அடுத்த பத்தாண்டுகளில் அயலகத்தமிழர்களின் எழுத்தே தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போடப்போகிறது என்கிற ஆருடங்களில் எனக்கு நம்பிககையில்லை. வலியும் வேதனையும் அதனூடே எழுகிற எழுச்சியும் இல்லாமல் எதையும் புரட்டிப்போட முடியாது. புரண்டு வேண்டுமானால் படுக்க முடியும். இலங்கை தவிர மற்ற நாடுகளில் வாழுகிற அயலகத் தமிழர்கள் வாழ்க்கை வசதிகளுடன் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். அதனால் புரட்டிப் போடுகிற இலக்கியப் புரட்சிகள் அயலகத் தமிழர்களிடமிருந்து வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனாலும், அயலகத் தமிழர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான பங்களிப்புகள் தமிழ் இலக்கியத்துக்கு நேருகிற வாய்ப்பு இருக்கிறது. இலங்கையின் அமைதியின்மை தவிர கணினியுகமும் தொழில்நுட்பமும் உலகளாவியவாதமும் பல தமிழர்களைச் சமீபகாலங்களில் பலநாடுகளில் குடியேற்றியுள்ளது. அவர்களிடமிருந்தெல்லாம் அந்தந்த நாட்டைப் பற்றிய வாழ்க்கைமுறை, மக்கள் ஆகியோரை அறிந்து கொள்ள முடிகிற படைப்புகள் இன்னும் அதிகமாக வெளிவரும். என்னுடைய கட்டுரைத் தொகுதியில் கூட, அமெரிக்கா என்ற தலைப்பின்கீழே அமெரிக்க வாழ்க்கை பற்றிய் நான் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருப்பது நினைவுக்கு வருகிறது.
படைப்புகளில் வடிவ முக்கியத்துவமும் குறைந்து வருகிற நாளிது. நல்ல சிறுகதை ஒன்று உருவாக்கக்கூடிய உணர்வையும், மனவெழுச்சியையும் இப்போது ஒரு நல்ல கட்டுரை உருவாக்கி விடுகிறது. ஆதலால், அயலகத் தமிழர்கள் வடிவம், செய்நேர்த்தி ஆகிய கட்டுப்பெட்டி வாத்தியார்களின் அளவுகோல்களைப் பற்றிக் கவலைப்படாமல் பங்களிக்க முடியும். இந்தச் சுதந்திரமே, நிறைய அயலகத் தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன். தமிழில் வட்டார இலக்கியத்தில் இவையும் ஒரு பகுதியாகி அங்கீகரிக்கப்படுகிற நாள் தூரமில்லை. ஐம்பதுகளிலிருந்தே இலங்கைத் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் அங்கீகரிக்கப்பட்ட பகுதியானபோதும், சிங்கைத் தமிழ் இலக்கியம், மலேஷியத் தமிழ் இலக்கியம், அமெரிக்கத் தமிழ் இலக்கியம் என்று தற்போது நாம் கேள்விப்படுகிற சொற்கள் பொதுவானப் புழக்கத்திற்கும் அங்கீகாரத்திற்கும் வருகிற சாத்தியங்களை நேரடியாகப் பார்த்து வருகிறேன்.
இதைச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. மலேஷியத் தமிழ் இலக்கியத்தில் நானறிந்த ஒரே எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுதான். அதற்கு முன்னரோ பின்னரோ பீர்முகம்மது என்ற மலேஷிய எழுத்தாளரின் பெயரைக் கேள்வியுற்றிருந்தபோதிலும் பீர்முகம்மதுவின் எழுத்துகளைப் படித்ததில்லை. ரெ.கார்த்திகேசு எழுத்தைக்கூட இணையம் இல்லாவிட்டால் அறிந்திருக்க மாட்டேன். இணையக் குழுமங்களில் அவர் எழுத்தைப் பார்த்தபின்னரே தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டு இலக்கியப் போக்கின் வரலாற்றில் பெருமளவு எழுத்தாளர்களைப் பற்றிய பெயர்ப் பரிச்சயமாவது பெற்றிருக்கிற, ஓரளவு இலக்கிய விஷயஞானம் உள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிற நான், மலேஷிய எழுத்தாளர் ஒருவரைப் பற்றி மட்டுமே அறிந்திருப்பதில் பாதிப்பங்கு எனக்கும் உண்டு என்றாலும், மீதிப்பாதிப் பங்கு தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கும் உண்டு. கருணாகரமூர்த்தி, அ. முத்துலிங்கம் உள்ளிட்ட சிலரைத் தவிர இலக்கியக் குத்தகை எடுத்திருக்கிற தமிழ்ச் சிறுபத்திரிகைகள் மற்ற அயலக எழுத்தாளர்களுக்கு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. (இந்த இடத்தில் ஜனரஞ்சகப் பத்திரிகைகளைப் பற்றி நான் பேசவேயில்லை. காரணம், அவற்றின் நோக்கம் பணமென்று தெரியும். ஆனால், அவைகூட உலகமயமாகிவருகிற சூழலில் அயலகத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் கொடுக்கலாம்.) தமிழ்நாட்டு இலக்கிய ஸ்கேலிலேயே அயலகத் தமிழர்களின் இலக்கியத்தையும் அளக்கிறார்கள். அதுவும் சரியில்லை. தலித் இலக்கியத்துக்கும் பெண்ணிய இலக்கியத்துக்கும் கொடுக்கிற ஒரு நெகிழ்வான பார்வையுடனேயே அயலகத் தமிழ் இலக்கியத்தையும் அணுக வேண்டும். ஏனென்றால், அயலகத் தமிழனுக்கு இலக்கியத்தைத் தமிழில் படைக்க வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. நினைத்தால் அந்த நாட்டு மொழியிலேயோ பிரபஞ்ச மொழியான ஆங்கிலத்திலேயோ எழுதி எழுதுவதன்மூலம் தமிழில் கிடைக்கக் கூடிய பெயரைவிட பெரிய பெயரை வாங்குகிற வாய்ப்புகள் அயலகத் தமிழர்களுக்கு இருக்கின்றன. ஆனாலும் தமிழின் மீது இருக்கிற ஆர்வத்தால் தமிழில் எழுத வருகிறார்கள் அயலகத் தமிழர்கள்.
இலக்கிய விமர்சனத்தில் தயவுதாட்சண்யம் கூடாது என்று சொல்கிற ஒரு கட்சி உண்டு. எதிரிக்கே தயவுதாட்சண்யம் காட்டிய மரபு நம்முடையது. இன்று போய் நாளை வா என்ற மரபு வேறு என்ன மரபு? ஆதலால், வாழ்க்கையில் காட்டுகிறோமோ இல்லையோ அறத்தையும் அதன் உணர்வெழுச்சியையும் சொல்லக்கூடிய இலக்கியத்தைப் பற்றிப் பேசும்போது தயவுதாட்சண்யம் காட்டுவது சரிதான் என்று நான் நினைக்கிறேன். தயவுதாட்சண்யம் என்றவுடன் "ஆஹா ஓஹோ அருமை" என்று அனைத்தையும் பாராட்டச் சொல்லவில்லை. இலக்கண அளவுகோல்களிலும், ஒப்பீட்டு ஆய்வுமுறைகளிலும் ஒரு படைப்பின் தனிப்பட்ட அழகையும் இருப்பையும் ஒரேயடியாகப் புறக்கணிக்க வேண்டாம் என்றே சொல்கிறேன். அயலகத் தமிழர்களின் பங்களிப்புகள் அதிகரிக்கும்போது இந்த இலக்கிய விமர்சன அளவுகோல்களிலும் மாற்றங்கள் வரும் என்பது நான் ஆவலுடன் எதிர்நோக்குகிற ஒரு விஷயம். ஏற்கனவே, சுவாரஸ்யமாக இருந்தால் அது இலக்கியம் இல்லை என்ற வாதம் தமிழில் அடிபட்டுப் போயிருக்கிறது. அதற்கு பிறமொழி அயலக எழுத்தாளரகளின் சுவாரஸ்யமான படைப்புகள் பெற்றிருக்கிற வெற்றிகளைத் தமிழ் வாசகர்கள் அறிய நேர்ந்தது ஒரு காரணம். சண்டைகளை வேடிக்கை பார்க்கிற ஆர்வமும், அறிந்து கொள்கிற ஆர்வமும் எல்லா மனிதராசிகளுக்கும் இருப்பதுபோல, அயலகத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு இலக்கியச் சண்டைகளை அறிந்துகொள்கிற ஆர்வம் இருந்தாலும், சண்டைகளுக்கு அப்பால் படைப்புகளை அதன் உள்ளடக்கம் குறித்தே மதிப்பிடுவதில் தமிழ்நாட்டு வாசகர்களைவிட அயலகத் தமிழர்கள் மேலானவர்கள் என்பது என் இன்னொரு தாழ்மையான அபிப்பிராயம். அதனாலும் தமிழிலக்கிய மதிப்பீடுகளில் குறிப்பிடட்தக்க மாற்றங்களைக் கொண்டுவருகிற காரணிகளாக அயலகத் தமிழர்கள் எதிர்காலத்தில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
வேரும் மனமும் இன்னமும் தமிழ்நாட்டில் உன்றியிருக்கிறபோதும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் ஓர் அயலகத் தமிழன். இனிவரும் காலங்களும் அப்படியே இருக்கக்கூடிய சாத்தியங்களையே நான் இதுவரை பார்க்கிறேன். ஆதலால், அயலகத் தமிழர்களின் எழுத்துகளை நான் ஆசை, பரிவு, ஆனந்தம், உற்சாகம் என்ற பல கலவையான உணர்வுகள் மேலெழப் பார்க்கிறேன். அது நான் எழுதுகிற புத்தக விமர்சனங்களிலும் வாசக அனுபவங்களிலும் தென்படலாம். ஆனால், அந்தக் காரணத்தினால் என் எழுத்துகளும் பார்வைகளும் நிராகரிக்கப்பட்டாலும் அந்த அயலகத் தமிழர்களின் எழுத்துகளை வாசிக்கிற பழக்கத்தையும், உங்கள் ஊடகங்களில் அவர்களுக்கு இடம்கொடுக்கிற பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதே என் தாய்நாட்டுத் தமிழர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள்.
அடுத்ததாக - ரெ. கார்த்திகேசுவின் "இன்னொரு தடவை" சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் வாசக அனுபவத்திற்குள் போவோம்.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment