Tuesday, October 18, 2005

ஓர் அறிவிப்பு

தமிழ்மணத்தின் உரிமையாளர் காசி ஆறுமுகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, சில பதிவுகள் தமிழ்மணத்தில் திரட்டப்படாது என்று அறிவித்திருக்கிறார். எதிர்மறையான விமர்சனம் மட்டுமே இருக்கிற பதிவுகள், மதத்தைப் பற்றி மட்டுமே எழுதுகிற பதிவுகள் என்று அவற்றை வரையறுத்திருக்கிறார். எதிர்மறையான விமர்சனம் மட்டுமே இருக்கிற பதிவுகளிலும், மதத்தைப் பற்றி மட்டுமே எழுதுகிற பதிவுகளிலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் இல்லை - அவை நாகரீகமாக இருக்கிற வரை. சொல்லப்போனால், நாகரீகத்தை மீறி தமிழ் வலைப்பதிவுகளில் நான் தாக்கப்பட்ட போதும், எவரையும் தமிழ்மணத்தைவிட்டு நீக்க வேண்டும் என்று நான் சொன்னதில்லை. சொல்ல மாட்டேன். தனக்குப் பிடிக்காத அல்லது உவப்பில்லாத கருத்துகளைச் சொல்பவர்களை எல்லாம் நீக்கிவிட்டால் அப்புறம் ஜால்ராக்களின் சத்தம் கர்ணகொடூரமாக இருக்கும். இதிலே, மதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிற பதிவுகளை நீக்குவதைப் புரிந்து கொள்ள முடிகிறது - அந்த முடிவுடன் உடன்படா முடியாவிட்டாலும். ஆனால், எதிர்மறையான விமர்சனம் மட்டுமே என்பது எந்த அளவுகோலின்படி யார் தீர்மானிப்பது என்று தெரியவில்லை. தமிழ்மண நிர்வாகிகளுக்கு இதில் பங்கில்லை. தான் மட்டுமே இந்த முடிவுக்குக் காரணம் என்று காசி ஆறுமுகம் எழுதியிருக்கிறார்.

குழலி போன்ற ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிக்கிறவர்கள் பதிவுகள் எழுதுவது ஒரு நல்ல விஷயம்தான். அவர்கள் கருத்துகளுடன் ஒத்துப் போகாவிட்டாலும், இப்படி வெவ்வேறு கொள்கைகள் உள்ளவர்கள் ஒன்றுகூடி விவாதிப்பது ஆரோக்கியமான விஷயம். நல்ல வேளை, மதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிற பதிவுகளை நீக்குவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே ஆதரிக்கிற பதிவுகளை நீக்குவோம் என்று இன்னும் சொல்லவில்லை. அப்படியே, படிக்காமலேயே விமர்சனம் எழுதுகிறவர்களைப் பற்றியும் ஒன்றும் சொல்லவில்லை. ஒருவர் படிக்காமலேயே விமர்சனம் எழுதினாலும், ஒரு கட்சியை மட்டுமே ஆதரித்தாலும்கூட, அவரை நீக்குவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. இதுவரை இப்படி எந்தெந்தப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்கிற பட்டியலைக் கூட அறிய முடியவில்லை.

வெளியே தமிழ்மணத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் - நான் உட்படப் பலரும் அது உலகிலுள்ள தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி என்று சொல்லி வந்தோம். தமிழ்மண நிர்வாகிகளும் அப்படியே சொல்லி வருகின்றனர். அந்த அடிப்படையிலேயே காசி ஆறுமுகம் தன்னை வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவருக்கும் எழுதியுள்ளார். அது உண்மையானால், எதிர்மறை விமர்சனம் எழுதுகிறார் என்பதற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ - ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க அளவிலும் இல்லாதவரைக்கும், - எல்லா வகையான பதிவுகளையும் அனுமதிக்கவே வேண்டும். யாருடைய குரலையும் நெரிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. அப்படி நெரிக்கிற உரிமை இருக்கிறது, அது என் முடிவு என்ற பொருள்பட காசி ஆறுமுகம் (இது அவர் முடிவு மட்டுமே, மற்றவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்று அவர் எனக்குப் பதில் சொல்லியிருந்தார்.) எழுதியிருப்பதால், இன்றையிலிருந்து என் பதிவை தமிழ்மணத்திலிருந்து விலக்கிக் கொள்கிறேன். என்னுடைய கேள்விகளுக்கு - யார் யார் பதிவுகள் என்ன காரணங்களுக்காக திரட்டப்படுவதில்லை என்ற கேள்விகள் - அவர் சரியான பதிலை இதுவரை சொல்லவில்லை. எல்லாத் தமிழர்களுக்குமான இடம் என்ற நம்பிக்கையே என்னைத் தமிழ்மணத்தில் சேரச் சொன்னது. சில தமிழர்களுக்குச் சில காரணங்களுக்காக இடம் இல்லை என்றால் அங்கே இருப்பதிலும் தொடர்வதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

தமிழ்மணத்தின் பளுவைக் குறைக்க பதிவுகளை நீக்குவதாகச் சொல்கிற காரணம் எனக்கு ஏற்புடையதில்லை. மூன்று மாதத்துக்கு மேல் எழுதாதவர்களின் பதிவுகள் திரட்டப்படாது என்று முன்னர் ஒரு முடிவு இருந்தது. இந்த மாதிரி வழிகள் செய்யலாமே தவிர, ஒருவரின் கருத்து ஏற்புடையதில்லை என்று நீக்குவது சரியில்லை. தமிழ்மணத்தில் பளுவைக் குறைக்க யாரையும் நீக்காமல் வேறு வழிகள் நிச்சயம் இருக்குமென்றே நான் நம்புகிறேன்.

தமிழ்மணத்துக்கு முன்னிருந்தே என் வலைப்பதிவு இருந்தது. இனியும் தொடர்ந்து இருக்கும். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து என் பதிவில் எழுத முயல்கிறேன். இவ்வளவு நாள் என் பதிவைத் தமிழ்மணத்தில் திரட்டியதற்கு காசி ஆறுமுகத்துக்கு நன்றி. இந்த அறிவிப்பின் மூலம் என் பதிவைத் தமிழ்மணத்தில் இனித் திரட்ட வேண்டாம் என்று காசி ஆறுமுகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

3 comments:

குழலி / Kuzhali said...

//குழலி போன்ற ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிக்கிறவர்கள் பதிவுகள் எழுதுவது ஒரு நல்ல விஷயம்தான்.
//
உலகத்தில் எல்லோரும் எப்போதும் யாரையாவது ஆதரித்தும் எதிர்த்தும் கொண்டுதான் இருக்கின்றனர், வலைப்பதிவர்களிலேயே எத்தனையோ உதாரணங்கள் என்னால் தரமுடியும், இருந்தாலும் வலைப்பதிவுகளில் சுலுக்கெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இயக்கத்திற்கும் ஆதரவான கருத்துகள் கொண்ட ஆட்கள் உள்ளனர் என்பதை தெளிவு படுத்தவே என்னை சுட்டினீர் என்ற எண்ணத்திலேயே நீங்கள் கூறியதாக எடுத்துக்கொள்கின்றேன்.

//ஒரு கட்சியை மட்டுமே ஆதரித்தாலும்கூட, அவரை நீக்குவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
//
இதிலிருந்து என்ன சொல்ல வருகின்றீர்,
என்னை குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்ற மாதிரி உள்ளதே... மேலே என்னை கூறிப்பிடாமல் கூறியிருந்தால் பொதுவில் கூறியதாக எடுத்துக்கொண்டிருப்பேன், மேலே என்னை குறிப்பிட்டுவிட்டு இப்படி சொல்வதன் நோக்கம் என்ன? நேரடியாகவே கேட்கலாம் கேட்க வந்ததை, ஆதரவு கருத்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக விலக்கப்பட வேண்டுமென நினைத்தால் ஒரு பதிவுமே தேறாது உங்கள் பதிவுகள் உட்பட.

நான் இதுவரை 99 பதிவுகள் போட்டுள்ளேன் மிஞ்சி போனால் ஒரு 5 அல்லது 6 பதிவுகள் பாமக பற்றிய பதிவுகளாக இருக்கும் அதுவும் கூட பாமக பற்றிய மற்றொரு பக்க உண்மைகளை (இப்படியெல்லாம் சொன்னாலும் கூட எனக்கு விழுந்த ஆதரவாளன் முத்திரை போகப்போவதில்லை) கூறினேன், ஆனால் பாமக வை எதிர்த்து எத்தனை நூறு பதிவுகள் வந்திருக்கும்?

PKS said...

குழலி,

எல்லாவற்றையும் சந்தேகப்பட ஆரம்பித்தால், அப்புறம் எதுவும் தேறாது :-) உங்களை நீங்கள் முதலிலேயே சொன்னதுபோல் ஓர் உதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறேன்.

1. நீங்கள் உட்பட யாரும் எந்தக் கட்சியை ஆதரிப்பவராக இருப்பதிலும் எனக்குப் பிரச்னையில்லை. அதில் நான் தவறும் காணவில்லை.

2. இப்படிக் கட்சியை ஆதரிக்கிறவர்கள் வலைப்பதிவதை நான் இன்னமும் வரவேற்கிறேன். நான் தி.மு.க. ஆதரவாளன் இல்லை என்றாலும், இணையத்தில் முரசொலி இருப்பதால் அதை அவ்வப்போது படிக்கிற வழக்கம் உண்டு. கட்சி சார்புள்ளவர்கள் - சொல்லப்போனால், கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் - வலைப்பதிவை ஆரம்பிப்பதையும் அதில் எழுதுவதையும் நான் வரவேற்கிறேன். ஒரு கட்சியைப் பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ள எனக்கு அது உதவும்.

3. நான் சொல்ல வந்தது - இப்படிப் பதிவுகளைத் தூக்க ஆரம்பித்தால், நாளைக்கு அதே அபாயம் குறிப்பிட்ட கட்சி, குறிப்பிட்ட இயக்கம் ஆகியவற்றை மட்டுமே ஆதரித்து எழுதப் போகிற பதிவுகளுக்கு நேரிடுகிற வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய பதிவுகள் நீக்கப்படுவதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை.

அன்புடன், பி.கே. சிவகுமார்

குழலி / Kuzhali said...

புரிந்துகொண்டேன் பி.கே.எஸ். நன்றி