Thursday, November 23, 2006

பாயுமொளி நீ எனக்கு - வாசக அனுபவம்

(தமிழ்.சி·பி.காமில் வெளியானது)

சங்ககாலத்தில் காதலைப் புலவர்கள் அணுகிய விதத்தை இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகள் நினைவுறுத்துகின்றன. ஆண்டாளும் நினைவுக்கு வருகிறார். காதலைப் பற்றி எழுதுபவர்கள் வள்ளுவரின் காமத்துப் பாலையும் ஆண்டாளையும் முழுமையாக முதலில் படித்துவிட வேண்டும் என்று நான் சொல்வதுண்டு. மதுமிதா படித்திருக்கிறார் போல. காதலின் மென்மையும், உணர்வுப்பாங்கும் அப்படியே வந்துள்ளன. காதலும் கவிதையும் நவீனமாகிவிட்ட சமூகத்தில் இத்தொகுப்பு காதலில் மரபார்ந்த பார்வையின் வீச்சைச் சொல்கிறது என்று சிலர் முனகக் கூடும். ஆனாலும், இதுதான் நம்முடைய வேர் என்று நான் நினைக்கிறேன். மென்மையும் உணர்வுப் பாங்கும் வாசகப் பார்வையில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு மேலோட்டனமானவையாகவும், நாடகப் பூச்சுடனும், மிகையுணர்வுடனும் இருப்பதாகப் புரிந்து கொள்ளப்படுகிற வாய்ப்புகள் கொடுப்பவையாக இத்தொகுப்பில் பல கவிதைகள் உள்ளன. பல கவிதைகளைக் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் மறக்கவியலாத கவிதைகளாக மாற்றியிருக்கலாம். கிருஷ்ண ப்ரேமி, அன்பில் கலந்திருப்போம் போன்ற அருமையான கவிதைகளைக் கொடுக்கிற மதுமிதாவிற்கு இதுவும் சாத்தியம்தான். காதல் கவிதை என்றால் சுகுமாரனின் ஸ்தனதாயினி போலவோ, ஞானக்கூத்தனின் பவழமல்லிகை போலவோ அல்லது இந்த வரிசையில் வைக்கத்தக்க கவிதைகள் போலவோ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னைப் போன்ற வாசகர்களுக்கு. உணர்வை எழுத வேண்டும் என்று துடிக்கிறவர்களுக்கு இத்தகைய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. அதே அலைவரிசையில் இருக்கிற பல வாசகர்கள் இத்தொகுப்பில் இருக்கிற பல கவிதைகளை மதுமிதாவின் வலைப்பதிவில் பாராட்டியபோது எனக்குத் தோன்றியது இது.

மதுமிதா கவிதைகளில் இன்னொரு முக்கிய விஷயம். பெண்ணியப் பார்வையில் பார்க்கிறேன் என்று நேசம் என்பதன் மகத்துவத்தை தொலைக்காமல் இருப்பது. ஆண்-பெண் உறவில் அவர் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதேயில்லை. ஊடலில் மட்டுமில்லை உறவிலும்கூட தோற்றாரே வென்றார் இல்லையா. அன்பைப் பற்றி மட்டுமே பேசுகிறார். எதைத் தேடுகிறோமோ அதைத்தானே கண்டடைவோம். அவர் கவிதைகள் அன்பைத் தேடுகின்றன. அன்பைக் கண்டடைகின்றன. ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அன்பிலும்கூட ஆதிக்கத்தையே பார்க்கிறார்கள்.

கவிதையில் சப்-டெக்ஸ்ட் ஒரு முக்கியமான விஷயம். உணர்வின் வேகத்திலும் அன்பின் பாய்ச்சலிலும் வெளிப்படும் மதுமிதாவின் மொழி அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. வெள்ளமாய் ஓடிப் பாய்ந்து நீரூற்ற வேண்டிய வயல்களுக்கு நீர் பாய்ச்சிய பின்னரே நிற்கிறது. இதுவே அவரின் கவிதைகளின் பெரும்பலம். அவர் கவிதைகளில் தென்படும் மென்மையும், ஒளிவற்ற பாவனைகளும், மொழியின் வடிவம் குறித்த கவலையற்ற வெளிப்பாடும், குழந்தைமையும், உண்மையான உணர்வுகளும் அவர் கவிதைகளில் பிற பலவீனங்களை மழுங்கடிக்கச் செய்துவிடுகின்றன.

சில கவிதைகள் வாரமலர்க் கவிதைகள் மாதிரித்தான் இருக்கின்றன. சில கவிதைகளில் வார்த்தைச் சித்துக்கள். ஆனாலும் மதுமிதாவிற்கு கவிதை மொழியும் கவிதையும் கைவந்திருக்கிறது என்று சொல்லப் பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

இந்த வாரமலர்க் கவிதை என்கிற விமர்சனத்தைக் கொஞ்சம் பார்ப்போம். நானே இந்தச் சொற்றொடரைப் பலமுறை உபயோகப்படுத்தியுள்ளேன். எதிர்காலத்திலும் உபயோகப்படுத்தலாம். மலிவானதாக நாம் நினைக்கிற ஒரு விஷயத்தின் பின்னே கொஞ்சம்போய்ப் பார்க்கும்போது புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது.

என் குழந்தைகள் அமெரிக்காவில் வளர்பவர்கள். சுமாராக இரண்டு வருடத்திற்கு ஒருமுறை விடுமுறையில் இந்தியா சென்று வருபவர்கள். இந்தியாவில் இருக்கிற காலத்திலே தொலைகாட்சியில் வெளிவருகிற தமிழ்த் திரைப்படம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கிற வாய்ப்பு பெறுபவர்கள். மற்றபடி அவர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் எந்த வாசனையும் இல்லை. ஒருமுறை அப்படி இந்தியா சென்று வந்தபிறகு, அவர்களிடம் ரஜினிகாந்த் பிரபலமாகியிருந்தார். என் மகன் (அப்போது 9 வயது), மகள் (நான்கரை வயது) இருவரையும் தொலைகாட்சியில் சில நிமிடங்கள் அவர்கள் பார்த்த ரஜினிகாந்த் கவர்ந்துவிட்டார். ரஜினி காந்த்தின் வசனங்களையும், ஸ்டைலையும் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தபிறகு சொல்லிக் கொண்டிருந்தனர். இதிலிருந்து நான் உணர்ந்தது - குழந்தைகளுடன் - தமிழ்நாட்டிலேயே வளராத குழந்தைகளுடன்கூட - கனெக்ட் ஆகிற ஒரு திறமை ரஜினிகாந்திற்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு அவர் பிடித்தமான நடிகராக இருப்பது அதனால்தான். அப்படியானால், வளர்ந்தும் ரஜினிகாந்திற்கு ரசிகர்களாக இருப்பவர்களிடம் எல்லாம் இன்னும் அந்தக் குழந்தை உள்ளம் பாக்கியிருக்கிறது என்றுதானே அர்த்தம். ஆஹா.. அப்படியெனில் அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள். வயது முதிர்ச்சியடைந்தும் ரசனையிலும் மனதளவிலும் குழந்தைகளின் இன்னொசன்ட் முகத்தைத் தக்க வைத்துக் கொள்ள அவர்களால் முடிகிறதே என்று நினைத்ததுண்டு. இது தெரிந்ததும், என் நண்பர் ரஜினிராம்கியை அவருடன் கருத்துரீதியாக ஒத்துப் போகாதவர்கள், அவர் ரஜினி ரசிகர் என்பதற்காகத் திட்டும்போது, குழந்தைமையைத் தமக்குள் தொலைத்து விட்டவர்கள், அதைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறவர்களைத் திட்டுகிறார்கள்போல என்று நினைத்துக் கொண்டதுண்டு.

காதலும் கவிதையும் கூட அப்படித்தான். மனதை இளமையாகவும் குழந்தைமையுடனும் வைத்திருப்பவர்களுக்கு அது எப்போதும் மனம் கவர்ந்த விஷயம்தான். எவ்வளவு மோசமான கவிதை என்றாலும் - வாரமலர்க் கவிதை என்றாலும் - காதல் கவிதை என்றால் ஒருமுறை வேகமாகவேனும் வாசித்துவிட்டு நகர்கிற நிலையில் நான் இன்றும் இருக்கிறேன். வாசித்துவிட்டு, வாரமலர்க் கவிதை மாதிரி இருக்கிறது என்று வேண்டுமானாலும் சொல்வேனே தவிர வாசிக்காமல் இருந்ததில்லை. ஆனால் பாருங்கள், காதலை ரசிப்பவர்கள் காதல் கவிதைகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் ரசிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கிய மதிப்பீடுகள் பெரிய விஷயம் இல்லை. அவர்களுள் இருக்கிற குழந்தைமை குறைகளைப் பெரிதுபடுத்தாமல் நிறைகளை ரசிக்கிற மனோபாவத்தை அவர்களுக்குள் நீடித்திருக்கச் செய்கிறது. மதுமிதாவிற்கும் அப்படித்தான் என்று இத்தொகுப்பைப் படித்துவிட்டு உணர முடிகிறது. ஒரு பதின்ம வயதினரைப் போல காதலை தினம் தினம் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் அறியத் துடிக்கிற ஆர்வத்துடனும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பார்க்கின்றன. அதனால்தான் அவர் கவிதைகளில் காணும் காட்சியில் எல்லாம் - பேருந்தில் எதிரில் இருக்கும் மழலையிலும் மழைத்துளியிலும் கூட - காதலனைக் காண முடிகிறது. காதலென்றால் ஹார்மோன் கோளாறு என்று நினைக்கிற பருவத்தில் நான் இருக்கிறேன். ஆனாலும், அது இதயக் கோளாறு என்று உணர்த்துகிற இத்தொகுப்பின் கவிதைகளைக் காதல் செய்கிற பருவத்தில் இருப்போரால் அதன் குறைகளை மீறிச் சிலாகிக்க முடியும் என்று நம்புகிறேன்.

புள்ளியாய் / உன் நினைவை இட்டு / அன்பு இழைகளால் கோலமிட்டேன் என்று வீட்டுப் பெண்கள் பாஷையில் பேசுகிறார் மதுமிதா கவிதையில். நேரம் காலம் புரியாது / தலைகீழாய்த் தொங்குகிறது / வௌவால் மனசு என்பது போன்ற நல்ல வரிகள் இவர் கவிதைகளில் எதிர்பாராத இடத்தில் சாதாரண வரிகளிடையே வந்து மின்னி வாசகர்களின் கவனத்தைக் கவர்கிறது.

எதிர்பார்த்த அழைப்புகள் / வளர்த்துவிடும் தீயினை / அன்பினை ஊற்றியே / அணைத்திட வேண்டும் / மீளவேயியலாது என்ற வரிகளில் சட்டென்று கவிதையைச் சிகரத்தில் ஏற்றுகிற வித்தை மதுமிதாவிற்குத் தெரிந்திருக்கிறது. அதற்கு மேல் எது எழுதினாலும் அது கவிதையுடன் ஒட்டாது என்பதையும் அவர் விரைவில் அறிந்து கொள்வார். சில இடங்களில் கவிதை முடிந்தபின்னும் தேவையில்லாத வரிகள் சில வந்திருக்கின்றன. சில இடங்களில் கவிதை எப்போது முடியும் என்பதையும் நன்றாக அறிந்த மாதிரி கச்சிதமான வரிகள் வந்திருக்கின்றன. உதாரணமாக, விளைச்சல் எப்போதென அறியாமல் / நீரூற்றுகிறேன் எப்போதும் போல போன்ற வரிகளைச் சொல்லலாம்.

எங்கெங்கிலும், பேசும் கலை போன்ற பல நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பேசும் கலை என்கிற கவிதை பின்வருமாறு ஆரம்பிக்கிறது.

நான் பேச நினைக்கையில்
நீ பேசுகிறாய்
மௌனமாகி விடுகிறேன்

நான் பேசுகையில்
நீ இல்லாது போகிறாய்
மௌனமாகி விடுகிறேன்

நான் மௌனிக்கையில்
நம் சம்பாஷனை நிகழ்கிறது
பெரும் பெரும்வெளியில்

கவிதை இந்த இடத்துடன் முடிந்துவிடுகிறது என்று நினைக்கிறேன். அதற்கு மேல் வருகிற வரிகள் தன்னிலை விளக்கங்கள். தேவையில்லை என்பது என் அபிப்பிராயம்.

மதுமிதா தொடர்ந்து எழுதுபவர். அடிக்கடி எழுதுபவர். இயல்பாக எழுதுபவர். எழுதியதை அப்படியே பகிர்ந்து கொள்பவர். அவர் கொஞ்சம் எடிட் செய்தால், எழுதியவற்றில் பிரசுரத்திற்கு உரியவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டால், அவரின் நல்ல கவிதைகள் அனைத்தையும் கொண்டே ஒரு நல்ல தொகுப்பு வர முடியும். அந்த அளவுக்கு நல்ல கவிதைகள் எழுதி வருபவர்தான் அவர். இதை அக்கறையுடன் சொல்லக் காரணம், அவரின் நல்ல கவிதைகள் அவர் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. அவற்றைப் பூர்த்தி செய்கிற பொறுப்பு அவருக்கு இருக்கிறது. வடிவம், சொற்சிக்கனம், பொருளமைதி, சப்-டெக்ஸ்ட் ஆகியவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் தமிழின் முதன்மையான பெண் கவிஞர்களுள் ஒருவராக வருகிற திறமை மதுமிதாவிற்கு இருக்கிறது என்று நான் நம்புவதாலேயே, அவர் கவிதைகளைப் பற்றி இவ்வளவு விஸ்தாரமாகவும் அக்கறையுடனும் எழுதுகிறேன்.

வெளியீடு: பாயுமொளி நீ எனக்கு - மதுமிதா - மின்னூல் (E-Book) - நிலா புக்ஸ், யுனைடெட் கிங்டம்

நன்றி: தமிழ்.சி·பி.காம்

1 comment:

மதுமிதா said...

விமர்சனத்திற்கு நன்றி பி.கே.எஸ்