Wednesday, June 14, 2006

பூனை - தேவதேவன்

எழுத்தாளர் ஜெயமோகனிடமிருந்து எப்போதேனும் மின்மடல்கள் வரும். வலைப்பதிவிலோ திண்ணையிலோ நான் எழுதியதைப் படித்தால், அதைப் பற்றிச் சொல்ல அவருக்கு ஏதும் இருந்தால் எழுதுவார். சென்ற முறை சென்னை சென்றபோது அவரைச் சந்தித்துச் சில மணிநேரங்கள், இலக்கியம் பற்றி மட்டுமே பிரசன்னாவும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அவர் திரைப்படமொன்றுக்கு வசனம் எழுதுவதற்காகச் சென்னைக்கு வந்து அதில் மும்முரமாக இருந்த நேரம். நேரம் போவது தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. அவரின் நண்பர் சுரேஷ் கண்ணனும் வந்து சேர்ந்தார். மதிய உணவினூடே தொடர்ந்து முடிந்த அந்த உரையாடலின் பல வாக்கியங்கள் மனதில் தங்கியுள்ளன.

வடக்குவாசலில் வெளியான என் சிறுகதையைப் படித்துவிட்டு அவர் எழுதியது. "உங்கள் கதையை படித்தேன். நல்ல முயற்சி. ஆனால் முக்கியமாக ஒன்றை சொல்லவேண்டும். ஒரு கதையில் உள்ள தகவல் பின்னணி அக்கதையின் மையம் - உணர்ச்சிகரம் ஆகியவற்றுக்கு தேவையானதாக மட்டுமே இருக்கவேண்டும். எவ்வளவு குறைவாக முடியுமோ அவ்வளவு குறைவாக. மேலும் தகவல்கள் மற்றும் சூழல் சித்தரிப்புகள ஆசிரியர் வேண்டுமென்றே செய்தது போல தெரியச்செய்யக் கூடாது, கூடுமானவரை அக்கதைக்குள்ளேயே ஒரு முகாந்திரத்தை உருவாக்கவேண்டும். கதாபாத்திரம் ஒன்றின் பார்வை மூலமாக அப்படி ஏதாவது. தகவல்கள் தற்செயலாக வந்ததுபோல் இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து எழுதலாம். எழுத்து உங்களுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்."

இப்படி என் எழுத்துக்கும் சிந்தனைக்கும் உதவுகிற பல அரிய குறிப்புகளும் செய்திகளும் அவரிடமிருந்து கிடைக்கின்றன. கற்றதும் பெற்றதும் நூலுக்கு நான் எழுதிய வாசக அனுபவத்தைப் படித்துவிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார். உயிர்மை வெளியிட்டிருக்கிற சுஜாதா நாடகங்களின் தொகுப்பைப் பரிந்துரைத்தார். அவை சுஜாதாவின் மாஸ்டர்பீஸ் என்றார்.

எந்தப் படைப்பை நான் எடுத்துப் போட்டாலும் அது "எனக்குப் பிடித்தமான ஒன்று, அதை நான் சிலாகிக்கிறேன்" என்று இணையத்தில் சிலர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இதை அவர்கள் தெரிந்தே செய்கிறார்களா என்ற கேள்வியும் எனக்குண்டு. ஏனென்றால், நான் படைப்புகளைப் பகிர்ந்து கொள்வது அதைப் பற்றிய சிந்தனையையும், விவாதத்தையும் தொடங்கவே அன்றிப் பிடித்திருப்பதால் மட்டுமல்ல என்று பலமுறை - இணையக் குழுக்களிலிருந்து - சொல்லிவிட்டேன். அதே நேரத்தில், பிடித்த படைப்பைப் பிடித்தது என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. இன்றளவும் - பிரமீளின் அறைகூவலை நான் படித்த பிறகும்கூட - கவிஞர் சுகுமாரனுக்கும், ந. முத்துசாமிக்கும் உக்கிரமாய்த் தெரிகிற சு.ரா.வின் அந்தச் சவால் கவிதை எனக்குப் பிடித்தமானதுதான். அது யாருக்கேனும் பிடிக்கவில்லை என்ற பதிலோ, அந்தக் கவிதையைவிட இன்னொரு கவிதை உயர்ந்தது என்ற ரசனை சார்ந்த சுட்டிக் காட்டலோ வெளிவரும்போது, என் எழுத்து நான் உவக்கிற வேலையைச் செய்திருக்கிறது என்று சந்தோஷமாக இருக்கிறது. நான் உவக்கிற வேலை - மற்றவர்களின் சிந்தனையைச் சீண்டுமளவுக்கு எழுத வேண்டும் என்பதுதான். கவிதைக்கோ படைப்புக்கோ கட்சி கட்டுவது என் முதல் வேலை அல்ல. ஆனாலும், சவால் கவிதையால் உந்தப்பட்டு, பிற கவிதைகளைப் பார்வைக்குக் கொண்டு வந்தவர்களுக்கு, நன்றிகள். மற்றபடிக்கு - சு.ரா.வின் கவிதைகளைப் பற்றி ஒரு வாசக அனுபவம் எழுதுகிற ஆர்வம் இருப்பதால், அதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

ஜெயமோகன் தன்னுடைய கடிதத்தில் - ஒரு கவிதையையும் இணைத்திருந்தார். எழுத்தை, மனதை இளமையாக வைத்திருக்கக் கவிதை உதவும் என்று கற்றதும் பெற்றதும் வாசக அனுபவத்தில் நான் எழுதியதால், கவிதையை இணைத்திருக்கிறார் என்று நானே பாவனை செய்து கொண்டேன். தேவதேவனின் பூனை பற்றிய கவிதை. சு.ரா.வின் பூனை பற்றிய கவிதையைவிட நன்றாக இருக்கிறது. ஒருவேளை, சு.ரா.வின் பூனைக் கவிதையை நான் எடுத்துப் போட்டதைப் பார்த்து அனுப்பினாரோ என்ற கேள்வியும் இருக்கிறது. பதில் தெரியவில்லை. எதுவானால் என்ன? இப்போது கவிதைக்குள் செல்வோம்.

பூனை
- தேவதேவன்

முதல் அம்சம்
அதன் மெத்தென்ற ஸ்பரிசம்
குழைவு அடிவயிற்றின்
பீதியூட்டும் உயிர் கதகதப்பு

இருவிழிகள் நட்சத்திரங்கள்
பார்க்கும் பார்வையில்
சிதறிஓடும் இருள் எலிகள்

'நான்! நான்!''என புலிபோல
நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்
உருளும் கோட்டமுள்ள சக்கரமென
புழுப்போல
அதன் வயிறசைதல் காணலாம்

கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத
சாமர்த்திய நடை இருந்தும்
'மியாவ்'என்ற சுயப்பிரலாப குரலால்
தன் இரையை தானே ஓட்டிவிடும்
முட்டாள் ஜென்மம்

நூல்கண்டோடும்
திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்
விளையாடும் புத்திதான் எனினும்
பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு

எலியை குதறுகையில்
பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்
நக்கி நக்கி பாலருந்துகையில்
தெரியவரும் இளகிய நாக்கையும்
ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்

ஞாபகப்படுத்திப்பாருங்கள்
உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்
இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே
சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?

நன்றி: தேவ தேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு: தமிழினி வெளியீடு

No comments: