அன்புள்ள ப்ரசன்னா,
முதலாவதாக புத்தகக் கண்காட்சி நடந்த ஒவ்வொரு நாளும் எனிஇந்தியன் சார்பாக (http://anyindianpublication.blogspot.com), புகைப்படங்களும், வர்ணனைகளும், முடிந்தபோது ஒலிக்கோப்புகளும் கொடுத்து மகிழ்வித்தமைக்கு நன்றிகள். எனிஇந்தியன் கடந்த மூன்று ஆண்டுகளாகவே புத்தகக் கண்காட்சி கவரேஜ் சிறப்பாகச் செய்து வருகிற போதினும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருந்தது. நீங்கள் எழுதிய விவரணைகள் இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம். தினமும் விற்பனை, கூட்டம் பற்றிய புலம்பல்கள் கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆனால், இலக்கியம், அரசியல், தனிமனித விருப்பு/வெறுப்பு தாண்டிய எனிஇந்தியன் நடைமுறைக்கேற்ப, முடிந்தவரை எல்லாப் பதிப்பகங்களைப் பற்றியும், பிரமுகர்கள் பற்றியும் இந்த ஆண்டும் புகைப்படங்களும் விவரங்களும் தொடர்ந்து இடம்பெற்றது எனிஇந்தியன் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்ற மகிழ்வைத் தந்தது. வலைப்பதிவுகளிலும் இணையத்திலும் புத்தகக் கண்காட்சி குறித்து தொடர்ந்து எழுதுவதும், பதிப்புத் துறையில் இருக்கும் பிற சகோதர
நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தருவதும் எனிஇந்தியனின் புத்தகக் கண்காட்சி கவரேஜ் மட்டுமே. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியனின் வியாபாரம் அதிகம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு எனிஇந்தியன் கடை ஒரு வாயிலின் அருகேயே அமைந்திருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் மனுஷ்ய புத்திரன் சொன்னமாதிரி, புத்தகக் கண்காட்சியில் ஒரு பதிப்பகத்தின் வெற்றியை அது செய்கிற வியாபாரத்தை மட்டுமே வைத்துக் கண்டுபிடித்துவிட முடியாது. அந்தக் கண்காட்சி மூலம் அந்தப் பதிப்பகம் பற்றி எத்தனை மக்கள் நேரிடையாக அறிந்து கொள்கிறார்கள் - அவர்களில் எத்தனைபேர் முதன்முறையாக அறிந்து கொள்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான காரணி. இது பணத்தைவிட முக்கியமான அம்சம். அப்படிப் பார்க்கும்போது எனிஇந்தியனைப்
பற்றி இன்றைக்கு அனைத்துப் பதிப்பாளர்களும் பெரும்பாலான புதிய நுகர்வோர்களும் அறிந்து கொள்ள புத்தகக் கண்காட்சி பெரும்காரணமாக அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே நான் புத்தகக் கண்காட்சியை அணுகுகிறேன். வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.
பதிப்பாளர்களின் நேர்காணல்களின் ஒலிக்கோப்புகள் நல்ல முயற்சி. பதிப்பாளர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நிறைய இடையில் பேசுகிறீர்கள். நேர்காணல் பயிலப் பயில அந்தப் பழக்கம் குறைந்துவிடும். கேள்வியைக் கேட்டுவிட்டுப் பதில் சொல்லிமுடிக்கும்வரை கேட்கிற பழக்கம் வந்துவிடும். Wide-Range ஆக இன்னும் அதிகப் பதிப்பாளர்களிடம் எடுத்திருக்கலாம், சில புத்தக விற்பனையாளர்களையும் சேர்த்திருக்கலாம். மேலும் எல்லா நேர்காணல்களிலும் இடத்தைப் பற்றியும், வாசல்களைப் பற்றியுமே அதிகம் இருந்தது கொஞ்சம் அலுப்பு தந்தது. ஆனால் இது ஒரு புதுமையான முயற்சி. இதையும் எனிஇந்தியனே ஆரம்பித்து வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் ஆண்டுகளில் நாமும் மற்றவர்களும் இதை இன்னும் அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
ரவி தமிழ்வாணன் சொல்வதுபோல மாற்று இடம் எது என்று தெரிந்தால்தான் இந்த இடத்தின் நன்மை/தீமைகளைப் பற்றிப் பேசமுடியும். நந்தம்பாக்கத்திற்கு இது மேல். ஆறுவாசல்களை நான் வரவேற்கிறேன். காலச்சுவடு கண்ணன் சொன்னதுபோல இது மக்களுக்குச் சுதந்திரம்
தருகிறது. நெரிசலைக் குறைக்கிறது. கடைகளும் வாசல்களும் அதிகமாகும்போது விற்பனை குறைவது மாதிரி தெரியும்தான். ஆனாலும் இதைச் செய்ய வேண்டும்.
மனுஷ்யபுத்திரன் சொல்வதுபோல புத்தக விற்பனையாளர்களையும் பதிப்பாளர்களையும் தனியே பிரிக்க வேண்டும் என்ற பிரிவினைகளில் எனக்கு உடன்பாடில்லை. நாளைக்கு ஜனரஞ்சகப் புத்தகங்களை வெளியிடுகிற பதிப்பாளர் ஒருவர் வந்து, இலக்கியப் புத்தகங்களை வெளியிடுகிற பதிப்பகங்கள் எங்கள் பதிப்பகத்திற்குப் பக்கத்தில் இருந்தால், சினிமா, வாஸ்து, சமையல் புத்தகங்கள் வாங்குகிற வாசகர்கள் மிரண்டு போகிறார்கள்.
அதனால், இலக்கியப் புத்தக்ப் பதிப்பாளர்களைத் தனிவரிசைக்கு மாற்றுங்கள் என்பது போன்ற அபாயகரமான கோரிக்கைகளுக்கு இத்தகைய பிரிவினைகள் வழிவகுக்கும். புத்தகக் கண்காட்சி இல்லாதபோது விற்பனைக்குப் புத்தகக் கடைகளைச் சார்ந்து வாழ்கிற பதிப்பகங்கள், ஒன்று
புத்தகக் கண்காட்சியிலும் புத்தக விற்பனை நிலையங்களுக்கு இப்போது போலவே Equal இடம் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்குப் புத்தகக் கண்காட்சியில் இடமே இல்லை என்று சொல்ல வேண்டும். இடமே இல்லை என்று சொல்ல முடியாது. சொல்லிவிட்டால், வருடத்தில் பதினோரு மாதங்கள் இந்த விற்பனையாளர்களின் தயவு இல்லாமல் புத்தகங்கள் விற்காது. ஆதலால், ஒரு புத்தகம் பல கடைகளில் கிடைப்பது ஜனநாயகம். இந்தக் கடையில் மட்டுமே இந்தப் புத்தகம் இருக்க வேண்டும் என்கிற குறுகியகால லாபங்களை மனதில் கொள்ளாது செயற்படுவதே நல்லது. பல கடைகளில் ஒரு புத்தகம் கிடைத்தாலும் பதிப்பாளருக்கு நஷ்டமில்லை. 30%-லிருந்து 40% கமிஷன் கொடுக்க வேண்டியிருந்தாலும் அது
லாபமே. அந்த கமிஷன் லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைப்பது என்னைப் பொருத்தவரை நிச்சயம் சரியில்லை. ஒரு புத்தகம் எத்தனை கடைகளில் விற்கப்பட வேண்டும் என்கிற தலையீடுகளில் பபாஸி ஈடுபட்டால் அதைப் பற்றிய பஞ்சாயத்திற்கே நேரம் இருக்காது. ஆதலால், பபாஸி புத்தகங்கள் ஒரு கடையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட கடைகளிலோ கிடைப்பது விற்பனையாளருக்கும் பதிப்பாளருக்குமான தனிப்பட்ட உறவு
என்பதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிவிடுவதே நல்லது. தங்கள் புத்தகங்கள் வேறு கடைகளில் கூடாது என்று நினைக்கிற பதிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் பேசி அவர்களே அதைப் பார்த்துக் கொள்ளலாம். பதிப்பாளரின் அனுமதியில்லாமல் விற்பனையாளர்கள் எப்படிப் புத்தகங்களை விற்று லாபம் பார்க்க முடியும். ஆதலால், இது பபாஸி பிரச்னை இல்லை.
ஆனால் மனுஷ்யபுத்திரன் .... போன்ற பதிப்பகங்கள் வெவ்வேறு பெயர்களில் பல ஸ்டால்களை எடுத்திருப்பதைப் பற்றிப் பேசும்போது பெயர் குறிப்பிட்டுப் பேசியிருந்தால் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். அதிலும்கூட என்ன குறை கண்டுவிடமுடியும். ஒவ்வொரு வகையான புத்தகங்களுக்கு ஒரு பதிப்பகம் என்பது பலரும் செய்வதுதான். ஆனால், இப்படிப்பட்ட corporate publishers புத்தகக் கண்காட்சியை ஆக்கிரமிக்கும்போது
அவர்களுக்கான வாடகையை நான்கு மடங்காக்கலாம் (அவர்கள் பபாஸி உறுப்பினராக இருந்தாலும்). மேலும் சிறுபதிப்பாளர்களுக்கு வாடகையில் சலுகைகள் வழங்கலாம். சிறுபதிப்பாளர் யார், corporate பதிப்பாளர் என்பது அந்தத் தொழிலில் இருக்கிற பபாஸி நிர்வாகிகளுக்கு நன்கு தெரியும். வேண்டுமென்றால் வருடாந்தர லாப-நட்டம் குறித்த Income tax return வைத்து turnover பார்த்து இதை முடிவு செய்யலாம். இது கொஞ்சம் நேரமெடுக்கும்தான். ஆனால், பபாஸி அப்ளிகேஷனுடனேயே கடந்த வருட Tax Filing பிரதி ஒன்றையும் இணைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அதிலிருந்து மொத்த டர்ன்ஓவர் தொகையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இதுவும்கூட tax return எந்த அளவுக்கு உண்மையானது என்பதைப் பொருத்தது என்று அறிவேன். ஆனால் ஏதோ ஒரு நடைமுறையை அமுலுக்குக் கொண்டுவரும்போதுதான் அதை மேம்படுத்துகிற ஆலோசனைகள் விரைவில் உதிக்கும். அதனால், சாத்தியமான ஒரு நடைமுறையைக் கொண்டுவந்து Corporate Publishers, Middle level publishers and Small Publishers-ஐ அடையாளம் காண்பது உடனடியாக அவசியம்.
காலச்சுவடு கண்ணன் சொன்னதுபோல, வரைபடமும் கடைகளின் எண்களும் அடங்கிய பிரசுரங்கள் அனைவருக்கும் தருவது, ஆங்காங்கே உதவி மையங்கள் அமைத்து கடைகளைத் தேடுகிறவர்களுக்கு வழிகாட்டுவது ஆகியன செய்ய வேண்டியது அவசியம்.
சிறப்புப் பேருந்துகள் விடவேண்டும், செயற்பட வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதையே சார்ந்திருக்கவும் கூடாது. சினிமா பார்க்க விரும்புகிற தமிழ் ஜனம் அரசாங்கம் சிறப்புப் பேருந்துவிட வேண்டும் என்று காத்திருப்பதில்லை. அரசாங்கம் எல்லாவற்றுக்கும் கைகொடுக்க வேண்டும் என்ற மனநிலையே இத்தகைய வேண்டுகோள்களில் அதிகம் தெரிகிறது. பபாஸியிடம் இல்லாத பணம் இல்லை. ஆதலால், சினிமாவுக்குச் செல்கிற
உற்சாக மனநிலையை வாசகர்களிடம் உண்டாக்க வேண்டிய சந்தைப்படுத்தல்களை பபாஸி செய்யலாம். தொலைகாட்சி/வானொலி/பத்திரிகை விளம்பரங்கள், புத்தகக் கண்காட்சி தொடர்பாக தொலைகாட்சி/வானொலி/பத்திரிகை நிகழ்வுகளை ஸ்பான்ஸர் செய்வது, சினிமா தியேட்டர்களில் ஸ்லைடு போடுவது, திரை நட்சத்திரங்களின் உதவியோடு புத்தகக் கண்காட்சி விளம்பரங்கள் செய்வது, முடிந்தால் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு இரவும் ஒன்பதிலிருந்து பத்துவரை (இதற்காக ஒருமணிநேரம் நீட்டிக்கலாம்), ஒரு entertainment நிகழ்ச்சியைத் திரை/இசைக் கலைஞர்களுடன் நடத்துவது என்று கூட்டம் சேர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றை முயற்சிக்கலாம்.
இப்போதைக்குத் தோன்றியது இதுதான். புத்தகக் கண்காட்சிக்காக அல்லும் பகலும் உழைத்த பபாஸி நிர்வாகிகளுக்கு அவர்கள் செய்ததில் பல குறைகள் இருக்குமென்றாலும் என் வாழ்த்துகள். அடுத்த வருடம் குறைகள் மேம்படுத்தப்படும் என்று நம்புவோம்.எனிஇந்தியனில் உங்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் நன்றிகளும் வணக்கமும்.
இந்தப் பதிலை திருத்தி ஒரு பொது பதிவாக எழுதலாம். நேரமில்லை என்பதால் அப்படியே என் வலைப்பதிவிலும் சேமித்து வைக்கப் போகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைதானே.
அன்புடன், பி.கே. சிவகுமார்
Thursday, January 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அன்புள்ள பிகேஎஸ்,
01. பேட்டி என்று நான் எடுக்கவில்லை. புத்தகக்கண்காட்சியைப் பற்றி பதிப்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்கத்தான் நினைத்தேன். அதனால்தான் எல்லாரிடமும் ஒரே கேள்வியைக் கேட்டது. கணையாழி கலைக்களஞ்சியத்தைப் படித்தபோது, மார்க்ஸியம், கம்யூனிஸம் தொடர்பாக இந்திராகாந்தி, எம்ஜியார் என எல்லாரிடமும் ஒரே கேள்வியைக் கேட்டிருபப்தைப் பார்த்திருக்கிறேன். இது ஒருவகையில் ஒரே கேள்விக்கு பலரின் பதில் என்ன என்பதன் அடிப்படையில் உருவானது. இதுவே நான் அபப்டிக் கேட்டதற்குக் காரணம். மற்றபடி, குறுக்கே பேசியது நிச்சயம் தவறே. வலையேற்றியபின்பே அதன் சீர்யஸ்நெஸ் புரிகிறது. சுஜாதாவைப் பேட்டியெடுத்த ஞானசம்பந்தன் பற்றி நான் எழுதிய கடுமையான விமர்சனம் நினைவுக்கு வருகிறது. இன்று நான் அதைச் செய்திருக்கிறேன். :)) இனி திருத்திக்கொள்கிறேன்.
02. மீண்டும் மீண்டும் ஒரே வரியில் பதிவை ஆரம்பித்தது, அதாவது விற்பனை மந்தம் என்பது தொடர்பாக. வெங்கட் சாமிநாதன் ஒரு புத்தக விமர்சனத்தில் இப்படி (நினைவிலிருந்து எழுதுகிறேன், வார்த்தைகள் என்னுடையவை, இதை ஒட்டிய கருத்து அவரது) சொன்னார், "புத்தகத்தில் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான வாழ்க்கையைச் சொல்லியிருப்பது அலுப்பு தருகிறது. ஆனால் படிக்கிற நமக்கே அலுப்பென்றால், அதே வாழ்க்கையை தினம் வாழும் மனிதர்களுகு அந்த அலுப்பு எப்படி இருக்கும்?" இதேதான் நானும் சொல்வது. தினம் தினம் புத்தகக் கடை விரித்துவைக்கும் பதிப்பாளர்களின் ஒரே எண்ணம், விற்பனையே. அதை ஒரு இயக்கமாகப் பார்ப்பது எல்லாமே, பிந்தைய சிந்தனை. அன்றைக்கு குறி விற்பனையே. நான்கு ஸ்டால் போட்டுவிட்டு விற்பனை ஆறாயிரம் ரூபாய் என்பது எவ்வளவு அலுப்பு தரும் விஷயமாக இருக்கமுடியும்? எனது தொடர் பதிவு ஒரு கையறு நிலை அலுப்புக்குக் கொண்டு சென்றுவிட்டது உண்மைதான் என்றாலும், உண்மையான மனநிலை, குறிப்பாக சிறிய பதிப்பாளர்களின் எண்ணம் அதுவே. ஆனால் இதையெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தே இருந்தார்கள். இது அதிர்ச்சி அல்ல என்பதும் உண்மை.
03. புத்தக விற்பனையாளர்கள் பிரிக்கப்படுவது தொடர்பாக மனுஷ்யபுத்திரனே ஒரு சந்தேகத்தோடுதான் கருத்தை முன்வைக்கிறார். எப்படி சொல்லணும்னு தெரியலை என்கிற மாதிரி அவர் சொல்கிறார். இதை முடிவாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஆனால் அடுத்த பபாசி கூட்டத்தில் இது பற்றிப் பேசுவார்கள் என எதிர்பார்க்கலாம். தனியாக பிரிக்காமல், பதிப்பாளர் பெயரில் அரங்கு எடுத்தால் அவர் பதிப்பாளராகவும் விற்பனையாளராக அரங்கெடுத்தால் விற்பனையாளராகவும் செயல்பட பபாஸி பரிந்துரைக்கும். ஆனால் இதுபற்றிய விவாதம் எழுவது சரியாந்தே.
04. மாற்று இடம் குறித்து. ரவி தமிழ்வாணன் புதிய மாற்று இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டு ஒப்பிடவில்லை. பழைய காயிதே மில்லத் கல்லூரி இடத்துடனே ஒப்பிடுகிறார். மாற்று இடம் கண்டிப்பாக அவசியம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் நிச்சயம் பேருந்து வசதியோ தொடர்வண்டி வசதியோ அதிகம் இல்லை என்றுதான் நானும் சொல்லுவேன். வண்டி இருந்ததால் நான் அதிகம் கஷ்டம் உணரவில்லை. வைகறை சொல்வதைக் கேட்டிருக்கலாம். பேருந்து பிடித்து மடிப்பாக்கம் வருவதற்கு நிச்சயம் பதினோரு மணி பிடிக்கும். பலர் வர்த்தக மையத்தைப் பரிந்துரைக்கிறார்கள். அது நந்தம்பாக்கத்தில் இருக்கிறது. அங்கு வசதிகள் அதிகம். ஆனால் சிறிய தொகைக்கு வாங்கும் மக்களை அது புத்தககாட்சியிலிருந்து அந்நியப்படுத்தும் என பலர் அஞ்சுகிறார்கள். அகிலன் கண்ணன் ராமாபுரத்துக்குப் போயிவிட்டு வருவது கடினம் என்கிறார். ஆனால் கிண்டியிலிருந்தும் தி.நகரிலிருந்தும் வருவதற்கு ஏகப்பட்ட பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் இருக்கின்றன. தொடர்வண்டியில் வரவேண்டுமானால், கிண்டியில் இறங்கி ஷேர் ஆட்டோவிலோ பேருந்திலோ வரலாம். என்ன ப்ளஸ் பாயிண்ட் என்றால், வர்த்தக நிலையம் முன்பு இறங்கிக்கொள்ளலாம், அங்கேயே ஏறிக்கொள்ளலாம். இதுதான் வசதி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்க்கிங் ஏரியா. இதுவும் கூடுதல் வசதி. அடுத்தமுறை என்ன செய்யப்போகிறார்கள் எனத் தெரியவில்லை, பார்க்கலாம்.
05. சினிமா பார்க்க பொதுஜனம் சிறப்புப் பேருந்திற்காகக் காத்திருக்கவில்லை என்பதையும் பதிப்பாளர்களே விற்பனையாளர்களிடம் கொடுக்காமல் இருக்கலாம் என்கிற உங்கள் கருத்தையும் ஏற்கமுடியவில்லை. சினிமே கண்காட்சி நடத்தி ப்ரோமோஷன் தேவைப்படும் அளவிற்கு சினிமா இல்லை. அதைத்தேடி ஓடுகிறார்கள், கள்கடை போல. நாம் மோர் விற்கிறோம், தெருவில் இறங்கி கூவி விற்கவேண்டும். விருதுத் திரைப்படங்கள் விழா நடத்துவது போல. அந்த ப்ரோமொஷனில் ஒன்று சிறப்புப் பேருந்து அமைப்பது. ரஜினி படத்திற்கு சிறப்புப் பேருந்து தேவையில்லை. அதேபோல் நாமே நமக்கான நியாயங்களைக் கொளவது எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் பொருந்தி வராது. அதனாலதான் சட்டங்கள் மூலம் அதை எல்லாருக்கும் கட்டாயமாக்க்குவது. அதே சமயம், நீங்கள் சொல்லியிருக்கும் சில பரிந்துரைகள், டேக்ஸ் சம்பந்தப்பட்டது சரியானதே. அதேபோல், சிறிய பதிப்பாளர்கள் சில பதிப்பகங்களிடம் கொடுத்து விற்கச் சொல்வதில் தவறில்லை என்கிற உங்கள் கருத்திலும் என்னக்கு உடன்பாடே.
இதுபற்றிய பரந்த விவாதங்கள் தேவைதான்.
Post a Comment