Wednesday, October 19, 2005

சுந்தர ராமசாமியைப் பற்றி ஜெயமோகன்

* தமிழிலக்கியத்தில் சுந்தர ராமசாமியின் இடம் பன்முகம் கொண்டது. இலக்கியப் படைப்பாளி, இலக்கிய ஆளுமை, இலக்கிய நிறுவனம் ஒன்றின் நிறுவன அதிபர் என்ற தளங்களில் அவரது இடம் தமிழில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்று.

* சுந்தர ராமசாமி உருவாக்கும் இலக்கியத் தரப்படுத்தல் தொடர்ந்து நமது சூழலை நிர்ணயிக்கும் சக்திகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்தத் தரப்படுத்தலின் எல்லைக்கு வெளியே நிற்பவர்கள், இதன் மூலம் பாதிப்பு அடைந்தவர்கள் அவர்மீது கடுமையான துவேஷத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இதே துவேஷம் மறைமலையடிகள், க.நா.சு. போன்ற இலக்கிய மையங்கள் மீதும் பொழியப்பட்டதுதான் என்பது நாமறிந்த வரலாறு. இங்ஙனம் ஒரு மையமாக ஆனவர்களை மதிப்பிடுவது சற்று சிரமம். அவர்கலின் ஒட்டுமொத்தப் பங்களிப்பை வைத்தே அவர்களை மதிப்பிட வேண்டும். அதை அவர்கள் மீதான சாதக பாதகக் கருத்துகள் மறைக்காமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். சுந்தர ராமசாமி விஷயத்தில் இது நிகழவில்லை.

* ஒரு படைப்பிலக்கியவாதியாக அவர் உரிய முறையில் இன்றுவரை மதிப்பிடப்படவில்லை. அவர் மீது வைக்கப்பட்டுள்ள கடுமையான விமர்சனங்கள் பல அடிப்படையற்ற தாக்குதல்கள்.

* தமிழ்ச் சூழலை அறிமுகம் செய்து கொள்ளும் வாசகன் சுந்தர ராமசாமியை அவர் மீது சொரியப்படும் வசைகள் மற்றும் அவர் மீதான பாராட்டுகளின் வழியாக அறிய நேர்கிறது. அவர் மீதான மதிப்பீடுகள் சுயமான சகஜத்தன்மை இன்றிப் போவதற்கு இதுவே காரணம். ஒரு வாசகனாக சுந்தர ராமசாமியை நான் அறிமுகம் செய்து கொண்டபோது, இடதுசாரிகளாலும் திராவிட இயக்கத்தாராலும் வேட்டையாடப்பட்ட, தனித்து நின்று அப்புழுதிப் புயலை எதிர்கொள்கிற ஒருவராகவே அவர் தென்பட்டார்.

* சுந்தர ராமசாமி மீதான குற்றச்சாட்டுகளில் முக்கியமானது அவரது சாதியப் பார்வை பற்றியதுதான். அவருடனான பதினைந்து வருடப் பழக்கத்தின் அடிப்படையில் இது ஆதாரமில்லாத அவதூறு என்றே நான் கருதுகிறேன். மனிதர்களுக்கிடையே பிறப்பு மற்றும் சமூகச்சூழல் சார்ந்த பேதம் பார்க்கும் கண்கள் அவருக்கு இல்லை. ஆரம்பகால கம்யூனிச இயக்கத் தொடர்பு மூலம் அவர் பெற்ற பெரிய வலிமைகளில் ஒன்று இது.

* சுந்தர ராமசாமி மீதான சாதியக் குற்றச்சாட்டுகள், ஒருவனை வசைபாட அவன் சாதியை மட்டுமே காரணமாகக் கொள்ளும் பாமர மனத்தின் யத்தனம் மட்டுமே.

* அவரைக் குற்றம் சாட்டுபவர்கள் மிகப் பெரும்பாலானவர்கள் சாதி மனநிலையின் சேற்றில் மூழ்கிக் கிடப்பவர்களே.

* சுந்தர ராமசாமியின் மீதான இன்னொரு முக்கியக் குற்றச்சாட்டு அவர் ஒரு குறுங்குழுவை ஸ்தாபித்து நடத்துபவர் என்பது. உண்மையில் இக்குற்றச்சாட்டைக் கூறும் முற்போக்கு இயக்கத்தவர்கள்தான் தமிழின் குறுங்குழுவாதத்திற்கு தலைசிறந்த உதாரணங்கள். தங்கள் குழுவைச் சேர்ந்த எவருடைய படைப்பையும் தூக்கிப் பிடிப்பவர்கள், எல்லாத் தருணத்திலும் கருத்துகளைக் கூட்டாக எடுத்து, கூட்டாக முன்வைப்பவர்கள் இவர்களே.

* தன்னளவில் தன் அளவுகோல்களுக்கு விசுவாசமானவராகவே அவர் செயல்பட்டிருக்கிறார். அவரது விமர்சன நேர்மை மீது ஐயம் கொள்ள முடியாதென்பதே என் கருத்தாகும்.

* சுந்தர ராமசாமி இடதுசாரிக் கருத்துகளின் எதிரியான ஒரு வலதுசாரி சிந்தனையாளர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதையும் என்னால் ஏற்க முடியாது. அடிப்படையில் இலக்கியம், வாழ்க்கை இரண்டின் மீதும் பொருள்முதல்வாத அடிப்படை கொண்ட யதார்த்த நோக்கைச் செலுத்த எப்போதுமே சிரத்தை எடுத்துக் கொள்பவர் அவர்.

* எல்லா இடதுசாரிகளையும் போலவே சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி அவரையும் உணர்வுரீதியாகப் பாதித்தது. இடதுசாரிகளால் கடுமையாக வசை பாடப்பட்டாலும் அவர் உள்ளூர இடதுசாரிகளின் சக பயணிதான்.

* அவருக்கு மத நம்பிக்கை இல்லை. இறை நம்பிக்கையும் இல்லை. வாழ்வின் மிக இக்கட்டான தருணங்களில், சாமானியர்கள் செயலற்றுக் கடவுளைச் சரணடையும் தருணங்களில்கூட அவர் இறைநம்பிக்கை பக்கம் சாயவில்லை.

* பொதுவான பார்வையில் அவரை மார்க்ஸிய லட்சியவாதத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட ஒரு முற்போக்குவாதி எனலாம்.

* தமிழில் தி.க. சிவசங்கரனைப் போல அட்டைகளை (புத்தக அட்டை, கட்சி உறுப்பினர் அட்டை) மட்டும் வைத்து விமர்சிக்கும், கட்சியில் ஒட்டியிருக்கும் அட்டைகளின் குரலே இலக்கியக் குரலாக ஓங்கி ஒலித்தது. அதன் விளைவே சுந்தர ராமசாமி முதலிய படைப்பாளிகள் பிற்போக்கு என்று முத்திரை குத்தப்பட்டமை.

* சுந்தர ராமசாமியின் பிம்பம் சார்ந்த இன்னொரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே அவர் தீவிர இலக்கியத்திற்காக வாதாடியவர்; சமீபகாலமாகச் சமரசம் செய்து கொண்டார் என்பது. இதுவும் அவதூறு, கிசுகிசு மூலம் உருவாக்கப்படும் பிம்பமே.

* தொடர்ந்து செயல்படக் கூடிய, கவனத்திற்கு உரியவராக இருக்கக் கூடிய எவரையும்போல அவரும் அவதூறால் மூடப்பட்டே நமக்குக் காட்சி தருகிறார். அவதூறுகள் நமக்குக் காட்டும் சுந்தர ராமசாமி சாதிய, பிற்போக்கு நோக்கம் கொண்ட, குறுங்குழு இலக்கியவாதி. இந்த நோக்குக்கு ஆதாரமான எதையுமே அவரது படைப்புகள் நமக்குக் காட்டுவதில்லை. அவற்றினூடாக நாம் காணும் சுந்தர ராமசாமி,

அ) வாழ்க்கை நோக்கு, இலக்கிய ஆய்வுமுறை இரண்டிலும் பொருண்மையான, நிதர்சனம் சார்ந்த அணுகுமுறை உடையவர்.

ஆ) மரபின்மீது எந்த வகையிலும் பிடிப்பு இல்லாதவர்.

இ) மார்க்ஸிய அரசியல் மீது ஈடுபாடற்றவர் எனினும் மார்க்ஸிய இலட்சியவாதத்தை ஆழமாக ஏற்றுக் கொண்டவர்.

* கலாச்சாரச் செயல்பாடுகளுக்கும் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கும் எதிரான போக்குகளாக அவர் அடையாளம் கண்டது இரண்டு.

ஒன்று, கேளிக்கையை மையப்படுத்தும் போக்கு.

இரண்டு, அரசியல் சார்ந்து எளிமைப்படுத்தும் போக்கு. அரசியல் சார்ந்து எளிமைப்படுத்தலில் மரபு நோக்கில் எளிமைப்படுத்தல் ஒருவழி, முற்போக்கு சார்ந்த எளிமைப்படுத்தல் இன்னொரு வழி.

இரண்டையுமே அவர் விமர்சனம் செய்திருக்கிறார்.

- "நவீனத்துவத்தின் முகங்கள்" என்ற புத்தகத்தில் "நவீனத்துவ அறவியலைத் தேடி" என்ற தலைப்பில் சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றி ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்ட மேற்கோள்களை மேலே காணலாம்.

சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இக்குறிப்புகள் இங்கே இடம் பெறுகின்றன.

பி.கு 1: நன்றி: நவீனத்துவத்தின் முகங்கள் - ஜெயமோகன் - தமிழினி - சென்னை - 14.

பி.கு. 2: இக்குறிப்புகளைப் படித்துவிட்டு மட்டுமே சு.ரா.வையோ, ஜெயமோகனையோ, என்னையோ பற்றிக் கருத்தெழுத விரும்புகிற அன்பர்கள், ஒருமுறை முழுமையாக அக்கட்டுரையைப் படித்துவிட்டு வந்து இங்கே திட்டினால் தன்யனாவேன்.

5 comments:

Boston Bala said...

சு.ரா. குறித்த ஜெயமோகனின் எதிர்மறை விமர்சனங்களை விட்டு விட்டீர்களா?!

PKS said...

பாபா,

நீ (இங்கே நீ போடுவதும் ஒருமையில் எழுதுவதும் மரியாதைக் குறைவில் அல்ல - நமக்கிடையே இருக்கிற உரிமையில். அதனால் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.) இப்படி அபத்தமாக ஏதும் உளறும்போது எரிச்சலாகத்தான் வருகிறது. இந்த மாதிரியான கேள்வியை எதிர்பார்த்தேன். ஆனால் உன்னிடமிருந்து இல்லை.

1. ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும்போது அவரின் நல்ல குணங்களைச் சொல்வதுதான் மரபு. இதுகூட தெரியாத மக்கா நீ?

2. ஜெயமோகன் சு.ரா.வைப் பற்றி வைத்திருக்கிற பிற கருத்துகள் சு.ரா.வின் படைப்புகள், இலக்கியம், அவற்றை அவர் வெளிப்படுத்திய விதம் ஆகியவை சார்ந்தன. இது ஆளுக்கு ஆள் வேறுபடும். எது இலக்கியம், எது இலக்கியமில்லை என்கிற ரசனையும் அறிவும் சார்ந்த கேள்விக்குள் சிக்கிக் கொண்டு, என் ரசனையையும் அறிவையும் இவ்வளவு சீக்கிரமே வளரவிடாமல் செய்து கொள்வதில் எனக்குச் சம்மதமில்லை. நான் படிக்க வேண்டியதே நிறைய இருக்கிறது. ஜெயமோகன் சொல்கிறார் என்றால் அவர் அந்த அளவுக்குப் படித்திருக்கிறார். சொல்வதற்கான காரண காரியங்களை அடுக்குகிறார். நாளைக்கு இன்னொரு விமர்சகர் வந்து, ஜெயமோகன் சொன்னதெல்லாம் தவறு என்று சு.ரா.வை மிகவும் பாராட்டவும் கூடும். எனவே, அதற்குள் புகுந்து கொண்டு அவற்றை என் கருத்துகளாக வரித்துக் கொள்வதில் எனக்குத் தயக்கம் உண்டு. ஆனால், சு.ரா.வின் எழுத்திலும் இலக்கியத்திலும் விமர்சனங்கள் வைக்கிற ஜெயமோகன் கூட சு.ரா. என்ற தனிமனிதரைப் பற்றி சொல்கிற பாராட்டுகள் என்னளவில் முக்கியமானவை. எது இலக்கியம் என்பது காலத்துக்கும் மாறுபடும். மனிதன் மட்டுமே காலங்களை மீறித் தொடர்கிறான். அந்த அளவில், என் நோக்கம் சு.ரா. என்ற மனிதரின் மனிதத்தை வெளிப்படுத்துவது மட்டுமே அல்லாமல், அவர் எழுதிய இலக்கியத்தை எடை போடுவது அல்ல - அதுவும் அவருக்கு அஞ்சலி செலுத்துகிற போது. எனக்கும் சு.ரா.வின் இலக்கியம், எழுத்து பற்றிய கருத்துகள் உள்ளன. அதை வெளிப்படுத்தவும் எழுதவும் ஏற்ற இடமும் சூழலும் இது அல்ல. இது பிரிவின் துயருக்கு வருந்துகிற, அஞ்சலி செலுத்துகிற நேரம்.

3. எதிர்மறையான விமர்சனம் என்ற பதத்தை நீயும் பயன்படுத்துகிறாய். அப்படியென்றால் என்ன? தயவு செய்து விளக்கவோ வரையறுக்கவோ முடியுமா? பொருளே தெரியாமல் வார்த்தைகளை அள்ளிவிடுவது இப்போது பேஷனாகி விட்டது. பாஸிஸம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாமலே, சந்தர்ப்பவாதம் என்று நினைக்கிற விஷயத்துக்குக் கூட அதைப் பயன்படுத்துகிற முட்டாள்தனம் மாதிரி. (ரோசா உங்களைச் சொல்லவில்லை!)

4. சி·பி வெங்கடேஷ் போன்ற நண்பர்கள் "இலக்கியத்தைவிட மனிதம் முக்கியம்" என்று போதித்ததாக உரையாடல்களில் சொல்கிற நீ, இதையெல்லாம் அறியாமல், சு.ரா.வின் இலக்கியம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள், சு.ரா.வின் மனிதத்தைவிட முக்கியமானவை என்று நினைத்துக் கொண்டு கமெண்ட் எழுதுவதைப் பார்த்து என்ன சொல்வது? ராத்திரி முழுக்க ராமாயணம் படித்தாலும், காலையில் சீதை ராமனுக்கு சித்தி என்று சொன்ன கதை ஞாபகம் வருகிறது.

5. ஒருவருக்கு அஞ்சலி செலுத்தி எழுதுகிற குறிப்பிலும்கூட, எதிர்மறை விமர்சனம் இருக்க வேண்டும் என்பதுதான் நீ அடிக்கிற "நியூட்ரல் ஜல்லி"யின் எழுதப்படாத விதியோ? அப்படியென்றால், அந்த நியூட்ராலிடி தெரியாத மண்டு நான் எனக் கொள்க.

அன்புடன், பி.கே. சிவகுமார்

Boston Bala said...

வம்பாக கேள்வி கேட்டால் விரிவாக சொலியிருக்கிறாய். நன்றி பிகேயெஸ்.


---"நியூட்ரல் ஜல்லி---

இதுதான் புரியவில்லை. காலங்கார்த்தாலே மகிழுந்து கிளம்ப மறுத்தால், நியுட்ரல் கியரைப் போட்டு ஸ்டார்ட் செய்யலாம். பாட்டரி வீக்கமாக இருந்தாலும், குளிர் தொல்லையானாலும், கார் கிளம்பி விடும். றெக்கை கட்டி பறக்கும். நான் துவக்கநிலை பதிவாளன். மக்கர் செய்யும் ஸ்டார்டிங் டிரபிள் எழுத்து. அதனால் நியுட்ரல் விழுந்து, தள்ளி விடுகிறேனோ... என்னவோ!

உன்னுடைய பதிலுக்கு நன்றி.

PKS said...

அடப்பாவி பாபா! வம்பு செய்வதற்கென்று இடம், காலம் இல்லையா? அஞ்சலிக் குறிப்பிலும் கூடவா வம்பு? இது உன்னைப் பற்றி மற்றவர்கள் மனதில் மோசமாகக் காட்டும் என்று தெரியாதா? பப்ளிக் இமேஜ் பற்றி அதீத கவனம் காட்டி அதற்காக சொல்ல வந்ததையே சுற்றி வளைத்தும், மறைபொருளாகவும் எழுதுகிற நீ, இந்த மாதிரி விஷயங்களில் உன் இமேஜ் என்ன ஆகும் என்பதுபற்றி அறியாமல் கோட்டை விட்டு விடுகிறாயே? நீ எதையோ கிளறப் பார்க்கிறாய் என்று புரிந்து கொண்ட எரிச்சலில்தான் அப்படி எழுதினேன்.

மற்றபடிக்கு உன் பதிலுக்கு உன்னை நிஜமாகவே பாராட்டுகிறேன். Amazing coolness. Hats off to you man. ஏதோ உன் குருவிடமிருந்து ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறாய் - இப்படி அமைதியாக விஷயங்களை எதிர்கொள்வதை. அதற்கு நன்றி.

அன்புடன், பி.கே. சிவகுமார்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

1, Critics like Gnani have acknowledged su.Ra's contributions and have defended him. I think that the same applies to S.V.Rajadurai.Are they not
leftists. Why Jayamohan cannot
even acknowledge the fact that
not all leftists rejected Su.Ra.

2,No left critic stooped to the
level of jayamohan and vedasahaya
kumar in heaping personal
abuses against Su.Ra and questioning his integrity.

3,Did Jaymaohan object to the
writing of Suryaa who used an
incident written by Brmil as
an excuse to cast aspersions
on him and went to the extent
of dropping names like Laing
to justify some baseless
observations.If I remember
right Jayamohan was associated
with that ezine.

4,In his writing in Thinnai
it was Jayamohan who made
allegations against Su.Ra,
his family and Kalachuvadu
questioning their integrity and
business practice

5, Even when expressing regret
publishing Nachhar Madam story
by vedasahaya kumar an explanation was given as if it was the reader
who was responsible for the
interpretation and not the
author. Left critics were more
honest in their writings against
Su.Ra

6, Nacharmadam was written by
Vedasahaya kumar and was published in Sol Pudithu. No writer from the
left went to such an extent and used a story as a form to settle
personal scores against Su.Ra.
Will Jayamohan atleast acknowledge this fact.
7, Who misinterpreted Su.Ra's
speech on Asokamitan and wrote
an article in Uyirmaî. Anyone
who read his speech would understand that Su.Ra made a
frank and honest assessment
based on his reading. But it
was Jayamohan who twisted the
facts and gave a distorted
interpretation of the speech.
As far as I know Asokamitran
did not object to Su.Ra's
views on his stories. It was
Jayamohan who wanted to settle
scores with Su.Ra and used this
as another opportunity to abuse
and discredit Su.Ra

If Jayamohan has any conscience
he should apologise for all this
before accusing the left or
progressives. They never stooped
to his level nor challenged his
personal integrity. Even when they questioned his writing on Jeeva's
personal life they did not peep
in to his personal life or family.
That credit goes to Jayamohan and
Co only.

Has Jayamohan ever hinted at such an apology or acknowledged atleast after Su.Ra's death that some of his comments and writings on Su.Ra were in bad taste and they had nothing to do with literature.
When Jayamohan condemns the left for their views and positions on
Su.Ra he should atleast tell the
fact he too had indulged in
anti Su.Ra campaign in the last
five years or so.