Friday, January 26, 2007

ம.வே. சிவகுமாரின் கருணை மனு

இந்த வாரம் திண்ணையில் வெளியான இந்தக் கடிதம் http://www.thinnai.com/?module=displaystory&story_id=20701251&format=html என்ன சொல்வது என்று தெரியாத உணர்வை எழுப்பியிருக்கிறது. வயிற்றையும் மனதையும் ஏதோ பிசைகிறது. தினமணியில் அவருடைய வேடந்தாங்கல் தொடராக வந்தபோது நான் ஒரு மாணவன். ஆச்சரியத்தோடும் விருப்பத்தோடும் அதைத் தொடர்ந்து படித்தது நினைவுக்கு வருகிறது. அவருக்குத் திண்ணை குழு எழுதிய பதிலுடன் ஒத்துப் போகிறேன். ம.வே. சிவகுமார் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மட்டுமே வேண்டுகோள் வைக்கிறேன். எழுத்திலும் வாழ்க்கையிலும் ம.வே. சிவகுமார் பல வெற்றிகளுக்குத் தகுதியானவர். அவற்றைக் கிடைக்காமல் செய்த சமூகச் சூழலை எதிர்த்து அவர் செய்கிற போராட்டத்தில் நியாயம் உள்ளது. ஆனால், உயிரைப் பணயம் வைக்கத் தகுந்த போராட்டம் இல்லை அது. எழுத்திலும் வாழ்க்கையிலும் பெற வேண்டிய வெற்றிகளைத் தாண்டி இந்த வாழ்க்கை வாழத்தக்கது முழுமையாக. பிச்சை எடுத்து உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும் அச்சமில்லை என்று சொன்ன பாரதி அதைத்தான் சொல்கிறார். சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் நிலை இப்படியாக இன்னும் இருக்க, வசதியாக வாழ்க்கை அமைத்துக் கொண்டு, வலைப்பதிவில்/இணையத்தில் நாலு வரி எழுதிவிட்டு, இலக்கியம்/அரசியல் என்று பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. ஒரு இந்தியனாக, தமிழனாக வெட்கமும் வேதனையும் உண்டாகிறது. லௌகீக உலகின் வெற்றிகளைத் தாண்டி இலக்கியவாதிக்குத் தன்னையே தாண்டிச் செல்கிற வெற்றி அவசியம் என்று நான் உணர்ந்ததுண்டு. அதை ம.வே. சிவகுமார் அவர்கள் உணரும்போது, அவரின் லௌகீக வாழ்வின் தோல்விகள் அனைத்தும் ஒரு நியாயமான எழுத்தாளனின் வெற்றிகளே என்பதைப் புரிந்து கொள்வார். அது தன்னை அவர் வெல்கிற ஆன்மீகச் சோதனைக்கும் உதவும்.

பி.கு.: இதை எழுதிவிட்டு, போஸ்ட் செய்வதற்கு முன் திண்ணையில் இருந்த ம.வே. சிவகுமார் அவர்களின் சென்னை தொலைபேசி எண்ணுக்கு அழைத்தேன். அவரிடமே பேச முடிந்தது. எஸ்.வி. சேகர் உள்ளிட்டவர்கள் அவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிந்து அவரை வந்து சந்தித்தார்களாம். அவர்களில் எழுத்தாளர்களும் அடக்கம். அனைவரும் சேர்ந்து ஏதேனும் செய்யலாம். இப்போதைக்கு உண்ணாவிரதம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை நிறுத்தி வைத்திருக்கிறாராம். நல்ல முடிவு. அவரிடம் என்னுடைய இந்தப் பதிவையும் படித்துக் காட்டினேன். அங்கீகாரம், அங்கீகார மறுப்பு ஆகியவற்றைத் தாண்டி அவர் தொடர்ந்து எழுத வேண்டும். எப்போதோ ஒருமுறை மாணவப் பருவத்தில் அவருடைய வேடந்தாங்கலை மட்டும் படித்துவிட்டு, இன்றைக்கு அவரை மதித்து அழைத்துப் பேசுகிற வாசகர்களைவிட ஒரு எழுத்தாளருக்கு வேறெந்த அங்கீகாரமும் பரிசும் வேண்டும். ம.வே. சிவகுமார், தொடர்ந்து எழுதுங்கள். பணியாற்றுங்கள். மற்றவை ஒரு உண்மையான கலைஞனுக்கு பெரிய பொருட்டில்லை என்பதை அறிவீர்கள். அங்கீகாரமும் புகழும் மகிழ்ச்சியை நிச்சயம் கொணர்கிறது. அதற்காக ஆசைப்பட எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால், நியாயமான அங்கீகாரம் மறுக்கப்படும்போது அதற்காக உயிரைப் பணயம் வைப்பது சரியில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

4 comments:

பிச்சைப்பாத்திரம் said...

இணைப்பிற்கு நன்றி.

தொடர்ந்த புறக்கணிப்பின் வலியை அவரின் கடிதம் முழுவதும் வெளிப்படுத்தியிருக்கிறது. என்றாலும் சற்று அதீதமாக புலம்பியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் இவரை விட உன்னதமானவர்கள் எல்லாம் இதை விடவும் அதிகமாக உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Jayaprakash Sampath said...

கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி பிகேஎஸ்.

கதையின் லக்ஷ்மி நாராயணன், தொடரின் முடிவில், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, தன் தேடல்களுக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைப்பான். நிஜத்திலும், மவேசி அப்படிச் செய்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? காசு, பணம், மனைவி மக்கள், நிம்மதியான தூக்கம், ஆரோக்கியம் போன்றவற்றை எல்லாம் விட, கலைத்தாகம் அத்தனை பெரிசா? புரியலை... கஷ்டமாக இருக்கிறது

PKS said...

சுரேஷ் கண்ணன், பிரகாஷ் - நன்றி!

"இவரைவிட உன்னதமானவர்கள் எல்லாம் இதைவிடவும் அதிகமாக உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்" என்ற சுரேஷ் கண்ணனின் வார்த்தைகளை ஒத்துக் கொள்ளுகிறேன். அந்தக் காரணத்தை வைத்தே இதை ஒதுக்கிவிடவும் முடியாது என்பதை சுரேஷும் ஒத்துக் கொள்வார் என்று அறிவேன். அதிகம் புலம்புகிறாரா குறைவாகப் புலம்புகிறாரா என்பது ஒரு ரிலேடிவான விஷயம். பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் புலம்புவதுபோல பார்வையாளர்களுக்குத் தோன்றுவது சகஜம்தான். நான் பாதிக்கப்படும்போது அது அதிகமான புலம்பல் இல்லை என்று நான் உணர்ந்திருக்கிறேன். அப்படியே இருப்பினும் புலம்பல், மிகைப்படுத்தல் முதலியவற்றை ஃபில்டர் செய்துவிட்டு, விஷயத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உதாரணமாக, நான் ம.வே. சிவகுமார் அவர்கள் இடத்தில் இருந்தால் இப்படியெல்லாம் செய்வேனா என்று கேட்டால் என் பதில், மாட்டேன் என்பதுதான். ம.வே.சி.யை வளர்த்தெடுத்த அசோகமித்திரன், ஜெயகாந்தன் போன்றோர்கூட, இந்த மாதிரி அங்கீகாரங்களுக்குப் போராட மாட்டார்கள். ஆனாலும், ம.வே.சி.யின் வலியைப் புரிந்து கொள்ள அவரின் மாறுபட்ட முடிவெடுக்கும் வழிகள் எனக்குத் தடையாக இல்லை.

கலாபூர்வமான வளர்ச்சியில் தமிழ் எழுத்தைவிட தமிழ் சினிமா மோசமாக உள்ளது என்பது என் கருத்து. ஓரிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். தமிழ்சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிதம் ஆனால் கலாபூர்வமான படங்கள் இன்னும் அபூர்வமே. ஆனால், எழுத்தில் நன்றாக எழுதுபவர்க்கு அட்லீஸ்ட் ஒரு மரியாதையும், அவர்களுக்கு இடம்தர சிறுபத்திரிகைகளும் இருக்கின்றன. சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் இது இல்லை. தனியார் தொலைகாட்சிகளின் சீரியல்களைத் தடுக்க முடியாது. மக்கள் தொலைகாட்சியின் இப்போதைய அரசியல் சாராத நிகழ்ச்சிகள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. ஆனால், அரசு தொலைகாட்சியிலும் சீரியல்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் முறைகேடுகள், பாரபட்சங்கள் இருந்தால், அதை எதிர்த்து ம.வே.சி மட்டுமல்ல அனைவருமே போராட வேண்டும். ம.வே.சி போன்றவர்களின் குரல்கள் இப்போது ஒன்றிரண்டாக எங்கோ ஒன்று ஒலித்தாலும், விரைவில் இதுகுறித்த பொதுக்கருத்து உருவாக வழிவகுக்கும்.

Unknown said...

வெறும் கையில் முழம் போட முயன்றிருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.

இவருக்கு நிதி வசதி எதுவும் இல்லாமல் தூர்தர்ஷனை வெறும் ஸ்க்ரிப்டூடன் அணுகியிருக்கிறார்.எந்த சீரியலும், திரைப்படமும் தயாரித்த அனுபவமும் இல்லை.காசும் இல்லை. பிறகு அவன் எப்படி அனுமதி கொடுப்பான்?அவனை குற்றம் சொல்லித்தான் என்ன பிரயோஜனம்?இவர் ஏதாவது தயாரிப்பாளரை அணுகி ஸ்கிரிபுடுக்கு ஓக்கே வாங்கி அவர் மூலமாக தூர்தர்ஷனை அணுகியிருந்தால் அவர்கள் கேட்ட மாதிரி இரண்டு எபிசோடுகலை படம்பிடித்து அனுப்பியிருக்கலாம்.அப்படி எதுவும் செய்யாமல் ச்க்ரிப்டை அனுப்பி அனுமதி கொடு என்றால் அவன் என்ன செய்வான்?

கேபிக்கு அனுமதி கொடுத்தான், எனக்கு கொடுக்கவில்லை என்பதெல்லாம் குழந்தைத்தனமான வாதம்.

90களில் தனியார் தொலைககட்சிகள் சக்கைப்போடு போட்டது.அதில் எல்லாம் இவர் முயற்சி செய்திருக்கலாம்.அதையும் செய்ததாக தெரியவில்லை.இப்போது என்டிஎப்சியிடம் படம் தயாரிக்க நிதியும்,அனுமதியும் கேட்பதெல்லாம் டூமச்.