Wednesday, November 21, 2007

அ. முத்துலிங்கம்

[அ. முத்துலிங்கத்தின் மஹாராஜாவின் ரயில் வண்டி சிறுகதை தொகுப்பிற்கான மதுமிதாவின் வாசக அனுபவத்திற்கு (http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/9be0579a649319be) எழுதிய பதில் இது. இங்கே சேமித்து வைத்துக் கொள்கிறேன்.]

வாசக அனுபவத்திற்கு நன்றி. மஹாராஜாவின் ரயில் வண்டி தொகுப்பைப் படித்த நாட்களை உங்கள் கட்டுரை நினைவுபடுத்திவிட்டது. இதே தொகுப்பைப் பற்றி உஷாஜி எழுதிய வாசக அனுபவத்தையும்தான். அ.மு. எழுத்துகள் பற்றி ஜெயமோகன் எழுதிய விமர்சனக் கட்டுரை திண்ணையில் இருக்கிறது. ஜெயமோகன் முக்கியமான படைப்பாளிகளைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பிலும் இருக்கிறது.

அ.மு. தொகுப்பின் முன்னுரையில் உண்மையான கதைகள் கூடாது, உண்மைத்தனமான கதைகள் எழுத வேண்டும் என்பதற்குச் சொல்கிற கதையும் கருத்தும் முதலில் படித்ததுமே பிடித்ததாலேயே அத்தொகுப்பைத் தொடர்ந்து படித்தது நினைவுக்கு வருகிறது.

'நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர், காத்திருக்கிறார், என்னுடைய படைப்புகள் எப்படியோ வழிதேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும், அப்படி நம்பிக்கை, இந்த நூல் அந்த வாசகருக்கு; அந்த உலகத்துக்கு.' என்று அ.முத்துலிங்கம் போலவே கவிஞர் சுகுமாரனும் ஒரு தொகுப்பில் குறிப்பிட்டிருந்தார். எல்லா எழுத்தாளர்களின் ஆதார நம்பிக்கையும் இதுதான் என்று நினைக்கிறேன்.

ரொட்டியும் இரு சிறுவர்களும் அந்த நாயும் இன்னமும் நினைவிலிருக்கிறார்கள்.

அ.முத்துலிங்கத்தின் கதைகள் வெகுசுவாரஸ்யமானவை. ஜெயமோகன் அவரைக் கதைசொல்லி என்கிறார். கி.ரா. வரிசையில் வைக்கிறார். புலம் பெயர்ந்த எழுத்தாளர்களிலேயே சிறந்த எழுத்தாளர் என்றுகூட ஜெயமோகன் அ.மு.வைப் பற்றி எழுதிய ஞாபகம். சு.ரா. இங்கே வந்திருந்தபோது அ.மு எழுத்துகள் பற்றிய அவர் அபிப்பிராயத்தைக் கேட்டேன். பெரிய அபிப்பிராயம் ஒன்றும் இல்லை என்று தாண்டிச் சென்றுவிட்டார். அ.மு.வின் கதைகள் பெரும்பாலும் தன்மையிலும் (First Person), கதை சொல்லியாகவும், சிறுகதையின் இலக்கணங்களைப் பூர்த்தி செய்யாதவையாகவும் இருக்கும். பல சிறுகதைகள் நடைச்சித்திரம் போன்றும் தெரியலாம். சு.ரா.வுக்கு அ.மு. எழுத்துகள் முக்கியமாகத் தெரியாததற்கு இது காரணமாக இருக்கலாம். ஆனால், ஒரு படைப்பு வாசிப்பவரின் மனதில் உண்டாக்கும் உணர்வுகளை வைத்தே அதன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த விதத்தில் அ.மு. என்னைப் பொருத்தவரையில் ஒரு முக்கியமான படைப்பாளி. ஆனால், கி.ரா. வரிசையில் அவரை வைக்க முடியுமா என்பது இன்னொரு கேள்விக்குறியும் கூட. அ.மு.வின் கட்டுரைகள்/நேர்காணல்கள் ஆகியவற்றை அவரின் கதைகளைவிட முக்கியமான பங்களிப்புகளாக நான் பார்க்கிறேன்.

வலைப்பதிவு வாசகர்களுக்காகப் பிற்சேர்க்கையாக சில சுட்டிகள்:

மஹாராஜாவின் ரயில் வண்டி பற்றி உஷா எழுதியதன் சுட்டி:
http://www.maraththadi.com/article.asp?id=458

புன்னகைக்கும் கதைசொல்லி என்று அ.முத்துலிங்கம் படைப்புகள் பற்றி ஜெயமோகன் எழுதியவற்றின் சுட்டிகள்:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60302022&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60302096&format=html

அ. முத்துலிங்கம் எழுதியவையும் அ. முத்துலிங்கம் எழுத்து பற்றியவையுமான இன்னும் பல படைப்புகள் திண்ணை.காமில் தேடக் கிடைக்கும்.

No comments: