Wednesday, January 18, 2006

எடுத்தேன் படித்தேன் - மார்வின் ஹாரிஸ்

வியாழன்று வெளியாகும் தினமணி நூலரங்கில் எனிஇந்தியன் பதிப்பகம் வெளியிட்டுள்ள பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் - பாகம் 1 (மூலம்: மார்வின் ஹாரிஸ்) தமிழில் துகாராம் கோபால்ராவ் புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் எடுத்தேன் படித்தேன் என்ற தலைப்பில் இங்கே வெளியாகியிருக்கிறது. எஸ். இராமச்சந்திரன் இந்த விமர்சனத்தை எழுதியுள்ளார். தினமணிக்கும் எஸ். இராமச்சந்திரனுக்கும் நன்றி சொல்லி அந்த விமர்சனத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எனிஇந்தியன் பதிப்பகப் புத்தகங்கள் பற்றிய விமர்சனங்கள் என் பார்வைக்குத் தட்டுப்படாமல் நண்பர்கள் பார்வைக்கு வந்தால், என்னிடம் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். என் வலைப்பதிவில் அவற்றைச் சேமித்து வைக்க அது உதவும்.

எடுத்தேன் படித்தேன் - எஸ். இராமச்சந்திரன்

மார்வின் ஹாரிஸ் என்ற அமெரிக்காவைச் சார்ந்த மானுடவியல் அறிஞர் (1927 - 2001) எழுதிய "Cows Pigs Wars and Witches’என்ற ஆங்கில நூலின் ஒரு பகுதியை "பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் - 1' என்ற தலைப்பில் துகாராம் கோபால் ராவ் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மார்வின் ஹாரிஸின் "பண்பாட்டுப் பொருள்முதல்வாதப் பார்வையில் அமைந்த இக்கட்டுரைகள் முன்பே திண்ணை இணைய இதழில் (திண்ணை.காம்) வெளிவந்தவை ஆகும்.

இந்தியர்கள் - குறிப்பாக இந்துக்கள் - பசுவைப் போற்றிப் பராமரிப்பதன் பொருளாதார வாழ்வியல் அடித்தளத்தையும், அரேபியப் பாலைவனவாசிகள் - குறிப்பாக யூதர்களும் இஸ்லாமியர்களும் - பன்றியைப் புறக்கணிப்பதன் வாழ்வியல் அடித்தளத்தையும், ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இவருடைய "பசுக்கள் பன்றிகள்' கட்டுரை அமைந்துள்ளது.

எரிசக்திப் பயன்பாடு என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை தனிநபருக்கு 12 டன்கள் அளவாகும். இந்தியாவிலோ 0.2 டன் அளவுதான் என்ற புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டு இந்தியாவின் சாண எரிபொருள் - எரிவாயு சுழற்சி முறை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்று வாதாடுகிறார்.

பன்றியைப் பற்றியும் இத்தகைய ஒரு உடன்பாடான மனநிலையுடன் கூடிய அணுகுமுறையில் பிரச்சினையை அணுகி சில நியாயங்களை முன்வைக்கிறார் மார்வின் ஹாரிஸ். பன்றி அடிப்படையில் வீட்டு விலங்காக வளர்க்கப்பட உரியதன்று. பன்றிகள் ஈரப்பதம் மிக்க நிலப்பகுதியில்தான் வாழ்வதற்கு ஏற்றவை. கொழுப்பு மிக்க இறைச்சிக்காக அவற்றை வளர்ப்பதில் பிரச்சினைகள் எழுகின்றன. குறைந்த சுற்றுப்புற உஷ்ணநிலை நிலவும்போது, தான் வாழும் இடத்தில் மலஜலம் கழிக்காமல் நெடுந்தொலைவு சென்று மலஜலம் கழித்துவிட்டு வரும். சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும்போது தான் வாழும் இடத்திலேயே மலஜலம் கழித்து அதிலேயே புரண்டு உடலைக் குளிர்ச்சிப்படுத்திக் கொள்ளும்.

சுற்றுப்புறச் சூழலின் தூய்மைப் பாதுகாப்பு குறித்த இச்சிக்கல் பாலைவன நாடுகளில் இயல்பான ஒன்று என்பதாலும் இறைச்சிக்காகப் பெரும் செலவு செய்து பன்றிகளை வளர்ப்பதை நிறுத்துகின்ற ஒரு முயற்சியாக மதரீதியான தடை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மார்வின் ஹாரிஸ் முடிவு செய்கிறார்.

இந்த நூலின் தமிழாக்கத்திற்கு முன்னுரை எழுதியுள்ள சமூகவியல் ஆய்வாளர் "பிரக்ஞை' ரவிசங்கர் குறிப்பிடுவது போல ""இத்தகைய நூல்கள் பெருவெள்ளமாய் தமிழில் பெருக வேண்டும்'' என்ற நியாயமான ஆசை நம்முள் எழுகிறது. நமது மரபு வழிப்பட்ட விஞ்ஞான உண்மைகளை ஆராய்ந்து புரிந்து கொள்வதற்கு இத்தகைய நூல்களின் தமிழாக்கங்கள் இன்றைய நிலையில் அவசியத் தேவை. அந்த வகையில் மொழிபெயர்ப்பாளர் துகாராம் தேர்ந்தெடுத்த நூலும் அதை அவர் மொழிபெயர்த்துள்ள விதமும் தயக்கமின்றிப் பாராட்டத்தக்கவை.

நன்றி: தினமணி, எஸ். இராமச்சந்திரன்

1 comment:

Arun Vaidyanathan said...

Good to read the review.
Im very glad for thukka and AnyIndian...Way to GOOO!

Love,Arun