Thursday, January 04, 2007

யூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை - அறிமுகம்


வெங்கட் சாமிநாதனின் 39 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவை புத்தக விமர்சனங்கள். எனிஇந்தியன் வெளியீடாக இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை - மேலோட்டமாகப் பார்க்கையில் புத்தக விமர்சனங்களாய் இருந்தாலும், அடியாழத்தில் தமிழ்நாட்டின் சமூக விமர்சனமாகவும் அமைகிறது. குறிப்பிட்ட தத்துவத்தின் அடிப்படையில் தம்மை வடிவமைத்துக் கொண்டதாய் பிரகடனம் செய்பவர்களிடம், அந்தத் தத்துவத்திற்கு சம்பந்தமே இல்லாத அல்லது தத்துவத்தைப் புரட்டிவிடுகிற படைப்பாற்றல் வெளிப்படுகிற ஆச்சரியத்தை நுணுக்கமாய்ப் பதிவு செய்கிறார் வெங்கட் சாமிநாதன். அவர்கள் மேற்கொண்ட தத்துவத்துடன் தான் உடன்பாடு கொள்ள முடியாததால், அவர்களின் படைப்பாற்றலைப் புறக்கணிக்கிற செயலை என்றுமே வெங்கட் சாமிநாதன் செய்வதில்லை என்பதுதான் வெங்கட் சாமிநாதனின் ஆளுமையின் அடையாளம். அந்த நேர்மை இலக்கிய சமூக உலகில் ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்" என்று பதிப்புரையில் எழுதுகிறார் கோபால் ராஜாராம்.

இக்கட்டுரைகள் கடந்த 40 வருடங்களாக அவ்வப்போது பத்திரிகைகள் கேட்க எழுதியவை என்று முன்னுரையைத் தொடங்குகிறார் வெ.சா. "இதுதான் என் தமிழ்நாடு. இங்கு நான் தொகுத்துள்ளவை அந்தப் புத்தகங்களைப் பற்றி மாத்திரம் சொல்வன அல்ல. என் சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சொல்லும். அதுதான் எனக்கும், என் நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த எழுத்துக்களுக்கும் நான் செய்து கொள்ளும் நியாயம்" என்று முன்னுரையை முடிக்கிறார்.

ஏறக்குறைய 230 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூபாய் 120.

No comments: