Tuesday, December 11, 2007

எழுத்தும் எண்ணமும் குழுமம்

வணக்கம்.

தமிழ் எழுத்துத் துறையிலும் திரைத்துறையிலும் இணையத்திலும் எனக்குச் சில தனிப்பட்ட நண்பர்கள் உண்டு. அவர்கள் துறையில் ஆர்வமும் பெரும்பாலும் சாதனைகளும் நிகழ்த்திய கலவையான நண்பர்களின் கூட்டம். நட்புணர்வோடு புரிதலும் பகிர்தலும் பெருந்தன்மையும் முதிர்ச்சியும் உடைய நண்பர்கள். பொதுவாகத் தனிமடலில் அவர்களுடன் அவ்வப்போது படித்தப் புத்தகங்கள், பார்த்த படங்கள், சமூக நடப்புகள் ஆகியன குறித்து அவர்களுடன் உரையாடுவது உண்டு. ஒவ்வொருமுறையும் மின்மடலின் To: முகவரியில் எல்லாருடைய முகவரிகளையும் இணைப்பது சிரமமான காரியம். மேலும் தனிப்பட்ட நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, இது இன்னமும் சிரமமாகிறது. அதனால் ஒரு தனிப்பட்ட குழுமத்தை உருவாக்குவதன்மூலம் மடல் அனுப்புவது சுலபம் என்பதாலும், மடல்கள் சேகரிப்பு, பதில் மடல்கள் ஆகியவற்றை நெறிப்படுத்த முடியும் என்பதாலும் எழுத்தும் எண்ணமும் குழுமத்தை மூடிய குழுமமாக நான்தான் ஆரம்பித்தேன். பரஸ்பர நம்பிக்கையும், நல்லெண்ணமும் உடைய நண்பர்களின் கூட்டம் இது என்பதாலும், பிரபலங்கள் முன்வந்துத் தாங்களே பங்களிப்பதாலும், ஆரோக்கியமான எதிர்வினைகள், கசப்பும் வெறுப்புமற்று அன்பின் அடிப்படையிலேயே வித்தியாசங்களைக்கூட அணுகுதல் ஆகியவற்றாலும் குழுமம் எதிர்பார்த்ததைவிட எனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தக் குழுமத்தில் எனக்கு இணையப் பரிச்சயமும் நட்பும் இருக்கிற இன்னும் பலரைக்கூட சேர்க்கவில்லை. காரணம், சேரத் தகுதி என்று எதுவும் இல்லை. இது ஒரு தனிப்பட்ட நண்பர்களின் Gang/Group என்று சொல்லலாம். அவ்வளவுதான். குழுமத்தின் செயற்பாடுகள், பங்களிப்புகள் ஆகியவற்றின்மூலம் தமிழ் இணையத்தைத் தானே வளர்த்ததாக நாளைக்கு வரலாறு எழுதிக் கொள்கிற நோக்கமும் இல்லை. சில குறிப்பிட்ட நெருக்கமான நண்பர்களின் பகிர்தலுக்கும் வளர்ச்சிக்குமான குழுமம் இது. இந்தக் குழுமத்தைப் பற்றி அறிய நேர்கிற நண்பர்கள், மிகுந்த நல்லெண்ணத்துடன் அதைப் பற்றி விசாரித்தும், சேர விருப்பம் தெரிவித்தும் மடல் அனுப்பி வருகிறார்கள். குழுமத்தில் யாரைச் சேர்ப்பது என்கிற முடிவும் பல நேரங்களில் நான் மட்டுமே எடுப்பது இல்லை. அவர்களுக்கெல்லாம் மறுத்துப் பதில் எழுதுவது கஷ்டமாகவே இருக்கிறது. பிகு செய்வதாகவோ, அலட்டலாகவோ அவர்கள் நினைக்கக் கூடும். ஆனாலும் உண்மை இதுதான். இது ஒரு பொதுக் குழுமம் இல்லை. நெருங்கிய நண்பர்களின் தனிப்பட்ட மூடிய உரையாடலுக்கான குழுமம். இதில் பொதுநண்பர்கள் சிலருக்கும் அழைப்புப் போய் சேர்ந்திருக்கிறார்கள். அந்த அழைப்பு உங்களுக்கு இதுவரை வரவில்லை என்றால், அந்த அழைப்பு வரும்வரை காத்திருப்பது ஒருவழி. "போங்கடே. ரொம்பத்தான் அலட்டுறீங்க" என்று எங்களைத் திட்டி ஒரு பதிவெழுதிவிட்டு, உங்கள் அடுத்த வேலையைப் பார்ப்பது இன்னொரு வழி. ஆனாலும் ஒன்று. கல்லூரிகளிலும் சமூகத்திலும் நட்பு வட்டாரத்தில் குரூப்புகள் இருக்கும். அந்த மாதிரி ஒரு குரூப் இது என்பதைத் தாங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால், இதில் நீங்கள் சேர இயலாதது குறித்து என்மீதோ குழுமம்மீதோ உங்களுக்கு வருத்தம் வராது. இன்னொரு விஷயமும் இருக்கிறது. குழுமத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிற அருமையான விஷயங்கள் பெரும்பாலும் உடனடியாகவோ சிலநாட்கள் கழித்தோ பொதுவுக்கு ஒரு படைப்பாக வரவே செய்கின்றன. அதனால் குழுமத்தில் உறுப்பினராக இல்லாததால் நீங்கள் இழக்கப்போவதும் பெரிதாக இல்லை. அதனால் குழுமத்தில் சேர நீங்கள் விருப்பம் தெரிவித்து அது சாத்தியமாகவில்லை என்றால் அதற்காக மன்னிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

1 comment:

ramachandran usha said...

பத்தி பிரித்துப் போட கூடாதா? படிக்க சிரமமாய் இருக்கிறது.