Friday, November 02, 2007

திண்ணைக்கு எழுதிய கடிதங்களின் முழுவடிவம்

(திண்ணை இந்த வாரம் என்னுடைய இரண்டு கடிதங்களைப் பிரசுரித்திருக்கிறது. ஒரு கடிதத்தின் சிலவரிகள் நீக்கப்பட்டுள்ளன. அது திண்ணை ஆசிரியரின் உரிமை. எந்த நீக்கமும் இல்லாத கடித வடிவங்களைக் கீழே பார்க்கலாம். மூன்றாவதாக ஒரு கடிதத்தையும் கடைசியில் கொடுத்துள்ளேன். அது பல மாதங்களுக்கு முன்னர் திண்ணைக்கு அனுப்ப வேண்டும் என்று நான் எழுதியது. அது குறித்த விவாதங்களில் தொடர்ந்து ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய மனச்சோர்வுகளை அறிந்திருந்ததால், திண்ணைக்கு அப்போது அனுப்பாமல் விட்டுவிட்டேன். இப்போது பொதுவில் கருத்தை மட்டும் வைத்துவிட்டுப் போவது (விவாதம் குறித்த முதிர்ச்சியும் தெளிவும் உள்ளவர்களிடம் விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.) என்ற தெளிவு இருப்பதால் அதையும் கடைசியில் கொடுத்திருக்கிறேன். திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் என் மூத்த சகோதரர் போன்றவர். அவரைப் போல எழுத முடியாதா என்பது என் ஏக்கங்களில் ஒன்று. பல விஷயங்களை இன்றளவும் எனக்குச் சொல்லித் தருகிற குரு. என்னுடைய கருத்துகளில் இருக்கிற வெளிப்படையான தன்மையையும், கறார்த்தன்மையையும், அறம் சார்ந்த மதிப்பீடுகளையும் மதிப்பவர். நான் பார்த்த அளவில் தனிப்பட்ட தாக்குதல்களையும் வன்மத்தையும்கூட வன்மமற்ற மனநிலையில் எதிர்கொள்கிற முதிர்ச்சி உடையவர். அந்த நம்பிக்கையினாலேயே இந்த விஷயத்தைப் பற்றிக் கூட இவ்வளவு விரிவாக இங்கே எழுதுகிறேன். திண்ணையைப் பிடிக்காதவர்கள், ராஜாராமுக்கு நெருக்கமான பி.கே.சிவகுமாரே திண்ணையைக் குறை சொல்லிவிட்டார் என்று துள்ளிக் குதிக்க வேண்டாம். யார் சொன்னாலும் ராஜாராம் காதுகொடுத்துக் கேட்பார். இதைப் பொதுவில் சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, திண்ணைக்கு எழுதுகிறவர்கள் பொறுப்புடன் எழுதாவிட்டால் அவர்களைத் திண்ணையில் எழுத அனுமதிக்கக் கூடாது என்று கேட்கிற உரிமை என் போன்ற திண்ணை வாசகர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்த்துவது.

என்னுடைய கடிதத்திற்கு திண்ணை ஆசிரியர் குழு கொடுத்திருக்கிற விளக்கம் எனக்குத் திருப்தியளிப்பதாக இல்லை. ஆனாலும் இதுகுறித்து இனிமேல் திண்ணைக்கு எழுதுவதாக இல்லை. என் எதிர்ப்பைப் பதிவு செய்ய முடிந்த மட்டில் மகிழ்ச்சியே. திண்ணை ஆசிரியர் குழுவின் பார்வைக்கு இது எப்படியும் போகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் திண்ணை வாசகர்களையும் ஆசிரியர் குழுவையும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் இத்துடன் இதை முடித்துக் கொள்ள விருப்பம். திண்ணை என்ற பத்திரிகையின் மீது வாசகனாக எனக்கு இருக்கிற மதிப்போ மரியாதையோ இச்சமூகச் சூழலில் அது ஆற்றிவருகிற ஆக்கபூர்வமான பங்களிப்பு குறித்த என் கடந்தகால கருத்துகளோ மாறிவிடவில்லை. அப்படியேதான் இருக்கின்றன. இருக்கும். ஆனால், இத்தகைய ஒரு நல்ல பத்திரிகையைக் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மலர்மன்னன், அரவிந்தன் நீலகண்டன் மற்றும் அவர்களுடைய ஜால்ராக்கள் தங்கள் பத்திரிகை என்ற நினைப்பில் மற்றவர்களை வரம்பு மீறி விமர்சிக்கவும் தாக்கவும் பயன்படுத்திக் கொள்ள திண்ணை அனுமதிப்பதுதான் என் கவலை. திண்ணை மலர்மன்னன் வகையறாவிடம் என்ன சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இந்துத்துவ கருத்துகளை வெளியிடுகிற எந்தப் பத்திரிகையும் இல்லை. திண்ணை எல்லாக் கருத்துகளையும் வெளியிடுகிறது. உங்கள் கருத்தையும் வெளியிடும். உங்கள் கருத்துகளை வெளியிடுவதால் திண்ணைக்கே இந்துத்துவ இமேஜ் கிடைத்திருக்கிறது. ஆனாலும் வெளியிடுகிறோம். அதனால், வாய்ப்பே கிடைக்காத ஊடகங்களில் உங்களுக்கு வாய்ப்பு தருகிற ஊடகமாக திண்ணை இருக்கும்போது அதைப் பொறுப்புடனும் நாகரீகமுடனும் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது என்று சொல்ல வேண்டுமல்லவா? திண்ணை சொன்னதா? இப்படி மற்றவர்களைத் தாக்கி எழுத அரவிந்தனுக்கு யார் உரிமை தந்தது என்ற பொருளில் அன்பர் தாஜ் கொஞ்ச நாட்கள் முன்னர் திண்ணையில் எழுதியிருந்தது இங்கே நினைவுக்கு வருகிறது.

சம்பந்தப்பட்ட எழுத்தாளர் புகார் செய்யவில்லை என்று திண்ணை சொல்கிறது. சம்பந்தப்பட்டவர் புகார் சொல்லும்வரை - மற்றவர்கள் பார்த்துவிட்டுப் புகார் சொன்னாலும்கூட அதை அலட்சியப்படுத்திவிட்டுக் - கண்ணெதிரே திருட்டு நடந்தாலும், திருட அனுமதிப்போம் என்பது மாதிரி இருக்கிறது இது. யாருடைய விமர்சனத்திற்கும் அஞ்சி எந்த எழுத்தாளரும் எழுதுவதை நிறுத்திவிட மாட்டார்கள் என்று திண்ணைக் குழு சொல்கிறது. உண்மைதான். இதற்குப் பதிலாக, மலர்மன்னனும் ஜெயராமனும் எழுதுவது கட்சியும் கொள்கையும் சார்ந்த மேடைப் பிரச்சாரமும், தாக்குதல்களும் இல்லை. விமர்சனம் மட்டுமே என்று திண்ணைக் குழு வெளிப்படையாக சர்டிபிகேட் கொடுத்துப் பாராட்டியிருக்கலாம்.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இந்திரா பார்த்தசாரதியோ, வாஸந்தியோ எந்தக் கட்சிக்கும் அல்லது கொள்கைக்கும் மலர்மன்னன் வகையறா போல தாலி கட்டிக் கொண்டவர்கள் அல்ல. காலத்திற்கும் நேரத்திற்கும் வருகிற வசதிகளுக்கும் ஏற்ப காமராஜர், அண்ணாதுரை தற்போது இந்துத்துவா என்று அணி மாறியவர்களும் இல்லை. கூட்டணி மாறினாலோ கட்சியின் கொள்கை மாறினாலோ எழுத்தை அதற்கேற்ப மாற்றிக் கொள்பவர்களும் அல்ல. எழுத்தாளர்களாகவும் அறிவுஜீவிகளாகவும் சமூகம் பற்றிய தனது கருத்துகளை கட்சிகளுக்கும் கொள்கைகளுக்கும் அப்பாற்பட்டு முன்வைப்பவர்கள். இவர்களை விமர்சிக்கலாம். ஆனால் யார் விமர்சிக்க முடியும் என்று ஒன்று இருக்கிறதே. மனிதநேயவாதிகளைப் பயங்கரவாதிகள் விமர்சிக்க அனுமதிப்போமா? இல்லை அவற்றைப் பிரசுரிப்போமா விமர்சனம் என்று அழைப்போமா என்ற உதாரணம் நினைவுக்கு வருகிறது. கட்சிக்கு அப்பாற்பட்ட கலைஞர்களை, கட்சிகளின் மேடைப் பேச்சாளர்கள் லெவலில் இயங்குகிற மலர்மன்னன், ஜெயராமன் போன்றவர்கள் வரம்புமீறித் தாக்குவதை திண்ணை விமர்சனம் என்ற பெயரில் அனுமதிப்பது சரியில்லை. திண்ணையில் தி.மு.க.வினரோ, அ.இ.அ.தி.மு.க.வினரோ அல்லது பிற கட்சி ஆதரவாளர்களோ எழுதும்போது, அவர்களை மலர்மன்னன் போன்றவர்கள் இப்படித் தாக்கி எழுதினாலாவது, அதைச் சரி என்று சொல்லலாம். கட்சிக்கும் கொள்கைகளுக்கும் அப்பாற்பட்ட சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அறிவுஜீவிகள் திண்ணையில் தன் கருத்துகளை முன்வைக்கும்போது, அவர்களைக் கட்சி சார்ந்த ஜால்ராக்கள் தாக்க அனுமதிப்பது, எந்த கட்சி சாராத அறிவுஜீவியும் தொடர்ந்து திண்ணையில் தன் கருத்துகளை வைப்பது குறித்து யோசிக்க வைக்கவே செய்யும். இதெல்லாம் உண்மையிலேயே திண்ணை ஆசிரியர் குழுவுக்குத் தெரியாதா?

இன்னொரு விஷயம். திண்ணை ஆசிரியர் குழுவைத் தாக்கி வருகிற கடிதங்களைக் கூட திண்ணை அப்படியே பிரசுரித்து விடுகிறது. பாராட்ட வேண்டிய விஷயம்தான். அதனாலேயே அதே அணுகுமுறையை மற்றவர்கள் விஷயத்திலும் கடைபிடிப்போம் என்று திண்ணை நினைக்கிறதா? ஆமென்றால், அது தவறு. தன் பெயர் கெட்டாலும் திண்ணைக் குழுவுக்குக் கவலை இல்லாமல் இருக்கலாம். அந்த மனநிலையை நான் பாராட்டுகிறேன். அதனால், மற்றவர்களையும் அப்படியே திண்ணை நினைக்கக் கூடாது. திண்ணையில் மற்றவர்கள் மீது சேறு தெளிக்க அனுமதிப்போம். அந்தச் சேற்றிலிருந்து வெளிவருவது சம்பந்தப்பட்டவரின் கடமை மட்டுமே என்று சொல்வதுபோல இருக்கிறது இது. திண்ணையில் சேறுபட்டவர்களை எல்லாம் திண்ணை பொதுவில் வந்து குளித்துத் தங்கள் சுத்தத்தை நிரூபிக்கச் சொல்கிறதா? இது எந்தப் பத்திரிகை தர்மம்?
)

இந்த வாரத் திண்ணையில் பிரசுரமான கடிதம் ஒன்றின் முழுவடிவம்

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

"வளவள, பள பள பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பேட்டிக் கண்டு சுவாரசியமான கட்டுரை எழுத முற்பட்ட வாஸந்தி அதில்தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாறாகச் சிவசேனை சம்பந்தப்பட்ட மும்பை அரசியலையும் தொட்டுத் தனது முற்போக்கு மதச் சார்பற்ற நிலைப்பாட்டை நிறுவ அவர் முற்படுவதால்" என்று திண்ணை பத்திரிகையின் "நாட்டாமை" போல (ஒருவேளை மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.) மலர்மன்னன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். யார் யாரைப் பற்றி எழுதுவது எழுதக்கூடாது என்று சொல்ல ஆரம்பிக்கிற பத்வா வேலையை மலர்மன்னன் போன்ற இந்துத்துவ அடிப்படைவாதிகளும் ஆரம்பித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. வளவள பளபள பத்திரிகைகள் தேவைக்கு ஏற்ப எழுதச் சொன்னால் மலர்மன்னன் போன்றவர்கள் ஓடோடிப் போய் எழுத மாட்டார்களா என்ன? அப்படி யாரும் இவர்களைப் போன்றவர்களைச் சீண்டாததால்தானே திண்ணையிலும் தமிழ் சி·பியிலும் உட்கார்ந்து இலவச உபதேசங்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மலர்மன்னன் இப்படி இலவச உபதேசங்களை அள்ளி விடுவது பற்றியோ, அதற்குத் திண்ணை இடம்தருவது பற்றியோ எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இப்படித்தான் திண்ணைக்கு எழுத வருகிற எழுத்தாளர்களை இவர் தன்னுடைய நாட்டாமையால் துரத்திவிடுகிறாரோ என்பதை எண்ணும்போதுதான் எனக்கு வருத்தம் வருகிறது. உதாரணமாக, கொஞ்ச காலம் முன்பு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தொடர்ந்து திண்ணையில் எழுதிக் கொண்டிருந்தார். அவரை மலர்மன்னன் வம்புக்கிழுத்து இப்போது வாஸந்தியை எழுதியதுபோல எழுத ஆரம்பிக்க, அவர் திண்ணைக்கு எழுதுவதை நிறுத்திவிட்டாரோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. இதுகுறித்த திட்டவட்டமான தகவல்கள் எனக்குத் தெரியும் என்றாலும் அவற்றைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை. இப்போது அதே மலர்மன்னன் வாஸந்தி எப்படி இதைப் பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று திண்ணையின் நாட்டாமைபோலக் கேள்வி கேட்க, நீங்களும் அதை உங்கள் பத்திரிகா சுதந்திரப்படி அப்படியே பிரசுரித்துள்ளீர்கள். மலர்மன்னன் போன்றவர்கள் லெவலுக்கு இறங்கிச் சண்டை போடவோ விவாதம் செய்யவோ விருப்பம் இல்லாது இருந்தால் வாஸந்தியும் திண்ணையில் எழுதுவதை நிறுத்திவிடப் போகிறார் என்று வாசகனாக எனக்குப் பயமாக இருக்கிறது. யார் எதை எழுதுவது என்பதைச் சொல்ல மலர்மன்னன் யார்? மலர்மன்னன் யாரைப் பற்றியெல்லாம் எழுதுகிறாரோ அவர்களின் வீட்டுச் சமையலறை வரை சென்று பழகிவிட்டுத்தான் - அதாவது நன்றாகத் தெரிந்து கொண்டபின்புதான் எழுதுகிறாரா? மகாத்மா காந்தியைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதிய மலர்மன்னன் என்ன, மகாத்மாவின் காரியதரிசியாகப் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை எழுதினாரா? இப்போது வாஸந்தியைக் கேட்க வந்துவிட்டார். மலர்மன்னன் போன்றவர்கள் எழுதுவதையெல்லாம் பிரசுரிப்பதற்கு முன், மலர்மன்னனைத் தவிர மற்றவர்களைப் படிக்க விரும்பும் திண்ணை வாசகர்களுக்கு ஏற்படக் கூடிய இழப்புகளைப் பற்றித் திண்ணை ஆசிரியர் குழு சிந்திக்க வேண்டும். நேரடியாகவும் பிற பெயர்களில் ஒளிந்து கொண்டும், உற்பத்தி செய்யப்பட்டு, இந்தக் கடிதத்தை எதிர்த்து வரப்போகும் கடிதங்களை திண்ணை அப்படியே பிரசுரிக்கும் என்று அறிவேன். ஆனால், திண்ணை இப்படித் தொடர்ந்து எழுத்தாளர்களை இழந்து கொண்டிருக்கும் நிலை இனியும் ஏற்படுமானால், பேசாமல் அதை பா.ஜ.க.வின் பிரசாரப் பீரங்கி என்று அறிவித்து விடலாம். என்னைப் போன்றவர்களுக்கு இப்படிக் கடிதம் எழுதுகிற வேலையாவது மிச்சமாகும்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

இந்த வாரத் திண்ணையில் பிரசுரமான கடிதம் இரண்டின் முழுவடிவம்

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றிய பிராமணீய வெறியரும், ஆணாதிக்கவாதியும், இந்துத்துவ அடிப்படைவாதியுமான (இந்த அடைமொழிகளுக்கு ஆதாரம் வேண்டுமென்றால் திண்ணை ஆசிரியருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கிறேன்.) ஜெயராமன் எழுதிய கடிதத்தைப் படித்தேன். வருவதை எல்லாம் அப்படியே பிரசுரித்துவிடுகிற வழக்கத்தில் ஜெயராமன் போன்றவர்களின் அபத்தங்களையும் பிரசுரிக்கிற வழக்கத்தை திண்ணை ஆசிரியர் குழு என்று நிறுத்தப் போகிறதோ, தெரியவில்லை. இந்த ஜெயராமன் என்பவர் திண்ணை ஆசிரியரும் உறுப்பினராக இருக்கிற ஒரு குழுமத்தில் நடிகை மீரா ஜாஸ்மீனைப் விபச்சாரி என்ற பொருள்தரும் வார்த்தையில் விளித்து எழுதி, அப்படியெல்லாம் எழுதக் கூடாது என்று அவருடைய மகரிஷியான மலர்மன்னனாலும், சகோதரரான அரவிந்தன் நீலகண்டனாலும் அன்புடன் வேண்டிக் கொள்ளப்பட்டவர். பாலியல் ரீதியான வலைப்பூ வைத்திருந்து வலைப்பதிவு செய்கிற பெண்களைப் பற்றி மோசமாக எழுதியதாக கொஞ்சகாலம் முன்பு இவர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு வலைப்பதிவுகளில் எழுப்பப்பட்டு கொடிகட்டிப் பறந்தது. அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வாஸந்தி மட்டுமல்ல யாருடைய எழுத்தும் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். ஆனால், எழுத்துலகில் அட்ரஸ் இல்லாத ஜெயராமன் போன்ற காளான்கள், தடம்பதித்த எழுத்தாளர்கள் மீது மலினமானத் தாக்குதல் நடத்துவதை திண்ணையைத் தவிர வேறெந்தப் பத்திரிகையும் அனுமதிப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், விமர்சிப்பவர்களின் தராதரம் என்ன என்பதையும் அறிந்தபின்பு திண்ணை இப்படிப்பட்ட கடிதங்களைப் பிரசுரித்தால் நன்றாக இருக்கும். எந்தப் புகழ்பெற்ற எழுத்தாளரும் தனக்குரிய புகழையோ இடத்தையோ தன்னுடைய சாதனைகளாலேயே அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எழுத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஜெயராமன் போன்றவர்கள் எழுதியிருக்கிற அபத்தமான வரிகளைப் பிரசுரிப்பதற்கு முன்பு, இப்படிப்பட்ட லாஜிக்கில்லாத வெறுப்பின் அடிப்படையிலான தாக்குதலை வாஸந்தி போன்ற தடம் பதித்த எழுத்தாளர் மீது நடத்த திண்ணை இடம் கொடுக்கலாமா என்று எழுத்தாளரான திண்ணையின் ஆசிரியர் கோபால் ராஜாராம் யோசித்திருக்க வேண்டும். எனக்கு என்னவோ, மலர்மன்னன், ஜெயராமன் ஆகியோரின் எழுத்துகள் வாஸந்தி திண்ணையில் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும் என்கிற மறைமுகத் திட்டத்தைக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்குப் பலமாக இருக்கிறது. அதுதான் திண்ணையின் நோக்கமும் என்றால், பேஷ் பேஷ் நடக்கட்டும். வாழ்த்துகள்.

- பி.கே. சிவகுமார்

பல மாதங்கள் முன்பு நான் எழுதி ஆனால் திண்ணைக்கு இதுவரை அனுப்பாத கடிதம்:

திண்ணை ஆசிரியருக்கு,

உங்களுக்கு இருக்கிற பல அலுவல்களில் உங்களின் இதழியல் நெறிகளே உங்களுக்கு மறந்துவிடுகிற வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் சிலநேரங்களில் தவறிவிடுகிறோம் என்று சுந்தர ராமசாமியுடனான உரையாடலில் அதை நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள். அந்த அரிய குணத்திற்குப் பாராட்டுகள். அந்த நேர்மையே இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது.

"பொறுப்புடன் எழுதுவோம்
- திண்ணை ஆசிரியர் குழு

நேர்ப்பேச்சில் ஒருவர் என்ன சொன்னார் என்று ஒருவர் இன்னொருவருக்கு எழுதி, அந்த மூன்றாமவர் கடிதத்தை மேற்கோள் காட்டி, எழுத்தில் பதிவு செய்து அதனைத் தொடர்ந்து விவாதங்களைக் கிளப்புவதும், மூன்றாமவர் குறிப்பிட்ட ஒருவரைப் பற்றி அவதூறு செய்வதும், எந்த விதத்திலும் பொறுப்பான விவாதத்திற்கு வழி வகுக்காது. எவை எழுத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறதோ அதுவே விவாதத்திற்கும் , விமர்சனத்திற்கும் பொருளாக வேண்டும்.

இது போன்ற அவதூறுகளைத் தவிர்ப்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருப்பது வழக்கம். இருந்தும் எங்கள் கவனத்திற்குத் தப்பி இப்படி நேர்ந்துவிட்டது. இந்த அவதூறுகள் நிரந்தரப் பதிவு பெறலாகாது என்று உடனடியாக நாங்கள் இதனை நீக்கிவிட்டோம். இவற்றைத் தவிர்க்க ஒரே வழி திண்ணைக்கு எழுதுபவர்கள் பொறுப்புடன் எழுதுவது தான். தயவு செய்து, பதிவு செய்யப்பட்ட விஷயங்கள் பற்றி மட்டுமே எழுதுங்கள். அவதூறைத் தவிர்க்கவும். "

[முழுமையான கடிதம் http://www.thinnai.com/?module=displaystory&story_id=20206175&format=html என்ற முகவரியில் இருக்கிறது.]

மலர்மன்னன் திண்ணையில் எழுதுகிறவை பெரும்பாலும், அவரிடம் இன்னொருவர் என்ன சொன்னார் என்பதாக இருக்கிறது; அவர் இன்னொருவரிடம் என்ன சொன்னார் என்பதாக இருக்கிறது. தனிமனித உரையாடல்கள் என்று அவர் சொல்பவற்றின்மூலம் மனிதர்களைப் பற்றிய மதிப்பீடுகளையும், சிலநேரங்களில் வரலாற்றையும் கட்டமைக்கும் "புனிதப் புனைவுப்" பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். கிசுகிசுக்களின் மூலமும் வதந்திகளின் மூலமும் அவதூறு பரப்புவதற்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை மலர்மன்னன் எழுதுவது.

"நேர்ப்பேச்சில் ஒருவர் என்ன சொன்னார் என்று ஒருவர் இன்னொருவருக்கு எழுதி, அந்த மூன்றாமவர் கடிதத்தை மேற்கோள் காட்டி, எழுத்தில் பதிவு செய்து அதனைத் தொடர்ந்து விவாதங்களைக் கிளப்புவதும், மூன்றாமவர் குறிப்பிட்ட ஒருவரைப் பற்றி அவதூறு செய்வதும், எந்த விதத்திலும் பொறுப்பான விவாதத்திற்கு வழி வகுக்காது. எவை எழுத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறதோ அதுவே விவாதத்திற்கும் , விமர்சனத்திற்கும் பொருளாக வேண்டும்." என்று 2002-ஆம் ஆண்டிலேயே தெளிவாகவும் சரியாகவும் சொன்ன திண்ணை ஆசிரியர் குழுவுக்கு இது தெரியாதா? நேர்ப்பேச்சில் சொன்னதாகச் சொல்லப்படுபவை மட்டும்தானே மலர்மன்னன் கட்டுரைகளைப் பெரும்பாலும் நிறைக்கின்றன.

எழுத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறவை மட்டும்தான் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் பொருளாக வேண்டும் என்றால் மலர்மன்னனின் எத்தனைக் கட்டுரைகள் தேறும்? காமராஜரும் அண்ணாவும் மற்றவர்களும் அவரிடம் சொன்னதாக மலர்மன்னன் எழுதுகிறவற்றுக்கு ஆதாரம் என்ன? இவை அனைத்தும் நேர்ப்பேச்சில் சொல்லப்பட்டவை என்று மலர்மன்னன் எழுதித் தள்ளுகிறாரே தவிர, எழுத்தில் மற்றவர்களால் பதிவு செய்யப்பட்ட மாதிரி தெரியவில்லையே.

திண்ணை ஏற்கனவே அறிவித்த இதழியல் நெறியை மீறி மலர்மன்னனின் பல கட்டுரைகளை இதுநாள்வரை பிரசுரித்தது ஏன்? மலர்மன்னனுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு, சலுகை? மலர்மன்னன் திண்ணையின் செல்லக் குழந்தையா? தெரியாமல் நிகழ்ந்துவிட்ட தவறு என்றால், திண்ணையில் பிரசுரமான மலர்மன்னனின் கட்டுரைகளை 2002ன் அளவுகோலின்படி மறுபரிசீலனை செய்து 2002 இதழியல் நெறியின்படி தேறாதவற்றை உடனடியாக நீக்குமாறு திண்ணை ஆசிரியர் குழுவுக்குப் பொதுவில் கோரிக்கை வைக்கிறேன். திண்ணை ஆசிரியர்குழு இதைச் செய்யாத பட்சத்தில், மலர்மன்னனைப் பற்றிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் உலவுகிற செய்திகளும்கூட - என்னிடம் இருக்கின்றன. அவற்றையும் நான் நேர்ப்பேச்சின் வாயிலாகவே கேட்டு அறிந்தேன். அவற்றை திண்ணைக்கு அனுப்பி வைக்கிறேன். நேர்ப்பேச்சின் வாயிலாகப் பெறப்பட்ட அந்தக் கதைகளையும் வரலாறாகவும், மலர்மன்னனைப் பற்றிய மதிப்பீடாகவும் திண்ணை பிரசுரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கடிதத்தைப் பிரசுரம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

Update: Nov 8, 2007

குறிப்பிட மறந்துபோன விஷயம். திருவாளர் மலர்மன்னன் அவர்கள் இனிமேல் திண்ணையில் எழுதமாட்டேன் என்று ஒருமுறை திண்ணையை விட்டுப் போனார். கொஞ்சநாட்களிலேயே பலரும் என்னை எழுதச் சொல்லிக் கேட்கின்றனர் என்று ஒரு "பிட்"டைப் போட்டுக் கொண்டு திரும்பி வந்தார். மலர்மன்னனைப் போன்றவர்களுக்கு இப்படித் தடம் புரண்டு, சொல் மீறி ஊடகங்களைத் தங்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாக இருக்கலாம். ஆனால், அவரைப் போன்றவர்களால் துரத்தப்படுகிறவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதையும் திண்ணை ஆசிரியர் குழு யோசிக்க வேண்டும்.

திரு. ஜெயகுமார் மலர்மன்னனுக்கு ஆதரவாகத் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அன்னார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்று கேள்விப்பட்டேன். உண்மையா என்று தெரியவில்லை. ஆனாலும், மலர்மன்னன் போன்றவர்களுக்கு ஆதரவாளர்களாக வேறு யார் இருக்க முடியும் என்று தெரியாதா என்ன? இதே மாதிரி பல கடிதங்கள் வரலாம். வெளியிடப்படலாம். அவற்றுக்கு நான் பதில் சொல்லப் போவது இல்லை. ஏனென்றால், என்னுடைய நோக்கம் இந்துத்துவ வெறியர்களிடம் விவாதம் செய்வது இல்லை. மனசாட்சியும் ஆத்மசுத்தியும் உள்ளவர்களிடம் மட்டுமே நான் உரையாடுவதும் விவாதிப்பதும். அதனால்தான் என்னுடைய கடிதத்தைக் கூட திண்ணை ஆசிரியர் குழுவுக்கு எழுதினேன். என்னுடைய நோக்கம், அமைதியாகப் படித்துவிட்டு, நடுநிலையுடன் யோசிக்கும் இந்துக்களிடம் இந்துத்துவ வெறியர்களின் மத அடிப்படைவாத நோக்கங்களை (பின் லேடனின் நோக்கங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை இவர்களின் நோக்கங்கள்) வெளிச்சம் போட்டுக் காட்டுவதுதான்.

4 comments:

Srinivasan said...

Dear PKS,
VERY SAD to read the developments & the background.
good wishes on all your EFFORTS.
God Bless,
Regards,
Srinivasan. V.

Srinivasan said...

Hi PKS,
Who is Ma Ve Sivakumar.
Why his KARUNAI MANU is under your folder in the THINNAI.
I am eager to know.
If my understanding is wrong, kindly clarify, when you have time.
God Bless you and your children for a happy & prosperous life ahead.
Happy Diwali.
Greetings,
srinivasan. V.

PKS said...

Dear Thiru. Srinivasan, Vanakam. Thanks for your comments. Ma.Ve. Sivakumar is a known writer in Tamil. I dont know why his writing was collected under my folder in Thinnai. May be it was a mistake. Thanks for your Diwali wishes. Wish you and your family the same. - PK Sivakumar

PKS said...

குறிப்பிட மறந்துபோன விஷயம். திருவாளர் மலர்மன்னன் அவர்கள் இனிமேல் திண்ணையில் எழுதமாட்டேன் என்று ஒருமுறை திண்ணையை விட்டுப் போனார். கொஞ்சநாட்களிலேயே பலரும் என்னை எழுதச் சொல்லிக் கேட்கின்றனர் என்று ஒரு "பிட்"டைப் போட்டுக் கொண்டு திரும்பி வந்தார். மலர்மன்னனைப் போன்றவர்களுக்கு இப்படித் தடம் புரண்டு, சொல் மீறி ஊடகங்களைத் தங்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாக இருக்கலாம். ஆனால், அவரைப் போன்றவர்களால் துரத்தப்படுகிறவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதையும் திண்ணை ஆசிரியர் குழு யோசிக்க வேண்டும்.

திரு. ஜெயகுமார் என்பவர் மலர்மன்னனுக்கு ஆதரவாகத் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அன்னார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்று கேள்விப்பட்டேன். உண்மையா என்று தெரியவில்லை. ஆனாலும், மலர்மன்னன் போன்றவர்களுக்கு ஆதரவாளர்களாக வேறு யார் இருக்க முடியும் என்று தெரியாதா என்ன? இதே மாதிரி பல கடிதங்கள் வரலாம். வெளியிடப்படலாம். அவற்றுக்கு நான் பதில் சொல்லப் போவது இல்லை. ஏனென்றால், என்னுடைய நோக்கம் இந்துத்துவ வெறியர்களிடம் விவாதம் செய்வது இல்லை. மனசாட்சியும் ஆத்மசுத்தியும் உள்ளவர்களிடம் மட்டுமே நான் உரையாடுவதும் விவாதிப்பதும். அதனால்தான் என்னுடைய கடிதத்தைக் கூட திண்ணை ஆசிரியர் குழுவுக்கு எழுதினேன். என்னுடைய நோக்கம், அமைதியாகப் படித்துவிட்டு, நடுநிலையுடன் யோசிக்கும் இந்துக்களிடம் இந்துத்துவ வெறியர்களின் மத அடிப்படைவாத நோக்கங்களை (பின் லேடனின் நோக்கங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை இவர்களின் நோக்கங்கள்) வெளிச்சம் போட்டுக் காட்டுவதுதான்.

- பி.கே. சிவகுமார்