Friday, May 14, 2010

தினம் சில வரிகள் - 13


சாமியார்கள் மீது எனக்குப் பெரும் அவநம்பிக்கை. அதை அடிக்கடி மெய்ப்பிக்க அவர்களும் தயங்குவதில்லை. என் ஆன்மீகத் தேடலுக்கு வாழ்க்கையும், தமிழின் பக்தி இலக்கியமும் உதவுகிற அளவுக்கு எந்தச் சாமியாரும் உதவ முடியுமா என்ற சந்தேகம் இருப்பதும் ஒரு காரணம். மூன்றாவதாக, குரு என்று சொல்லிக் கொள்கிறவர்களிடம் ஜாக்கிரதையாக இரு என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லித் தந்திருக்கிறார். இவற்றை மீறி நான் மதிக்கிற மற்றும் சந்திக்காமல் போய்விட்டேனே என்று நினைக்கிற சாமியார்கள் சிலரும் உண்டு. என் எழுத்தில் அப்படி யாரையும் பரிந்துரைக்கப் போவதில்லை. அப்படி யாரையும் பரிந்துரைத்தால் வெகுவிரைவிலேயே I have to eat my own words என்ற பயம் இருக்கிறது. அதனால் இப்பதிவில் நான் சொல்வதை என் தனியனுபவமாக மட்டுமே எடுத்துக் கொள்ளவும்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்திக்கிற ஆர்வம் இதுவரை வரவில்லை. இத்தனைக்கும் Guru of Joy என்கிற இவர் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறேன். ஸ்ரீஸ்ரீயின் ஆர்ட் ஆஃப் லிவிங்கில் சுதர்சன் க்ரியா உள்ளிட்ட பயிற்சிகளை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்பயிற்சிகளை யோகா,தியானம், சுவாசப் பயிற்சிகள் வகையிலேயே அடக்குவேன். அப்பயிற்சிகள் என் உடல்,மன நலனுக்கு மிகவும் உதவுகின்றன என்று நிச்சயம் சொல்வென். இன்னும் சில வகுப்புகளுக்கு அவை குறித்துக் கற்கும் ஆர்வத்தில் செல்வதுண்டு. அப்படிச் சமீபத்தில் அவருடைய அஷ்டவக்ர கீதா வகுப்புகளுக்குச் செல்கிறேன். அஷ்டவக்ர கீதா குறித்து அவர் பேசிய உரைகளைகளின் காட்சிப் பதிவை 11 வாரங்களாக பார்த்துப் பின் அதுகுறித்து உடன் பார்வையிடுவோருடன் கலந்துரையாடும் நிகழ்வு. ஏறக்குறைய இரண்டு வகுப்புகள் முடிந்துள்ளன. அடுத்துப் பதஞ்சலி யோகம் வகுப்புக்குப் போகலாமா என யோசனை.

அஷ்டவக்ர கீதாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு இணையத்திலேயே பலர் எழுதிக் கிடைக்கிறது. Bart Marshall என்றவரின் மொழிபெயர்ப்பு என்னிடம் உள்ளது. ஆங்கிலத்தில் அதைப் படிக்கும்போது அதில் தெரிகிற கவிதையுணர்வு,மொழியின் அழகு ஆகியன ஸ்ரீஸ்ரீயின் பேச்சில் இல்லை. மேலும், தத்துவத்தை விளக்குவதை இரண்டாகப் பிரிக்கலாம். வெகுஜனங்களுக்குப் புரியும்வகையில் மேலோட்டமாக, நகைச்சுவைத் துணுக்குகள் சேர்த்து விளக்குவது. ஆழ்ந்து கற்க விரும்புவோருக்காக உள்ளே சென்று விளக்குவது. ஸ்ரீஸ்ரீ உள்ளிட்ட எனக்குத் தெரிந்த சில சாமியார்கள் வெகுஜனங்களுக்குப் புரியும்வகையில் விளக்குகிற விதத்தைக் கையாளுகிறார்கள். ஆகையால், இவ்வகுப்புகளில் எனக்கு எளிய பொழிப்புரை தவிர பெரிதாக ஒன்றிரண்டு கிடைத்தால் பெரிய விஷயமாக இருக்கிறது. என்னின் இக்கருத்து பற்றியல்ல நான் பேச வருவது. ஸ்ரீஸ்ரீ போன்றவர்கள் இப்படி எளிமையாகப் பேசுவதன் மூலம் அவர்கள் கேட்போரிடம் கனெக்ட் ஆகிறார்கள், விஷயத்தை எடுத்துச் செல்கிறார்கள் என்பதைக் கேட்போர் சொல்லத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். எனக்குப் புரிகிற மாதிரி சொன்னார், என்னால் அவர் சொல்வதோடு ஒத்துப் போக முடிகிறது, அவர் சொல்கிற மாதிரி உதாரணம் எனக்கும் தெரியும் என்ற வகையில் பார்வையாளர்கள் உண்மையாகவே பேசுகிறார்கள்.

ஸ்ரீஸ்ரீயின் பலம் எதுவென்றால், மிகவும் நிதானமாகப் பேசுகிறார். கருத்தைச் சொல்ல அவசரமே படுவதில்லை. எப்போதும் சிரித்த முகம். சாதாரணமான விஷயங்களைக் கூட கேட்பவர் நகைச்சுவை என்று நினைத்துச் சிரிக்கிற் மாதிரி சொல்கிற டெலிவரி. இலக்கியவாதிகளும், அறிவுஜீவிகளும், நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறவர்களும் எளிமையுடன் சொல்லவந்ததை எப்படி pleasant ஆகச்சொல்வது என்று இப்படிப்பட்ட கார்பரேட் சாமியார்களிடம் கற்றுக் கொள்ளலாம்.

அடுத்ததாக,இணையத்தில் எழுதுகிற சுவாமி இவர். இவர் எழுதுகிற எல்லாப் பதிவுகளையும் நான் படித்ததில்லை. சோதிடம் குறித்த பதிவுகள் பக்கம் போவதில்லை. நம்பிக்கையின்மையினால் மட்டும் அல்ல. அவற்றைப் பொறுமையாகப் படித்துக் கற்க நேரமில்லாத வாழ்க்கை என்னுடையது. யாரும் நேரடி வகுப்பெடுத்தால் சோதிடம் கற்றுக் கொள்ள ஆசைதான். இவர் பின்னூட்டங்களில் பதில் சொல்கிற விதத்தில் முதலில் என்னைக் கவனிக்க வைத்தார். யார் எவ்வளவு உசுப்பேற்றினாலும், கிண்டல் செய்தாலும் நிதானமும் பண்பும் முதிர்ச்சியும் அடக்கமும் தவறாது பதிலளிக்கிறார். இவையெல்லாம் வெளிவேடங்களாக இருந்தால் என்ற கேள்வி ஆரம்பத்தில் எழுந்திருக்கிறது. எவ்வளவு நாள் ஒருவர் இப்படி நடிக்க முடியும் என்று சொல்லிக் கொள்வேன். நான் படித்தவரை அதே நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்கிறார். அறிவியல் வளர்ச்சி, நவீன உலகம் என்று காலத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடைய சாமியார்கள் மீது, they have sense of time என்ற எண்ணம் எனக்கு உண்டு. தான் பார்த்த,படித்த சாமியார்களிலேயே ஜக்கி வாசுதேவுக்குத்தான் sense of time இருக்கிறது என்று சுந்தர ராமசாமி ஓர் அமெரிக்கச் சந்திப்பில் சொன்னார். இங்கே தயானந்த சரஸ்வதியின் சீடரொருவர் குழந்தைகளுக்கான பாலவிஹாரில் மடிக்கணினி வைத்து ஸ்லைடு ஷோ போட்டு சம்ஸ்கிருதப் பாடல்களை அவற்றின் ஆங்கில மொழியாக்கத்துடன் கிடாரில் இசைத்துச் சொல்லித் தருகிறார். தெரியாத சம்ஸ்கிருத மொழியில் அப்பாடல்களைக் கற்பதில் பயனில்லை.ஆங்கில மொழியாக்கம் பொருளறிய உதவும் என்று அவர் சொல்லுவார். இந்தச் சாமியார் வலைப்பதிவில் எழுதுவது அவருக்கு அறிவியல் வளர்ச்சியின் மீது இருக்கிற கவனிப்பைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். முக்கியமாக, இந்தச் சாமியாருக்கு மதநல்லிணக்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இது இவரை நான் கவனிக்க இன்னொரு முக்கியக் காரணம். இணையத்தில் ஹிந்து மதத்தின் பெயரில் செயற்படும் அடிப்படைவாத இணையதளங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிற விபத்தில் இதுவரை இவர் சிக்கவில்லை என நினைக்கிறேன். இந்தச் சாமியாரை வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து அவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று இருக்கிறேன். அவர் சுவாமி ஓம்கார்.