(ஜெயமோகன் எழுதிய சுந்தர ராமசாமி: நினைவின் நதியில் நூலில் மஹாத்மா காந்தி பற்றிய சு.ரா மற்றும் ஜெயமோகனின் கருத்தாழமும் சுவாரஸ்யமும் மிக்க உரையாடல்கள் ஏறக்குறைய பதினைந்து பக்கங்களுக்கு உள்ளன என்று முன்னர் எழுதியிருந்தேன். அந்தப் பக்கங்களைத் தமிழ் இணைய வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள அனுமதி வேண்டியும், அவற்றின் மின்பிரதியை அனுப்பிவைக்குமாறும் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதியிருந்தேன். மிகவும் பெருந்தன்மையுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ள ஜெயமோகன் அனுமதியளித்திருக்கிறார். ஜெயமோகனுக்கு நன்றி சொல்லி அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். - பி.கே. சிவகுமார்)
இறுதிச்சடங்கிற்கு பேரா.பத்மநாபன் வந்திருந்தார். அன்று வந்திருந்த சுந்தர ராமசாமியின் நண்பர்களில் அவரே மிகவும் மூத்தவர், நெடுங்கால நண்பர். சுந்தர ராமசாமியின் முதிய நண்பர்களில் எம்.எஸ் ஆரம்பத்தில் காத்துவந்த உறுதியை இழந்து பிறகு மிகவும் அழுது கலங்கிவிட்டார். ஆற்றூர் ரவிவர்மா அஞ்சலி செலுத்த திரிச்சூரில் இருந்து சிரமப்பட்டு வந்திருந்தார். முழுக்க முழுக்க நிதானமாகவே இருந்தார், ஆனால் அவர் கலங்கிவிட்டார் என அவரை மிக நெருங்கி அறிந்த என்னால் உணர முடிந்தது. உடனே சென்றுவிட்டார். பத்மநாபன்தான் மிக நிதானமாக இருந்தார். நானும் அன்புவும் சுந்தர ராமசாமி வீட்டுமுன் பந்தலில் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது காந்தியைப்பற்றி விரிவாகப்பேசிக் கொண்டிருந்தார். சுந்தர ராமசாமிக்கு 1986 வாக்கில் காந்தி பற்றிய எண்ணம் உயர்வாக இருக்கவில்லை, அவர் அப்போது எ.என்.ராயின் பாதிப்பிலிருந்தார். காந்தியின் அணுகுமுறையில் தர்க்கபூர்வத்தன்மை அதிகமில்லை, அது உள்ளுணர்வு சார்ந்தது என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒரு தனிமனிதனின் உள்ளுணர்வு , அது எத்தகைய மகத்தான ஆழம் கொண்டிருந்தாலும், அவர் மகாத்மாவாகவே இருந்தாலும் ஒரு தேசத்தை வழி நடத்தலாகாது என்றார் சுந்தர ராமசாமி. அத்தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் உலகியல் தேவைகள், கலாச்சார ஓட்டங்கள் ஆகியவற்றாலான பௌதீக சக்திகளின் முரண் இயக்கமே அத்தேசத்தை வழிநடத்த வேண்டும். அச்சக்திகளை அரசியல்வாதிகள் ஒருங்கிணைக்கவேண்டும். ராஜதந்திரிகள் [ஸ்டேட்ஸ்மென் என்று சுந்தர ராமசாமி] அந்த மோதல் வன்முறையின் மூலம் நிகழாமல் சுமுகமாக நடக்க வழிவகை செய்யவேண்டும். அந்த இயக்கம் ஆக்கபூர்வமான முறையில் முன்னோக்கிச்செல்ல அரசியல் ஞானிகள் [ பொலிடிகல் ஸீயர்ஸ் -- சுந்தர ராமசாமி ] அவர்களை தங்கள் தத்துவ தரிசனங்களாலும் தங்கள் ஆளுமையாலும் வழிநடத்த வேண்டும். எந்த அரசியல் ஞானியும் தன் நோக்குக்கு ஏற்ப தன் சமூகத்தை முழுமையாக இழுத்துச்செல்ல இயலாது. அது அடக்குமுறைக்கும் வன்முறைக்குமே வழிவகுக்கும். நேரடி வன்முறை போலவே கருத்துத்தள வன்முறையும் அழிவை உருவாக்குவதே. விவேகானந்தர், அரவிந்தர், காந்தி, எம்.என்.ராய், ராம் மனோகர் லோகியா, அம்பேத்கர் போன்றவர்கள் அரசியல் ஞானிகள். நேரு, இ.எம்.எஸ், ராஜாஜி, காமராஜ், மொரார்ஜி தேசாய் போன்றோர் ராஜதந்திரிகள். இ.கெ.நாயனார், நல்லக்கண்ணு, சி.என்.அண்ணாதுரை போன்றோர் அரசியல்வாதிகள். காந்தியின் அணுகுமுறை வன்முறை மிக்கது என்று என்னிடம் சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். காரணம் அவர் தன் அரசியல் தரிசனத்தை ஜனநாயகப் பரிசீலனைக்குக் கொண்டுவர மறுத்தார். அவற்றுக்கான ஊற்றுமுகத்தை தர்க்கபூர்வமாக முன்வைக்காமல் உணர்ச்சிகளை நோக்கி ஏவினார். அவர் மாமனிதர், ஆகவே அது சரியான விளைவுகளை உருவாக்கியது. ஆனால் அதே வழிமுறைகளை ஒரு கொடுமையான சர்வாதிகாரி கையாண்டு இந்தியாவை தன் மந்திரப்பிடியில் வைத்துக் கொண்டாரென்றால் என்ன ஆகும்?
மதம் ஒரு வாழ்க்கைமுறையாக அன்றி ஒரு முழு வாழ்க்கையாகவே இருக்கும் இந்தியாவில் மதசார்பின்மையே முக்கியமான விழுமியம் என்பதில் சுந்தர ராமசாமி ஆழ நம்பிக்கை கொண்டிருந்தார். இந்திய அரசியலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்குவந்தபின்னரே மதசார்பின்மை பற்றிய கோஷங்கள் வலுப்பெற்றன. ராமர் கோயில் இயக்கம் மூலம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை நெருங்கிய பின்னரும் அவர்களுடன் ஒத்துழைத்து வி.பி.சிங் அரசை அமைக்க இடதுசாரிகளுக்கு தயக்கம் இருக்கவில்லை. ஏகாதிபத்திய காட்,டங்கல் திட்டங்கள் மீதான எதிர்ப்பு அப்போது அவர்களுக்கு சாக்காக இருந்தது. தீயை அணைக்க சாக்கடையை பயன்படுத்துதல் என்ற பிரபல படிமம் அப்போதுதான் அமுலுக்கு வந்தது. ஆனால் சுந்தர ராமசாமி அன்றே மதசார்பின்மைக்கு அடிவிழுகிறது என்ற பதற்றத்தில் இருந்தார். பிறகு அது ஒரு பிரபல கோஷமாக ஆனபின் அதைபற்றிப்பேசுவதை அவர் கூச்சம் தருவதாக உணர்ந்தார் என்று எண்ணுகிறேன். ஆச்சரியம் என்னவென்றால் அவர் நோக்கில் மத சார்பின்மைக்கு எதிரான போக்கு காந்தியில் இருந்து தொடங்குகிறது என்பதேயாகும். காந்தி மதவெறிக்கு எதிரானவர் என்பதில் சுந்தர ராமசாமிக்கு ஐயமே இல்லை. அவருக்கு மதச்சார்புகூட இல்லை என்றே எண்ணினார். ஆனால் அரசியலுக்கு மதத்தைக் கொண்டுவந்தவர் அவர் என்றார் சுந்தர ராமசாமி. இருவகையில் இதைக் காந்திசெய்தார். கிலா•பத் இயக்கத்தை ஆதரித்ததன் மூலம் அவர் மதநம்பிக்கை ஓர் நவீன அரசியல் ஆயுதம் என்பதைக் காட்டினார். முஸ்லீம் லீக் முதல் இன்றைய இஸ்லாமிய தீவிரவாதம் வரை இங்கிருந்து தொடங்குகிறது என்றார் சுந்தர ராமசாமி. இஸ்லாமிய சமூகத்தை அரசியலுக்குக் கொண்டுவர அதை பயன்படுத்தலாம் என்பது காந்தியின் கனவு. ஆனால் அதில் உள்ள பிழை இஸ்லாமியர்களை இஸ்லாமிய மதநம்பிக்கையாளர்களாக, அந்த அடையாளத்துடன் அரசியலுக்குக் கொண்டுவந்தது அது என்பதே. நாட்டில் நடந்துவந்த அரசியல் இயக்கத்தில் அவர்கள் தொழிலாளார்களாக, மாணவர்களாக , எளிய குடிமக்களாக ஏன் கலந்துகொண்டிருக்கக் கூடாது? அப்போது மதம் அவர்களுடைய அந்தரங்க நம்பிக்கையாகவே இருந்திருக்குமே? இது எம்.என்.ராயின் எண்ணம் என்று நினைக்கிறேன். இரண்டாவதாக காந்தி மதக்குறியீடுகளை நவீனஅரசியலுக்குக் கொண்டுவந்தார். ராம பஜனை, கீதை வாசிப்பு, சமணதுறவி போன்ற தோற்றம், துறவு வாழ்க்கை, மகாத்மா மற்றும் அடிகள் போன்ற பட்டங்கள் எல்லாமே மதம் சார்ந்தவை. அதுவே இன்று திரிசூலமும் காவிக்கொடியும் பிறையும் பச்சைக்கொடியும் அரசியல் அடையாளங்கள் ஆக மாறுவதற்கான அடிப்படைகள். காந்தியின் உள்ளுணர்வின் குரல் மதம் மூலமே 'அக்னாலட்ஜ்' செய்யப்பட்டது என்றார் சுந்தர ராமசாமி. '' நாளைக்கு மேல்மருவத்தூர் சாமியார் குறிசொல்லி உத்தரவு போட்டு தமிழ்நாட்டை ஆளுவார்னா எப்டி...அது மாதிரித்தான்.....''
அதேபோல காமம் பற்றிய காந்தியின் கண்ணோட்டமும் சுந்தர ராமசாமிக்கு உவப்பானதல்ல. காந்தி காமத்தை பாவமாக எண்ணினார். அது அவருக்கு இயல்பாக வந்த தரிசனம் அல்ல, அது அவர் தன் தந்தைக்கு பணிவிடைச் செய்யும்போது மனைவியுடன் பாலுறவுக்குப் போக, அப்போது தந்தை இறந்ததனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு என்றார் சுந்தர ராமசாமி. காந்தி பாலுணர்வைக் கட்டுப்படுத்தியமையால்தான் அழகுணர்ச்சியே இல்லாதவரானார். நுண்ணிய உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாதவரானார். வாழ்நாளின் பிற்பகுதியில் அவருடன் நெருக்கமாக எவருமே இல்லை. '' நேசிச்ச பெண் கூட உடல் உறவு வைச்சுக்கிறதுன்னா என்ன? யோசிச்சுப்பாத்தீங்களா? அது எவ்ளவு அந்தரங்கமான ஒரு தொடர்புன்னு... அப்ப ரகசியங்களே இல்லை. தனிமை இல்லை. அவ்ளவு திறந்து போட்டுண்டு நாம் நம்ம மனசை எங்கயுமே காத்தாட விடுறதில்லை...அது ஒரு பெரிய எக்ஸஸைஸ்...பகிர்ந்துக்கிறதுக்கான பயிற்சி...காந்திக்கு அது இல்லாமப் போச்சு.. அதனாலத்தான் அவர் மீராபென் கூட அந்தப் பரிசோதனையைச் செய்யமுடிஞ்சது. அவர் அந்தப் பெண் கூட உறவு வைச்சுக்கிட்டிருந்தார்னா அது பெரிய விஷயம் இல்லை. ஆன இது கேவலம்.... அந்தப்பொண்ணுக்கு தெரியாம அதை அவர் பண்றார். அது நம்பிக்கை துரோகம். அந்தப்பொண்ணோட •பீலிங்ஸை அவர் கணக்கில எடுத்துக்கல்லை. அது ஆணவம்.... அதை கஸ்தூர்பா செஞ்சிருந்தா அவர் எப்டி ரியாக்ட் பண்ணியிருப்பார்? யோசிச்சுப்பாருங்க...அதில இருக்கிற ஆணாதிக்கப் போக்கு தெரியும்....''சுந்தர ராமசாமி சொன்னார். அன்று நாங்கள் அவரது மாடியில் பெரிய பலாமரத்தின் இலை நிழல்கள் ஆடும் வெளியில் அமர்ந்திருந்தோம்.''இதைவிட என்னால நேருவை ஏத்துக்க முடியுது..அவர் அழகை ரசிக்கிறவர். அவருக்கு பெண்கள் தேவைப்பட்டாங்க. அவங்களை அவர் தேடிப்போனார்...லேடி மவுண்ட்பாட்டன் பத்மஜா நாயிடுன்னு...அந்தக் காதல்களில ஒரு நேர்த்தி இருக்கு.... அதில ரொமான்ஸ் இருக்கு...''. நான் காந்தியைப்பற்றிய அவரது தொடர் விமரிசனங்களால் புண்பட்டிருந்தேன். ஆனால் அன்று எனக்கு காந்தியை 'காப்பாற்றத்' தெரியவில்லை. ஆகவே நான் குரூரமாக உள்ளே நுழைந்தேன்,''நீங்க இப்ப நேரு செஞ்ச மாதிரி செய்வீங்களா? உங்களுக்கு காதலிகள் உண்டா.?'' .சுந்தர ராமசாமி சாதாரணமாக ''நேக்கு அப்டி ஒரு பொண் மேல லவ் வந்தா அதை பாத்து பயப்பட மாட்டேன். அதை மூர்க்கமா ஒடுக்க மாட்டேன். உடனே அது பின்னாலபோய்டுவேன்னு சொல்லலை. அது பலபேர் வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட விஷயம். அதனால யோசிப்பேன், நிதானமா இருப்பேன். ஆனா அதுக்காக குற்ற உணர்ச்சி கொள்ளமாட்டேன். நான் ஒருத்தியை லவ் பண்ணனுமானா கமலாகூட உறவை முறிச்சுக்கணும். அதான் நியாயம். அவளை நான் ஏமாத்தக் கூடாது. மேரேஜ்ங்கிற அமைப்பையும் ஏமாத்தக் கூடாது. நேரு யாரையும் ஏமாத்தலை...''.
பிற்பாடு காந்தியைப்பற்றிய சுந்தர ராமசாமியின் எண்ணங்கள் மாறின. அதற்கு பத்மநாபன் ஒரு காரணம். அவர் காந்தியை ஆழமாக உள்வாங்க தொடங்கி அதற்குள் பத்துவருடங்கள் ஆகிவிட்டன. ஒரு பத்து வருடங்களில் சுந்தர ராமசாமி பத்மநாபன் மூலம் காந்தி பற்றிய ஆழமான மறுபரிசீலனையைச்செய்தார் என்று எண்ணுகிறேன். காந்தி பற்றிய அவரது விமரிசனங்கள் அப்படியேதான் இருந்தன. ஆனால் அவற்றுடன் சேர்த்தே காந்தியை புரிந்துகொள்ளவும் ஏற்கவும் இயலும் என சுந்தர ராமசாமி உணர்ந்தார். காந்தி இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான முன்னுதாரணம் என்பதை மூன்று அடிப்படைகளில் சுந்தர ராமசாமி மதிப்பிட்டார்.பொருளை நுகர்வதென்பது பூமியை சிறிய அளவில் நுகர்வதே. நுகர்வுநோக்கு பூமியையே ஒருநாள் குப்பையாக வீசிவிடநேரும் என்பதை உணர்ந்த அரசியல் ஞானி காந்தி. அந்த அறிதல் நேருவுக்கு இருக்கவில்லை, சொல்லிக்கேட்டபோது புரியவும் இல்லை. இது இந்தியாவைப்பொறுத்தவரை மிக துரதிருஷ்டவசமான ஒன்று. இந்தியாவின் இயற்கைவளங்களை அழிக்க நேரு காரணமாக அமைந்தார். நேருவும், அம்பேத்கரும், எம்.என்.ராயும் இந்தியாவின் சாரத்துக்குள் செல்ல இயலவில்லை. அவர்களுடைய ஐரோப்பிய நோக்கே இதற்குக்காரணம்.அவர்கள் மேலைநாட்டு ஜனநாயகத்தை மட்டுமே அறிந்திருந்தனர். அதையே அவர்கள் பின்பற்ற விரும்பினர்.''சாராம்சத்தில அவங்க மூணுபேரும் ஒண்ணுதான்...'' என்றார் சுந்தர ராமசாமி.''வாழ்க்கையில கடைசிக்காலத்தில அம்பேத்கர் வெளியே வந்தார். ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியிருப்பார்... அது நடக்காமப்போச்சு.''ஐரோப்பிய ஜனநாயகம் என்பது சிறிய நாடுகளை சார்ந்து உருவானது.ஆகவே மைய அமைப்பு சார்ந்தது அது. நேரடியானது. இந்தியா சீனா போன்ற மாபெரும் தேசங்களுக்கு அது சரிவராது. இங்கே உள்ள மையம் தேசத்தின் விளிம்புகளை விட்டு மிகவும் தள்ளி இருக்கும். அது எவ்வளவு முயன்றாலும் விளிம்புடன் நேரடியான தொடர்பை கொண்டிருக்க முடியாது. இந்த சிக்கல் காரணமாகவே கடந்த காலத்தில் இங்கு ஓர் அதிகாரப்பரவலாக்கம் தேவையாயிற்று. வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே இந்த பரவலதிகார அமைப்பு இங்கே உருவாயிற்று. காலம்தோறும் அது புதுப்பிக்கப்பட்டது. அதிகாரப் பரவலாக்கம் இயல்பாகவே ஜனநாயகப்பண்புகளைக் கோருகிறது. ஆகவே இங்கு நமக்குரிய ஒரு ஜனநாயக அடிப்படை உருவகி வந்தது, இன்றும் அது ஒருவகையில் தொடர்கிறது. கிராமங்கள் ஒவ்வொன்றும் தன்னிறைவாக இருந்த காலம் நமக்கு இருந்தது. மாமன்னர்களைக் கட்டுப்படுத்தும் மக்கள் அவைகள் இருந்தன. சாதி இவ்வமைப்பில் இருந்தமுக்கியமான ஓட்டை. நீதியை அது குறுக்கியது, முன்னோக்கிய நகர்வை இல்லாமலாகியது. அந்தக் குறையை நீக்கி அதன் அடுத்த கட்டம் நோக்கிக் கொண்டுசெல்வதுதான் தேவை. அதைக் காந்தி புரிந்துகொண்டார் ,நேருவும் அம்பேத்கரும் மகலானோபிஸ¤ம் புரிந்துகொள்ளவில்லை என்றார் சுந்தர ராமசாமி
நானும் சுந்தர ராமசாமியும் நடந்து நாகர்கோயிலில் இருளப்பபுரம் போய்ச்சேர்ந்தோம். நெருக்கமான வீடுகள். திறந்த சாக்கடைவாய்கள். குப்பைக்குவியல்கள் . எங்கும் மலம் மலம் மலம்.... சுந்தர ராமசாமி ''பாத்தேளா? சுதந்திரம் கெடைச்சு அம்பது வருஷம் ஆச்சு. இன்னும் சரியா கக்கூஸ் போகத்தெரியலை நமக்கு. இந்த ஒருவிஷயத்தால ¦?ல்த் பிரச்சினை கெளம்பி நம்ம நாட்டுக்கு வருஷத்தில எவ்வளவு கோடி நஷ்டம்னு கணக்கு போட்டிருக்கோமா? இதைப்பத்திக் கவலைப்பட்ட கடைசி அரசியல்வாதி காந்தி. தேச விடுதலைக்குச் சமானமா கக்கூஸ் போறதைப்பத்திப் பேசிட்டிருந்தார். அவர் ஒரு கிராமத்துக்குப் போறச்ச பின்னால ஒருத்தர் அவரோட டாய்லெட்ட கொண்டு போறார். அதை அவரோட பதாகை மாதிரின்னு டாமினிக் லாப்பியர் அவன் புஸ்தகத்தில சொல்றான். கம்பு வச்சிண்டுருக்க காந்தியை சிலையா நிக்க வைக்கிறோம். கக்கூஸ் க்ளீன் பண்ற குச்சியோட நிக்கிற காந்தியைன்னா வைக்கணும்.... அவருக்கு இந்த மக்களோட பிரச்சினை என்னான்னு தெரியும். அதுக்கு உள்ளுணர்வு காரணமில்ல, அவர் இங்கல்லாம் வந்தார். இந்த ஜனங்க கிட்ட பேசினார்.அவ்ளவுதான். இண்ணைக்கும் சுதந்திரம் கிடைச்சு அரை நூற்றாண்டுக்கு அப்றமும், நாம இங்க வர ஆரம்பிக்கலை. நம்ம அரசாங்கம் இந்த மக்களுக்கு கோடிக்கணக்கில பணம் செலவு பண்ணி நலத்திட்டங்களை போடறாங்க. ஆனா இவங்க கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேக்கிறதில்ல. வெட்டினரி டாக்டர்னா நம்ம அரசியல்வாதிங்க... இதெல்லாம் ஆடுமாடுங்க... '' என்றார். இருளில் ஏதோ ஒரு சாலைக்கு வந்து பஸ்பிடித்து வீடு திரும்பினோம். '' இங்க இருந்த அமைப்புகள்லாம் தாறுமாறாப்போச்சு. புதிய அமைப்பை இத்தனைவருஷம் கழிச்சும் சரியா உருவாக்க முடியலை. இந்த அளவுக்கு பெரிய தேசத்தில கீழ்மட்டத்தை மேல் மட்டம் நேரடியா ஆளணுமானா அந்த தொலைவை இணைக்கிற அளவுக்கு அதிபிரம்மாண்டமான அதிகாரவற்கம் தேவை. அதை வெள்ளைக்காரன் உருவாக்கினான். நேருவும் அம்பேத்கரும் அதே மையப்படுத்தற போக்கை பின்பற்றினதனால அந்த அதிகார அமைப்பு பெரிய பூதம் மாதிரி வளந்து போச்சு. அதுதான் இண்ணைக்கு இந்தியாவோட மிகப்பெரிய சாபம். வீட்டுமுன்னாடி மரம் நிக்கிற மாதிரி அரசாங்கத்துக்கு பக்கத்தில அதிகாரஅமைப்பு நிக்கணும். இங்க என்னன்னா மரத்துமேல வீடு இருக்கிற மாதிரி இருக்கு.... அதை அரசாங்கம் ஒண்ணுமே செய்ய முடியாது, மக்களும் ஒண்ணும் செய்ய முடியாது ... உண்மையில இங்க சுதந்திரம் கிடைச்சது அவங்களுக்கு மட்டும்தான்...'' அக்காலகட்டத்தில் டாக்டர் ஜி.எஸ்.ஆர் கிருஷ்ணன் ,அ.கா.பெருமாள் இருவரும் சுந்தர ராமசாமியை பெரிதும் பாதித்துவந்தனர். பெங்களூரிலிருந்து சிலதடவை நாகர்கோயிலுக்கு வந்து கிருஷ்ணன் தங்கியிருந்து சுந்தர ராமசாமியிடம் விவாதித்திருக்கிறார். கிருஷ்ணன் தரம்பாலின் ஆய்வுகளையும் அது சார்ந்து மேலே சென்ற ஆய்வுகளையும் சொல்லிவந்தார். இந்திய அமைப்பில் நீர் நிர்வாகம் , உபரி பங்கீடு , ஆபத்துகளை எதிர்கொள்ளும் நோக்கு ஆகியவற்றில் நன்கு பயின்று தேறிவந்த ஓர் அமைப்பு இருந்துவந்தது என்று தரம் பால் கூறியதை சுந்தர ராமசாமி அறிந்தார். அதேசமயம் மத்திய அரசு நிதி ஒன்றை பெற்று குமரிமாவட்ட நீர்நிலைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்த அ.கா.பெருமாள் அந்த கோட்பாடுகளை அங்கீகரிக்கும் தரவுகளை , தரம் பால் பற்றிய அறிதல் இல்லாமலேயே, அளித்து வந்தார். குமரிமாவட்டத்தில் இருந்த குளங்கள் வெட்டப்பட்ட விதம், அவை பராமரிக்கப்பட்ட ஒழுங்கு ஆகியவற்றில் இருந்த ஜனநாயக அம்சங்கள் சுந்தர ராமசாமியை வியப்புற வைத்தன. அவை அப்போது பாதிக்குமேல் நிர்வாகக் குளறுபடிகளினால் அழிந்துவிட்டதை அவர் தெரிந்து மிக வருந்தினார். அவரை பத்மநாபனின் காந்தியம் நோக்கி தள்ளிய ஆய்வுப்பின்புலம் இதுவே. அவரைப்போன்ற ஒருவர் வெறுமே கோட்பாடுகளினால் திருப்தி அடைபவரல்ல.
சுந்தர ராமசாமி மெல்ல மெல்ல காந்தி பற்றிய ஒழுக்கக் கோட்பாடுகளையும் மறுபரிசீலனைசெய்தார்.நான் அதைப்பற்றி கடுமையாக அவரிடம் விவாதித்த நாட்கள் அவை.அவர் என்னிடம் பேசியவற்றுக்கு என் நெஞ்சுக்குள் நான் மீண்டும் மீண்டும் பதில் சொல்லி வந்தேன். காந்தியின் வெளிப்படைத்த்தன்மையை அவருக்கு எதிரான ஒழுக்கவியல் ஆயுதமாக கையாள்வது எந்தவகையில் நியாயம் என்பதே என் கேள்வி. இதை நான் படிப்படியாகவே உருவாக்க முடிந்தது. நேரு சிரத்தா மாதாவை சுரண்டினார். பத்மஜா நாயிடு நேருவை சுரண்டினார். மௌண்ட் பாட்டன் நேருவை 'கையாள' அவருக்கு லேடி மௌண்ட் பாட்டனின் உறவு உதவியது. காந்தியின் பலவீனங்களும் அற்பத்தனங்களும் அவரது வெளிப்படைத்தன்மையாலேயே மன்னிக்கப்படுவது மட்டுமல்ல மகத்துவப்படவும் செய்கின்றன என்றேன். இதையொட்டியே நான் தினமணி நாளிதழில் ரவிக்குமார் எழுதிய ஒரு கட்டுரைக்கு கடுமையாக எதிர்வினையாற்றினேன். 'காந்திக்கு மட்டும் வேறு நியாயமா?' என்ற அக்கட்டுரை ரவிக்குமாருக்கான எதிர்வினையே அல்ல. அவர் எழுதியது ஆழமற்ற முற்போக்காளர் போகிறபோக்கில் காந்திமீது வைக்கும் எளிய குற்றச்சாட்டே. நான் என்றுமே அவற்றை பொருட்படுத்துவதில்லை. அப்போது சுந்தர ராமசாமியிடம் விவாதம் சூடாக நடந்துகொண்டிருந்தமையால் அதை இங்கே நீட்டித்தேன். அது சார்ந்து ஒரு விவாதம் வரும் என எண்ணினேன். சுந்தர ராமசாமியுடனான என் விவாதம் விரிவடையும் என்று கற்பனைசெய்தேன். விவாதம் மிகச்சூடாக பல மாதம் நடந்தது, ஆனால் வெட்டிவிவாதமாகவே அது அச்சில் எஞ்சியது. சுந்தர ராமசாமி •போனில் '' ரவிக்குமார் வசம் நீங்க குடுத்தனுப்பின பதில் கெடைச்சுது...பாவம் அவர் முழிக்கப்போறார் என்னடா இது புதிசா ஒரு பூதம், சம்பந்தமே இல்லாமன்னு...'' என்று சிரித்தார். காந்தியின் வெளிப்படைத்தன்மை மூலம் மீராபென் என்ன பாதிப்பை அடைந்தார் என்ற வினாவே மேலும் முக்கியமாக பேசப்பட வேண்டியது என்று என்னை மறுத்தவர் ஆனால் காந்தி மீது போடும் அதே அளவுகோலை மார்க்ஸ், அம்பேத்கர், நேரு மேலும் போடுவது அவசியமே என்பதை ஒப்புக்கொண்டார். மார்க்ஸின் சித்தாந்ததை மட்டும் பார், அவரது தனிவாழ்க்கையைப் பாராதே என்ற கோஷத்தை '' அப்பன்னா இவங்களும் காந்தியோட சித்தாந்தத்த மட்டும் பாத்திருக்கணும்ல?''என சுந்தர ராமசாமி நிராகரித்தார். '' இதைப்பத்தி நீங்க மனுஷ்யபுத்திரன்கிட்டே பேசலாம். அவருக்கு உங்களுக்கு நேர்மாறா ஸ்டிராங்கான அபிப்பிராயம் இருக்கு...'' என்றார் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமிக்கு மனுஷ்யபுத்திரன் என்னைவிட நிதானமான அறிவியல்பூர்வமான சிந்தனை உடையவர் என்ற எண்ணம் இருந்தது. அப்படி அவர் எண்ணுவதனால் எனக்கு கசப்பு ஏற்பட்டு நான் மனுஷ்யபுத்திரனிடம் அப்படி விவாதிக்கவில்லை. வழக்கம்போல 'ஆர்.எஸ்.எஸ்.காரா வாயைமூடு' போன்ற கோஷங்கள் பதிலாக வந்தபோது ''வாயை மூடிண்டு இருங்கோ... அவா சொல்றது ஒரு ரெடிமெட் ஆன்ஸர், நான் எழுதியிருந்தா பாப்பாரப்பயலே வாய முடுடான்னு சொல்லியிருப்பாங்க '' என்றார் சுந்தர ராமசாமி.ஆனால் காந்தியை அப்படி எளிதாக மதிப்பிட்டுவிட இயலாது என்று சுந்தர ராமசாமி ஏற்றுக் கொண்டார். காமம் ஒரு அரசியல் தலைவனுக்கு அல்லது ஒரு தத்துவ ஞானிக்கு பிறரைப்போல எளிய விஷயமல்ல, அது அவனுக்கு ஒரு அரசியல் மற்றும் தத்துவ பிரச்சினை .''நான் ஒரு பெண்ணோட உறவு வச்சிண்டா மிஞ்சி மிஞ்சிப்போனா சுதர்சன் படுத்திரும். நேரு அப்டிசெஞ்சா தேசமே சரிஞ்சிரலாம்...'' என்றார். சிறிது நாட்களுக்குப் பின் நித்ய சைதன்ய யதி தொடர்பாக பேசும்போது காமம் பற்றிமேலும் பேசினோம்.
சுந்தர ராமசாமி காந்தியின் ஜனநாயகப்பண்பு குறித்தும் ஒரு மறுபரிசீலனைக்கு வந்தார். மேலை ஜனநாயகம் தன் உறுப்பினர்களின் தர்க்க மனம் நோக்கிப்பேசுகிறது. அதுவே உகந்தது என்று எண்ணுவது ஐரோப்பிய முறையை அப்படியே ஏற்பதாகும். ஐரோப்பாவில் தனிமனிதன் என்ற கருத்து உருவாகி வலுப்பெற்ற பின் ஜனநாயகம் உருவானது. இங்குள்ள ஜனநாயகம் மதம் அறம் போன்ற ஆதார நம்பிக்கைகளில் வேரூன்றியது, தனிமனிதன் என்ற கருத்துரு இன்னும் இங்கு உருவாகவில்லை. காந்தி தர்க்கபூர்வமாக பேசியிருந்தால் கோடிக்கணக்கான இந்திய மக்களிடம் பேசியே இருக்க முடியாது, இன்னொரு கோக்கலே ஆக அவர் ஆகியிருப்பார் என்றார் சுந்தர ராமசாமி. மேலும் திலகர் பாணி அரசியல் மத அரசியலாக வளர அது இடமளித்திருக்கும். ''காந்தியைப் பத்தின நினைவுகளில ஒரு சம்பவம் எனக்கு மறக்காம இருக்கு. ஒரு ரூம்ல காந்தி ஒக்காந்திண்டிருக்கார். சுத்தி பெண்கள். அவாள்லாம் அழறா. உள்ள வாரவங்களும் அழறா. ஏன்னு தெரியாது. ஆனா அழறா. அவரைப்பாத்ததும் அப்டியே மனசு பொங்கிடுது அவங்களுக்கு.... அவர் மேல எங்கியோ இருக்கிறவர்னு தெரிஞ்சுடுது. அதில ஒருத்தியாவது அவர் எழுதினத படிச்சிருக்க மாட்டா. அவர் பேசினா அதுகளுக்கு வெளங்கவும் போறதில்ல. அவரோட உடம்பு அவர் போட்டிருக்கிற டிரெஸ் அவர் அவங்களைமாதிரியே சர்க்கா சுத்தறது இதெல்லாம் சேந்து அவர் என்ன நினைக்கிறார்னு சொல்லிடுது. அன்னைக்குவரை இந்தியாவில கோடிக்கணக்கான ஜனங்களுக்கு தலைவர்னா கையில வாள் வச்சிருக்கிற ராஜாதான். இங்க கையில சர்க்கா நூல் வச்சிருக்கிற தலைவர் , ஒரு கொசுவைக்கூட கொல்ல திராணி இல்லாதவர், கேட்டா அம்பது பைசாகூட குடுக்க வக்கில்லாதவர் அவங்களோட தலைவரா ஒக்காந்திண்டிருக்கார். நூறு வருஷத்தில ஆயிரம் வருஷத்தில நடக்கவேண்டிய மாற்றம், அது ஒரே நிமிஷத்ல நடந்திருது. பாருங்க இண்ணைக்கும் அரேபியால ஆப்ரிக்கால அந்த மாற்றம் நடக்கலை.சரித்திர மாறுதல், அதை ஒருமனுஷன் செஞ்சார். அது உணர்ச்சிகள் கிட்ட பேசறது இல்லை. உணர்ச்சிகள்ட்ட பேசறதானா அது நம்ப அண்ணாதுரை மாதிரி இருக்கும். மனித உணர்ச்சிகளில தீய உணர்ச்சிகளை மட்டும்தான் வெளியே இருந்து தூண்டிவிடமுடியும். பொறாமைய, வெறுப்பை.... அவனைப்பார் அவன் தான் உன் எதிரி... அவனாலதான் உனக்கு கஷ்டம்...அவனை ஒழிச்சுகட்டு..அதுக்கு என்னை தலைவனா ஏத்துக்க... உணர்ச்சியை துண்டுற அரசியல்வாதி எப்பவுமே எதிரிகளைப்பத்தித்தான் பேசுவான். கோபத்தை மட்டும்தான் தூண்டுவான். காந்தி பேசினது உணர்ச்சிகள்ட்ட இல்லை. அறிவுகிட்டயும் இல்ல. அவர் அதுக்குமேல இருக்கிற ஒரு ?யர் கான்ஷியஸ் கிட்ட பேசினார். சாதாரண ஜனங்கள் , கைகாலால வேலைசெஞ்சு வாழற ஜனங்கள், பசியை அறிஞ்ச மனுஷங்க கிட்ட ஒரு கான்ஷியஸ் இருக்கு. அது அறம். இல்லாட்டி வேற என்னமோ ஒண்ணுன்னு வைங்க..அது கிட்ட அவர் பேசினார். ஒரு தேசமே காலடியில விழுந்து கெடந்தது... ஒரு தேசமே....'' சுந்தர ராமசாமி பெருமூச்சு விட்டார். மேலைநாட்டு ஜனநாயகம் இங்கே படித்தவர்களின் அதிகாரமாக மாறியது , பெரும்பான்மையான படிக்காதஏழைகளின் குரலை அமுக்கிவிட்டது என்றார் சுந்தர ராமசாமி. ''பழைய அமைப்பில ஒரு விவசாயிக்கு விவசாயம் சார்ந்த கொள்கைகளை வகுக்கிறதில முக்கியமான ரோல் இருந்தது. இண்ணைக்கு என்ன நடக்குதுன்னே அவனுக்கு தெரியாது.... இந்தியா காந்திக்குச் செஞ்ச துரோகம்தான் இருபதாம் நூற்றாண்டில நடந்த பெரிய அநியாயம்....''
காந்தியை இந்தியர்கள் எவருமே புரிந்துகொள்ளவில்லை என்றார் சுந்தர ராமசாமி. வினோபா? '' புரிஞ்சுண்டிருந்தா அவர் அப்டி ஆசிரமத்தில ஒக்காந்து கீதைபடிச்சுண்டு வரவாளுக்கு அனுக்ரகம் பண்ணிண்டிருக்கமாட்டார். அவர் என்ன சங்கராச்சாரியா?". சரி ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரிய கிருபளானி?. ''என்ன லட்சணமா பேசறாங்க பாருங்க... காந்தி வாயில ஒரு தப்பு வருமா...?'' மொரார்ஜி தேசாய்? .''அவர் காலத்திலதான் இந்தியால பியூரோக்ரஸி ஜாஸ்தியாபோச்சு. காந்தியவாதி என்னைக்குமே பியூராக்ராஸிக்கு எதிராத்தான் இருப்பார்....''.ஜெ.சி.குமரப்பா? .''அவருக்கு காந்தியை நன்னா தெரியும்.ஆனா அவர் மனசு இந்திய மனசு இல்ல. அவரு அடிப்படையில வெஸ்டனர்''. மேலைநாட்டினரே காந்தியை நன்றாகப் புரிந்துகொண்டார்கள் என்றார் சுந்தர ராமசாமி. நான் அதை உடனே ஏற்றுக் கொண்டேன்.என்னைப்பொறுத்தவரை காந்தியின் மகத்தான சித்திரத்தை அளித்த முதல் நூல் டாமினிக் லாப்பியர்-லாரி காலின்ஸ் எழுதிய 'நள்ளிரவில் சுதந்திரம்'தான். ''அவரை நன்னா புரிஞ்சுண்டவர் ரொமெய்ன் ரோலந்த், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், இ.எம்.ஷ¤மாக்கர், இவான் இல்லிச்...''.ஏன் மேலைநாட்டினர் காந்தியை புரிந்துகொள்கின்றனர்.''ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட் அப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு...'' சுந்தர ராமசாமியின் ஆச்சரியமளிக்கும் அவதானிப்புகளில் ஒன்று இது.'' அவருக்கு இந்தியா மேல ஆழமான பற்று இருந்தது. ஆனா இந்தியாவை ஒரு வெஸ்டர்னர் பாக்கிற மாதிரித்தான் அவர் பார்த்தார்.பாருங்க எப்பவுமே அவருக்கு உணர்ச்சிகரமான பற்று கெடையாது. சரித்திர மயக்கம் இல்லை. காசிக்கு போறார். கோயில் அழுக்கா இருக்கேன்னுதான் அவருக்குப் படுது. எல்லாத்தையும் சயண்டி•பிக்கா பாக்கிறார் அவர். வயத்துவலியா மலச்சிக்கலா அவுரி விவசாயிகளோட பிரச்சினையா.... எல்லாத்தையும்... அன்னியத்துணி பகிஷ்கரிப்பு எவ்ளவு சயண்டி•பிக்கா யோசிச்சு போட்ட திட்டம் யோசிச்சுப்பாருங்க... அதேமாதிரி உப்பு சத்தியாக்ரகம்...அவருக்கு தெரியும் உப்பைகூட காச்ச விடமாட்டேங்கிறானேன்னு ஜனம் கொதிச்சுப்போகும்னு... வெஸ்டனர் இந்தியாவுக்கு வந்தா இங்க உள்ள அழுக்கும் குப்பையும்தான் கண்ணில படும், காந்திக்கும் அப்டித்தான். எல்லாத்தையும் எப்பவும் சின்ன அளவில செஞ்சு பாத்து அதில உள்ள நடைமுறைப்பிரச்சினைகளை பத்தி யோசிச்சு மேலே கொண்டுட்டு போறார்.... தொடர்ச்சியா எல்லா போராட்ட முறைகளையும் இம்ப்ரூவ் பண்ணிண்டே இருக்கார். மிகப்பெரிய ஒரு சோஷியாலஜிஸ்ட் மாதிரி யோசிச்சு திட்டம் போடறார் மனுஷன்... அவரோட அந்தராத்மா இருக்கே அது வேற யாருமில்ல, இருபதாம் நூற்றாண்டைச்சேந்த ஒரு சயண்டிஸ்டுதான்... அது ராமன்னு கெழம் தப்பா நினைச்சுண்டுடுத்து...'' சுந்தர ராமசாமி சிரித்தார்.''சும்மாவா குஜராத்தின்னா? நேக்குத்தெரிஞ்சு லௌகீகத்ல கெட்டியா இல்லாத ஒரே ஒரு குஜராத்திதான் இருக்கார், நம்மூர்ல புக்ஸ் வித்துண்டிருக்கார்'' [திலீப்குமார்]
நாகர்கோயில் நெய்தல் மாநாட்டுக்கு தொ.பரமசிவம் வந்திருந்தார். கிராமிய ஞானம் அழிந்துவருவதைப்பற்றி அவர் நன்றாகவே பேசினார். நான் எழுந்து-- அப்போது எனக்கு சுந்தர ராமசாமிக்கும் இடையேயான உரையாடல் காந்தி பற்றியது என்பதனால் என் மனம் முழுக்க காந்தியே இருந்தார் -- ஒரு கேள்வி கேட்டேன்.''இந்தமாதிரி ஒரு விஷயத்தைப்பத்தி பேசறப்ப ஏன் காந்தியை விட்டுடறீங்க? இது வினோதமா இருக்கு...''. தொ.பரமசிவம் காந்தி ஒரு வருணாசிரம வெறியர் என்று சொல்லி கடுமையாகப் பேசினார். நான் அது காந்தியைப்பற்றிய அவதூறு தான் என்பது ஒருபக்கம் இருக்க இங்கே பேசப்பட்டவற்றுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். தொ.பரமசிவம் மேலும் கடுமையாக காந்தியை விமரிசனம் செய்தார். அன்று ஆட்டோவில் திரும்பும்போது சுந்தர ராமசாமி ''ரொம்ப நுட்பமான மனம். ஆனா கருத்துக்களை வடிவமைக்கிறதில ஒரு எதிர்மறை வழிமுறையை கத்துண்டிருக்கு.... அதனால அவரோட எல்லைகள் ரொம்ப குறுகிபோச்சு...'' என்றார். பேச்சு இயல்பாகவே காந்திக்கும் வருணாசிரம தர்மத்துக்குமான உறவு குறித்து திரும்பியது. ''காந்தியைப்பத்தி இவங்க பேசறப்ப அவரை ஒரு நிலையான ஸ்டிரக்சர்னு கற்பனை பண்ணிண்டிருக்காங்க. ஒரு நல்ல தத்துவக் கோட்ப்பாட்டை உருவாக்கி நிலைநாட்டிண்டு போக முயற்சிசெஞ்சவர் இல்லை அவர். அவர் ஒரு பெரிய மோவ்மெண்ட். அவரை அப்டித்தான் மதிப்பிடணும். ரெண்டு விஷயம் இதில முக்கியம். ஒண்ணு அவரோட ஐடியாஸ் அம்பதுவருஷமா தொடர்ந்து மாறிண்டே இருக்கு. ஒவ்வொரு விஷயத்தையும் சிந்திச்சு சோதிச்சுப்பார்த்து தொடர்ந்து மாத்திண்டே இருந்த நடைமுறைவாதி அவர். இன்னொண்ணு அவர் ஒரு அரசியல் தலைவர். ஒரு மாபெரும் கட்சி அவர் கீழ இருந்தது. அதில பலதரப்பட்ட மனுஷங்க இருந்தாங்க... அவர் எல்லாரையும் அரவணைச்சு அவங்களையெல்லாம் கன்வின்ஸ் பண்ணி படிப்படியா அவரு நினைச்ச எடத்துக்கு கூட்டிண்டு போகணும், அதெல்லாம் ஈஸியா சொல்லிடற விஷயமில்லை. அப்டிப்பாத்தா மட்டும்தான் அவரை நம்மால புரிஞ்சுக்க முடியும்.'' சுந்தர ராமசாமி சொன்னார். ''காந்தி சின்ன வயசில வர்ணாசிரம தர்மத்தை அவரோட சூழலில இருந்து கத்துண்டார், அதை நம்பினார். அவரை மாதிரி ஒத்தர் அதுக்குமாறான ஒரு கருத்து கிடைச்சதுமே அதான் புதிசுன்னு முன்னாடி நம்பினதை விட்டுடறவர் இல்லை. அவர் கருத்துக்களில எந்த அளவுக்கு பிடிவாதமானவர்னு பாருங்கோ. அவருக்கு மாத்துக்கருத்து தத்துவார்த்தமா நடைமுறை ரீதியா நிப்பணமாகணும். அவரோடது ஒரு வெஸ்டர்ன் மைண்ட். அப்றம் அவருக்கு வர்ணம் சாதி பத்தின மாற்றுக்கருத்து உண்டாச்சு. பிறப்பில ஏற்றதாழ்வே இல்லைண்ணு அவர் திட்டவட்டமா புரிஞ்சு ஏத்துண்டார். அதை அவருக்கு தெளிவாக்கினது நாம, நம்ம மண்ணில வாழ்ந்த நாராயண குரு, தோ இங்கேருந்து நடந்தேபோற தூரத்ல இருக்கு அருவிக்கரை... அங்க பிறந்த நாராயணா குரு. எப்ப அவர் ஏத்துண்டாரோ அதுக்குப்பிறகு அவருக்கு அதுக்காக உசிரைக்குடுக்கிறது கூட இயல்பான விஷயம்.அதான் காந்தி. சும்மா மேடையில சாதி இல்லைன்னு பேசிண்டு வீட்டில தனி டம்ளர் வைச்சுக்கிற மார்க்ஸிஸ்டுகள் மாதிரி இல்லை [ஒரு முக்கிய மார்க்ஸியத் திறனாய்வாளார் வீட்டில் தனி டம்ளரைப்பார்த்த விஷயத்தை சுந்தர ராமசாமி இறுதிநாள்வரை சொல்லிவந்தார்] அவரோட கமிட்மெண்டில அரைவாசி காவாசி நம்ம முற்போக்காளர்களுக்கு இருந்திருந்தா இந்நேரம் இங்க சாதி ஒழிஞ்சிருக்கும். ஆனா இவங்க காந்தி போதுமான அளவுக்கு முற்போக்கா இல்லைண்ணு அவரைத்திட்டுவாங்க...'' சுந்தர ராமசாமி கசப்புடன் சிரித்தபடி சொன்னார்.
காந்தியை தலித் அரசியல்வாதிகள் வசைபாடுவதைப்பற்றி நான் சொன்னேன். மதுரை இறையியல் கல்லூரி ஒன்றில் ஒருநாள் தங்கியிருந்த அனுபவத்தை சுந்தர ராமசாமி சொன்னார் ''காலம்பற கதவைத்திறக்கிறேன், கொழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் குடுக்கிறாங்க. ஓன்னு கத்தி பாடறதுகள்.'எங்களை ஹரிஜன்னு சொல்ல நீ யாருடா கேடுகெட்ட நாயேன்னு...' கண்ணீர் வந்திடுத்து. அதுகளுக்கு என்ன தெரியும்? என்ன படிச்சிருக்கும்ங்க? ஆராய்ந்து பாக்கிற பக்குவம் இருக்குமா? ஏதோ சாப்பாடு எடம் இருக்குன்னு வந்து படிக்கிற ஏழைகள். மனசில ஆழமா வெறுப்பை உக்கார வைச்சாச்சு. அது மாறவே மாறாது. காந்திமேல மட்டுமில்ல காந்தியை ஐடியலா வைச்சிருக்கிற இந்த தேசம் மேலேயே வெறுப்பு... அதனால யாருக்கு என்ன லாபம்? அன்னியப்பட்டுப்போன ஒரு தனி சமூகம் உருவாகும்ங்கிறதவிட்டா என்ன நடக்கும்? யாரு இதையெல்லாம் பிளான் போட்டு செய்றா? புரியலை...காந்தியோட சிரிப்பு கண்ணுல தெரிஞ்சது. மனுஷனோட அற்பத்தனத்தையும் குரூரத்தையும் அவரை மாதிரி அளந்து வச்சிண்டவா யார் இருக்கா?'' சுந்தர ராமசாமி சொன்னார்.''தலித்துக்களோட கக்கூஸை சுத்தம் பண்ணி மலத்தை சுமந்தார் காந்தி. இண்ணைக்கும் நம்ம முற்போக்காளர்களிலயோ திராவிட அரசியல் வாதிகளிலயோ கோட்பாட்டாளார்களிலயோ எவருமே அதை செய்ய மாட்டாங்க.ஒரு தேசத்துக்கு அது எத்தனை பெரிய செய்தி பாருங்க. அவரைச்சுத்தி இருந்தவங்க யாரு? புருஷோத்தம்தாஸ் தாண்டன், பட்டாபி சீதாராமய்யா, சீனிவாச சாஸ்திரி, கெ.சி.பந்த், ராஜேந்திர பிரசாத்.... சாதியில ஊறின மட்டைங்க. எல்லாரையும் அவர் அணைச்சுபோகணும். அவர் தனியா நடக்கிற தத்துவக்கிறுக்கன் இல்லை, பிரம்மாண்டமான இயக்கத்தோட தலைவர்.அந்த அமைப்புக்குள்ளயும் அவர் தலித் விடுதலை பத்தின கருத்துக்களை ஏத்துக்க வைச்சார்.அவங்க வேற வழியில்லாம அதுக்கு தலையாட்டினாங்க. யோசிச்சுப்பாருங்க, தேசவிடுதலை கிடைச்சப்ப யார்ட்ட பவர் வந்தது, பெரும்பான்மைங்க கிட்ட. அதான் டெமாக்ரஸி. இந்த பெரும்பான்மை தலித்துக்களை நாய்க்கும் கீழா நடத்தினவங்க. ஆனா அரசியல்சட்டம் தலித்துக்களுக்கு பாதுகாப்பும் சமத்துவமும் மட்டுமல்ல தனிச்சலுகையும் வழங்கினப்ப இங்க ஒரு சின்ன குரல்கூட எழலை. ஏன்? அது அம்பேத்கர் பண்ணின சாதனையா என்ன? இல்லை. காந்தி காங்கிரஸை முப்பதுவருஷமா த்ள்ளி உந்தி அங்க கொண்டுவந்து சேத்திருந்தார். முணுமுணுத்திருப்பாங்க, புழுங்கியிருப்பாங்க.ஆனா வேற வழி இல்லை. அப்டிப்பாத்தா இந்த தேசத்தில தலித்துக்களுக்கு மிக அதிகமா பண்ணினவர் அவர்தான். இங்க உள்ள உயர்சாதிகளோட ஆத்மாவைத் தொட்டு சகமனுஷங்களைப்பத்தி யோசிக்கச்சொன்னவர் அவர்தான். அம்பேத்கர் அவரை திட்டினதை வைச்சு இண்ணைக்கு இங்க உள்ளவங்க சத்தம் போடறாங்க. அரசியல்வாதின்னாலே அரைவேக்காடுங்கதானே ... காந்திக்கு தலித்துக்களை தனிச்சமூகமா ஒதுக்கிறதில உடன்பாடு இல்லை. அதை அம்பேத்கர் ஒரு சதியா பாத்தார். அவர் காந்தியை சந்தேகப்படலை, கட்சிக்குள்ள இருக்கிற முதலைகளை பாத்து காந்தி சமரசம் பண்ணிண்டார்னு அவர் நினைச்சார்.... ஆனா முஸ்லீம்களுக்கான தனித்தொகுதி எப்டி தேசத்தை பிரிச்சுதுன்னு பாத்தவர் காந்தி... அவர் சொல்றது தப்போ சரியோ அதில ஒரு கேஸ் கண்டிப்பா இருக்கு. பெரும்பான்மை மக்கள்ட்டேருந்து துண்டிச்சுண்டு தலித்துக்கள் அடையறது ஒண்ணுமில்லை. அவங்க தனிமைப்பட்டு •ப்ரூஸ்ட்ரேட் ஆறது மட்டும்தான் நடக்கும்....இன்னைக்கு அவங்களை அரசியல்வாதிங்க வையலாம். நாளைக்கு தலித்துக்களுக்குள்ளயும் ஸ்டேட்ஸ்மான் வரலாம். அப்ப அவங்களுக்கு புரியும் அவரை....''
டி.ஆர்.நாகராஜ் காந்தியத்தையும் அம்பேதாரியத்தையும் ஆக்கபூர்வமாக இணைப்பது குறித்து எழுதிய எரியும் பாதம் [ தி •ப்லேமிங் •பூட்] என்ற நூலை நான் அவருக்குச் சொன்னேன். அதைப்பற்றி நானும் நாகராஜும் டெல்லியில் சாகித்ய அக்காதமி கூட்டத்துக்கு சென்றிருந்த நாட்களில்பேசியிருந்தோம். அப்போது அவர் அக்கருத்துக்களை விவாதித்துக் கொண்டிருந்தார். கோபிசந்த் நாரங்க், மகரந்த் பரஞ்ச்பே,ஜி.என்.டெவி ஆகியோருடன் நாகராஜ் ஆர்வமாக உரையாடும்போது நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவ்விவாதங்களைப்பற்றி சுந்தர ராமசாமியிடம் சொன்னபோது மிகவும் உற்சாகம் காட்டினார். பிறகு கோவையில் சிற்பி பாரதிதாசன் பல்கலையில் கூட்டிய பின்நவீனத்துவம் பற்றிய கூட்டத்திற்கு நாகராஜ் வந்திருந்தார். அப்போது அந்நூல் வந்து விரிவாகப்பேசப்பட்டுக் கொண்டிருந்தது. சுந்தர ராமசாமியிடம் பேசியபோது ''காலச்சுவடுக்காக அவரை ஒரு இண்டர்வியூ எடுங்கோ'' என்றார்.நானும் கோபால கிருஷ்ணனும்[ அப்போது சூத்ரதாரி] பெங்களூருக்குச் சென்று பேட்டி எடுத்தோம். அது ஒரு விவாதத்தை தமிழில் உருவாக்கும் என எண்ணினோம், எழவில்லை. ஆனால் பல வாசகர்களில் அது தெளிவை உருவாக்கியது. இன்றும் மிகவும் படிக்கப்படும் பேட்டிகளில் ஒன்றாக அது உள்ளது. அந்நூலை ஒட்டி சுந்தர ராமசாமி எஸ்.வி.ராஜதுரை எழுதிய 'இந்து இந்தி இந்தியா' என்றநூலைப் படித்தார்.''பாருங்க, நாகராஜ் எங்க இருக்கார், எஸ்.வி.ஆர் எங்க இருக்கார்!நாகராஜோட தர்க்கங்களில இருக்கிற இண்டெக்ரிட்டி அவரோட எனிமிகளைக்கூட அவர்ட்ட பேச வைக்கும்...''என்று மட்டும் சொன்னார். அந்நூலில் காந்தி நேரு பற்றி சொல்லப்பட்டிருந்த கருத்துக்களைப்பற்றிக் கேட்டேன்.''திருக்குறளில வருமே நெஞ்சுக்கு தெரிஞ்சதை பொய் சொல்ல்ப்பிடாதுண்ணு...'' நான் ''தன் நெஞ்சறிவது பொய்யற்க'' என்றேன். ''ஆமா, அதை மட்டும்தான் எஸ்விஆருக்கு சொல்ல முடியும்'' என்றார் சுந்தர ராமசாமி .நான் அந்நூலை எதிர்கொள்வது பற்றி ஏதோ சொன்னபோது.''உங்களுக்கு ஒரு சண்டை போட்ட திருப்தி வேணும்னா செய்யுங்கோ... மத்தபடி இந்த புஸ்தகத்தில டிபேட்டுக்கு எடமே இல்லை.காந்தி நேருவோட நேர்மையை கொஸ்டின் பண்றவர் பதிலுக்கு உங்க நேர்மையை கொஸ்டின் பண்ணுவார். நீங்க அவர் நேர்மையை கொஸ்டின் பண்ணலாம், அவ்ளவுதான்'' என்றார். அந்நூல் எதையாவது நிறுவுமென்றால் வரலாற்றிலும் கருத்தியலிலும் உண்மைக்கு தன்னை நிறுவிக்கொள்ளும் வல்லமை இல்லை என்றே பொருள் என்ற சுந்தர ராமசாமி அந்நூலை முற்றாகவே புறக்கணித்துவிட்டார். எப்போதும் அதைப்பற்றி பேசியதில்லை.
அப்போது நிறப்பிரிகை பெரியாரியத்தை ஆவேசமாக முன்வைத்த காலம். அது ஒரு வெறும் பரபரப்புதான் என்று சுந்தர ராமசாமி எண்ணினார். சோவியத் ருஷ்யா உடைந்ததனால் வெளியே வந்தவர்கள் அடுத்த கோட்பாட்டை தழுவ முயலும் பதற்றம்தான் அது. அதில் எவருமே ஆழமாக சிந்திக்கவில்லை, ஏற்கனவே சொல்லிவந்தவற்றையே பெரியார் பேரைச்சொல்லி மீண்டும் முன்வைக்கிறார்கள் என்று சுந்தர ராமசாமி சொன்னார். அதை ஒட்டி சுந்தர ராமசாமி பெரியாரைப்பற்றி நிறையவே பேசினார். நான் ஈ.வே.ராவை முற்றாகவே நிராகரித்தேன். என் தலைமுறையின் நோக்கில் அவர் சமூக இயக்கத்தின் உடசிக்கல்களையும் மனித மனத்தின் ஆழத்தையும் அதில் மரபு ஆற்றும் பங்கையும் உணராத பாமரர் தான் என்று வாதிட்டேன். இன்றும் ஈ.வே.ரா பற்றி எனக்கு சாதாரணமான ஒரு மரியாதை மட்டுமே உள்ளது. அவருக்கு சமூக சீர்திருத்த நோக்கம் இருந்தது என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் அவரை நான் ஒரு சிந்தனையாளராகவோ அறிஞராகவோ எண்ணவில்லை.இப்படி ஒரு மதிப்பீட்டை நான் கொண்டிருக்க எனக்கு உரிமையே இல்லை என்று பெரியாரியர் அனேகமாக அனைவருமே கொள்ளூம் விவாதமே இல்லாத வெறியும் அவர்களின் வசைபாடலும் எனக்கு அவர் மீதிருக்கும் கருத்துநிலையை மேலும் உறுதி செய்கின்றன. ஆனால் இக்கருத்து பலர் எண்ணுவது போல சுந்தர ராமசாமி எனக்களித்தது அல்ல. சுந்தர ராமசாமி இதற்கு எதிராகவே வாதிட்டிருக்கிறார்.பெரியார் பிராமணர்களை தாக்கியது தகும் என்றே சுந்தர ராமசாமி எண்ணினார். அவரைபொறுத்தவரை பெரியார் ஒரு முக்கியமான சமூக சீர்திருத்தவாதி, அடிப்படைகளைப்பற்றிய வினாக்களை எழுப்பிய சிந்தனையாளர். அவரிடம் சுந்தர ராமசாமி கண்ட இரு குறைகள் அவரது அறிவியக்கம் முற்றிலும் எதிர்மறைத்தன்மை கொண்டிருந்தது என்பதும் அவர் விவாதிக்க மறுத்து வெறுப்பின் மொழியில் பேசினார் என்பதும் ஆகும். அவரைப்பின்பற்றுபவர்களிடம் பல சமயம் அந்த நன்னோக்கம் இல்லாமலாகி வெறும் கரிப்பு மட்டுமே எஞ்சுகிறது. இந்த எதிர்மறைத்தன்மை காரணமாகவே அவ்வியக்கம் அறிவியக்கம் என்ற அளவில் பெரிய வெற்றிகளை அடையவில்லை. நல்ல இலக்கியத்தையோ சிறந்த ஆய்வுகளையோ கூட அது உருவாக்கவில்லை. தனித்தமிழியக்கம், தமிழிசை இயக்கம் போன்றவற்றின் வெற்றிகளையே திராவிட இயக்கம் உரிமைகொண்டாட முடிகிறது. ''பொதுப்புத்தி மட்டும் தான் அவங்க கிட்ட இருந்தது. வேற இண்டலக்சுவல் வெப்பனே இல்லை'' என்றார் சுந்தர ராமசாமி.எதிர்மறைத்தன்மை கொண்ட இயக்கம் காலப்போக்கில் தன் படைப்பு சக்தியை இழந்துவிடும். மக்களின் வாழ்க்கையில் முன்னகர்வுக்கே இடமிருக்கிறது என்பதனால் அது மெல்ல தேங்கி குறுங்குழு வாதமாக ஆகும்.
கடைசியில் பெரியார் ஒரு சின்ன குழுவை மட்டுமே தன்னுடன் வைத்திருந்தார்.ஆகவே அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் எதிர்த்தார், விமரிசித்தார். அதை வைத்துக்கொண்டு அவரை இன்று பின்நவீனத்துவக் கட்டுடைப்பாளராகக் கொண்டாடுகிறார்கள் என்றார் சுந்தர ராமசாமி. ஆனால் அவரது கூற்றுகளுடன் அவரது நடவடிக்கைகளை இணைத்துப் பார்க்கும்போது எதிர்காலத்தில் பல கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலாது. பெரியார் எப்போதுமே தலித்துக்களை அவர்கள் என்றுதான் சொன்னார். அவரது 'நாம்'ல் தலித்துக்கள் அடங்கவில்லை.தலித்துக்களுக்கு எதிரான கலவரங்களில் அவர் மௌனம் காத்தார். அது இயல்பே. காந்தி போல நேரடியாக அவர் ஓர் இயக்கத்தை நடத்தவில்லை என்றாலும் அவருக்கும் கண்ணுக்குத்தெரியாத ஓர் ஆதரவு வட்டம் இருந்தது. அவர்களை முற்றாகப்பகைத்துக் கொண்டு அவர் செயல்பட முடியாது. அவர்களை தன் எண்ணத்தை நோக்கி திருப்பும்பொருட்டு உள்ளிருந்தே போராடுவதை மட்டுமே செய்ய முடியும். அதை பெரியார் உண்மையாகவே செய்தார். ஆனால் இன்றும் நடைமுறையில் சராசரி காந்தியர்களைவிட சராசரி பெரியாரியர்கள் தலித் விரோதிகள் என்றார் சுந்தர ராமசாமி. தென்மாவட்டங்களில் கடுமையான தலித் ஒடுக்குமுறை உள்ள பகுதிகள் திராவிட இயக்கத்தின் கோட்டைகளாக பல ஆண்டுகளாக விளங்கிவருபவை. பெரியாரின் நோக்கத்தை குறைசொல்ல முடியாது, ஆனால் தன் எல்லைக்குள் நின்றே அவரும் போராட முடிந்தது. ''காந்திமேல நம்ம பெரியாரிஸ்டுகள் சொல்ற குற்றச்சாட்டு நேரடியா பெரியார் மேல விழும். அந்த கேள்வி இன்னும் சில வருஷங்களில கண்டிப்பா வரும்.பெரியார் என்ன சொன்னார்னு மேற்கோள்காட்டித்தான் தப்பிச்சுக்க முடியும், ஏன்னா ஸ்டிராங்கா சொல்றதுக்கு பெரியாருக்கு தயக்கமே இல்லை. காந்தி அடக்கித்தான் சொல்வார். பெரியார் செஞ்சதை இல்லாட்டி செய்யாததை வைச்சு அவர விமரிசனம் பண்ணுவாங்க. காந்தி ஏன் காங்கிரஸ¤க்குள்ள தலித்துக்களை தலைமைக்கு கொண்டுவரலை அதுக்காக ஏன் உண்ணாவிரதம் இருந்து சாகலைன்னு கேப்பாங்க டீக்கெக்காரங்க. அதுக்கு உண்ணாவிரதம் இருந்தா செத்திருவோம்னு தெரியாத ஆளா அவரு? இப்ப தலித்துக்கள் கேக்கலாமில்லியா, பெரியார் பிராமணனை திட்டினதுக்கு தனி டம்ப்ளர் வைச்ச தேவரை ஒரு நாலு வார்த்தையாவது திட்டியிருக்கலாம்னு... பாருங்க இனிமே பெரியாரோட பேச்சுகளை மேற்கோள்களா தொகுத்து வைக்கிற வேலைதான் நடக்கும்... பெரிய பயாக்ர•பிகள் வரும். அதான் அவரோட ஷீல்டு'' அப்போது எஸ்.வி.ராஜதுரையின் பெரும் தொகைநூல் வந்திருக்கவில்லை."
நன்றி: ஜெயமோகன் "சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்" - உயிர்மை பதிப்பக வெளியீடு - விலை ரூபாய் 100.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இப்போதுதான் நிதானமாக படித்தேன். இங்கே வழங்கியதற்கு நன்றி!
Post a Comment