Friday, January 04, 2008

புத்தகக் கண்காட்சி பின்னூட்டம்

http://bookfair08.blogspot.com என்ற வலைப்பதிவில் இட்டப் பின்னூட்டத்தை வசதிக்காக இங்கே சேமித்து வைக்கிறேன்.

அய்யா, இந்த வலைப்பதிவை நடத்துகிற தாங்கள் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் புத்தகக் கண்காட்சியைக் குறித்துத் தகவல் தரவேண்டும் என்ற நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனாலும் இடையிடையே பொதுப்பிரச்னைகள் பால் கவனம் செலுத்துவது போல பபாஸி நிர்வாகிகளுக்கெதிரான பிரசாரம் தெரிகிறது. பபாஸிக்கு எதிராகப் பேச நிச்சயம் உங்களுக்கு உரிமை உண்டு. இதைச் செய்கிற புண்ணியவான் நீங்கள் சொந்தப் பெயரில் செய்தால் இதற்கெல்லாம் ஒரு credibility-ஆவது கிடைக்கும். ஆனந்தவிகடன் நல்ல அரங்கு அமைப்பது, இந்த வருடம் ஆனந்த விகடன் குழந்தைகள் அரங்கம் அமைக்காததற்குப் பபாஸி காரணம் என்று குற்றம் சாட்டுவது எல்லாம் ஒரு குறிப்பிட்ட வேலையை ஒரு குறிப்பிட்ட வர்ணத்தாரே சிறப்பாகச் செய்ய முடியும் என்று மறைமுகமாகச் சொல்கிற மாதிரி இருக்கிறது. உங்களுக்குப் பின்னர் எந்தப் பதிப்பாளரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். நிறைய பணம் போடுங்கள், எடுத்துவிடலாம் என்று தர்க்கம் தாண்டி ஆனந்தவிகடனில் பணிபுரிகிற ஒருவர் (இப்போது அவர் அங்கு பணிபுரிவதில்லை!) சொல்லிச் சென்ற வருடம் ஆனந்த விகடன் ஏறக்குறைய 37 லட்ச ரூபாய்களைப் புத்தகக் கண்காட்சிக்குச் செலவிட்டதாகவும், அதில் 14 லட்சம் மட்டுமே விற்பனையில் திரும்பி வந்ததாகவும் பேசிக் கொண்டார்கள். விகடனைச் செலவு செய்யச் சொன்னவர் வேலைக்கு அப்போதே ஆபத்து வந்திருக்குமென்றும் எப்படியோ தப்பித்துவிட்டார் என்றும் சொன்னார்கள். உங்களைப் போலவே இதுவும் நான் கேள்விப்பட்டதுதான். எனக்கென்னவோ, இந்த வருடம் ஆனந்தவிகடன் செலவைப் பார்த்துச் செய்ய இது காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. கண்ணதாசன் பதிப்பகத்திற்குப் புத்தகங்கள் எழுதினார் புவியரசு அதனால் பரிசு என்பதும், தமிழ்ச்செல்வி யாரென்றே தெரியவில்லை என்பது உங்களின் உள்நோக்கங்களுக்கு இன்னும் சான்றுகள். பத்ரி இலக்கியச் சிந்தனை நடுவராக இருந்தபோது, (சோ. தர்மன் கதையும் அதில் இருந்தது என்று ஞாபகம்) ஆனந்த் ராகவ் கதையை அவருக்குப் பிடித்தது என்ற ஒரே காரணத்தினால் தேர்ந்தெடுத்தார். அப்போதுகூட யாரும் ஆனந்த் ராகவின் பதிப்பகத்தார் என்ற முறையில் பத்ரி அப்படித் தேர்ந்தெடுத்ததாகக் குறை கூறவில்லை. அதனால் குற்றச்சாட்டுகளைப் பார்த்துக் கூறுங்கள். மேலும், எந்தத் தமிழ் எழுத்தாளருக்குப் பரிசு போனாலும் இப்படிச் சில கூக்குரல்கள் இருக்கத்தான் செய்யும் என்பதும் ஞாபகம் வருகிறது. மற்றபடிக்கு - பபாஸி அரசியல் நன்கு தெரிந்த நபராக நீங்கள் இருக்கிறீர்கள். நிர்வாகிகளைக் குறை கூறுவதைச் சொந்தப் பெயரில் செய்தால், பபாஸி எலெக்ஷனில் நிற்கும்போது ஓட்டாவது வரும். :-) மற்றபடிக்கு பபாஸி இன்னமும் சிறப்பாகச் செயற்பட வேண்டும் என்பதிலும், முன்கூட்டியே திட்டங்களை வகுத்திருக்க வேண்டும் என்பதிலும், இணைய அறிவிப்புகள்/செய்திகள் ஆகியவற்றை அவர்களே தருகிற மாதிரி இணையதள வசதியுடன் செயற்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்துகள் இல்லை. இது என் பதிப்பகக் கருத்து இல்லை. என் சொந்தக் கருத்து மட்டுமே. இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். - பி.கே. சிவகுமார்

No comments: