Thursday, March 09, 2006

நகரம்

1970-இல் ஞானரதம் இதழொன்றில் வெளியான கி.அ. சச்சிதானந்தம் அவர்களின் கவிதை இது. மிகவும் எதிர்மறையாகத் தொடங்கி, தொடர்ந்து, எதிர்மறையாகவே முடிந்துவிடப் போகிறதோ என்றெண்ணும் நேரத்தில் சற்றென்று ஒரு வெளிச்சக் கீற்றைக் காட்டும் நேர்மறைப் பொருளில் அமைந்திருக்கிற இந்தக் கவிதை படித்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. கவிதையின் தலைப்பு நகரம். யோசித்துப் பார்க்கும்போது நகரம் ஒரு படிமமாக அழகாகப் பிற இடங்களுக்கும் பொருந்துவதை உணர முடிகிறது.

நாற்றமடிக்கிறது
நான் வாழும்
நகரம்

தெருத்தொடைகளில்
மாதவிடாய் ஒழுகல்கள்
சாரங்கள் அடைகாக்கின்றன.
பலமாடிக் கட்டிடங்கள்
ஆண்குறியாய்
விரைத்து நிற்கும்.
இவையே புதிய உலகின்
சிவலிங்கங்கள்
பூசிக்கிறோம்
ஆன்மீக
வைப்பாட்டி மக்களான நாம்.

அரசியல்வாதியும் வாணிகனும்
நகரமுலைகளை
நன்றாய் உறிஞ்சுகிறான்
புகைபோக்கிச் சுருட்டுகளை
புகைத்துக்கொண்டு
சேரிமேகவட்ட நோயை
சொரிந்து கொண்டிருக்கிறான்.

நாட்டுடைமையாக்கப்பட்ட பேருந்து
நடத்துனர்களும்
வாடகைக்கார் ஓட்டிகளும்
நாள்தோறும்
பட்டண வாழ்வால் அலியான
நகர மக்களைக் கற்பழிக்கின்றனர்.

நகரம் தன்
நிர்வாண நாட்டியத்தை ஆடுவாள்
பொதுப் பிரச்சனை
சாக்கடை மக்கள் கையில் அகப்பட்டபோது.

நாற்றத்தில் என்னை
நான் இழந்து
வீடு திரும்புகையில்
அம்மா கதவைத் திறந்து
அடையாளம் தருவாள்
எனக்கு.

நன்றி: கி.அ. சச்சிதானந்தம், ஞானரதம்.

1 comment:

Boston Bala said...

Thanks for sharing PKS. It is apt even after three decades & even I could decpher it.