சொல்ல முயல்கிறார். எளிமையாகவும் அதிகம் மண்டையை உடைக்காமல் புரிந்து கொள்கிற மாதிரியுமான நடையும் மொழியும் இந்தத் தொகுதியில் இருக்கிறது. இவையெல்லாம் என் பிரமைகளோ? சுந்தர ராமசாமியைத் தொடர்ந்து படித்து வருவதால் அவர் நடைக்குப் பழக்கப்பட்டுப் போய் அவர் படிப்பதற்கு எளிமையாகிவிட்டாரோ என்ற கேள்விகளும் எழுகின்றன. இதுகுறித்து விரிவாக யோசிக்க வேண்டும்.

2. கம்பா நதி - வண்ணநிலவன்

வண்ண நிலவனே எழுதுவதுபோல, "எழுத்தில் சோதனை முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும்" என்ற க.நா.சு.வின் கருத்தைத் தொடர்ந்து கடைபிடித்தவர் அவர். அவர் வாக்கியத்தில் வார்த்தைகள் கூட இடம் மாறி இருக்கும் - தமிழாசிரியர்கள் பார்த்தால் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியன அவற்றுக்குரிய சரியான இடத்தில் இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு. அந்த அளவுக்கு தன் எழுத்திலும் நடையிலும் உத்திகளிலும் தொடர்ந்து சோதனைகள் செய்து பார்த்தவர் வண்ண நிலவன். கம்பா நதி என்ற இந்தக் (குறு)நாவல் ஒரு மத்தியதர வர்க்கப் பிள்ளைமார் குடும்பத்தைப் பற்றிய நாவல். மத்தியதர வர்க்கத்தைப் பற்றி எழுதியதில் மிகவும் வல்லவர் என்று எல்லாரும் ஆதவனைப் புகழ்கிறார்கள். எனக்கு என்னவோ ஆதவனுக்கு முன் வைக்க வேண்டிய வரிசையில் அசோகமித்திரன், வண்ணநிலவன் என்று பலரும் வருவார்கள் போல இருக்கிறது. ஆதவனின் என் பெயர் ராமசேஷனைவிடவும் (முன் பாதி விறுவிறு, பின்பாதி சவசவ) எனக்கு அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு, வண்ணநிலவனின் கம்பாநதி உள்ளிட்ட பல படைப்புகள் முக்கியமானவையாகத் தெரிகின்றன.

வறுமை வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடக் கூடியது. விழுமியங்களையும் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வைப்பது. விரக்தி மனப்பான்மையை கொணர்வது. புறமும் புலம்பலும் பேச வைப்பது. பொறாமையை வளர்ப்பது. கொடிதினும் கொடிது இளமையில் வறுமை என்றாள் அவ்வை. புதுமைப்பித்தனைக் கூட வாழ்க்கையை விரக்தி மனப்பான்மையுடன் பார்க்க வைத்ததும் அவர் எழுத்தில் சமரசங்கள் (தழுவல் முதலியன) செய்து கொள்ள வைத்ததும் வறுமைதான். ஆனால், ஏறக்குறைய தன் வாழ்க்கை முழுதும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டிருந்தபோதும் வண்ணநிலவனிடம் மனிதநேயமும் சகமனிதர் பால் பரிவுணர்வும் அன்பும் பொங்கி வழிகிறது. யாரைப் பற்றியும் அவர் மோசமாகவோ கேவலமாகவோ பேசியதில்லை. துர்வாசர் என்ற பெயரில் தமிழ் சினிமாவைக் கிழிகிழியென்று கிழித்தது அவர் விமர்சனப் பார்வை மட்டுமே. அதில் காழ்ப்புணர்ச்சி இல்லை. நேரில் பார்த்தறிந்த பரிச்சயம் இல்லையென்றாலும், என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நண்பராக எப்போதுமே தன் எழுத்தின் மூலம் திகழ்ந்து வந்திருப்பவர் வண்ணநிலவன்.

3. தத்வமஸி (சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற ஓர் உபநிடத ஆய்வு) - மலையாள மூலம்: சுகுமார் அழீக்கோடு, தமிழில்: ருத்ர. துளசிதாஸ்

மூலநூலின் ஆசிரியர் சுகுமார் அழீக்கோடு, சமஸ்கிருதத்தில் எம்.ஏ, மலையாளத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். பின்னர் பி.எச்டி. பட்டமும் பெற்றவர். கோழிக்கோடு பல்கலையில் துணைவேந்தராகப் பணியாற்றியவர். தீனபந்து, மலையாள ஹரிஜன், தேசமித்ரம், நவயுகம் ஆகிய பத்திரிகைகளில் பொறுப்புகள் வகித்தவர். மலையாள சாகித்ய விமர்சனம், தத்வமும் மனுஷ்யனும், சங்கரகுறுப்பு விமர்சிக்கப்பட்டுன்னு, ஆசான்றெ சீதாகாவ்யம் ஆகிய பிறநூல்களை எழுதியவர்.

இந்நூல் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி பரிசு, கேரள அராசின் சாகித்ய அகாதெமி பரிசு, வயலார் பரிசு, அபுதாபி மலையாள சமாஜம் பரிசு, ராஜாஜி பரிசு உட்பட பத்துக்கு மேற்பட்ட பரிசுகளைப் பெற்றது.

4. தேரோடும் வீதி (முதல் பாகம்) - நீல.பத்மநாபன்

இளங்கலைக் கல்லூரிப் படிப்பின்போது அப்போது முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருந்த பெருமாள் முருகன் அந்நாவலைப் பற்றிப் பேசக் கேட்டு, நீல.பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் படித்தேன். திருவனந்தபுரத்தின் ஆன்மாவைக் காட்டுகிற நாவலென்று அதுபெற்ற பாராட்டுக்கு உரியதாய் அது இருந்தது. அதற்கப்புறம் அவரின் தலைமுறைகளைப் படித்தேனா இல்லையா என்று சம்சயமாக இருக்கிறது. இப்போது தேரோடும் வீதி போய்க்கொண்டிருக்கிறது.

5. அந்தக் காலத்தில் காப்பி இல்லை போன்ற ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி - ஆ.இரா.வேங்கடாசலபதி

சலபதி போல methodical - ஆகவும், organized - ஆகவும், விரிவான reference உள்ளடக்கியும், எல்லாவற்றையும் சரியான முறையில் தொகுத்து சுவாரசியமாக வாசிப்பதற்கு ஏற்ற வகையில் தருகிற நுட்பம் அறிந்த hardworker - ஆகவும், இருக்கிற ஆய்வாளர்கள் இன்றைக்குத் தமிழுக்குத் தேவைப்படுகிறார்கள்.

6. கலாசாரத்தின் வன்முறை - அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸின் கட்டுரைகளைப் பத்திரிகைகளில் படித்ததுண்டு. சனதருமபோதினி தொகுப்பில் அவர் நேர்காணல் ஒன்றையும் படித்திருக்கிறேன். அவர் கட்டுரைகளை மொத்தமாகப் படிப்பது இப்போதுதான். கட்டுரைகளை இப்படி மொத்தமாகப் படிக்கும்போது ஒவ்வொரு கட்டுரைக்கும் உள்ள தொடர்புகளை வேறுபாடுகளை அவை எழுப்பும் பிற சிந்தனைகளை இனம்காண முடிகிறது.

7. தனிப்பாடல் திரட்டு (முதற்பகுதி) - புலவர் அ.மாணிக்கம்

இதைப் பற்றி ஒரு விரிவான வாசக அனுபவம் எழுத வேண்டும். "உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை ஒப்பிக்கும் என்றன் உளம்" என்ற பாட்டிலிருந்து அந்தக் காலத்திலிருந்தே எழுத்தாளர்களின் பொருளாதார நிலையை அறிய முடிகிறது என்பதிலிருந்து, என்னை யோசிக்க வைத்த, நான் ரசித்த பலப்பல தனிப்பாடல்கள் இத்தொகுதிகளில் (மொத்தம் இரண்டு தொகுதிகள்) உள்ளன.

8. 18-வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

இதைப் பற்றி ஒரு விரிவான வாசக அனுபவம் எழுத வேண்டும். எனக்கென்னவோ அசோகமித்திரனின் நடை சாதாரணமான அலுப்பூட்டும் நடை அல்ல என்று தோன்றுகிறது. அதனுள்ளே ஒளிந்துகொண்டு அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத இடத்தில் தலைகாட்டும் மெல்லிய நகைச்சுவை கொணர்கிற முறுவல் ஓர் இலக்கிய அனுபவத்தைத் தரக்கூடியது.

இப்போதைக்கு நாவலிலிருந்து சில மேற்கோள்கள் (இவற்றில் நகைச்சுவை இல்லை.):

"எந்தச் சூழ்நிலையிலும் எவரோடு ஆடினாலும் நன்றாக ஆடவேண்டும். நன்றாக ஆடுவதென்றால் என்ன? எல்லா ஆட்டத்திற்கும் ஓர் ஆரம்பம், ஓர் முடிவு, ஆரம்பத்திலிருந்து முடிவு நோக்கி ஒருவிதப் பயணம். இது முன்னோக்கியே செல்லும் பயணம். இந்தப் பயணத்தை ஒருவன் எவ்வளவு விரைவாக, எவ்வளவு திடமாகத் தடுமாற்றமில்லாமல் முடிக்கிறானோ அந்த அளவுக்கு அவன் நல்ல ஆட்டக்காரன். ஆனால், இப்படி ஆடுவது மட்டும் ஒருவனை நல்ல ஆட்டக்காரனாக்கி விடுவதில்லை."

"யாரைப் பற்றியும் நல்லது தெரிய அவர்கள் நெருங்கித் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படியில்லாதபோது அவதூறுகள்தான் பேசக் கிடைக்கும்."

9. Building Oracle XML Applications

இதைப் பற்றி யாரும் அறிந்து கொள்ள விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உத்தியாகத்தின் பொருட்டு படிக்கிற புத்தகம் இது.

படித்ததில் பிடித்தவை:

புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்வதை வாழ்க்கையில் உரசிப் பார்க்கவும் பொருத்திப் பார்க்கவும் படித்தவற்றைத் துருவித் துருவி நோண்டிப் பார்த்துப் பரிசோதித்து அதிலிருந்து புதிய இடங்களுக்குச் செல்லவும் நான் முயன்று வருகிறேன். புத்தகங்கள் மட்டுமே என் குருக்கள் அல்ல. புத்தகத்தைவிட வாழ்க்கை எனது மேலான குருவாகும். ஆனால், வாழ்க்கையைப் புத்தகங்கள் என்ற சாளரத்தின் வழியேயும் நான் பார்க்க விரும்புகிறேன்.

முக்கியமாக - வாழ்க்கை எந்திரமயமாகிவிட்ட சூழலில், எதைப் பற்றியும் யோசிப்பதற்கு நேரமில்லாமல், பொருள் தேடி அலைகிற உலகில், சிந்திப்பதற்குக்கூட மறந்து போகிறது. அந்த மாதிரியான வாழ்க்கையில் இருக்கிற என் சிந்தனையை ஆரம்பித்து வைக்கிற, தூண்டுகிற ஊக்கியாகப் புத்தகங்கள் இருக்கின்றன.

அந்த விதத்தில், நான் வாசிக்கிற ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் குறைந்தபட்சம் ஒரு விஷயத்தையாவது நான் கற்றுக் கொள்கிறேன். இந்தக் காரணத்தினால், பிடித்த புத்தகங்கள் என்று ஐந்தையோ பத்தையோ ஏன் 20 அல்லது 25 ஐயோ பட்டியலிடுவது என்பது எனக்கு அநியாயமான செயலாகத் தோன்றுகிறது. சிறுகதை, கவிதை, அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு என்று புத்தகங்களுக்கான துறைகளே பலவாக இருக்கும்போது (AnyIndian.com-ல் புத்தகங்களை 47 பிரிவுகளாகப் பிரித்திருப்பது நினைவுக்கு வருகிறது) ஐந்து புத்தகங்களையோ அல்லது சில புத்தகங்களை மட்டுமோ பிடித்தவை என்று பட்டியலிடுவது எனக்கு உவப்பில்லாதது.

ஆனாலும், நான் சோகமாகவோ, மன உளைச்சலிலோ, அமைதியற்றோ, சோம்பியோ, புத்துணர்வும் ஊக்கமும் வேண்டியோ இருக்கிற பொழுதுகளில் எல்லாம் படிக்க ஆரம்பித்ததும் என்னை லேசாக்கி வாழ்வின்மீது காதல் கொள்ள வைக்கிற ஒரு புத்தகம் பாரதியார் கவிதைகள் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இந்த விளையாட்டில் நான் அடுத்து அழைப்பவர்கள்:

ஸ்ரீகாந்த் மீனாட்சி
BB என்றழைக்கப்படுகிற பாலாஜி ஸ்ரீனிவாசன்
தேசிகன்
இரா. முருகன்
பத்ரி சேஷாத்ரி

மேலும் எழுதுவதில் ஆர்வம் இல்லாமல் ஆனால் எல்லா நல்ல எழுத்துகளையும் தேடிப் படிக்கிற, சரியான ஆள் கிடைத்தால் பரசவமுடன் அவற்றைப் பற்றிப் பேசுகிற நண்பராக என் பழைய அலுவலக சகா அரவிந்தன் அம்பலவாணன் இருந்து வருகிறார். அவரும் இந்த மாதிரி ஒரு பதிவு எழுதுவதற்காக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தால் நன்றாகத்தான் இருக்கும். வாஷிங்க்டன் டி.சி. - வர்ஜினியா பகுதியில் இருக்கும் அவருக்கு இந்தக் குரல் கேட்கும் என்று நம்புகிறேன். அப்படியே வலைப்பதிவு வைத்திருக்காத இன்னொரு புத்தகப் பிரியர் நியூ ஜெர்ஸி வாழ் நண்பர் P.G. என்கிற பத்மநாபன் கணேசனும் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும் என்ற ஆசைகள் எட்டிப் பார்க்கின்றன. இன்ஷா அல்லாஹ்!

8 comments:

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

Dear PKS,
your posting is very informative. I have saved a copy of this list for my next purchase. thanks , : )
anbudan, Jayanthi Sankar

PKS said...

நண்பர்களுக்கு,

இந்தப் பதிவில் தனிப்பாடல் திரட்டு (முதல் தொகுதி) பற்றி எழுதும்போது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.

//"உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை ஒப்பிக்கும் என்றன் உளம்" என்ற பாட்டிலிருந்து அந்தக் காலத்திலிருந்தே எழுத்தாளர்களின் பொருளாதார நிலையை அறிய முடிகிறது என்பதிலிருந்து"//

இன்றைக்குக் காலை அலுவலகம் வருகிற பயணத்தின்போது இந்த வரிகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை புலவர்களுக்கு (எழுத்தாளர்களுக்கென்று பொருள் கொள்க) - அதுவும் முழுநேர எழுத்தாளர்களுக்கு - பொருளாதார நெருக்கடிகள் இருந்து வருகின்றனதான். நமது பழமையான இலக்கியத்தில் கூட பொருளும் பரிசும் வேண்டி குறுநில மன்னர்களைக் கூட ஆஹா ஓஹோ என்று புலவர்கள் புகழ நேர்ந்த விஷயங்கள் உள்ளன (நன்றி சுஜாதா!). ஆனால், இந்தப் பாடல் அதை மட்டுமே சொல்வதாகச் சொல்ல முடியுமா என்ற கேள்வி எனக்கு ஓடியது.

இந்த இடத்தில் அவ்வையார் மக்கள் கவிஞராகவும் இருந்திருக்கிறார் என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால், இதே தொகுதியில் இன்னொரு இடத்தில் ஐநூறு பொற்காசுகள் வாங்கிக் கொண்டு ஒரு பொருட்பெண்டிரைப் பற்றி ஒரு பாடலை அரைகுறையாய்க் கம்பர் பாடி விட்டுவிட்டதாகவும், மீதிப் பாடலைக் கூழுக்கு அவ்வைப் பாடி முடித்ததாகவும் சொல்லப்படுகிற கதையின் கீழ் அமைந்த பாடல் ஒன்றும் இருக்கிறது.

எனவே, இந்த இடத்தில் சாதாரண ஜனங்கள் அன்பின் மிகுதியால் கொடுக்கிற எந்தப் பொருளையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு, அவர்களை மகிழ்விப்பதற்காகப் பாடிய மக்கள் கவிஞராக அந்த அவ்வையார் இருந்திருக்கிறார் என்பது எனக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க யோசனையாக இருக்கிறது.

என்னிடம் இருக்கிற இந்தத் தனிப்பாடல் திரட்டிலே ஒவ்வொரு பாடலும் பாடப்பட்ட காலம் குறிப்பிடப்படவில்லை. அந்தப் பாடலைப் பற்றிய சிறுகுறிப்பும் பின்னணியும் மட்டுமே உள்ளன. அதனால், மேற்கண்ட பாடலை கவிஞர்களின் பொருளாதார நிலை என்று மேலோட்டமாகப் பொருள் கொள்வதைவிட, மக்களுக்காகப் பாடிய கவிஞர்களைச் சொல்கிற பாடல் என்று பொருள் கொள்வது என் சிற்றறிவுக்கும் சிந்தனைக்கும் ஏற்புடையதாக இருக்கிறது.

நன்றி.

அன்புடன், பி.கே. சிவகுமார்

era.murukan said...

அன்புள்ள சிவகுமார்,

அழைப்புக்கு நன்றி.

இப்போதெல்லாம் பட்டியல்கள் சலிப்படைய வைக்கின்றன. 2001-ல் அகத்தியர் குழுமத்தில் நான் நண்பர் பெ.சந்திரசேகரனோடு உரையாடும்போது நினைவுக்கு வந்த படைப்புகளை அடுக்கி இருந்தேன். படைப்புகள் தாம். எல்லாம் நூல் அல்ல. அப்புறம் ராயர் காப்பி கிளப் (பழைய கட்டிடம்) தொடங்கியபோது நண்பர் சடையன் சாபு அந்தப் பழைய மடலைப் பட்டியலாக்கி இட்டார். அந்தக் கடிதம் -

http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/364

1.கு.ப.ராவின் 'விடியுமா',
2.அண்ணாவின் 'ஓர் யிரவு',
3.புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்',
4.தி.ஜானகிராமனின் 'மோகமுள்',
5.சுந்தரராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை',
6.விந்தனின்'பாலும் பாவையும்',
7.கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கார்',
8.கிருஷ்ணன் நம்பியின் 'மாமியார் வாக்கு',
9.ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே',
10.கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்',
11.க.நா.சுவின் 'பொய்த்தேவு',
12.கல்கியின் 'தியாகபூமி',
13.பா.ஜெயப்பிரகாசத்தின் 'யின்னொரு ஜெருசலேம்',
14.ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்',
15.நீல.பத்மனாமனின் 'பள்ளி கொண்டபுரம்',
16.ஆ.மாதவனின் 'சாலைக்கடைத் தெருக் கதைகள்',
17.பொன்னீலனின் 'உறவுகள்',
18.கு.சின்னப்பபாரதியின் 'தாகம்',
19.சுஜாதாவின் 'ஊஞ்சல்',
20.சோ.தர்மனின் 'நசுக்கம்',
21.இமையத்தின் 'கோவேறு கழுதைகள்',
22.பா.செல்வராஜின் 'தேனீர்',
23.பாமாவின் 'கருக்கு',
24.ராஜம் கிருஷ்ணனின் 'அமுதமாகி வருக',
25.கிருத்திகாவின் 'வாசவேச்வரம்',
26.அம்பையின் 'சிறகுகள் முறியும்',
27.பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்',
28.தோப்பில் முகம்மது மீரானின் 'ஒரு கடலோரக் கிராமத்தின் கதை',
29.சே.யோகநாதனின் 'மீண்டும் வந்த சோளகம்',
30.பெ.கருணாகரமூர்த்தியின் 'அகதி உருவாகும் நேரம்',
31.நகுலனின் 'நிழல்கள்',
32.அசோகமித்திரனின் 'பதினெட்டாவது அட்சக் கோடு',
33.யிந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப் புனல்',
34.ஜெயமோகனின் 'ரப்பர்',
35.மா.அரங்கநாதனின் 'காடன் மலை',
36.பாவண்ணனின் 'பாய்மரக் கப்பல்',
37.வண்ண நிலவனின் 'எஸ்தர்',
38.வண்ணதாசனின் 'தனுமை',
39.திலீப் குமாரின் 'மூங்கில் குருத்து',
40.எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்',
41.தஞ்சை பிரகாஷின் 'கள்ளம்',
42.குமார செல்வாவின் 'உக்கிலு',
43.பெருமாள் முருகனின் 'நிழல் முற்றம்',
44.நரசய்யாவின் 'கடலோடி',
45.தமிழவனின் 'ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்',
46.லா.ச.ராவின் 'அபிதா',
47.சி.சு.செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்',.
48.நாகூர் ரூமியின் 'குட்டியாப்பா',
49.சாரு நிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்',
50.பா.விசலத்தின் 'மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்',
51.பாவை சந்திரனின் 'நல்ல நிலம்',
52.ஜெயந்தனின் 'நினைக்கப்படும்',
53.கோமல் சாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்',
54.எஸ்.பொவின் 'நனவிடைத் தோய்தல்',
55.வல்லிக்கண்ணனின் 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்',
56.ந.பிச்சமூர்த்தியின் 'காட்டு வாத்து',
57.சி.மணியின் 'வரும்,போகும்',
58.கலாப்ரியாவின் 'எட்டயபுரம்',
59.ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை',
60.மனுஷ்யபுத்திரனின் 'என் படுக்கையறையில் யாரோ
ஒளிந்திருக்கிறார்கள்',
61.மீராவின் 'ஊசிகள்',
62.சுதேசமித்திரனின் 'அப்பா',
63.யுகபாரதியின் 'மனப்பத்தாயம்',
64.சோ.வைத்தீசுவரனின் 'நகரத்துச் சுவர்கள்',
65.பிரம்மராஜனின் 'கடல் பற்றிய கவிதைகள்',
66.மஹாகவியின் 'குறும்பா',
67.மு.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்',
68.காமராசனின் கறுப்பு மலர்கள்',
69.அ.சீனிவாசராகவனின் ('நாணல்') 'வெள்ளைப் பறவை',
70.சுகுமாரனின் 'பயணத்தின் சங்கீதம்',
71.அப்துல் ரகுமானின் 'பால்வீதி',
72.அபியின் 'மவுனத்தின் நாவுகள்',
73.கல்யாண்ஜியின் 'புலரி',
74.பழமலயின் 'சனங்களின் கதை',
75.கலாந்தி கைலாசபதியின் 'ஒப்பியல் யிலக்கியம்',
76.எஸ்.ராமகிருஷ்ணனின் 'கற்பின் கனலி',
77.ஆர்.கே.கண்ணனின் 'புதுயுகம் காட்டிய பாரதி',
78.சிட்டி-ஜானகிராமனின் 'நடந்தாய் வாழி காவேரி',,,,,,
79.காஞ்சனா தாமோதரனின் 'வரம்',
80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

ஆமா இதெல்லாம் என்னங்கானும் என்கிறீர்களா ? ஒன்னுமில்லே நம்ம
மத்தளராயன் அடுத்தவா மெஸ்லே, இருக்கறச்சே கெளப்பிலே இதெல்லாம் இருந்தா
நன்னாயிருக்குமேன்னு சொல்லியிருந்தா ? அதான் நம்ம ராயர் கெளப்பிலேயும்
இருக்கட்டுமே என்று....


=====
அன்புடன்

சாபு
துபாய்


*********************

இப்போது படித்துக் கொண்டிருக்கும் தமிழ், மலையாள நூல்களைப் பற்றிச் சாவகாசமாக எழுதுகிறேன்.

அன்போடு
இரா.மு

era.murukan said...
This comment has been removed by a blog administrator.
era.murukan said...

URL of the RKK(old) mail

http://groups.yahoo.com/group
/RayarKaapiKlub/message/364

PKS said...

«ýÒûÇ þá.Ó.

¿ýÈ¢! ¿ýÈ¢!

«ýÒ¼ý, À¢.§¸. º¢ÅÌÁ¡÷

Boston Bala said...

As usual informative & a very different list. Nanri.
-balaji

PKS said...

மேலே ராயர் என்ற பெயரில் ஓர் அநாமதேய அசிங்கம் குரைத்துள்ளது. இப்படிப்பட்ட அசிங்கங்களை கண்டிக்க மட்டும் கூடாது, கண்டுபிடித்து நிஜமுகத்தைத் தோலுரித்துக் காட்டவும் வேண்டும். புத்தகங்களைப் பற்றி இரா.முருகன் சொன்னது புரியாவிட்டால், அந்த அநாமதேயத்தின் மண்டையில் மூளை இல்லை, களிமண்தான் இருக்கிறது என்று பொருள். அதற்கு முருகன் மட்டுமில்லை அந்த ஈசனே கூட ஒன்றும் செய்ய முடியாது. ராயர் என்ற பெயரில்இருக்கிற கமெண்ட்டை நீக்கிவிட்டு என் கண்டிப்பை மட்டும் இட்டால், மற்றவருக்கு அந்த அநாமதேயம் என்ன எழுதியது என்று தெரியாது என்பதால், அந்தக் கமெண்ட்டை விட்டு வைக்கிறேன். இப்படி வலைப்பதிவில் எழுதுவதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட அநாமதேயங்கள் கழிவறைச் சுவர்களில் எழுதப் போவது பொருத்தமாக இருக்கும். என் வலைப்பதிவில் இப்படிப்பட்ட ஓர் அசிங்கம் நடந்ததற்கு இரா.மு.விடம் மன்னிப்பு கேட்கிறேன்.

- பி.கே. சிவகுமார்