பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளிப்
.....பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையே நீக்க
உற்றடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
.....வுலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய்’ என்று
.....கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
.....தெய்வகவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.
அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே
.....அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி
வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும்
.....விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல
நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி
.....நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து
விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த
.....வித்தகனாம் பாரதிஓர் ஆசான் மெய்தான்.
சாதிமதச் சழக்குகளைப் பற்றிக் கொண்டு
.....சமுதாயம் சீரழியும் தன்மை போக்க
நீதிநெறி நிறைந்தகுண ஒழுக்க வாழ்க்கை
.....நீங்காது நிற்பவரே மேலோர் என்னும்
போதனையே மூச்சாகப் பொழுதும் பாடிப்
.....புதுயுகத்தை நம்முளத்தில் புகுத்தி வைத்த
சாதனையால் எப்போதும் எல்லா ருக்கும்
.....சத்தியமாய்ப் பாரதிஓர் ஆசான் தானே!
கண்ணிரண்டில் ஒருகண்ணைக் கரித்தாற் போலும்
.....கைகால்கள் இரண்டிலொன்றைக் கழித்தாற் போலும்
பெண்ணினத்தை ஆணினத்திற் குறைந்த தாகப்
.....பேசிவந்த நீசகுணம் பெரிதும் நீங்கப்
பண்ணிசைக்கும் மிகப்புதுமைக் கவிகள் பாடிப்
.....பாவையரைச் சரிநிகராய்ப் பாராட் டும்நல்
எண்ணமதை நம்மனத்தில் இருக்கச் செய்த
.....ஏற்றத்தால் பாரதிஓர் ஆசான் என்போம்.
’மனைவிமக்கள் சுற்றத்தார் மற்றும் இந்த
.....மாநிலத்தில் காணுகின்ற எல்லாம் மாயை’
எனவுரைக்கும் கொள்கைகளின் இழிவைக் காட்டி
.....இல்லறத்தில் தெய்வஒளி இருக்கச் செய்தால்
நினைவிலுறும் முத்தியின்பம் தானே வந்து
.....நிச்சய்மாய் நம்மிடத்தில் நிற்கும் என்ற
புனிதமுள்ள தமிழறிவைப் புதுக்கிச் சொன்ன
.....புலவன்அந்த பாரதிநாம் போற்றும் ஆசான்.
உழைப்பின்றி உண்டுடுத்துச் சுகித்து வாழும்
.....ஊதாரி வீண்வாழ்க்கை மிகுந்த தாலே
பிழைப்பின்றி வாடுகின்ற ஏழை மக்கள்
.....பெருகிவிட்டார் நாட்டிலெனும் உண்மை பேசித்
தழைப்பின்றிப் பலதொழிலும் தடைப்பட் டேங்கத்
.....தானியங்கள் தருகின்ற உழவும் கெட்டுச்
செழிப்பின்றி வாழ்கின்றோம் இதனை மாற்றும்
.....செய்கைசொன்ன பாரதிஓர் சிறந்த ஆசான்.
கொலைமேவும் போர்வழியை இகழ்ந்து கூறிக்
.....கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த
கலைவாணர் மெய்த்தொண்டர் கருதிப் போற்றும்
.....காந்திஎம்மான் அருள்நெறியைக் கனிந்து வாழ்த்தும்
நிலையான பஞ்சகத்தைப் பாடித் தந்து
.....நித்தநித்தம் சன்மார்க்க நினைப்பைக் காட்டும்
தலையாய தமிழறிவை நமக்குத் தந்த
.....தவப்புதல்வன் பாரதிஓர் ஆசான் தானே!
தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்
.....தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்
.....இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி
.....அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்
.....ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.
- நாமக்கல் கவிஞர்
நன்றி: மதுரைத் திட்டம் (Project Madurai) தொகுத்து வெளியிட்டிருக்கும் நாமக்கல் கவிஞர் பாடல் தொகுப்புகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment