Thursday, January 04, 2007

இன்னும் சில ஆளுமைகள் - புத்தக அறிமுகம்


வெங்கட் சாமிநாதனின் புதிய கட்டுரைத் தொகுதி இது. எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிதாசன், பாரதியார், திலீப் குமார், வ.ரா, லா.ச.ரா, அம்பை, கி. ராஜநாராயணன், ஜெயமோகன், எம்.வி. வெங்கட்ராம், நேமி சந்திர ஜெயின், மௌனி, ந. பிச்சமூர்த்தி, திரிலோக சீதாராம், தி. ஜானகிராமன், க.நா. சுப்பிரமணியம், சே. ராமானுஜம், சி.சு. செல்லப்பா, ஸ்வாமி ரங்கனாதானந்தா, கே.வி. சுப்பண்ணா, சுந்தர ராமசாமி, சிட்டி, சோ. தருமன், ம.பொ.சி, அஜ் மை(ம்) ஆக்கா(ன்) வாரிஸ் ஷாநு உள்ளிட்ட பலரைப் பற்றியக் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்.

"வெங்கட் சாமிநாதன் பிற ஆளுமைகள் குறித்த பதிவுகளைத் தனிமனித அபிப்பிராயங்கள் என்றுதான் முன்வைக்கிறார். ஆனால், இலக்கிய, சமூகச் சூழலில் விவாதிக்கப்படும் ஆளுமைகளைத் தான் கண்டுகொண்ட நேர்த்தியில், தன் சார்புகள் பற்றியும், இந்தச் சார்புகள் ஏன் எதனால் உருவாயின என்பது பற்றியும் விளக்கவும் செய்கிறார். அதனாலேயே அவருடைய பார்வைகள் வெறும் அபிப்பிராயங்கள் அல்ல. அவர் கருத்துக் கோர்வைகளின் முன்வைக்கப்பட்ட ஆளுமைகளின் செய்ல்பாடுகள் பற்றிய விமர்சனமும் கூடம்.

வெங்கட் சாமிநாதனின் அபிப்பிராயங்கள் அதனால்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.

சமூகம், கலை, இலக்கியம் எல்லாமே ஒருங்கிணைந்த கலாசாரத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தான் என்ற பார்வை தமிழ் இலக்கிய விமர்சனப் பரப்பில் முதன்முதலில் வெங்கட் சாமிநாதனால்தான் முன்வைக்கப்பட்டது. நியாயமாய்ப் பார்த்தால் மார்க்சியப் பார்வை கொண்டவர்கள்தான் இதை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். வெங்கட் சாமிநாதனின் கருத்துகளுடன் உடன்பாடு கொண்டிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாய் அப்படி நடக்கவில்லை.

இந்த ஒருங்கிணைந்த பார்வையில்தான், இந்தத் தொகுப்பில் கண்ணதாசனும், பாரதிதாசனும் ராமானுஜமும் விவாதிக்கப்படுகிறார்கள். உலகின் எல்லாக் கலைஞர்களும் கலை வெளிப்பாடும் தமிழனுக்கு அணுக்கமானவையே என்ற நோக்கில் நேமிசந்த் ஜெயினும், அம்ரிதா ப்ரீதமும் அறிமுகம் செய்விக்கப்படுகிறார்கள். சி.சு. செல்லப்பாவின் அன்பும் பிடிவாதமும் போற்றப்படும் நேரம் அவர் குறைபாடுகள் மறைக்கப்படவில்லை. பாரதிதாசனின் கவியுள்ளம் புகழப்பட்டாலும், அவரின் சரிவுகள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்தப் பதிவுகள் ஆளுமைகள் பற்றியது மட்டுமல்ல, வெங்கட் சாமிநாதனின் ஆளுமை பற்றியது கூடத்தான். தன்னை மறைத்து மற்றவர்களை நோக்குவதில் வெங்கட் சாமிநாதனுக்கு நம்பிக்கை இல்லை" என்று பதிப்புரையில் எழுதுகிறார் கோபால் ராஜாராம்.

இந்நூலுக்கு வெ.சா. முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், "இலக்கியத்தின் அழகு அது பேசும் உண்மையிலிருந்து பிறக்கிறது. திட்டமிட்ட வடிவங்களால், சொல் அலங்காரங்களால் அல்ல. அந்த உண்மையையும் அதன் பின்னிருக்கும் ஆளுமையையும் உணரத்தான் முடியும்" என்கிறார்.

ஏறக்குறைய 247 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 120.

No comments: