என் தலையணைக்கருகில் நான் படித்துக் கொண்டிருக்கிற புத்தகங்களும் தூங்கும். சில நேரங்களில் என்னோடு அப்படி ஒரு புத்தகக் குவியலும் தூங்குவதுண்டு. எல்லாமே நான் படிக்கிற புத்தகங்கள் மட்டும் அல்ல. என் துணைவியார் படிக்கிற புத்தகங்களும் அவற்றுள் அடங்கும். சில நேரங்களில், அவர் என்ன படிக்கிறார் என்பதற்காக அவர் படிக்கிற புத்தகங்களை எட்டிப் பார்ப்பதுண்டு. அவை ஆர்வமூட்டுவனவாக இருந்தால் படித்துக் கொண்டிருப்பதைக் கீழே வைத்துவிடுவேன். அவற்றில் ஒன்றைப் படிக்க ஆரம்பித்து விடுவேன். குழந்தை வளர்ப்பு, ஆன்மீகம், நீதி நூல்கள், சிறுகதைகள் என்று இப்படி வாசித்தவை பல.
சமீபத்தில் படுக்கையில் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் காணக் கண்டேன். விகடன் பிரசுர வெளியீடு. துணைவியார் இந்தியா சென்றிருந்தபோது அவர் வாங்கி வந்திருக்க வேண்டும். அல்லது நண்பர்கள் யாரேனும் வாங்கிக் கொடுத்தனுப்பி இருக்க வேண்டும். நான் எழுதுவதற்கு முன் இரண்டு பேரைப் படிக்க வேண்டும் என்று விரும்புவது உண்டு. ஒன்று - ஜெயகாந்தன். அவர் சிந்தனையின் தெளிவு என்னைக் கவர்ந்தது. அந்தத் தெளிவுடன் எழுத்து இருப்பது எழுத்துக்கு அழகு. இரண்டு - சுஜாதா. அவரது உரைநடையின் எளிமை என்னைக் கவர்ந்தது (இதை ஏற்கனவே சொல்லியும் இருக்கிறேன்.) அவசரத்தில் எழுதுவதாலும், நனவோடை மாதிரி எழுதுவதாலும், தமிழ் தெரியாமல் எழுதுவதாலும், என் வாக்கியங்கள் சிக்கலானவையாக இருந்திருக்கின்றன. ஒரு பத்தி அளவுக்கு எழுதிப் பின் முற்றுப்புள்ளி வைக்கிற வழக்கத்தைக் கொண்டிருந்திருக்கிறேன். சுஜாதாவைப் படிக்க படிக்க எளிய வாக்கியங்களின் அழகு புலப்பட்டது. ஒரு வாக்கியத்தில் ஆறேழு வார்த்தைகளுக்குமேல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார். சிந்தனையின் தெளிவை ஜெயகாந்தனும், எழுத்தின் எளிமையை சுஜாதாவும் ஒவ்வொருமுறையும் எனக்குச் சொல்லித் தருகிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதை - அவர்கள் சாயல்படாத, எனக்கு உரித்தான தெளிவாகவும், நடையாகவும் மாற்றிக் கொள்வதே ஒரு சிந்தனையாளனாக, எழுத்தாளனாக என் முன் உள்ள சவால். கற்றதும் பெற்றதும் புத்தகத்தைப் படிக்கும்போது இது மீண்டும் உறுதிப்பட்டது.
அறிவியல் செய்திகள், இணையம், சுயசரிதக் குறிப்புகள், பழந்தமிழ் இலக்கியம், பயண அனுபவங்கள், எதிர்காலம், புத்தகங்கள், சினிமா, சுஜாதாவைக் கவர்ந்த கவிதைகள், சந்தித்த நபர்கள், சின்னஞ்சிறுகதைகள், பிறமொழி எழுத்தைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். இப்போது படிக்கும்போதும் பல கட்டுரைகள் மெல்லிய புன்முறுவலைக் கொண்டுவருகின்றன. சுஜாதாவின் குறும்பும் கூர்மையும் பல இடங்களில் மிளிர்கின்றன. அவருக்குப் பிடித்த கவிதைகளைச் சுஜாதா புத்தகம் நெடுகப் பகிர்ந்து கொண்டு வருவது ஆரோக்கியமான செய்தி. அக்கவிதைகளை எழுதியவர்கள் பலநேரங்களில் சுஜாதாவுக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது அவரை அறிந்தவர்களாகவோ இருக்கிறார்கள். ஆனாலும், அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. சுஜாதா இப்படித் தொடர்ந்து கவிதையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருப்பதுவே அவர் எழுத்தை இன்னும் இளமையாக வைத்திருக்கிறது என்று நம்புகிறேன். வளர்ந்து வருகிற எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது.
சுஜாதா பணியாற்றிய திரைப்படங்கள், அவருடைய திரைப்பட மற்றும் எழுத்துலக நண்பர்கள் பற்றிய பாராட்டுக் குறிப்புகள் இத்தொகுப்பில் நிறைய இடம் பெறுகின்றன. சுஜாதாவின் அப்பார்வைகளில் சாய்மானம் இருக்கிறதென்று நான் உணர்கிறேன். ஆனாலும் அதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது. "பிடித்தவர்கள்/நண்பர்களை மட்டும் பாராட்டுகிறார்" என்று யாரையும் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. யாரையும் முன்னிறுத்துவதோ அடையாளம் காட்டுவதோ ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் வேலை அல்ல என்று நான் நம்புகிறேன். தன் திறமையின்மீது நம்பிக்கையில்லாத, வளரும் திறமைசாலியே, புகழ்பெற்ற இன்னொருவர் தன்னை முன்னிறுத்த வேண்டும், தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். சமூகமும், சக படைப்பாளிகளும் தர மறுக்கிற மரியாதையை, அங்கீகாரத்தை எதிர்த்துப் போராட நல்ல எழுத்தாளருக்கு உள்ள சிறந்த வழி தொடர்ந்து எழுதித் தன்னை நிரூபிப்பதுதான். அப்போது, காண மறுத்த சமூகம் விருது கொடுக்கும். அங்கீகரிக்க மறுத்த சகா பாராட்டுப் பத்திரம் வாசிப்பார். ஆதலால், சுஜாதா பாராட்டுகிற விஷயங்களையும் நபர்களையும் - யாரையும் முன்னிறுத்துகிற நோக்கமின்றி - அவரின் ரசனைக்கேற்பப் பாராட்டுகிறார் என்றே எடுத்துக் கொள்ள விரும்புகிறேன், முயல்கிறேன்.
சுஜாதா பாராட்டுகிற விஷயங்களும் படைப்புகளும் அப்பாராட்டுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்பதை ஒவ்வொருவரும் தம் ரசனைக்குப் பொருத்திப் பார்த்துக் கொண்டு, இல்லையென்றால், மேற்கொண்டு செல்ல வேண்டியதுதான். பொதுவாகவே ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது, "அவரைப் பாராட்டுகிறார், இவரைப் பாராட்டவில்லை" என்றெல்லாம் தமிழில் எழுகிற குரல்களைக் காணும்போது அசிங்கமாக இருக்கிறது. விமர்சனம் என்ற பெயரில் சண்டைகள் மலிந்துபோன தமிழ்ச் சூழலில், யாரும் யாரையும் பாராட்டினாலும் - பாராட்டப்படுபவருக்கு அதற்கானத் தகுதியில்லை என்றாலும்கூட - எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அந்த முதிர்ச்சியைத் தந்த காலத்திற்கு வந்தனம். சுஜாதா தேர்ந்தெடுக்கிற வருடக் கடைசியின் "சிறந்த" பட்டியல்கள் பலவற்றின்மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. அதை எழுதியும் இருக்கிறேன். ஆனாலும், அதற்கு மாற்று, சுஜாதாவைக் குறை சொல்வதில் மட்டும் இல்லை. அந்த மாதிரி இன்னும் நிறைய பட்டியல்கள், நிறைய பேரிடமிருந்து வருவதன்மூலமே, இதில் ஒரு தரத்தை ஏற்படுத்த முடியும்.
மணிக்கொடி இதழ் தொகுப்பில் வ.ரா. சொல்லுக்கு மதிப்பு என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் பற்றி என் சிந்தனைத் தாவல்கள் (http://pksivakumar.blogspot.com/2006/02/blog-post_12.html) கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். சில வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறேன். இத்தொகுப்பில் சுஜாதாவும் அக்கட்டுரையையும் அதே வரிகளையும் மேற்கோள் காட்டுகிறார். இந்த ரசனை ஒத்திசைவு ஓர் எதிர்பாராத மகிழ்வைத் தந்தது.
சரஸ்வதி இதழ்களின் தொகுப்பு கலைஞன் பதிப்பகத்தால் சரஸ்வதி களஞ்சியமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேல்நாட்டுத் தமிழறிஞர் கமில் ஸ்வெலபில் எழுதிய "சமஸ்கிருதமும் தமிழும்" என்ற ஒரு நல்ல கட்டுரை இருக்கிறது. இதைத் தட்டச்சு செய்து என் வலைப்பதிவிலும்/திண்ணையிலும் பிரசுரிக்க வேண்டும் என்று நண்பர்களிடம் வெகுநாட்களாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்னும் முடியவில்லை. அந்தக் கட்டுரையைப் பற்றியும் சுஜாதா குறிப்பிடுகிறார். இது எதிர்பாராத ஆச்சரியம் கலந்த இரண்டாவது மகிழ்ச்சி.
வையாபுரிப் பிள்ளையின் நூல்கள் மீதான என் ஆர்வத்தை ஆரம்பித்து வைத்தவர்களுள் சுஜாதாவும் ஒருவர். கணையாழியின் கடைசிப் பக்கங்களில் வையாபுரிப் பிள்ளையைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தது என் ஆர்வத்தைத் தூண்டியது. இத்தொகுப்பிலும், வையாபுரிப் பிள்ளையைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்:
"பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளை அவர்களின் நினைவுதினம். அவருடைய ஆராய்ச்சி முறைகளையும் முடிவுகளையும் மேல்நாட்டு பல்கலைக் கழகங்களில் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அவரை மறந்துவிட்டதற்குக் காரணம் - அவர் ஆணித்தரமான ஆதாரங்களுடன் தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றின் காலத்தை சில நூற்றாண்டுகள் தள்ளிப் போட்டதுதான். திருக்குறளின் காலத்தை அவர் ஆறாம் நூற்றாண்டு என்று சொன்னதற்குக் காரணங்கள் இவை: குறள் ஒரு கீழ்க்கணக்கு நூல். 'கள்' விகுதி தொல்காப்பியத்தில் அ·றிணைக்கு மட்டும் பயன்பட்டது. திருக்குறளில் உயர்திணையிலும் பயன்படுகிறது. 'ஒப்பாரி', 'அப்பர்' போன்ற புதுச் சொற்கள். 'போழ்து', 'ஆயினால்' போன்ற பிரயோகங்கள். 'பாக்கியம்', 'பூசனை', 'மந்திரி', 'ஆசாரம்' போன்ற 123 வடமொழி வார்த்தைகள். 'ஒருவந்தம்' போன்ற கலவைச் சொற்கள் - இவற்றையெல்லாம் வைத்துச் சொல்கிறார். மறுப்பது கஷ்டமாக இருக்கிறது."
இன்டர்நெட் எழுத்தைப் பற்றியும் இதில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் சுஜாதா. வலைப்பதிவிலும் இணையத்திலும் எழுத ஆரம்பித்திருக்கிற நிறைய பேருக்கு உவக்காத கருத்தொன்றை மேற்கோள் காட்டுகிறார். புஷ்கார்ட் பிரைஸ் (Pushcart Prize) தொகுப்பாசிரியர் பில் ஹெண்டர்சனின் மேற்கோள் அது. ஏறக்குறைய ஏழெட்டு வருடங்களாகத் தமிழ் இணைய எழுத்துவெளியை அவதானித்து வந்திருப்பதில், இந்த மேற்கோளுடன் முழுவதுமாக ஒத்துப் போகிற முதிர்ச்சியை அடைந்திருக்கிறேன்:
"சைபர்வெளியில் உலவும் ஆரவாரங்களையும் படித்துத் தேர்ந்தெடுத்து வெளியிட வேண்டும் என்று போனவருடம் ஒருவர் சொன்னார். நம்முடைய கலாசாரத்தை ஆக்ரமிக்கும் இந்த எலெக்ட்ரானிக் புரட்சியின் 'ப்ளக்'கைப் பிடுங்கிவிட விரும்புகிறேன். ஏதோ ஒரு வேர்டு ப்ராசசரில் (சொல் தொகுப்புக்கான மென்பொருள்) எதையாவது எழுதி அடுத்த நிமிஷமே அதை இன்டர்நெட்டில் போட்டுவிட்டுத் தங்கள் படைப்பு பிரசுரமாகிவிட்டதாக முதுகைத் தட்டிக் கொள்பவர்கள் தம்மை மோசமாக ஏமாற்றிக் கொள்கிறார்கள். இலக்கியத்தில் உடனடி திருப்தி என்பது முடியாது, கிடையாது. அற்புதமாக, சிறப்பாக எழுத சிறப்பாக பழக வேண்டும். எழுதி எழுதித் திருத்தி எழுதி, பிரசுரத்துக்கு அனுப்பி, நிராகரிக்கப்பட்டு, அந்த வேதனைக்குப் பின்தான் நல்ல இலக்கியம் உருவாகும். மாக்கிண்டாஷ் கணிப்பொறியில் எதையாவது எழுதிப் பதிப்பிப்பது இலக்கிய அந்தஸ்துக்கு உத்தரவாதமில்லை. வார்த்தைகளைத் தொகுப்பது அவற்றுடன் விளையாட அல்ல. வார்த்தைகள் நமக்குக் கிடைத்த சிறந்த பரிசுப் பொருள்கள். நாம் பேசவும் பிரார்த்திக்கவும் பயன்படுத்தும் அற்புதங்கள். அவை மூலம் உண்மையை அணுகுகிறோம். வார்த்தைகள் சாப்பிடும் பண்டங்கள் அல்ல. ஒரு இயந்திரம் உங்கள் வார்த்தைகளைத் தொகுக்க முடியாது. உங்கள் கனவுகளையும் காட்சிகளையும் உண்டாக்க முடியாது. மெஷின்கள் உங்கள் படைப்புகளைப் பிரசுரத்திற்கேற்றவாறு மாற்ற முடியாது. எதையாவது எழுதி இன்டர்நெட்டில் உடனடியாகப் பதிப்பது சுலபம்தான். ஆனால், அவ்வளவும் சைபர்காஸ் (cybergas)."
நாகூர் ரூமியின் கவிதையொன்றை ஒரு கட்டுரையில் சுஜாதா குறிப்பிடுகிறார். சுஜாதாவும் இரா.முருகனும் எழுதிய பின்னரே, நாகூர் ரூமியின், குட்டியாப்பாவைப் படித்தவன் நான். "அலுப்புத் தராமல் நுணுக்கமாக, லேசாகப் புன்னகைக்கும் விவரங்கள் தரும் சிறுகதை எழுத்தாளர்" என்று ரூமியைப் பற்றி சுஜாதா சொல்வது உண்மை. சுஜாதா உதாரணம் காட்டுகிற ரூமியின் கவிதை. இதன் மூன்றாவது வரி தேவையில்லை என்கிறார் சுஜாதா.
பஸ்ஸில் போனபோது
சாலையோரம் இரண்டு செம்பாறைகள்
ஒன்றையொன்று கேலிசெய்து கொண்டன
ஒன்று உறுதியளித்தது
இயேசு சீக்கிரம் வருகிறார்
இன்னொன்று சொன்னது
hmt வாட்ச்சுகள்
உங்கள் நேரத்தைச்
சரியாகக் காட்டும்.
இவ்வளவு நல்ல படைப்பாளியான ரூமி ஒரு மத அடிப்படைவாதியாகவும், பெண் குறித்த பார்வையில் பிற்போக்குவாதங்களை நியாயப்படுத்துபவராகவும் தடம் புரண்டு போனது விபத்தா விதியா?
சுஜாதாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் - இத்தொகுப்பில் சில "ஜல்லி"யான பகுதிகளும் உள்ளன. இணையத்தில் சுற்றிவரும் மடல்களின் தமிழாக்கம் (உதாரணம்: ஹாலிவுட் படங்களின் காட்சிகள் எப்படியிருக்கும்?), விண்டோஸ் மென்பொருள் அமைப்பின் கட்டளைகளுக்கான சென்னைத் தமிழ் மொழியாக்கம் என்று சுஜாதா ஒப்பேற்றியிருக்கிற பகுதிகளும் இருக்கின்றன. அவற்றை தொகுப்பின் நகைச்சுவை/பொழுதுபோக்கு பகுதியில் சேர்த்துவிட்டு, மேற்கொண்டு படித்தேன்.
ஆனாலும், இத்தொகுப்பை முடித்தவுடன் தோன்றிய விஷயங்கள் இரண்டு.
எழுத்தையும் மனதையும் இளமையாக வைத்திருக்கவும், எது வந்தாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கவும் சுஜாதாவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி: கற்றதும் பெற்றதும் - சுஜாதா - விகடன் பிரசுரம் - முதற் பதிப்பு: ஜனவரி 2003 - விலை ரூபாய் 85.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//எழுத்தையும் மனதையும் இளமையாக வைத்திருக்கவும், எது வந்தாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கவும் சுஜாதாவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்//
நான் சுஜாதாவிடமிருந்து கற்றுக் கொண்டதாய் நினைப்பது இதுவே :-)
உங்களிடமிருந்து, வழக்கம் போல், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நல்லதொரு நூல் விமர்சனம். நன்றி.
பில் ஹெண்டர்சனின் வார்த்தைகள் கட்டுரைகளை விட கவிதைகள், புதினங்கள் ஆகியவற்றிற்கு அதிகம் பொருந்தும் என்று தோன்றுகிறது.
ஸ்ரீகாந்த்
உஷாஜி, ஸ்ரீகாந்த்ஜி -
நன்றி!
அன்புடன், பி.கே. சிவகுமார்
Post a Comment