அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு,
சுரேஷ் கண்ணன் மற்றும் மாலன் இருவருக்கிடையே ஒரு விவாதம் ஓடி வருகிறது. அப்படியே மாலன் வலைப்பதிவுகள் குறித்து முன்வைத்திருக்கிற யோசனைகளை ஆதரித்துக் கருத்துச் சொல்லியும் மாற்றுக் கருத்துச் சொல்லியும் பல விவாதங்கள் தமிழ்மணம் மன்றம், அவரவர் வலைப்பதிவுகள் என்று பல இடங்களில் ஓடி வருகின்றன. இவை குறித்து நான் எங்கும் பொதுவில் கருத்துகள் எழுதியதில்லை. எழுதப் போகிற திட்டமும் இல்லை.
இவை குறித்து எனக்குக் கருத்துகள் இருந்தாலும், அவற்றை என் மனசாட்சிக்கு நேர்மையாகவும், கருத்துகளின் அடிப்படையில் மட்டுமே என்றும் பகிர்ந்து கொண்டாலும், அவை திரிக்கப்படும் என்கிற அபாயத்தை நான் உணர்ந்திருக்கிறேன். மேலும் - என்னை ஏற்கனவே எவரும் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால், அவர் இன்னொரு விவாதத்திலோ சர்ச்சையிலோ சிக்கிக் கொண்டிருந்தால் - அப்போது என்னதான் கருத்தின் அடிப்படையிலும் தர்க்கத்தின் அடிப்படையிலும் நான் கருத்துச் சொன்னாலும் - அவற்றை "வாய்ப்பு கிடைத்தவுடன் தாக்குதல்" என்று தவறாகப் புரிந்து கொள்ள பலர் இருக்கிறார்கள் என்ற பாடத்தை நான் இணையத்தில் பிறர் அனுபவங்கள் மூலமும், என் அனுபவம் மூலமும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
கூடவே - தமிழ் வலைப்பதிவுகளில் சமீபகாலத்தில் ஒரு கும்பல் பிடிக்காதவரை ஏசவும் தாக்கவும் கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் - கொள்கைகளை எல்லாம் உதறிவிட்டுப் - பிடிக்காதவரைத் தாக்குவது மட்டுமே கொள்கை என்ற அளவில் பயன்படுத்தி வருவதையும் நான் அறிவேன். அப்படிப்பட்ட கும்பலில் ஒருவனாக நான் ஆகிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்வும் எனக்கு உண்டு.
அதனாலேயே - மேற்கண்ட இரண்டு விவாதங்களிலும் நான் வாய்மூடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏதேனும் கருத்துகள் இருக்கும் என்றால் - அந்தக் கருத்துகளில் பிரயோசனம் இருக்கும் என்று நான் நம்புவேனானால், அவற்றை நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்வேன்.
ஆனால் ஏதோ ஒரு விஷமி இங்கே என் பெயரை இழுத்துவிட்டு விளையாடப் பார்க்கிறார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அடுத்தவர் பெயரில் எழுதுவது தன் பிள்ளைக்கு அடுத்தவர் இனிஷியலைப் போடுவதற்கு ஒப்பது என்று அறியாத பேதையாக அவர் இருக்கிறார். அவருக்குக் கடவுள் தெளிந்த நல்லறிவைத் தரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.
எனவே, இந்த விவாதங்களில் என் பெயரிலும், என் பெயரை இழுத்தும், ஏதேனும் தன் பிள்ளைக்கு அடுத்தவர் இனிஷியலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படுகிற விஷமிகள் எழுதினால், அவற்றைப் புறக்கணிக்குமாறு சுரேஷ் கண்ணன், மாலன், தமிழ்மண நிர்வாகிகள் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
அன்புடன், பி.கே. சிவகுமார்