அகரம் வெளியீடாக வெளிவந்திருக்கும் சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள் புத்தகத்திலிருந்து ஒரு கவிதை. கோடைகாலக் குறிப்புகள் சுகுமாரனின் முதல் கவிதைத் தொகுப்பு. இந்தப் பதிப்பு அதன் இரண்டாம் பதிப்பு. இக்கவிதை ஏப்ரல் 84-இல் எழுதப்பட்டது. "நான் மனிதனின் நிலைபற்றி அவநம்பிக்கை கொண்டவன்; எனினும் மனிதனைக் குறித்து நம்பிக்கை கொண்டவன் என்று என்னைச் சொல்லிக் கொள்வேன்" என்ற ஆல்பெர் காம்யுவின் மேற்கோள் புத்தகத்தில் முன்னுரைக்கு முன் ஒரு தனிப்பக்கத்தில் இருக்கிறது. "தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்கு சவப்பெட்டி வாங்கக் காசில்லாத தவிப்போ அல்ல" என்ற வரியை கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையைப் படித்தவர்கள் நெருங்கிவிட முடியும். இனி கவிதைக்குள்...
விசாரிப்புக்கு நன்றி
எறும்புகள் சுமந்துபோகும் பாம்புச் சட்டைபோல
நகர்கிறது வாழ்க்கை
சிறகுகளுடன் முட்டைக்குள்ளிருப்பது அசௌகரியம்
யத்தனித்தால்
பறக்கக் கிடைக்கும் வெளியோ
கொசு வலைக்குள் அடக்கம்
தைத்த அம்புகளைப்
பிடுங்கி விடுகிறேன் அவ்வப்போதே
ஆனாலும்
வலிகள் இதயத்தின் தசையைக் கிழிக்கின்றன
இப்போது அன்பு -
ஊதாரிப் பிள்ளை வீடு திரும்பக் காத்திருக்கும்
கருணையோ
சாகாத பிடிகடுகுக்காய் நடந்த
ஆற்றாமையோ
தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்கு
சவப்பெட்டி வாங்கக் காசில்லாத
தவிப்போ அல்ல
இப்போது அன்பு -
சவரக் கத்தியின் பளபளக்கும் கூர்முனை
யதார்த்தம்
கழைக்கூத்தாடியின் வளையத்தில் சிக்கிய
உடலாய் நெளிகிறது
எனினும்
இங்கே இருக்கிறேன் நான்;
துயர் தாளாமல் சிந்தும் கண்ணில் ஈரமாய்
தாமதமாகும் ரயிலுக்குக் காத்திருப்பவனின் பதற்றமாய்
சிகரத்தை அடைந்த சுருதியின் சிலிர்ப்பாய்
தற்கொலையில் தோற்றவனின் மௌனமாய்...
நன்றி: சுகுமாரன், அகரம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment