Friday, May 14, 2010

தினம் சில வரிகள் - 12



பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் சண்டைக்குள் கருத்து கந்தசாமியாக நுழையக் கூடாது என்று இப்போது விவேகம் வந்திருக்கிறது.விவேகத்தைப் பயன்படுத்தவிடாமல் சிலநேரம் உணர்வுகளின் வேகம் தடுக்கத்தான் செய்கிறது. நண்பர்களுக்கிடையேயான தனியுரையாடல்கள் நம் கருத்தைச் சொல்லவும், அவ்வேகத்தைத் தணிக்கவும் பெருமளவு உதவுகின்றன.

இப்படிப்பட்ட சண்டைக்குள் ஏன் நுழையக் கூடாது?

1. சண்டையிடுகிற இரண்டுபேரும் ஒன்றுசேர்ந்து நம்மைத் தாக்குகிற அளவுக்குத்தான் நம் கருத்துகள் இருதரப்பையும் விமர்சிப்பதாக அமையும். நம்மைத் தாக்கும்பொருட்டு அவர்கள் தமக்குள் சமாதானம் ஆவது நல்லதில்லை.
2. இருதரப்புக்காகவும் ஆயுதம் தாங்க, போரிட ஆதரவாளர்கள் குழு இருக்கிறது. நாம் இதில் நுழைவது, ஆபத்தானது மட்டுமில்லை நம் நேர வீணடிப்பும் கூட.
3. இருதரப்பும் இலக்கியம், சமூக அக்கறை என்ற பல்வேறு பெயர்களில் எதிராளியின் அழுக்குத் துணிகளையே துவைக்கிறார்கள் என்பதை நுட்பமாகக் கவனிப்போர் உணர முடியும்.
4. மனுஷ்ய புத்திரன் முன்பொருமுறை சொன்ன ஞாபகம். நண்பர்களுக்கிடையேயான மோதல்களில் அவர் கருத்து சொல்லாமல் மௌனம் சாதிக்கிற முறையைக் கடைபிடிப்பதாக. இருதரப்பும் உங்களுக்கு நண்பர்களாக இருக்கும்பட்சத்தில், இதுவும் ஒரு காரணமாக உதவும்.
5. தமிழ்ச் சூழலில் இவை பரபரப்புக்காக சிலகாலம் பேசப்படும்.பின்னர் பல்வேறு காரணங்களில் சண்டையிட்டோரே சமாதானம் ஆகி, அவர்களுக்கு ஆதரவாகப் பேசியவர்களோடு சண்டையிடுவர். பத்திரிகையாளர்களும் இலக்கியவாதிகளும் மாறுகிற கூட்டணி பா.ம.க.வுக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடியது. உதாரணமாக, இது வம்பை விலைக்கு வாங்கும் வேலை. அதனால் உதாரணம் வேண்டாம்.
6. இவர்கள் வெளியில் போடுகிற சண்டை மிகவும் மேன்மையானதாகவும், உள்ளுக்குள் செய்கிற திரைமறைவு பரஸ்பர குழிபறிப்பு வேலைகள் மிகவும் அசிங்கமானதாகவும் இருப்பதால் வெளிவேடத்தை நம்பி ஏமாந்துவிட முடியாது.
7. இந்தச் சண்டைகளில் தொடர்புடையவர் தவிர இலக்கியமோ, எழுத்தோ, சமூகமோ பயனடைவது இல்லை.
8. சண்டையை வேடிக்கை பார்ப்பதில் இருக்கிற சுவாரஸ்யம் அதில் பங்குபெறுவதில் இல்லை.

வேறு காரணங்கள் உங்களுக்குத் தெரிந்தால் உங்கள் பதிவில் எழுதுங்கள்.