Wednesday, March 29, 2006

ஒரு டைரிக் குறிப்பு

சில வாரங்களாக மீண்டும் வாசிப்பதில் நேரம் செலவிட முடிந்தது. வார விடுமுறையில் குழந்தைகளை விளையாட்டுக்கோ பயிற்சிக்கோ அழைத்துச் சென்று விட்டுவிட்டு, அவர்கள் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற நேரங்களில்கூட தொலைபேசியிலும் மன-அலைச்சல்களிலும் நேரத்தைச் செலவிடாமல் வாசிக்க நேர்ந்தது சந்தோஷம் தருகிறது. நெடுநாட்களாகப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த இந்திரா பார்த்தசாரதியின் காலவெள்ளம் நாவலை இப்படி ஒரு வாரவிடுமுறையில் ஒரு பஸ் பயணத்தின்போதும், இரவில் தூங்குவதற்கு முன்னும் படித்து முடித்தேன். என் நண்பர் துக்காராம் இந்த நாவலைப் பற்றி ஒருமுறை சொன்னதும் வாங்கி வைத்த நாவல் இது. இப்போதுதான் படிக்க முடிந்தது. சுதந்திரப் போராட்டக் களனை அடிப்படையாகக் கொண்ட நாவல். ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த ஒரு பிராமணக் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகளைப் பற்றிய கதை. பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை ஞாபகம் வந்தது. புலிநகக் கொன்றை போன்ற நாவல்களுக்கு ஒருவிதத்தில் இது முன்னோடி.

இ.பா.வின் முதல் நாவல் என்பது படிக்கும்போது தெரிகிறது. நாவல் சுவாரஸ்யமாகச் சென்றது. நாவலில் காந்தியத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையே பாத்திரங்கள் நிகழ்த்துகிற உரையாடல்கள் காலம்காலமாக இத்தகைய உரையாடல்கள் நிகழ்ந்துவருவதைச் சொன்னது. இ.பா. கல்லூரி மாணவராக இருந்தபோது எழுத ஆரம்பித்து படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த பின்னர் எழுதி முடித்த நாவல் என்று படித்த ஞாபகம். நாவலின் சில பகுதிகளை மாற்றி எழுதலாமா என்று எழுதி முடிப்பதற்கு முன் அவருடைய ஆசிரியரான தி. ஜானகிராமனிடம் கேட்டபோது, எழுதியதை மாற்ற வேண்டாம் என்று அவர் சொன்னார் என்பதை இ.பா. பதிவு செய்கிறார். ஜெயகாந்தனின் முதல் நாவலான "வாழ்க்கை அழைக்கிறது" பற்றியும் அதன் சில பகுதிகளை மாற்றி எழுதலாமா என்ற கேள்வி எழுந்து, பின் "வேண்டாம். அப்படியே இருக்கட்டும்" என்று விட்டுவிட்டதாக ஜெயகாந்தன் எழுதியதைப் படித்த நினைவு வந்தது.

ஜெயமோகன் எழுதிய "சுந்தர ராமசாமி: நினைவின் நதி"யில் நூலைப் படித்ததிலிருந்து மஹாத்மாவைப் பற்றிய எண்ணங்களும் பேச்சுகளும் என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த நூலில் காந்தியைப் பற்றிய சு.ரா.வின் எண்ணங்களாக ஒரு பதினைந்து சுவாரஸ்யமான மற்றும் கருத்தாழம்மிக்க பக்கங்கள் உள்ளன. கிரிக்கெட் வர்ணனையில் புகழ்பெற்ற திரு. வி. ராமமூர்த்தி, ஹிந்து செய்தித்தாளில் தொடராக எழுதிக் கவனம் பெற்றுப் பின் ஹிந்து பதிப்பக வெளியீடாக, Mahatma Gandhi: The last two hundred days என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. இதை ஹிந்து தளத்திலிருந்து கிரிடிட் கார்ட் பயன்படுத்தி ஆன்லைனில் வாங்க முடிகிறது. அந்தப் புத்தகத்தையும் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் முடிக்கவில்லை. மஹாத்மாவின் கடைசி 200 நாட்களைப் பற்றி - ஒவ்வொரு நாளைப் பற்றியும் சில பக்கங்களில் - காந்தியின் எழுத்துகள், ஹிந்துவில் அப்போது வெளிவந்த செய்திகள் ஆகியவற்றை வைத்து இந்தத் தொடரை திரு. ராமமூர்த்தி எழுதியிருக்கிறார். எளிய ஆங்கிலத்தில் சுவாரஸ்யமாக இருக்கிறது. காந்தியின் ஆன்மாவைக் காட்டுகிற முயற்சிகளுள் ஒன்றாக இந்தப் புத்தகம் அடங்கும் என்று சொல்லலாம். இப்படி மஹாத்மாவின் வாழ்க்கையைப் பற்றிய நாட்குறிப்புகள் முழுமையாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும். வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ள காந்தியின் அனைத்து எழுத்துகளின் தொகுதிகளையும், அந்தக் காலத்தில் தென்னாப்பிரிக்காவிலும் (காந்தி அங்கே இருந்த காலச் செய்திகளை அறிய), இந்தியாவிலும் வெளிவந்த செய்தித்தாள்களையும் வைத்துக்கொண்டு, காந்தியின் வாழ்க்கை பற்றிய நாட்குறிப்பாக இல்லாவிட்டாலும் மாதக் குறிப்பாகவேனும் ஒரு பெரிய வால்யூம் (அல்லது பல வால்யூம்கள்) வந்தால் என்னைப் போன்ற வாசகர்களுக்குப் பேருதவியாக இருக்கும். வரலாற்றைச் சரியாகப் பதிவுசெய்த மாதிரியாகவும் இருக்கும். இந்த இமாலய வேலையைச் செய்ய எதிர்காலத்தில் வரப்போகிறவர்களுக்கு முன்கூட்டிய நன்றிகள்.

ராமமூர்த்தியின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஏனோ, ரோமன் ரோலந்து எழுதி ஜெயகாந்தன் மொழிபெயர்த்திருந்த "வாழ்விக்க வந்த காந்தி" புத்தகத்தின் நினைவு வந்தது. ஏற்கனவே மாணவப் பருவத்தில் படித்திருந்த புத்தகம் அது. நினைவு வந்ததும் அதையெடுத்து மீண்டும் ஒருமுறை முழுதாகப் படித்து முடித்தேன். உரையாடல்களின்போது நண்பர்களிடமும்கூட காந்தியைப் பற்றியே பேசுகிற அளவுக்குக் காந்தியின் ஆளுமை வசீகரம் மிக்கதாக இருக்கிறது.

ராஜராம் திடீரென்று நேற்று William Shirer எழுதிய Gandhi: A memoir என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அவரும் இ.பா.வும் நானும் சென்ற வாரம் ஒருநாள் நிறைய நேரம் காந்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். The rise and fall of third reich என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதியவர் William Shirer. அந்தப் புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. நூலகத்தில் முன்பதிவு செய்து வைத்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தை மூன்று நான்குமுறை தான் படித்திருப்பதாகவும் மிகவும் நல்ல புத்தகம் என்றும் ராஜாராம் சொன்னார். William Shirer 1930-களில் காந்தியை நேரில் சந்தித்துப் பழகியவர். அவர் எழுதிய நினைவலைகள் நன்றாக இருக்கின்றன என்று ராஜாராம் சொல்லக் கேட்டு, நேற்றே நூலகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்து வந்து, 40 பக்கங்கள்வரை படிக்க முடிந்தது. ரோமன் ரோலந்து, வில்லியம் ஷிர்ரர், ஐன்ஸ்டீன் போன்றவர்களுக்குக் காந்தி பற்றி இருக்கிற புரிதல்கூட இந்தியாவில் பலருக்கு காந்தி பற்றி இல்லை என்பது காந்தியின் துரதிர்ஷ்டம் இல்லை. காந்தியைப் புரிந்து கொள்ளாதவர்களின் துரதிர்ஷ்டம்தான் என்று தோன்றுகிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் ஷிர்ரரின் புத்தகத்தைப் படித்து முடித்துவிடுவேன் என்று எண்ணுகிறேன். காந்தி பற்றிய மேற்கண்ட புத்தகங்களை நான் மிகவும் சந்தோஷமாக வாசிப்பில் ஆர்வம் இருக்கிற அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

இடையில் இந்த வாரம் திங்களன்று மாலை வீடு வந்ததும் திடீரென்று நாஞ்சில் நாடனைப் படிக்க வேண்டும் என்ற ஓர் உத்வேகம். மார்ச் மாத உயிர்மையில் அவரின் சிறுகதை ஒன்று வந்திருக்கிறது. ஆனால், எனக்கு வந்த உயிர்மை இதழில் பக்கங்கள் மாறி மாறி பைண்ட் செய்யப்பட்டு, ஒரே பக்கங்கள் இருமுறை வந்து என்று குளறுபடி ஆகி, அந்தச் சிறுகதையைப் படிக்க முடியாமலேயே போய்விட்டது. அது என்னை உள்ளுக்குள் உறுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதுதான் திடீரென்று நாஞ்சில் நாடனைப் படிக்கிற ஆசையைத் தூண்டியிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். அதனால் திங்களன்று மாலை வீடு வந்ததும் உடனடியாகக் கைக்குக் கிடைத்த அவருடைய நாவலான "மிதவை"யைப் படித்து முடித்துவிட்டுத்தான் தூங்கப் போனேன். வேலையும் எதிர்காலமும்தேடி பம்பாய்க்கு 1960-களின் இறுதியில் செல்கிற ஒரு நாஞ்சில்நாட்டு இளைஞனின் கதை. நகுலன் ஆங்கிலத்தில் அந்த நாவலைப் பற்றி எழுதியது பின்னிணைப்பாக இருந்தது. ஆங்கிலத்தில் இருந்ததைத் தமிழ்ப்படுத்திப் போட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. நாஞ்சில் நாடன் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர். நாவல் எனக்குப் பிடித்திருந்தது. அமெரிக்காவில் முதல் தலைமுறையாகப் புலம்பெயர்ந்து குடியேறுகிற ஒரு தமிழரின் வாழ்க்கை முறையை அவரின் அடுத்த தலைமுறை அமெரிக்காவில் தலையெடுக்கிற காலம்வரைச் சொல்லிச் செல்கிற ஒரு நாவலை எழுத வேண்டும் என்கிற கனவு எனக்கு உண்டு. என் கனவுகள் இப்படிப் பலவானவை. அவை கொடுக்கிற சந்தோஷத்திலேயே அவற்றை நனவாக்கிப் பார்க்க வேண்டும் என்கிற உத்வேகங்கள் என்னிடமிருந்து போய்விடுகின்றன. இதே மாதிரித்தான், உரையாடல்களில் பிடித்த விஷயத்தைப் பற்றிப் பேசி முடித்ததும் அதை எழுத வேண்டும் என்கிற ஆவல் எனக்குப் போய்விடுவதை கவனித்திருக்கிறேன். சு.ரா. நிறைய எழுதாமல் போனதற்கு அவர் உரையாடல்களில் கொண்டிருந்த தீவிர ஆர்வம் ஒரு காரணமோ என்ற கேள்வியும் எனக்கு உண்டு. ஜெயகாந்தன்கூட, தன்னுடைய சபையில் பேசுவதில் கிடைக்கிற திருப்தியிலும் மகிழ்விலும் எழுதுவதன்மீதான நாட்டத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டாரோ என்ற கேள்வியும் உண்டு. ஏன் இப்படி நனவோடைமாதிரி டைரிக் குறிப்பாக இந்தக் கட்டுரையை எழுதிச் செல்வதைவிட, கொஞ்சம் மெனக்கெட்டால் இதற்கு மெருகு பூசி, எடிட் செய்து, இலக்கியக் கட்டுரையாக்கிவிடலாம் என்றே தோன்றுகிறது. அப்படி மெனக்கெட வேண்டுமென்று ஒத்திப் போடும்போது எழுதாமலேயே போய்விடுகிற அபாயமே என்னைப் போன்றவர்களுக்கு ஏற்படுகிறது.

அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தவரின் வாழ்க்கை பற்றிய நாவலை எழுதாவிட்டால்தான் என்ன? அப்படி ஒரு நாவல் யாராவது எழுதுவார்கள். அப்படிப்பட்ட நாவலை எழுதப் போகிற ஒருவர் அதற்குமுன் படிக்க வேண்டிய நாவல்களில் ஒன்றாக மிதவை இருக்கும். மிதவை மாதிரியே இதயன் எழுதிய நடைபாதை என்றொரு நாவல் இருக்கிறது என்று ராஜாராம் மிதவையைப் பற்றிப் பேசும்போது சொன்னார். மறைந்த இதயன் என் தந்தையின் நண்பராக இருந்தவர். திணமனி கதிரில் பணியாற்றியவர். அடுத்தமுறை ஊருக்குப் போகும்போது அப்பாவிடமும் அவர் நண்பர்களிடமும் அந்த நாவலைப் பற்றிக் கேட்க வேண்டும். அடுத்ததாக நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு நாவலை ஆரம்பித்திருக்கிறேன்.

என்னைவிட நல்ல ரசனையும், வாசிப்பும், ஞானமும் உடைய நண்பர்களுடன் சஞ்சரிப்பது ஓர் ஆசிர்வாதமாக எனக்குச் சிறுவயது முதலே நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனால் நான் அடைந்துவருகிற பலன்கள் ஏராளம். இதற்கு யாருக்கு நன்றி சொல்வது?

இணையத்திலோ எழுத்திலோ இனிமேல் விவாதம் என்று நேரத்தை வீணடிக்காமல் என்னுடைய தேடலுக்கும் திருப்திக்கும் ஏற்றவாறு இப்படித் தொடர்ந்து புத்தகங்களைப் படிப்பது நேரம் கிடைக்காத வாழ்க்கையில் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிற காரியமாக இருக்கும் என்று சமீபகாலமாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. மஹாத்மா காந்தியைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் அம்பேத்காரைப் பற்றியும் அவர்களுடைய முழுமையான எழுத்து/பேச்சுத் தொகுதிகளைப் படிக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்திருக்கிறது. இதில் பெரியாரைப் பற்றி ஏற்கனவே அதிகம் வாசித்திருக்கிறேன். ஒரு புத்தகம் எழுதுகிற அளவுக்கு என்றுகூட சொல்லலாம். சு.ரா.வுடனான இரண்டாவது சந்திப்பில் நண்பர் துக்காராம்கூட ஜாலியாக என்னைக் காட்டி, "இவர் பெரியாரைப் பற்றிப் புத்தகம் எழுதப் போகிறார்" என்று என்னை "ஓட்டினார்". ஆனால், இன்னும் சில வருடங்களுக்கு அப்படி எந்தப் புத்தகமும் எழுதுகிற எண்ணம் எனக்கு இல்லை. காந்தியைப் பற்றி ஓரளவு படித்திருக்கிறேன். விரைவில் அவர் எழுத்துகளின் முழுத்தொகுதியைத் தமிழில் படிக்கிற வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகிய மூன்று பேரைப் பற்றியும் முழுமையாக அவர்களின் எழுத்து, வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு அறிந்து கொள்கிற, அதை வைத்து அவர்கள் பற்றிய மட்டுமில்லாமல் இந்தியா பற்றிய புரிதலை, பார்வையை விசாலப்படுத்திக் கொள்கிற ஆசை இருக்கிறது. பார்ப்போம்.

சமீபத்தில் படித்த புத்தகங்களில் ஒன்று, சுகுமாரன் மொழிபெயர்த்த கவிதையின் திசைகள் (8 உலகக் கவிஞர்களின் 40 கவிதைகள்). இந்தப் புத்தகத்திலிருந்த பல கவிதைகள் என்னைக் கவர்ந்தன. ஒவ்வொரு கவிஞரைப் பற்றியும் சில பக்க அறிமுகத்திற்குப் பிறகு அவர்களின் கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் புத்தகத்திலிருந்து நேரம் கிடைக்கும்போது சில கவிதைகளை உள்ளிட முயல்கிறேன். மொழிபெயர்ப்பு அவருடைய முதன்மையான ஆர்வம் இல்லை என்று முன்னுரையில் சுகுமாரன் சொன்னாலும், மொழிபெயர்ப்பின் நடையும் வார்த்தைகளும் நேர்த்தியாக வந்துள்ளன.

என் வலைப்பதிவில் கூட படித்ததில் பிடித்தது (நிறைய கவிதைகள் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் தட்டச்சு செய்து இட அவை சுலபமாக இருப்பதுதான்.), அறிவிப்புகள், நாட்குறிப்புகள் என்ற மாதிரி தவிர கவனத்தையும் நேரத்தையும் சிதைக்கிற எதிலும் கவனம் செலுத்தக்கூடாது என்று எனக்கு நானே மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். இதை நான் என் வலைப்பதிவில் கொஞ்சம்காலமாகவே செய்து வருகிறேன் என்பது பலருக்குத் தெரியும். இதில், கவனத்தைக் கலைக்க வருகிற பொழுதுபோகாதவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதும் அடக்கம். ஏற்கனவே பதில் எழுதுகிறேன் என்று சொன்னவற்றிற்குக்கூட குறிப்பிட்டு பதில் எழுதப் போவதில்லை. பதில் எழுதாததால், வரப்போகிற பழிகளுக்கும் அஞ்சுவதாக இல்லை. ஆனால், வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் நான் பொதுப்படையாக எழுதுகிற ஒரு கருத்து இன்னும் பல கேள்விகளுக்கும் பொருத்திப் பார்க்கக்கூடிய பதிலாக அமைந்தால் - கேள்வியும் தேடலும் உடையவர்கள் - அதைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

3 comments:

Boston Bala said...

----அமெரிக்காவில் முதல் தலைமுறையாகப் புலம்பெயர்ந்து குடியேறுகிற ஒரு தமிழரின் வாழ்க்கை முறையை அவரின் அடுத்த தலைமுறை அமெரிக்காவில் தலையெடுக்கிற காலம்வரைச் சொல்லிச் செல்கிற ஒரு நாவலை ----

ஆங்கிலத்தில் இந்தக் களத்தைக் கொண்டு பல நாவல்கள் இருக்கிறது. தமிழில் இன்னும் வெளிவராதது ஆச்சரியமே. தேசிகனின் சிறுகதை, சுஜாதாவின் சில கதைகள் மட்டுமே நான் படித்த அளவில் சமகால அமெரிக்க வாழ்வை பதிகிறது.

சிவில் போராட்டம் போதே இந்தியர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள். போராட்டங்களில் கலந்துகொள்ளாமல், indnet/soc.* விவாதங்களில் மட்டும் தலை நீட்டிய முதல் தலைமுறை உயர்தட்டு ஐ.ஐ.டி. இந்தியர்கள்.

அவர்களின் ஏபிசிடி வழித்தோன்றல்களும்; அமெரிக்காவுக்குப் படிக்க வரும் 90-களின் மிடில் கிளாஸ்களும்.

தற்போதைய பலதரப்பட்ட மிக்ஸட் கல்யாணங்களும், எச்1-பி, மூன்று மாத பிஸினெஸ் வருகைகளும்.

போதிய அளவு சாம்பார் பொடி, ரசப்பொடி சேர்த்து; தேவையான அளவு எயிட்ஸ், mad cow, பிளவாளுமை கலந்து; இலக்கியத்தரமான சொந்த மகளைப் புணர்வது போன்ற நிஜ நிகழ்ச்சிகளைக் கோர்த்து எழுத நீங்கள் சரியான ஆள் :-)

---ஜெயகாந்தன்கூட, தன்னுடைய சபையில் பேசுவதில் கிடைக்கிற திருப்தியிலும் மகிழ்விலும் ----

ஆனந்த விகடன் நேர்காணல் படித்தீர்களா?

கடைசியாக , ஜெமோவின் நினைவின் நதியில் குறித்து விரிவான வாசக அனுபவம் ஒன்றை சிரத்தையாக எழுதுங்களேன்!

நன்றி.

PKS said...

//போதிய அளவு சாம்பார் பொடி, ரசப்பொடி சேர்த்து; தேவையான அளவு எயிட்ஸ், mad cow, பிளவாளுமை கலந்து; இலக்கியத்தரமான சொந்த மகளைப் புணர்வது போன்ற நிஜ நிகழ்ச்சிகளைக் கோர்த்து எழுத நீங்கள் சரியான ஆள் :-)//

ஹரே பாபா, நாவல் எழுத ஐடியா கொடுக்கிறேன் என்று, டி.வி. சீரியலுக்கு ஐடியா கொடுக்கின்றாயே! :-)

அன்புடன், பி.கே. சிவகுமார்

PS: Thanks for your comments.

முத்து(தமிழினி) said...

p.k.s

வலைபதிவாளர்களின் பாணியில் சொல்லப்போனால், உங்கள் கருத்துக்களில் எனக்கு முழு ஒப்புதல் இல்லாமல் இருந்தாலும்(ஜெயகாந்தன் இன்னபிற) புனைவு இலக்கியம் படைக்கும் ஆர்வம் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் வலைப்பதிவுகளில் விவாதத்தை நிறுததுவதே நல்லது.