Wednesday, February 27, 2008

குருவே வணக்கம்!

எனிஇந்தியன் பத்திரிகையில் எழுதச் சொல்லி ஜனவரி 16 அன்று சுஜாதாவுக்கு ஒரு வேண்டுகோள் மின்னஞ்சல் அனுப்பினேன். ஜனவரி 17 அன்றே டாணென்று பதில் வந்தது. எழுத இயலாது என்று. அவர் உடல்நலம் காரணமென்று நான் அறிவேன் என்றாலும், அவர் அதைச் சொல்லவில்லை. பதிலுக்கு நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். உடல்நலம் எப்படியிருக்கிறது என்று கேட்டும், புத்தகக் கண்காட்சிக்கு அவர் வந்திருந்த புகைப்படங்களைப் பார்த்ததாகவும் சொல்லியிருந்தேன். சொல்லிவிட்டு, நிலா நிலழ் பற்றி சில வரிகள் எழுதியிருந்தேன். அவரிடமிருந்து முதல் மின்னஞ்சல் பெற்ற உணர்வு கொடுத்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். இணையத்தில் அவரை அவ்வப்போது பாசமுடன் விமர்சித்திருக்கிற போதினும், அவரை "வாத்தியார்" என்று இணையத்தில் அழைக்கிற வழக்கில் நானும் இருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அதற்கு அவரிடமிருந்து பதில் எதுவும் இல்லை. அதற்குப் பதில் வருமென்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. மருத்துவமனை/வீடு என்று மாறிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் வந்தபோதும், வாத்தியார் மீண்டுவிடுவார் என்ற நம்பிக்கையே இருந்தது. முன்னர் ஒருமுறை இருதய அறுவைசிகிச்சை செய்து கொண்டது பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரையே அதற்குக் காரணம்.

சுஜாதா எனக்கு எழுதிய மின்னஞ்சல் இதுதான்:

Dear Sivakumar
thanks for your mail Anyindian shows a lot of promise.My best wishes for your venture
I have no inclination to write sci fi stories afresh
Thanks for asking me
Sujatha

யோசிக்கும்போது, சுஜாதாவுடன் நான் எப்போதுமே பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. இன்றளவும் சிறுகதை எழுதுவதற்கு முன், அவர் கதை ஒன்றை ஒருமுறை படித்துவிட வேண்டும் என்று தோன்றுகிற உணர்வை என்ன சொல்வது? சுஜாதா இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார். அப்போது நான் நண்பர்களிடம் சொல்வேன்: "அவருடைய நகரம் சிறுகதைக்காகவும், ஆழ்வார்கள் எளிய அறிமுகம் உள்ளிட்ட வைணவ இலக்கிய ஞானத்திற்காகவும், சுஜாதா செய்கிற எனக்கு உடன்பாடில்லாத வேறெதுவும் எனக்கு ஒரு பொருட்டே இல்லை".

நன்றிகள் சொல்வது வாய்வார்த்தையாகிவிடும்.
அவர் விரும்பிய
அரங்கனிடம் சென்றிருக்கிறார்.
அரங்கனுக்கு
அறிவியலையும்
மொழியின் நுட்பத்தையும்
இலக்கியத்தையும்
அரங்கன் புரிந்து கொள்ளும்
மொழியில் சொல்கிற வேலைக்கு என்று எடுத்துக் கொள்கிறேன்.

குருவே வணக்கம்!

No comments: