Wednesday, January 16, 2008

ஓவியர் ஆதிமூலம் அவர்களுக்கு அஞ்சலி

இன்று காலை துயிலெழுந்ததும் விளையாட்டாக மாட்டுப் பொங்கல் வாழ்த்துகளைச் சொல்ல நண்பர் சுகாவை அழைத்தேன். அவர் சொல்லித்தான் ஓவியர் ஆதிமூலம் அவர்கள் மறைந்த செய்தி எனக்குத் தெரிந்தது. விஷயம் தெரிந்து, எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் நண்பர்கள் எழுதியதைப் படித்துவிட்டு நான் அழைப்பதாக அவர் நினைத்திருந்தார். ஆதிமூலம் அவர்களின் ஓவியங்கள் அதிகமாகப் பரிச்சயமாகுமுன்னே ஆதிமூலம் என்ற அருமையான மனிதர் எனக்குப் பரிச்சயமானார். ஜெயகாந்தன் மணிவிழா மலரில் அவர் வரைந்த ஜே.கே. கோட்டோ வியங்கள் இடம்பெற்றன. அதைப் பார்த்து ரசித்து யாரென்று கேட்டபோது ஆதிமூலம் என்று தந்தையார் சொன்னார். ஏதோ பத்திரிகைகளில் வரைகிற ஓவியர்போல என்று நினைத்துக் கொண்டேன். ஓவியம் போன்ற நுண்கலைகளில் நான் அந்தக் கால ஜெயமோகன் போலவே இன்னமும் இருக்கிறேன். அதனால் அப்போது பெயரை அறிந்ததும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற கனல் எதுவும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கவில்லை. ஆனால் விரைவிலேயே ஆதிமூலம் என்கிற அருமையான மனிதர் பரிச்சயமானார். என்னுடைய திருமணம் சாஸ்திர சடங்குகளுடன் நடந்து முடிந்தபின், வாழ்த்துரை வழங்க மண்டபத்திலேயே சிறுகூட்டம் ஏற்பாடாகியது. என் தந்தையார் வரவேற்றுப் பேசினார். ஆதிமூலம் தலைமை தாங்கினார். ஜெயகாந்தன் சிறப்புரை ஆற்றினார். அப்போதுதான் ஆதிமூலம் அவர்களை நேரடியாக அறிந்தேன். அதற்கு முன்னாலேயேகூட சிலமுறை ஜே.கே.வோடு இணைந்து அவர் எங்கள் ஊருக்கு வந்திருப்பதாகப் பின்னர் அறிந்தேன். மிகவும் அடக்கமாகவும், அன்பாகவும் வாத்சல்யத்துடனும் வாழ்த்திப் பேசினார். எனக்கும் அவர் சா.கந்தசாமியின் சாயலை ஒத்திருப்பதாகத் தோன்றியது. அதன் பின்னரே, அவரின் புகழ்பெற்ற காந்தி கோட்டோவியங்களைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. அவர் மீதான மதிப்பும் மரியாதையும் காந்தி கோட்டோ வியங்களைப் பார்த்ததும் அதிகமானது. இப்படிப்பட்ட கலைஞர் என் திருமணத்தில் கலந்து கொண்டு, வாழ்த்தியும் பேசினார் என்பது பேருவுவகை தந்தது. எங்கள் குடும்பத்தில் என் சித்தப்பா அருமையாக வரைவார். மற்றபடிக்கு, யாருக்கும் ஓவியத் திறமை இல்லை. என்னுடைய மகள் ஐந்து வயதிலிருந்தே கணினியில் இருக்கிற Paint என்கிற மென்பொருள் மூலம் விதவிதமாகத் தானே வரைய ஆரம்பித்தபோது, ஆதிமூலம் அவர்கள் வாழ்த்தியதன் அருள் இது என்று தோன்றியது. அன்னார் மறைவுக்கு என் இதயம் கனத்த அஞ்சலிகளும், அன்னார் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும். - பி.கே. சிவகுமார்

No comments: