Thursday, July 02, 2009

அன்புள்ள நாகார்ஜுனன்

முன்னுரை: இதை நாகார்ஜுனன் பதிவில் பின்னூட்டமாக இடப்போன போது, ”Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters” என்ற error வருவதால் இங்கே இட்டுவிட்டு, நாகார்ஜுனன் பதிவில் இதன் சுட்டியைத் தர எண்ணம். நாகார்ஜுனன் தவிர்த்து, வேறு யார் பின்னூட்டமும் இவ்விழையில் அனுமதிக்கப்படாது. ஆகையால், இதுகுறித்துத் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய விரும்புவோர், விரும்பினால் அவர்கள் பதிவிலேயே எழுதலாம்.

அன்புள்ள நாகார்ஜுனன்,

வணக்கம்.

நண்பர் பாஸ்டன் பாலாஜி டிவிட்டரில் உங்களின் http://nagarjunan.blogspot.com/2009/07/10.html பதிவை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அவருக்கு நன்றி.

சாரு நிவேதிதா பக்கம் பக்கமாக உங்களைக் கிழித்ததுக்கு “என் பணி என்னைப் பற்றிப் பேசும்” என ஜெண்டில்மேனாகப் பதில் சொல்வதைத் தவிர்த்தவர் தாங்கள். ஆனால், டிவிட்டரில் 140 எழுத்தில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதற்கு விலாவரியாகப் பதில் எழுதியிருக்கும் உங்கள் பதட்டத்தை ரசிக்கிறேன். சாருவுக்கு இல்லாத முக்கியத்துவம் எனக்கா என்று சாரு கோபித்துக் கொண்டு மம்மி ரிட்டர்ன்ஸ் - 2 எழுதிவிடப் போகிறார். அப்புறம் நீங்கள் இன்னொரு பதிவு அதற்காக எழுத வேண்டி வருமே :-)

தாங்கள் அறிவுஜீவி. ஐ.ஐ.டி.யில் படித்தவர். கணினிகளின் அடிப்படைத் தொழில்நுட்பம் அறிந்தவர். நண்பர் ஒருவர் உங்களைப் பற்றி நான் எழுதிய சில டிவிட்டுகளை மட்டும் உங்களுக்கு அனுப்புகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியே தீர விசாரிக்காமல், இன்னும் டிவிட்டுகள் ஏதும் விட்டுப் போயிருக்கின்றனவா என அடிப்படை சரிபார்த்தல்கூடச் செய்யாமல், பதட்டத்துடன் பதிவெழுதி விட்டீர்கள். உங்களைப் பற்றி அப்போது நான் எழுதிய பல டிவிட்டுகள் உங்களின் பதிவில் இல்லை. நண்பர் அனுப்பவில்லையா அல்லது நண்பர் அனுப்பித் தாங்கள் விட்டுவிட்டீர்களா என்பதை யூகத்துக்கு விட்டுவிடுகிறேன். ஆனால், இரட்டை நிலை/அடிப்படை நேர்மை இல்லாமை என்று நான் கருதுவது என்னவென்றால், உங்களைப் பற்றி நான் எழுதிய தொடர்புடைய எல்லா டிவிட்டுகளையும் எடுத்துப் போடாமல், சிலவற்றை மட்டும் நண்பர் அனுப்பினார் என்ற சாக்கில் உங்கள் வசதிக்கேற்ப எடுத்துப் போட்டுக் கொண்டீர்களோ என்ற சந்தேகத்தை தொடர்புடையவர் மனதில் விதைக்கும் வண்ணம் உங்கள் பதிவு இருக்க்கிறதே அதுதான். விட்டுப் போன என்னுடைய உங்களைப் பற்றிய மற்ற டிவிட்டுகளையும் எடுத்துப் போடுங்கள். அவற்றுள், சாருவுக்கு உங்களைப் பற்றிப் பேசுகிற யோக்கியதை இல்லை என்றாலும், அவர் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிற சில கருத்துகள் கவனிக்கத்தக்கவை, ஆராயப்பட வேண்டியவை என்றும் சொல்லியுள்ளேன். முதலில் உங்களைப் பற்றி நான் எழுதிய எல்லா டிவிட்டுகளையும் உங்கள் வாசகர் பார்வைக்கு வைப்பதே அடிப்படை நேர்மை. உங்களைப் பற்றி என் டிவிட்டுகளை எடுத்துப் போடுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். அப்புறம் ஏன் சில மட்டும். கவலைப்படாதீர்கள். என் எழுத்துகளை என் அனுமதியின்றி பயன்படுத்திக் கொண்டீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். சொல்லிவிட்டு எடுத்துக் கொண்டால் நல்லது. சொல்லாமல் எடுத்துக் கொண்டால், சொல்லிவிட்டுச் செய்திருக்கலாமே என்பதுதான் என் நிலை.

உங்களின் இந்தப் பதிவுக்குப் பதிலாகவும் நண்பர் பாஸ்டன் பாலாஜிக்குச் சில டிவிட்டுகளை இன்று இட்டுள்ளேன். உங்களின் இரட்டை நிலை எது என நான் நினைப்பதைச் சொல்லும் டிவிட்டுகள் அவை. அவற்றை எடுத்து உங்கள் பதிவில் போடுவதும் போடாததும் உங்கள் விருப்பம். ஆனாலும் உங்களின் இந்தப் பதிவுக்கு அவை கூடுதலான பதில் என்பதால், அவற்றைத் தாங்கள் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

தாங்கள் எழுதியது: // என் பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோரைப் பற்றித்தான் அப்படி நிபந்தனை விதிக்கிறேன். அதாவது அச்சில் ஏற்றுவதற்குத்தான் இந்த நிபந்தனை. இணையம் வேறுமாதிரி ஊடகம். என் பதிவுகளை என்னைக் கேட்டும் கேட்காமலும் மறுபதிவு செய்கிறார்கள். அதைப்பற்றி நான் இங்கே கவலைப்படவில்லை. //

ஆனால் நண்பர் பைத்தியக்காரன் சொல்லும் கதையோ வேறுவிதமாக இருக்கிறதே. இங்கே பாருங்கள். பைத்தியக்காரன் அவர்களின் http://naayakan.blogspot.com/2009/07/blog-post.html என்ற பதிவிலிருந்து சில வரிகள். (நன்றி: பைத்தியக்காரன் அவர்கள்)

--பைத்தியக்காரன் அவர்கள் பதிவிலிருந்து மேற்கோள் தொடக்கம்--

”இதேபோல், ஈழம் + பிரபாகரன்: நாம் ஏமா(ற்)றிய கதை (http://naayakan.blogspot.com/2009/05/blog-post_20.html) என்று இந்த வருடம் மே மாதம், 20ம் தேதி நான் எழுதிய பதிவின் ஆரம்ப பத்தியாக, //முன் குறிப்பு: இந்தப் பதிவின் முதல் சில பகுதிகள் நண்பர் நாகார்ஜுனன் எழுதியுள்ள 'போபால்: நாம் ஏமா(ற்)றிய குறியீட்டின் கதை' கட்டுரையை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்டது. போலவே சில பத்திகளில் வரும் வார்த்தைகளும், வாக்கியங்களும் அவர் எழுதியவையே. பூக்கோவின் தமிழாக்கம் முழுக்க, முழுக்க அவருடையதே. போபால் என்று வரும் இடத்தில் மட்டும் ஈழம் என இங்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதியை அவரிடம் பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டுவிட்டு...// இப்படி குறிப்பிட்டிருந்தேன்.

இந்த இரு விஷயங்களிலும் நாகார்ஜுனனுக்கு உடன்பாடில்லை. மின்னஞ்சல் மூலம் இனி, என்னையோ, என் பெயரையோ துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.”

--பைத்தியக்காரன் அவர்கள் பதிவிலிருந்து மேற்கோள் நிறைவு--

இணைய ஊடகத்தில் யார் வேண்டுமானாலும் உங்களுடையதை எடுத்துக் கொள்ளலாம் என்று சில்வியா ப்ளாத்தைப் பற்றிக் கேட்டதும் எழுதுகிறீர்கள். ஆனால், பைத்தியக்காரன் அவர்களோ உங்கள் அனுமதி இல்லாமல், உங்களின் வரிகளை வலைப்பதிவில் (வலைப்பதிவு இணையம்தான் ஐயா! :-) ) பயன்படுத்திக் கொண்டதற்கு இனிமேல் உங்களையோ, உங்கள் பெயரையோ துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். இணைய ஊடகத்தில் என் எழுத்துகளை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்ளவே அனுமதியின்றி செய்யலாம் என்று விதியை மாற்றப் போகிறீர்களா ஐயா? பாருங்கள், எதையோ சமாளிக்க எழுதி, எங்கேயோ போய் இடிக்கிறதே.

சில்வியா ப்ளாத்தையோ மற்றவர்களையோ தாங்கள் மொழிபெயர்ப்பது பாராட்டுக்குரியது. அதை வரவேற்கிறேன். கலைச்செல்வங்கள் யாவும் எட்டுத்திக்கிலிருந்தும் தமிழுக்கு வரவேண்டும். அதைக் கொண்டுவருவோர் கொண்டாடப்படக் கூடியவர்கள். சில்வியா ப்ளாத்தைப் பற்றி நான் கேள்வி எழுப்பியதற்கு முக்கியக் காரணம், உங்கள் எழுத்தைப் பிறர் பயன்படுத்தக் கறார் நிபந்தனைகள் (இதில் இணைய ஊடகம், அச்சு ஊடகம் என்று காப்புரிமையைப் பிரித்து வேறு பொருள்படுத்துகிறீர்கள். அதுவே உண்மை என்று இருக்கட்டும். பரவாயில்லை.) விதிக்கிற தாங்கள், மற்றவர் எழுத்தை மட்டும் பரம்பரைச் சொத்து மாதிரி பயன்படுத்திக் கொள்கிறீர்களே என்பதுதான்.

தாங்கள் சொலவது: // தவிர, கல்குதிரை போன்ற சிற்றிதழ்களுக்கு லாப நோக்கோ, லாபமோ இருந்ததே இல்லை. இது சிற்றிதழ் நடத்துவோர் யாவரும் அறிந்த ஒன்றே. அதேவேளை முழுப்புத்தகம், தொகுப்பு ஆகியனவற்றைச் செய்யும்போது அனுமதி வாங்க வேண்டிய தேவை வருகிறது. காப்புரிமைச் சட்டங்கள் வந்துவிடுகின்றன... //

சிற்றிதழ்களுக்கு லாப நோக்கோ, லாபமோ இருந்ததே இல்லை என்று இப்போது இந்தப் பதிவில் எழுதுகிறீர்கள். அப்படியென்றால், சிற்றிதழில் வெளியிட விரும்புவோரும் தங்கள் அனுமதி பெற வேண்டும் என்று முன்னர் தாங்கள் எழுதியது முரண்பாடு இல்லையா? புத்தகமாகப் போட விரும்புவோரும் குமுதம், விகடன் போன்ற பெரிய வர்த்தக நிறுவனங்களின் பேரிதழ்களும் அனுமதி பெற வேண்டும் என்றுதானே தாங்கள் அறிவித்திருக்க வேண்டும். என்னவோ போங்கள். தாங்கள் விளக்கம் சொல்லச் சொல்ல எனக்கு இப்படிப் புதிய கேள்விகள் உங்கள் வரிகளில் இருந்தே எழுகின்றனவே.

பொதுவாக வலைப்பதிவுகளில் யாரும் உடன்படாததை எழுதினால் அங்கு சென்று மாற்றுக் கருத்து எழுதுகிற பருவத்தை நான் கடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்க்கிறேன். ஏனெனில்,அக்கருத்துகளால் மனக்கஷ்டம் நேருவதுதான் நிகழ்கிறது. நிதானமான, கோபமற்ற உரையாடல்கள் வலைப்பதிவில் ஏற்கனவே நன்றாக அறிந்தவர்களிடையெதான் நிகழ்கின்றன. அந்தக் காரணத்தினாலேயே, உங்களைப் பற்றி எனக்கிருக்கிற கருத்தை உங்கள் வலைப்பதிவில் எழுதியதில்லை. நண்பர்கள் தமக்குள் பேசிக் கொள்கிற தளம் டிவிட்டர். அங்கே 140 எழுத்துகள் மட்டுமே என்பது ஒரு தடை என்றாலும், ஏதோ எழுதிக் கொள்கிறோம். திண்ணைப் பேச்சு மாதிரி அது. ஆனால், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து எழுதுகிறவர், தங்களைப் பற்றிச் சாரு எழுதிய கட்டுரையை மட்டும் சாய்ஸில் விடுவது ஏன் என்ற கேள்வி மட்டும் இருந்து கொண்டே இருக்கும். சாரு பல இடங்களில் வரம்பு மீறித் தனிப்பட்ட தாக்குதலாகவே உங்களைப் பற்றி எழுதியுள்ளார். அவர் கட்டுரையின் பலவீனம் அது.சாருவுக்கு உங்களைச் சொல்ல எந்த யோக்கியதையும் இல்லை. அதற்காகக் கோபப்பட்டுத் தாங்கள் பதில் எழுதாமல் இருந்தால் நியாயம். ஆனால், தாங்கள் அதற்காகக் கோபப்பட்ட மாதிரி தெரியவில்லை. ஏனென்றால்,அதைப் படித்துவிட்டும் பெரிய மனதுடன் மிகவும் நாகரீகமாக சாருவுக்குக் கடிதம் எழுதியுள்ளீர்கள். அப்படியிருக்க, அதில் அவர் சொல்லியுள்ள கருத்துகளுக்கு மட்டும் பதில் சொல்வதில் என்ன மனத்தடை இவருக்கு என்று வாசகனாகக் கேள்வி எழுகிறது எனக்கு. உங்களைப் பதில் சொல்லச்சொல்லி நிர்ப்பந்திக்க எனக்கு உரிமையும் இல்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.

தாங்கள் எழுதியது: //விமர்சிக்காமல் நழுவுவதுதான் போலித்தனம்//

இது குறித்து விளக்க்கமாக டிவிட்டரில் இன்று பதில் எழுதியுள்ளேன் - நண்பர் பாஸ்டன் பாலாஜிக்கு. நண்பர்கள் யாரும் அனுப்பி வைப்பார்கள் என்று காத்திராமல், http://www.twitter.com/ivansivan என்ற முகவரிக்குச் சென்று வாசிக்குமாறு வேண்டுகிறேன். தங்களுக்கு டிவிட்டர் ஐ.டி. இருந்தால் சொல்லுங்கள். அங்கே தொடர்ந்து பேசலாம் -இந்திய தேசிய எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் உட்பட.

அமெரிக்க விடுதலைநாள் விடுமுறையை வெளியூரில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறேன். அதனால், உடனடியாக இன்னும் ஒருவாரத்துக்கு இதேபோல பதில் எழுத சந்தர்ப்பங்கள் அமையாமல் போகலாம். ஆனாலும் தொடர்ந்து பேசுவோம்.

மற்றபடி, எந்த மொழிபெயர்ப்பு செய்தாலும் புரியும்படிச் செய்யுங்கள் என்று மட்டும் வேண்டுகோள் வைக்கிறேன். விளிம்புநிலை மனிதர்களுக்காகப் போராடுவதாக சொல்லிக் கொள்கிற அறிவுஜீவிகள், ஆரம்பக் கல்வியும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் அல்லது எழுத்துக் கூட்டி மட்டுமே படிக்கத் தெரிந்த விளிம்புநிலை மனிதர்கள் புரிந்து கொள்கிற முறையில் எழுதாவிட்டால், அப்புறம் அந்த எழுத்தும் போலி என்றாகி விடுகிறதே என்ற கவலையில் விளைகிற வேண்டுகோள் இது.

அன்புடன்,
இவன்சிவன் (எ) பி.கே. சிவகுமார்

2 comments:

நாகார்ஜுனன் said...

பி.கே. சிவகுமார்

உங்கள் ட்விட்டர் பதிவுகளைலிருந்து என் பதிவுகளை முழுமையாக நீங்கள் வாசித்ததில்லை என்று தெரிகிறது. வாசித்திருக்கிறீர்கள் என்று நம்பிக்கை வந்தால் பதிலளிக்கிறேன். அதுவரை எனக்கு நிறையப் பணி இருக்கிறது.

நாகார்ஜுனன்

PKS said...

நாகார்ஜுனன், நன்றி. எனக்கும்கூட நிறைய வேலை இருக்கிறது. ஆனால், டிவிட்டரில் எழுதப்படுகிறவற்றில் தனக்கு உசிதமான சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் போட்டுக் கொண்டு, பதிவு எழுதுகிற அளவுக்கு நான் உங்களைப்போல நேரத்துடன் அலையவில்லை என்பதும் உண்மைதானே. அறிவுஜீவியான தாங்கள் என் டிவிட்டுகளைப் பற்றிப் பதிவு எழுதுவதற்கு முன், ”நான் உங்கள் பதிவுகளை வாசித்ததில்லை. ஆதலால் பதில் அவசியமில்லை” என்ற இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருந்தால் பிரச்னையே இல்லை. பதிவும் எழுதியிருக்க மாட்டீர்கள். இப்படி பதில் வந்ததும் ஒதுங்கவும் மாட்டீர்கள். உங்கள் பிரச்னை எது என்றால் - யோக்கியர் மாதிரி முழங்க வேண்டியது. கேள்விகள் வந்தால் ஒதுங்க வேண்டியது. இதுதான் உங்கள் பிரச்னை. - பி.கே. சிவகுமார்