கம்யூனிசத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்த்தோ விமர்சனம் செய்தோ எடுக்கப்படுகிற படங்கள் அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாகவே கொண்டாடப்படும். ஆகையால் அத்தகைய படங்களை நான் grain of salt உடனேயே பார்ப்பதுண்டு. கம்யூனிசம் மீது விமர்சனம் வைப்பதால் மட்டுமில்லாமல் நிஜமாகவே பார்க்க வேண்டிய நல்ல படங்களையும் சிலநேரங்களில் அமெரிக்கர்கள் கொண்டாடி விடுவார்கள். ஆஸ்கார் கொடுக்கப்பட்ட Kolya முதலிய படங்கள் அப்படிப்பட்டவைதான். இது அமெரிக்கர்களின் உத்தியோ என்று சில நேரங்களில் தோன்றியிருக்கிறது. இடையிடையே சில நல்லப் படங்களையும் கொண்டாடுவதன் மூலம், அவர்களின் மீதான நம்பகத்தன்மையை விதைப்பதன்மூலம் கம்யூனிசம் குறித்த விமர்சனம் செய்கிற சுமாரான பிற படங்களை அவர்கள் கொண்டாடும்போது அதை நம்புகிற தன்மைக்கு ஒருவர் தள்ளப்படுவார் என்று நினைத்திருக்கிறேன். ஆனாலும் நல்ல படங்கள் (நல்ல கலை, நல்ல இலக்கியம் ஆகியனகூட) சித்தாந்தம் மீறிக் கொண்டாட வைக்கிற திறமை படைத்தன என்பதே நிதர்சனமான உண்மை.
The Lives of others படம், கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிச ஆட்சியில் மக்கள் எப்படி ஒட்டுக் கேட்கப்பட்டார்கள் என்பதைப் பற்றிய படம் என்று படித்தேன். அதற்கு ஆஸ்கார் கிடைத்தது ஆச்சரியமாக இல்லை. எங்கேயோ ஒருமுறை கேட்ட அல்லது படித்த ஞாபகம். 1980-களில் ஏ.டி&டி நிறுவனம் தொலைபேசி மற்றும் தொலைதொடர்பில் ஏகபோக உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த நாட்களிலேயே அமெரிக்காவில் தொலைபேசியில் ஒரு குறிப்பிட்ட சொற்றொடர் அல்லது சொற்களை யாரும் பேசினால் அவை தானாகப் பதிவு செய்யப்பட்டு உரையாடல் பார்வையிடப்படும் என்று. அமெரிக்காவில் இத்தகைய Consipiracy theory-கள் நிறைய உண்டு. ஆனால் இத்தகைய தொழில்நுட்பம் அப்போதே இருந்த நாடு என்பதை நம்புவதில் எனக்குப் பிரச்னை இல்லை. தேவையில்லாமல் எந்தத் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படுவதில்லை என்ற சிறுநம்பிக்கையும் உண்டு. 2001-க்கு அப்புறம் பேட்ரியாட் ஆக்ட் வந்த பிறகு, இந்த மாதிரியான விஷயங்களுக்குச் சட்டரீதியான அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. ஆனால், அமெரிக்கர்கள் கம்யூனிச ஆட்சியில் ஒட்டுக் கேட்கிறார்கள் என்றால் அதை எவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்புகிறார்கள் என்றே படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டபோது நினைத்தேன். இந்த இடத்தில் நான் ஒரு கம்யூனிச ஆதரவாளன் இல்லை என்பதையும், சித்தாந்தத்திற்காகக் கூட வன்முறையையோ அடக்குமுறையையோ ஆதரிக்கவில்லை என்பதையும் சொல்லுவது கடமையாகிறது. அதே நேரத்தில் நான் அமெரிக்க எதிரியும் இல்லை. அமெரிக்காவின்பால் எனக்கு ஒரு நன்றியுணர்வும் (இங்கே வாழ்வதால்), அவர்களின் மாபெரும் சாதனைகளின் மீது வியப்புணர்வும் இருக்கிறது - அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் மீது விமர்சனமும் இருப்பதுபோல.
அதனாலேயே இந்தப் படத்தை அதிக எதிர்பார்ப்பில்லாமல் பார்க்க ஆரம்பித்தேன். அதனாலேயே ஆச்சரியத்தையும் மனநிறைவையும் தந்த படம். இந்தப் படத்தை நிச்சயம் பரிந்துரைக்கிறேன். சோஷலிஸத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு அதிகாரி, ஒட்டுக் கேட்கிற வேலையில் மனசாட்சிப்படி செயற்படுகிறார். அவரைப் பொருத்தவரை, சோஷலிஸம் என்பது யாருக்காகவும் யாரையும் குற்றவாளியாக்குவதோ, மனசாட்சிக்கு எதிராகச் செயற்படுவதோ இல்லை. சோஷலிஸக் கனவில் நம்பிக்கை கொண்டு வாழ்கிறவர்கள்கூட சோஷலிஸம் என்பது அதிகாரக் கரங்களாய் அறத்திற்கு எதிராகத் திரும்பும்போது மனசாட்சியின் வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான வழிகளை எதிர்க்கிறார்கள் என்பதைப் படம் அழகாகச் சொல்கிறது. எனக்கென்னவோ இந்தப் படம் சோஷலிஸத்திற்கு எதிரான படம் என்று தோன்றவில்லை. சோஷலிஸத்தை நிஜமாக நம்புகிற அந்த அதிகாரி அந்த நம்பிக்கையின்படியே செயற்பட்டு அந்த எழுத்தாளன் அரசாங்கத்தின் பிடியில் சிக்காமல் காப்பாற்றுகிறார் என்று தோன்றுகிறது.
இந்தப் படத்திற்கு என்னுடைய மதிப்பெண்கள் பத்திற்கு எட்டு.
Wednesday, January 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//ஆஸ்கார் கொடுக்கப்பட்ட Kolya முதலிய படங்கள் அப்படிப்பட்டவைதான்//
பிகேஎஸ், Kolya வை Koyla என்று முதலில் வாசித்து விட்டு, என்னடா சாரூக்கான் படத்துக்கு எப்ப ஆஸ்கார் குடுத்தார்கள் என்று குழம்பினேன்..ஒருவேளை எனக்கு டிஸ்லெக்சியாவாக இருக்குமோ? :-) தாரே சமீன் பர் ஹாங்ஓவர் தீரலை :-)
புத்தாண்டு வாழ்த்துகள்.
பிரகாஷ், நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள். Kolya என்பது அந்த செகோஸ்லோவியப் படத்தின் ஆங்கிலப் பெயர். இன்னும் பார்க்கவில்லை என்றால் கட்டாயம் பார்க்கலாம். ஏமாற மாட்டீர்கள். அதன் IMDB சுட்டி: http://www.imdb.com/title/tt0116790/
நானும் பார்த்தேன்.. சென்னையில் சமீபத்தில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் துவக்கப் படமாகத் திரையிட்டார்கள். அருமை.. அருமை.. அருமை..
Post a Comment