Wednesday, January 16, 2008

கோடுகள் தந்தவர் (ஆதிமூலத்திற்கு அஞ்சலி கட்டுரை) - செழியன்

(கதா விருது பெற்ற எழுத்தாளரும், ஒளிப்பதிவாளரும், மேற்கத்திய இசை அறிந்தவரும், ஓவியருமான நண்பர் செழியன் எழுதிய கட்டுரை இது.)

காகங்கள் கோடுகளாக சிதறிப்பறக்கும் ஒரு ஓவியம்தான் நான் முதலில்
பார்த்தது.கரிசல் காட்டுக்கடுதாசி நூலுக்காக வரையப்பட்டிருந்த அந்த
ஓவியத்தை அன்னம் கதிர்தான் காட்டி னான்.அப்புறம் அந்த நூலுக்கான கோட்டுச்
சித்திரங்களை வாங்கிப் பார்த்தேன்.விரிந்த குடையுடன் விரல் கோர்த்தது
மாதிரிப் பிணைந்தி ருக்கும் சுருங்கிய குடை.நாமம் மட்டும் தெரியும்
இரண்டு கறுத்த பார்ப்பனர்கள், கும்பிடும் மருது சகோதரர்கள் என கதிர்
காட்டிய ஓவியங்கள் ஆச்சரியமாக இருந்தன.

வரைவதில் ஆர்வம்கொண்டு அன்னம் புத்தகவெளியீட்டிற்கு சில அட்டைப் படங்கள்
வரைந்துக்கொடுத்த காலம்.ஓவியத்தின்மீது ஆர்வம் ததும்பிய அந்தப்பருவத்தில்
இந்தப் படங்களை எல்லாம் பார்த்ததும் அதிலிருக்கும் புதுமையும் வினோதமும்
என்னை வசீகரித்தன.அதிலிருக்கும் உடைந்த சிறுசிறு கோடுகளின் வேகம்,
காற்றில் லாவகமாகத்திசை மாறுகிற குருவிகளின் கூட்டம்போல தோள்க
ளிலும்,கன்னக்கதுப்பிலும் மெல்ல வளைந்து திரும்பும் கோடுகள் எனக்கு
அளவுகடந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தன.

அன்னம் பதிப்பகத்தில் கதிரின் அறை யிலிருந்து உள்ளே அச்சகத்துக்குச்
செல்லும் குறுகலான நீளவிராந்தையில் மேலாளருக்கான ஒரு சிறிய மேசை
இருக்கும்.அதில் பிழை திருத்துத்து வதற்காக அச்சிடப்பட்ட பிரதிகளும்,
படக்கட்டைகளும்(block) இருக்கும்.அதில் ஆதிமூலத்தின் ஓவியங்கள் புதிதாக
அச்சுக்கட்டையாக மாற்றப்பட்டு செய்தித்தாள் சுற்றப்பட்டு சணல்கட்டி
மேசையில் இருக்கும்.முதல் நாள் இரவு கதிரின் அப்பா மதுரைபோய் வந்ததும்
காலை பத்துமணிக்கு பார்சல் மேசைக்கு வரும். அச்சுக்கட்டைகளை மைபடாமல்
பார்ப்பதில் எனக்கு ஒரு விருப்பம் இருந்தது.செய்தித்தாள்களைப் பிரித்தால்
உள்ளே அலுமினிய நிறத்தில் இருக்கும் நீளத்தகடில் அரக்கு நிறத்தில்
சிறுசிறு கோடுகள் தெறிக்க காகங்கள் பறந்தன.கதிரிடம் சொல்லி அது
அச்சிடப்படும்போது அருகில் நின்று, நீள பிளாஸ்டிக் உருளை சொரசொரவென
அச்சுக்கடையில் உரசி மைதோய்த்து அது காகிதத்தில் ஒற்றி, வெள்ளைக்
காகிதம் சிதறும் காகங்களாக மாறுவதைக்கண்முன்னால் பார்த்தேன்.

நாளை மற்றும் ஒரு நாளே 'அட்டைப் படத்தில் கல்வெட்டுத்தமிழ் போல
உடைந்துவளைந்த எழுத்துக்களும் கடிகாரத்தை மீறிச்சிதறும் கோடுகளும்
திரும்பவும் ஈர்த்தன.அன்னத்தில் நிறைய அட்டைகளுக்கு நானும் தலைப்புகள்
எழுதிக்கொடுத்திருக் கிறேன்.துவக்க நிலையில் எழுத்துக்களைத் தூரிகை
பிடித்து எழுதுவதில் வரும் ஓரத்துப் பிசிறுகளைச்சரி செய்வதும் தலைப்பில்
வருகிற எழுத்துக்கள் அனைத்தையும் ஒரே கனத்தில் எழுதுவதும் பெரிய வேலையாக
இருந்தது.கதிர் எனக்கு பிசிர் ஆர்டிஸ்ட் என்று பெயரும் வைத்திருந்தான்.
அந்த இக்கட்டான சமயத்தில் ஆதிமூலத்தின் கல்வெட்டு எழுத்துக்கள் எனக்கு
ஆறுதலையும் உத்வேகத்தையும் அளித்தன.பிரஷை இந்தியன் இன்க்கில் தோய்த்து
கைபோகிற பக்கம் லாவகமாக இழுத்து ஆதிமூலத்தின் தமிழ் உருக்களை வரைந்து
பார்க்கத்துவங்கினேன். பிசிறுகள்,கனம் மாறித்தொடர்ச்சி யின்றிவரும்
எழுத்துகள்,ஒரு நேர்கோட்டுக்குள் அடங்காமல் முன்பின் வளைந்து செல்லும்
எழுத்துக்கள் மெல்ல வசப்பட்டன.துவக்கத்தில் எழுதிப்பார்க்க எளிதாக
இருந்தாலும் ஆதிமூலத்தின் எழுத்துருவில் ஒரு இசைவும் லயமும் இருந்ததை
பிறகு அறிந்துகொண்டேன். ஒவ்வொருமுறை புத்தககண்காட்சிக்கு கதிர்
கிளம்புமுன் நாங்கள் செய்கிற வேலை கடைக்கான பேனர் தயாரிப்பதுதான்.அடர்ந்த
நீல நிறம் அல்லது எல்லோ ஆக்கர் நிறத்தில் துணி வாங்கி அதில் சில்வர்
பெயிண்ட்டில் அன்னம்,அகரம் என்று இரண்டு பேனர்கள் ஆதிமூலத்தின் எழுத்தில்
நான் எழுதுவேன். கடந்த பதினைந்து வருடங்களாக அந்தபேனர் தான்
புத்தககண்காட்சியில் அன்னம் கடையில் இருந்திருக்கிறது.

ஒருநாள் கரிசல் காட்டுக் கடுதாசியின் அட்டையில் முதன்முறையாக
ஆதிமூலத்தின் வண்ணப்படத்தைப் பார்த்தேன்.கத்தி ஏந்தி நிற்கும்
அய்யனாரின்படம் அதில் கறுப்பும் அரக்கும் கலந்த கனத்த கோடுகள்
இருந்தன.கதிரின் விருப்பத்துக்கு இணங்க அந்தப்படத்தைப்
பெரிதாகப்பிரதியெடுத்தேன்.அச்சாக ஆதிமூலம் வரைந்ததுபோலவே இருக்கும்
அந்தப்படத்தை சட்டமிட்டு கதிர் அன்னத்தின் வரவேற்பறையில் நெடுநாட்கள்
மாட்டிவைத்திருந்தான். பலரும் அதை ஆதிமூலத்தின் அசலா என்று கேட்கும்போது
ஒரு பெருமை எனக்குல் இருந்தது.அவரது வேறு சில கோட்டோவியங்களை கதிரிடம்
கேட்டு வாங்கிச்சென்று அதைப்பிரதியெடுக்க முயற்சித்தேன்.அவர் வரைந்த
எந்தக் கோட்டோவியத்தையும் பிரதியெடுக்கும் லாவகம் எனக்கு
கூடிவந்தது.ஆனால் வரைந்துமுடித்துப்பார்க்கையில் எனது கோடுகள்
அடுக்கப்பட்டதாக இருந்தன. அவரது கோடுகளில் இருந்த
இயக்கம் ,நகர்வு,சுழற்சி எனக்கு கடைசிவரை சவாலாகவே இருந்தது. இப்போதும்
ஆதிமூலத்தின் கோட்டோவியங்களைப் பார்க்கும் போதெல்லாம் அதில் வைக்கோல்
துண்டுகளென தன்னிச்சையாகப் பறக்கும்,நீர்த்துளிகளின் தெறிப்பென சிதறும்
அந்தக்கோடுகளின் இயக்கத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்.

ஒருமுறை சேலம் தமிழ்சங்கத்தில் நடந்த இலக்கிய கூட்டத்துக்கு நானும்
கதிரும் போயிருந்தோம்.ஒருநாள் மாலை நடந்த நிகழ்ச்சியில் ஆதிமூலம்
பார்வையாளர்கள் முன்னிலையில் வரையும் நிகழ்ச்சி ஒன்று இருந்தது. அதை
விடியோவில் ஒலிப்பதிவு செய்யும் வாய்ப்பு எனக்கு வழங்கப்
பட்டிருந்தது.தைல வண்ணப் பிதுக்கு களும், வெள்ளை நிறக் கித்தானும் இருக்க
அரங்கத்தில் இருக்க நான் பரவசத்துடன் காத்திருந்தேன். எளிமையான உடையில்
வந்தார்.வந்த சில நிமிடங்களில் வரையத் துவங்கி னார். கித்தானின்
வெள்ளைப்பரப்பில் அடர்ந்த நீலநிறம் இழுவிச்சென்றது. அதன்மேல் நுரையென
வைக்கப்பட்ட வெள்ளைநிறம் நீலத்தில் மூழ்கிக் கரைந்தது.ஈரவண்ணங்கள்
ஒன்றின்மீது ஒன்று கலந்து கடல்புரண்டுபுரண்டு எழுந்தது.இடையில் பாறையென
மிதக்கும் அரக்கு மெல்ல மூழ்குகிறது. படைப்பின் இடையில் நிகழும் மோனமும்
பதிவாகவேண்டுமென்பதால் நான் காட்சியைத்துண்டிக்காமல் அவர்வரைந்த நாற்பது
நிமிடமும் ஒரே காட்சியாக் எடுத்தேன்.அது அற்புதமான அனுபவமாக
இருந்தது.கூட்டம் நிரம்பிய அரங்கம் நிசப்தமாக இருக்க நானும் அவரும்
மட்டுமே இருப்பதான பிரமை.கேமராவின் காட்சிசெவ்வகத்தில் கறுப்புவெள்ளையில்
வண்ணங்கள் குழைகின்றன.கேமராவின் வழியே ஒருகண்ணில் பார்க்கிறேன்.ஒரு
கண்ணில் சாம்பல் நிறத்தின் வித விதமான சாயைகள்.மறுகண்ணில் வண்ணம்.வண்ணம்
நனைத்த தூரிகையுடன் சற்றுதள்ளி நின்ரு பார்க்கிறார்.மோனம்.அடர்நீலத்தில்
நுழைந்து ஒளியும் வெளிர்நீலம். சிலநேரம்தூரிகை எடுக்காமல் தனித்து நின்று
அதுவரை வரைந்ததைப் பார்க்கிறார்.எந்த வண்னத்தை எடுக்கலாம் எனும்
அவதானிப்பு. கடற் பாசியின் பச்சைநிறம் ஒருமுறை மூழ்கி மிதக்கிறது.
மிதக்கையில் நனைந்த ஈரப்பச்சை.பச்சையும் நீலமும் மருவிப்புனைந்த புது
நிறம்.கித்தானின் வெண்மை மறைந்து நீலமும். பச்சையும்,அரக்கும் வெண்மையும்
கலந்துஅசைந்து கொண்டிருக்க ஈரம் காயாத தைலவண்ண ஓவியம். எந்தத்தீற்றலில்
ஒரு ஒவியம் நிறைவடைகிறது?

ஒருநிலையில் தூரிகைவைத்து திரும்புகிறார்.வண்ணங்களால் ஆன அரூப
ஓவியம்.வயதான ஒருவர் எழுந்து'அய்யா..அது என்ன?' என்று அப்பாவியாகக்
கேட்டார்.

'கடல்'

'அப்படித்தெரியலையே'

'நீங்கள் பார்த்த கடலைக் கேட்கிறீர்கள். நான் கடலென்று உணர்ந்ததை
வரைந்திருக்கிறேன்'

அதற்குப்பிரகு கேள்விநேரம் முடிந்து அவர் அங்கிருந்து போனதும் அந்த
ஓவியம் மட்டும் அரங்கத்தில் இருந்தது. அது கடல்தானா?ஏன் நம் மனம்
எல்லாவற்றிலும் தெரிந்த ஒன்றைத்தேடுகிறது?

சென்னை வந்ததும் நான் சந்திக்க விரும்பியவர்களில் ஆதிமூலமும் ஒருவராக
இருந்தார்.அவர் தன்கியிருக்கும் இடம் ஈஞ்சம்பாக்கம்.. ஓவியர்
கிராமம்.அந்த இடமே அற்புதமாக இருக்கும்.அவர் வீட்டின்முன் மூங்கில்வனம்
இருக்கும் என்று கதிர் சொன்னதைவைத்து நானாக அவரை கற்பனையில் சிலமுறை
சந்தித்தேன்.லலித்கலா அகாதமியா புத்தககண்காட்சியா நினைவில் இல்லை.மக்கள்
கூட்டத்தினுள் ஆதிமூலத்தின் முகம் மிதந்து செல்கிறது.அருகில்போய்
அறிமுகப்படுத்திக்கொள்ளவோ பேசவோ கூச்சமாக இருந்தது.தள்ளிநின்று அவர்
கூட்டத்தில் கலந்துமறைவதைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.

படப்பிடிப்புக்காக புதுச்சேரிக்கும், முத்துக்காடு கடற்கரைக்குமாக பலமுறை
ஈஞ்சம்பாக்கத்தை காரிலும் பேருந்திலும் கடந்துசெல்லும்போது அந்த ஓவியர்
கிராமத்தை நோக்கி ஒரு தூரப்பார்வை பார்ப்பேன்.ஆதிமூலம்
இருக்கிறார்.மூங்கில்வனத்தின் கீழே சிமெண்ட் இருக்கை இருக்கலாம்.
வீட்டின் மேல்தளத்தில் தனது ஈசல் பலகையின்முன் அவர் தனது அடுத்த
வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மோனத்தில் இருக்கலாம் என்ற கற்பனையோடு
முகத்தில் காற்று விசிறக் கடந்து செல்வேன்.

நேற்று தனியாக புத்தககண்காட்சிக்குப் போயிருந்தேன்.நெடுநாளைக்குபிறகு
ஆழ்ந்த மனச்சோர்வுமிகுந்திருந்தது. புத்தக கண்காட்சி வாசலிலேயே
கதிரைப்பார்த்தேன்.பிறகு கூட்டத்தில் தனியே அலைந்து அன்னம் கடைக்கு
வந்தபோது கி..ரா இருந்தார்.சந்தித்துப் பேசிவிட்டு கதிருடன் பேசிக்கொண்டி
ருந்தேன். கதிர் தன்னிடம் இருக்கும் ஆதிமூலத்தின் சில ஓவியங்களுக்கான
விற்பனை சாத்தியம் குறித்துக்கேட்டான். கி.ராவின் புதியபுத்தகங்கள்
வந்திருந்தன. ஆதிமூலத்தின் பாணியில் வேறு யாரோ எழுதிய அன்னத்தின்
நீலநிறபேனர் கடையின் மூலையில் தொங்கியது. கரிசல்காட்டுக்கடுதாசியின்
புதிய பதிப்பு அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.அன்கிருந்து நடந்து வருகையில்
நெடுநாளைக்குப் பிறகு சா.கந்தசாமியைப் பார்த்தேன். சில புத்தகங்கள்
மட்டும் வாங்கினேன். எல்லாக் கடைகளும் மூடும்வரை காத்திருந்து கதிருடன்
நடந்து வெளியில்வந்து விடைபெற்று வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு
வந்ததும் கைபேசியில் குறும் செய்திகள் நிரம்பியிருந்தன. வழக்கம் போல
பொங்கல் வாழ்த்தாக இருக்க லாம் என்று அதில் ஒன்றைத் திறந்த போது
ஆங்கிலத்தின் பொடி எழுத்துக் களில் ஆதிமூலத்தின் மரணம் இருந்தது.
பல நண்பர்கள் அதே செய்தியை அனுப்பியிருந்தார்கள்.நான் இதை யாரிடம்
சொல்வது?கதிருக்குமட்டும் அந்தசெய்தியை அனுப்பினேன். கொஞ்சநேரத்தில்
கதிரிடம் இருந்து அழைப்பு வந்தது.'எனக்கு நீ கிளம்புன உடனே செய்தி
வந்திருச்சு.நாளைக்கு காலையில ஏழுமணிக்கு நானும் மோகனும் போறோம்.நீ
வர்ரியா?''கண்டிப்பா வர்ரேன்'

இரவு தூங்க வெகுநேரம் ஆனது.காலை யில் நேரத்தில் எழுந்தேன். அந்தக்கோடுகள்
குறித்து பலவிதமான நினைவுகள் வந்தவண்ணம் இருந்தன.ஒருமுறை குழந்தை
நடுவீட்டில் சிறுநீர்கழித்ததில் வீடுமுழுக்க தெறித்த நீர்க்கோடுகள்,
தாடியின் பிசிறுகள் வெட்டி குளியலறையில் சிதறிக்கிடந்த
மயிர்த்துணுக்குகள்,சாணை வைப்பவனின் கற்சக்கரத்திலிருந்து தெறிக்கும்
தீப்பொறி,குற்றாலத்தின் சாரல், சென்னையின் மழைநாளில் சோடியம்
விளக்கொளியில் பெய்யும் மழைத்துளிகள்,அது காற்றில் திசைமாறும்
கணம்,தஞ்சாவூர் கோயிலின் சிற்பங்களில் பார்த்த உளிச்சிதறல் என
ஆதிமூலத்தின் கோடுகளை நான் பலவிதங்களில் உணர்ந்திருக்கிறேன்.

எப்போதும்போலவே என் மதிப்பிற்குரிய ஓவியரை கடைசியாக ஒருமுறை
சந்திப்பதிலும் எனக்கு தயக்கமாகவே இருக்கிறது. கதிருக்கு செய்தி
அனுப்பினேன். மன்னிக்கவேண்டும்.நான் வரவில்லை.

கடல்காற்று முகத்தில் வீச கிழக்குகடற்கரைச் சாலையைக்கடந்து செல்கையில்,
அந்த மூங்கில் வனத்தின் அருகிலிருக்கும் வீட்டில், அடுத்த வண்ணத்திற்காக
அவர் மோனம் கொண்டிருக்கும் சித்திரத்தை நான் இழக்க விரும்பவில்லை.

No comments: