ரவி ஸ்ரீனிவாஸ் சில கேள்விகள் என்ற தலைப்பில் தன் வலைப்பதிவில் எழுதியிருந்ததைப் படித்தேன். ரோசா வசந்த் சொல்வது போல (கொஞ்ச நாளைக்கு, "சிவகுமார் என்னைப் பாராட்டி விட்டார். எனக்கு அதைப் பார்த்து வாந்தி வந்தது. அதைத் தூக்கி எறிந்துவிட்டேன். அவரை நான் எவ்வளவு எதிர்க்கிறேன் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்றெல்லாம் ரோசா டயலாக் விட்டுக் கொண்டிருக்கப் போகிறார். அது எனக்குப் பிரச்னையில்லை.) ரவி ஸ்ரீனிவாசுக்கு உண்மையிலேயே ஏதோ பிரச்னை என்றுதான் நானும் நினைக்கிறேன். அடிப்படையான சில விஷயங்கள் கூடப் புரிந்து கொள்ளாமல் உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்.
1. திருமாவளவனும் ராமதாசும் தான் தங்களைப் பெரியார் வழி நடப்பவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். பெரியாரை எல்லா இடங்களிலும் தூக்கிப் பிடிக்கிறார்கள். குஷ்பு சொன்ன கருத்தைவிட வலிமையாகவும், அதிகமாகவும், திரும்பத் திரும்பவும் பெரியார் பெண்கள், திருமணம், கற்பு குறித்த கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அவரின் சீடர்கள் பிற்போக்குவாதிகளாக மாறிக் குஷ்புவை எதிர்ப்பது ஏன் என்று கேள்வி கேட்டால், குஷ்புவும் கேள்வி கேட்பவர்களும் பெரியார் சொல்படி நடக்கிறார்களா, பெரியாரை முன்னெடுத்துச் செல்கிறார்களா என்று கேள்வி கேட்பது அபத்தம். பெரியாரின் சீடர்கள் பெரியார் வழி நடக்கவில்லை என்று சொல்வதற்கு ஒருவர் பெரியாரின் சீடராக இருக்க வேண்டுமா என்ன? இந்த அடிப்படையே தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார் ரவி.
2. இப்போது பெரியார் பெண்களைக் குறித்த தன் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லவில்லை என்கிறார். பெரியாரை மற்றவர்கள் இதற்கு முன்னர் முன்னெடுத்துச் செல்லவில்லை, மேற்கோள் காட்டவில்லை, இப்போது மட்டும் குஷ்புவுக்கு ஆதரவாகப் பெரியாரை துணைக்கழைக்கிறார்கள் என்று புலம்புகிற ரவி ஸ்ரீனிவாஸ், இதற்கு முன் பெரியார் பற்றிய தன்னுடைய இந்தக் கருத்தை வலைப்பதிவில் எங்கும் எழுதியதே இல்லை. இப்போது திருமாவளவனையும் ராமதாஸையும் நியாயப்படுத்த அவர்களுக்கு ஆதரவு தர வேண்டிய தேவை வந்த பிறகே பெரியாரிடம் இத்தகைய குறைகளைக் கண்டுபிடிக்கிறார். மற்றவர்கள் செய்வது தவறென்றால் (என்னைப் பொருத்தவரை, மற்றவர்கள் செய்வது தவறில்லை. ஆனால், ரவிக்குத் தவறாயிற்றே. அதனால், மற்றவர்கள் செய்வது தவறென்று பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்), அதே தவறைச் செய்து கொண்டு, வெட்கமில்லாமல் மற்றவர்களைக் குறை சொல்வது எத்தகைய தவறு.
3. பெரியார் பெண்கள் குறித்த தன் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லவில்லை என்பதுபோன்ற கருத்துகளைப் பிறரும் வைத்துள்ளனர். உதாரணமாக, கம்யூனிஸ்ட்டுகள் பெரியார் மீது வைக்கிற விமர்சனமே பொதுவாக இப்படிப்பட்டதுதான். பெரியாருக்கு வர்க்கப் பார்வை அல்லது சமூகரீதியான வரலாற்று மற்றும் அறிவியல் பார்வை இல்லை. அவர் ஒரு கலகக்காரர் மட்டுமே என்பதாக அந்தப் பார்வை இருக்கிறது. "ஈரோட்டுப் பாதை சரியா?" என்ற சிறுநூலில் ஜீவா, பெரியாரின் பிரதான நோக்கமாக 1. பிராமண எதிர்ப்பு, 2. காங்கிரஸ் எதிர்ப்பு ஆகியவற்றையே குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இவ்வளவு நாட்கள் என்னைப் போன்றவர்கள் பெரியாரை இந்தப் பார்வையைக் கொண்டு விமர்சித்து எழுதிய போதெல்லாம், எங்களை இந்துத்துவா என்று அழைத்து, பெரியாரைப் பற்றிய சரியான விவாதத்துக்குத் தயாரா என்றெல்லாம் சண்டமாருதம் செய்த ரவி ஸ்ரீனிவாஸ் இன்றைக்கு "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்பது போல, பெரியார் பெண்ணியம் குறித்த கருத்துகளைச் சொல்லிய அளவுக்கு முன்னெடுத்துச் செல்லவில்லை என்றும், அவருக்குப் பின்வந்தவர்களும் பெரியாரிடமிருந்து அத்தகைய கருத்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் எழுதுகிறார். பெரியாரைப் பற்றிய விமர்சனத்தையும் கருத்தையும் வேறெந்த அரசியல் தலைவரையும் கட்சியையும் தூக்கிப் பிடிக்கிற நோக்கத்தில் நான் வைத்ததில்லை. அதற்கே என்னைப் போன்றவர்களிடம் கடுமையாக முரண்பட்ட ரவி ஸ்ரீனிவாஸ், இன்றைக்கு திருமாவளவனையும், ராமதாஸையும் தூக்கிப் பிடிக்க பெரியாரைத் தூக்கிக் கடாசுகிறார். இந்த முரண்பாட்டை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
4. பெரியாரிடம் கடுமையாகக் கருத்து முரண்படுகிற போதும் எனக்கு அவர்மீது மிகுந்த மரியாதை உண்டு. ஒருமுறை ரவியிடமே இதை நான் சொல்லியிருக்கிறேன். பெரியாரைப் பற்றிய என் கருத்துகளை எதிர்த்து நான் பெரியாரை எல்லாவிதங்களிலும் எதிர்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டு என் வலைப்பதிவின் கமெண்ட்டுகளில் ரவி எழுதியபோது, பெரியாரின் பெண் விடுதலை உள்ளிட்ட பல விஷயங்களை நான் மதிக்கிறேன், அவற்றில் உடன்படுகிறேன் என்று பதில் சொல்லியிருந்தேன். வெகுசிலரை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டங்களை வைத்து அழைப்பது என் வழக்கம். பெரியாரைப் பெரியார் என்று நான் அழைப்பதே அவர் மீது எனக்கு - முரண்பாடுகளை மீறி - இருக்கிற மரியாதையைக் காட்டுகிறது என்று எழுதினேன். (haloscan-ல் அந்தக் கமெண்ட்டுகள் இருந்தன. அவற்றை இப்போது காணோம். haloscan தன்னுடைய அமைப்பை மேம்படுத்தியபோது பழைய கமெண்ட்டுகளை அழித்துவிட்டனவா என்று தெரியவில்லை. எந்தக் கமெண்ட்டையும் நான் அழிக்கவில்லை.) அதன் பின்னர் ரவி அமைதியானார். அப்போதெல்லாம் கூட, பெரியார் பெண்கள் குறித்த தன் கருத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை என்று வாய் திறக்கவில்லை ரவி. இப்போது, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காகப் பெரியாரைப் பற்றிய இவ்வளவு பெரிய குண்டை எடுத்துப் போடுகிறார். அப்போது இவ்வளவு நாட்கள் என்னைப் போன்றவர்கள் பெரியாரைப் பற்றிய விமர்சனத்தை - எந்த அரசியல் கட்சியையும், தலைவர்களையும் அவர்களின் உளறல்களையும் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றி வைத்தபோது - ரவி போன்றவர்கள் எதிர்த்து எழுதியது எங்கள் மீது இருக்கிற கொள்கைகளை மீறிய தனிப்பட்ட வெறுப்பாலா? ரவிதான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
5. பெரியார் சொன்னப் பலவற்றை அவரது தொண்டர்களும் ரசிகர்களும் முன்னெடுத்துச் செல்லவில்லை. அதற்கான பழி பெரியாரைச் சாருமா, அவரது தொண்டர்களை சாருமா என்பது மிகப்பெரிய விவாதம். சோவியத் யூனியனில் மார்க்ஸியத்தின் தோல்விக்கு மார்க்சும் லெனினும் காரணமா என்ற கேள்வி போன்றது இது. பல இடங்களில் பெரியாரும் குழப்பமான கருத்துகளை - முன்னுக்குப் பின் முரண்பட்ட - கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். சிலவற்றை மட்டுமே காலம் முழுதும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். இது அவரது தொண்டர்களுக்குக் குழப்பத்தைத் தந்திருக்கலாம். இப்படி இதனுள் சென்றால் இருபக்கமும் பல வாதங்களை வைக்க முடியும். ஆனால், இந்தப் பெரிய விவாதத்துள் நுழைந்தால், ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டியிருக்கும். அதனுள் இப்போது போக வேண்டாம். ஆனாலும், தான் சொன்னவற்றைத் தன் வாழ்வில் கடைபிடிக்க முயல்கிற நேர்மையாளராகவே பெரியார் இருந்திருக்கிறார். அதைப் பின்வரும் உதாரணத்தால் பார்க்கலாம். இந்த உதாரணத்தை ஜெயகாந்தன் அவரது சபையில் முன்பொரு நாள் சொன்னார். ஜெயகாந்தன் பெரியார் கருத்துகளுடன் உடன்படுபவரில்லை. அதனால் பெரியாரைப் பாராட்டி ஜெயகாந்தன் சொன்ன இந்தக் கதை (நிகழ்ச்சி) உண்மை என்று நம்புவோம். இதற்கு ஆதாரம், எதுவும் என்னிடம் இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஒருமுறை - நாகம்மையார் உயிருடன் இருந்தபோது - பெரியார் கூட்டத்தில் ஒருவர் எழுந்து கேள்வி கேட்டாராம். "கற்பு இல்லை இல்லை என்று சொல்கிறீரே (அல்லது இந்த மாதிரி பேசுகிறீரே), உம் மனைவியை என்னுடன் அனுப்புவீர்களா?" என்ற மாதிரி கேள்வி. "பெரியார் யார்? சிங்கம். இதற்கெல்லாம் அசந்துவிடுபவரா அவர்?" (மேற்கோளுள் இருப்பது ஜெயகாந்தன் சொன்ன வாசகங்கள்!). பெரியார் பதில் சொன்னாராம். "அப்படியா! சரி வாரும். கூட்டிட்டுப் போறேன். நாகம்மை என்ன தராங்களோ அதை ரெண்டு பெரும் வாங்கிக்கலாம்" என்ற பொருளில் பதில் சொன்னாராம். இந்த இடத்தில், நாகம்மையார் உதைப்பார். உதைத்தால் அதையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற பொருளும் இருப்பதைக் கவனிக்கவும். இப்படிப்பட்ட நேர்மையுள்ளவர் பெரியார். கற்பு இல்லை என்று சொன்ன பெரியாரே, மனைவியின் கற்பின் பேரில் நம்பிக்கை இருப்பதால்தான் இன்னொருவரைத் தைரியமாக அழைத்துச் செல்ல அழைக்க முடிந்தது என்பது இதன் இன்னொரு பரிமாணம். அதனுள் இப்போது போக வேண்டாம். இப்போது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற பாணியில், பெரியார் பெண்கள் குறித்த தன் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லவில்லை என்கிற ரவி பெரியார் வாழ்வில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சியை அறிவாரா மாட்டாரா? பெரியாரை விமர்சிக்கிற ஜெயகாந்தனே அறிந்திருக்கிற, அறிந்துப் பெரியாரைப் பாராட்டுகிற இந்தக் கதை இவ்வளவு நாள் பெரியார் ஆதரவாளராக வலம் வந்த ரவி ஸ்ரீனிவாசுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால், பெரியார் பெண்கள் பற்றிய தன் கருத்தைப் பொதுவாழ்வில் பெரிதும் முன்னெடுத்துச் செல்லவில்லை என்றாலும், தனிமனித வாழ்வில் முழுதும் கடைபிடித்தவர் என்றுதானே எழுதியிருப்பார்? இப்படி உளறுவாரா?
6. பெரியாரை அவரின் கொள்கை(?)களுக்காக ஏற்றுக் கொள்ளாத என்னைப் போன்ற பலர் அவரின் அறிவொழுக்கத்தையோ, பொதுவாழ்வில் நேர்மையையோ, தனிமனித வாழ்வில் நேர்மையையோ சந்தேகப்படுவதில்லை. ஆனால், பெரியாரைப் பாராட்டுவதாகப் பாவ்லா பண்ணிக் கொண்டிருக்கிறவர்களை விமர்சித்தால், பெரியாரைப் பற்றிய விவாதத்துக்குத் தயாரா என்று சண்டமாருதம் செய்த ரவி ஸ்ரீனிவாஸே பெரியாரைப் போட்டு உடைக்கிறார். ஜெயகாந்தன் சொன்ன ஒரு புகழ்மிக்க மேற்கோள் நினைவுக்கு வருகிறது. "அவர்கள் (சோவியத் யூனியன்) மார்க்ஸையும் லெனினையும் ஏமாற்றினார்கள். நாம் காந்தியை ஏமாற்றினோம். வரலாறு நம் அனைவரையும் ஏமாற்றுகிறது." அதே போல, இன்றைக்கு திருமாவளவன், ராமதாஸ் என்று பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பெரியாரை ஏமாற்றுகிறார்கள். வரலாறு இவர்களையும் ஏமாற்றும். ராமதாஸையும் திருமாவளவனையும் குஷ்பு விஷயத்தில் நியாயப்படுத்துபவர்கள் பெரியாரையும் வரலாற்றையும் மட்டும் ஏமாற்றவில்லை. தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
7. பெரியாரை விடப் பெரியத் தலைவர்களாக - பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் பெரியாரைவிடத் தூய்மையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், புரட்சிக்காரர்களாகவும் - திருமாவளவனோ ராமதாஸோ இருந்தால், அப்போது அவர்களைத் தாங்குவதற்காக இப்படியெல்லாம் ரவி எழுதினாலாவது ஒரு நியாயம் இருக்கிறது என்று மற்றவர் ஆறுதல்பட்டுக் கொள்ளலாம். அப்போதுகூட நான் அதை நியாயம் என்று சொல்வேனா என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஆனால், இங்கே குஷ்பு விஷயத்தில் நிகழ்ந்த பாசிஸத்தை நியாயப்படுத்த ரவி, பெரியாரைப் போட்டு உடைக்கிறார். பெரியாரா, திருமாவளவன்/ராமதாஸா என்று வந்தால், நான் பெரியார் பக்கம் மட்டுமே நிற்பேன். அதுகுறித்து அப்போது எனக்கு எந்த வெட்கமும் பிடிவாதமும் இருக்காது.
எழுத எழுத நீண்டு கொண்டே போகும். பெரியாரைப் பற்றிய என் பார்வைகளை விரிவாகப் பல அத்தியாயங்களாக எழுதும் எண்ணம் - எதிர்காலத்தில் உள்ளது. அதனால் இத்துடன் இங்கு நிறுத்திக் கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அன்புள்ள சிவக்குமார்,
பல இடங்களில் புத்திசாலியாக பேசும் நீங்கள் கிண்டலடிக்கும் போது மட்டும் சிறிது அசட்டுத்தனமாய் செய்வது மெய்யாலுமே புரியவில்லை. இத்தனை விஷயங்களை படித்த பின்பும் என்னை பற்றிய உங்கள் ஆரூடம் பொய்க்கும்(குறைந்த பட்சம் நீங்கள் இப்படி சொன்ன காரணத்திற்காகவாது) என்பது கூட தெரியாத அளவிலா இருக்கிறீர்கள்! அது எப்படியிருப்பினும், நீங்கள் பாராட்டிய காரணத்தினால் மட்டும் எனக்கு குமட்டல் நேர வாய்பில்லை. உங்கள் எழுத்துக்களில் எனக்கு எது குமட்டுகிறது என்று மிக தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். அப்படி கூறும் போது கூட நீங்கள் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையாய் இருக்க கூடும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் என்னை பாராட்டினால் அது குறித்த ஒரு ஜாக்கிரதை உணர்வு எனக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் நீங்கள் மட்டுமில்லாது அரவிந்தன் நீலகண்டன் முதல் டோண்டுவரை யாருடன் எனக்கு பகிர்ந்து கொள்ள எது இருந்தாலும் அதை வெளிப்படையாய் செய்வதில் பிரச்சனையில்லை, செய்திருக்கிறேன். என்கருத்தை இந்த குறிப்பிட்ட விவகாரத்க்தில் நிறைவான ஒரு பதிவாய் எழுதும் போது அப்படி செய்வதாகவும் இருந்தேன். அது மட்டுமில்லாது உங்களை வேறு காரனக்களுக்காக எதிர்த்தாலும் ஒரு ஆணதிக்கவாதியாக இதுவரை எந்த சந்தர்ப்பத்திலும் தநான் நினைத்திருக்க காரணம் எதுவும் இல்லை.
cஅரி, இந்த பதிவை நான் வாசித்தவரையில் எதிர்க்கவோ முரண்படவோ பெரிதாய் இல்லை. பெரியார் வெறும் அதிர்சிக்காக பேசினார் என்பதையோ, ஜீவாவை முன்வைத்து அதே போல முன்வைக்கும் விமர்சன்மோ நிச்ச்யமாய் ஏற்ககூடியது அல்ல. அந்த விஷ்யம்தான் (மற்ற தர்க்க தகறாறுகளை மரந்துவிட்டு மேலோட்டமாய் அரசியல் பார்வையை நிர்ணயிப்பதாய் இருக்கும்) அடிப்படை வேறுபாடு. ரவியை நான் மறுக்கும் விதமும் முற்றிலும் வேறாக இருக்கும்.
மீண்டும் அவை எப்படி இருந்தாலும், ரவி விதண்டாவாதமாய் முன்வைக்கும் தர்க்கமும் அதன் அடிப்படையும், எத்தனை முட்டாள்தனமானது என்பது சிந்திக்க தெரிந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை சொல்லாமலிருக்க வேறு காரணக்கள் இருக்கலாம். அவரை (அவரது முந்தய கருத்துக்களை அறிந்ததனால்) இதை மட்டும் முன்வைது ஒரு ஆணாதிக்க வாதி என்று முடிவு கட்ட முடியாத காரணத்தால், வெறும் 'நட்டு கழண்டவர் ' என்கிறேன். அவரை பற்றி இதைவிட நல்ல விதமாய் என்னால் சொல்ல முடியாது. அதையே உங்கள் பாணியில் 'ஏதோ பிர்ச்ச்னை' என்று டீஸன்டாய் சொல்கிறீர்கள். நீச்சயமாய் ஒப்புகொள்கிறேன். நான் வசவு வைத்ததாய் (மற்றவர்களைப் போல) திரிக்காமல் என் நியாயத்தை புரிந்துகொண்டு சொன்னதற்கு மிகவும் நன்றி. மேலும் பெரியார் பற்றி நான் அறியாத சம்பவத்தை தந்ததற்கும் நன்றி. இன்னொருமுறை உங்கள் பதிவை நிதானமாய் படிக்க வேண்டும். விரிவாக மீண்டும் எழுதுவேன். thanks!
அன்புள்ள ரோசா வசந்த்,
தங்கள் கருத்துகளுக்கு நன்றி.
அன்புடன், பி.கே. சிவகுமார்
ரோசா,
குஷ்பூ என்ன பேசினார் எனபதைப் பார்க்காமல் ரவி எழுதியது தவறுதான். ஆனால் ஒருவர் கேள்விபடுவதை வைத்து எழுத நிச்சயம் அவருக்கு உரிமையுள்ளது. நான் குஷ்பூவை அவரது கருத்துக்களுக்காக "பாராட்டுகிறேன் " என்று மட்டும் ஒரு வலைப்பதிவில் எழுதினேன். ஆனால் பின்னால் நடந்த அரசியல் கூத்துகளில் சற்றும் எழுதும் ஆர்வம் வரவில்லை. திருமாவைப் பற்றிய என் எண்ணமும் சற்றே மாறியுள்ளது.
முக்கியமாக இங்கு சொல்லவந்தது, பிகேஎஸ் -இன் கேள்விகள் சரியாக இருந்தபோதும்,
ரவி "பெரியாரை உடைப்பதற்கும்" , பிகேஎஸ் போன்ற இந்துத்துவாக்கள் "பெரியாரை உடைப்பதற்கும்" ஒரே காரணம் இருப்பதில்லை, இருக்கவேண்டும் என்றும் அவசியமில்லை. பிகேஎஸ்ஸின் சந்தர்ப்பவாதத்துக்கு இன்னொரு உதாரணம் இது எனப்து என் கருத்து.
you have tried to hard to give a false and distorted picture. I have posted in my blog an article written in 2003 and published in thinnai in oct 2003.i not a blind follower of periyar or anybody else.i am not a great 'thinker' like jayakanthan to dismiss feminism or mock at the term itself. take your own time and if you want to respond , respond to my post.but try to learn how to conduct a honest debate and how not to distort others views.
Post a Comment