[ரெ. கார்த்திகேசுவின் இன்னொரு தடவை சிறுகதைத் தொகுதிக்கான வாசக அனுபவம். மித்ர வெளியீடு. விலை ரூபாய் 75.]
ஜென் குரு-சீட உறவில் ஒரு பழக்கம் உண்டு. சீடர் குருவுடன் பத்து ஆண்டுகள் தங்கியபின்னர் தானும் ஓர் ஆசிரியராகத் தனியே பிரிந்து செல்கிற தகுதி பெறுகிறார் என்று சொல்வார்கள். அதேபோல, ஓர் எழுத்தாளர் எத்தனை ஆண்டுகள் எழுதிய பின்னர் நன்றாக எழுதிய திருப்தியைப் பெறுகிறார் என்ற கேள்விக்கு magicwand பதில்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாக எழுதிய திருப்தி வந்துவிட்டால் அதற்குமேல் எழுதுவதை நிறுத்திவிடக் கூடும் என்று சொல்லலாம். ரெ.கார்த்திகேசு ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக எழுதிவருகிறார். ஆனால், அவர் இதுவரை எழுதியவற்றுள் "அழகிய அழுத்தமான அர்த்தமுள்ள படைப்புகள்" எவை என்று தீர்மானிப்பதில் தனக்குள் நிச்சயமற்ற தன்மை நிலவிவருவதாகவே சொல்கிறார். எனக்கெல்லாம் ஒரு புத்தகம் வெளிவந்ததுமே புத்தக வடிவில் எழுத்துகளைப் பார்க்கிற ஆசை போய்விட்டது. இத்தனைக்கும் என்னுடைய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சி, ஒரு சிறுகதையை எழுத அவருக்குத் தூண்டுதல் தந்ததாக ரெ.கா. அவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து எழுதுகிற "கங்கை" என்னால் ஊதி நெருப்பாக வைத்துக் கொண்டிருக்கவே முடியவில்லை.
ஆனால் ரெ.கா. எழுதிக் கொண்டிருக்கிறார் - "வாழ்க்கைத் தளங்களில் நிகழ்வுகளின் சதுரங்க நகர்வுகளைக் கண்டு அவற்றின் அர்த்தங்களை அசைபோடுகிற தியானமாக". 1974-ல் வெளிவந்த சிறுகதைத் தொகுதியில் ஆரம்பித்தால், 2001-ல் வெளியான "இன்னொரு தடவை" அவருடைய மூன்றாவது சிறுகதைத் தொகுதி. இடையில் இரண்டு நாவல்கள், எண்ணற்ற கட்டுரைகள். ஆனால் தன்னுடைய எழுத்துகளின் எண்ணிக்கையைக் கண்டு அதிகம் பெருமைப்படக் கூடாது என்று அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறார். ஆனாலும், எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்பது தெரியாதவரல்ல அவர். இது இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகம் அவருக்குள் இருப்பதைக் காட்டுகிறது. புதியதாக எழுத வருகிறவர்களும், என்னைப் போன்றவர்களும் பல ஆண்டுகள் படைப்பூக்கத்தை இவரைப்போல தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளுமே மலேஷியத் தமிழர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியவை. மலேஷியத் தமிழர் வாழ்வு முறையும் சித்திரங்களும் அழுத்தமாகவும் விவரமாகவும் பதியப்பட்டுள்ளதா என்றால், கதைக்கேற்ற அளவுக்குப் பதியப்பட்டுள்ளன என்று சொல்லலாம். சுற்றுச் சூழல், கதைக்களன் ஆகியவற்றை விவரிக்கிற வர்ணனைகளைவிட ஆசிரியருக்கு நேரடியாகக் கதையில் நுழைந்து விடுவதும், கதை மாந்தரைப் பற்றிப் பேசுவதும், கதை மாந்தரைப் பேசவைப்பதன் மூலம் கதையை முன்னகர்த்திச் செல்வதும் பிடித்திருக்கிறது.
இந்தத் தொகுப்பின் பல கதைகளில் குழந்தைகள் வருகிறார்கள். அதனாலேயே எல்லாக் கதைகளையும் நான் ஆர்வத்துடன் படித்தேன். ஆசிரியராகப் பணிபுரிந்ததாலோ என்னவோ கதாசிரியருக்குக் குழந்தைகள்பால் இருக்கிற வாத்சல்யம் கதைகளில் தெரிகிறது. நாளைக்குக் கதையில் வருகிற பன்னிரண்டு வயது சிறுமி பத்மா, நல்லவராவதும் தீயவராவதும் கதையில் வருகிற முத்தையா மற்றும் கேசவன், வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும் கதையில் வருகிற ஆறுமுகம், பாக்கியம் பிறந்திருக்கிறாள் கதையில் வருகிற கைக்குழந்தை புஷ்பலதா என்கிற பாக்கியம், கூரை ஓட்டில் ஒரு எலி குடும்பம் நடத்துகிறது கதையில் வருகிற செல்வி, தங்கச்சிறகுகள் கதையில் வருகிற பதின்ம வயது இளைஞர்கள் செந்தில்குமார் மற்றும் சுல்தான், ஒட்டுப்புல் கதையில் வருகிற காயத்ரி என்று இவர் கதைகளில் விதவிதமானக் குழந்தைகள், விதவிதமான குணாதிசயங்களோடு வளைய வருகிறார்கள். அப்பாத்திரங்கள் எவ்வளவு கலைநயத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதைவிட, அப்பாத்திரங்களை ஆசிரியர் ஒரு தகப்பனுக்கேயுரிய அக்கறையுடனும் வாஞ்சையுடனும் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பின் சிறந்த கதைகளாக கூரை ஓட்டில் ஒரு எலி குடும்பம் நடத்துகிறது கதையையும் அடுத்து, ஒரு சுமாரான கணவன் கதையையும் சொல்லலாம்.
மலேஷியாவில் வாழ்கிற தினசரிக் கூலிகள், நடுத்தர வர்க்க மாந்தர்கள் ஆகியோரே ரெ.கா.வின் கதை மாந்தர்களாக இருக்கிறார்கள். தன் கணவனையும் மாமியாரையும் எதிர்த்துச் சிறையிலிருந்து விடுதலையாகிற பதின்ம வயது தங்கையைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிற தமக்கை, அலுவலக மேலதிகாரியுடன் சாப்பிடப் போவது தவறில்லை என்று அம்மாவிடமும் தாய்மாமனிடமும் வாதிடுகிற கல்யாணமாகாத இளம்பெண் என்று தைரியமான பெண்கள் வருகிற கதைகளிலிருந்து, அம்மா சொல்லித் தந்த மதிப்பீடுகளுக்கு எதிரானது என்பதற்காக தான் விரும்பும் ஆணுடன் சாப்பிடப் போவதைத் தவிர்த்து அந்த உறவைத் தொலைத்துவிட்டு நிற்கிற அகிலாவரை பெண் பாத்திரப் படைப்புகள் உள்ளன. ஆனாலும் தொகுப்பை முழுவதுமாகப் படிக்கும்போது மலேஷியாவின் நடுத்தரத் தமிழ்க் குடும்பங்களில் - உறவுகள், சமுதாயப் பார்வை, பெண்விடுதலை ஆகிய மதிப்பீடுகள் எந்த அளவுக்கு நவீனம் பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது.
எல்லாக் கதைகளுமே தமிழ்க் குடும்பங்களைப் பற்றியன. அங்கங்கே சீனர்களும் மலாய்க்காரர்களும் நடத்துகிற உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால், எந்தக் கதையிலும் தமிழரல்லாத சீனரோ, மலாய்க்காரரோ முக்கியமானப் பாத்திரப் படைப்பாக வரவில்லை. பல்வேறு இனக்குழுக்கள் வசிக்கிற ஒருநாட்டில் அந்த இனக்குழுக்களுக்கிடையேயான உறவுகள், சிக்கல்கள், நெருக்கடிகள், தீர்வுகள் ஆகியவற்றை ஆசிரியர் எதிர்காலத்தில் கதைகளாக்கினால், கதைகளின் அடர்த்தியும் வீச்சும் அதிகமாகும் என்பது என் எண்ணம்.
மலேஷிய தமிழ் வாழ்க்கைக்கேயுரிய பிரத்யேகமான நிறை குறைகளையும் வாழ்வின் சிக்கல்களையும் விவரமாக அறிய முடியாவிட்டாலும், மலேஷியத் தமிழர்களின் பிரச்னைகளுக்கும் தமிழ்நாட்டில் வசிக்கிற ஏழை, நடுத்தரக் குடும்பத்தினரின் பிரச்னைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகளின் மூலம் அறிய முடிகிறது. தான் எடுத்துக் கொண்ட பாத்திரப் படைப்புகளின் வாழ்க்கை நிகழ்வுகளையும் எண்ணங்களையும் விவரிப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.
முற்றும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment