Friday, May 14, 2010

தினம் சில வரிகள் - 14


இன்று டிவிட்டரில் ரைட்டர்பேயோன் என்ற பெயரில் இருக்கும் அன்பருடன் டிவிட்டரில் ஓர் சிறு உரையாடல். அவர் டிவிட்டுகள் புத்தகமாக வந்திருக்கின்றன என படித்தேன். வாழ்த்துகள். அவர் யாரென்று எனக்குத் தெரியாது. இணையத்தில் எந்தப் பெயரில் எழுதுகிறவர் யாரென்று அறிந்து கொள்கிற ஆர்வம் இப்போது பெருமளவு எனக்குக் குறைந்துவிட்டது. ஆதலால், அவர் யாரென்று அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அவரிடமே கேட்கவும். உரையாடல் வானம்பாடி இயக்கத்தில் தொடங்கி டிவிட்டரில் எழுதுவது இலக்கியமா என்பதில் வந்தது. ”டிவிட் ஒரு புதிய தனித்துவ இலக்கிய வடிவம், இலக்கிய வடிவங்கள் காலப்போக்கில் உருவாகின்றன” என்றார் அவர். இலக்கிய வடிவங்கள் காலப்போக்கில் உருவாகின்றன என்பது எனக்கும் ஏற்புடையதே. புதுக்கவிதை அப்படி வந்ததுதானே.

டிவிட் இலக்கிய வடிவமா என்பதுதான் பற்றி எனக்குக் கேள்வி எழுகிறது. இது குறித்து உரத்துச் சிந்திக்க டிவிட்டரைவிட வலைப்பதிவு மேலென்பதால் இங்கே எழுதுகிறேன். டிவிட்டரேச்சர் என்ற நூலைப் படித்திருக்கிறீர்களா என்றெல்லாம் ரைட்டர்பேயோன் கேட்டார். 20 டிவிட்களில் நான் இராமாயணத்தையோ,மகாபாரதத்தையோ சொல்லிவிட்டால் அது இலக்கியம் ஆகிவிடுமா? 2000 பக்கங்களில் சிலர் சொல்லியும் அது இலக்கியம் ஆகவில்லையே. சோஷியல் நெட்வொர்க்கிங் இணைய வடிவங்களில் வலைப்பதிவு பல இலக்கிய வடிவங்களைச் செயல்படுத்தும் கருவியாக உள்ளது. ஆனாலும் வலைப்பதிவு இலக்கிய வடிவம் என்று பலரும் அவற்றை வகைப்படுத்துவதில்லை.வலைப்பதிவில் வந்த கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்றே தனித்தனியாகத் தொகுக்கிறார்கள். அவை இலக்கியம் ஆகுமா என்பது வேறு கேள்வி. ஆகும், ஆகாமல் போகலாம். அப்படி டிவிட்டரில் என்ன எழுதலாம்? 140 எழுத்துகளுக்குள் குறும்பா, குறள், புதுக்கவிதை, சிறுகதை,உரைநடை என இலக்கிய வடிவங்களைக் கொணரலாம். அப்போதும் அவை அவற்றின் மூலப் பெயர்களைக் கொண்டிருக்குமா (குறும்பா, குறள், புதுக்கதை, உரைநடை, சிறுசிறுகதை) அல்லது டிவிட்டிலக்கியம் எனப்படுமா என்பது இன்னொரு கேள்வி.ஒப்பிட்டு பார்க்கும்போது இணைய இதழ்கள், வலைப்பதிவு, டிவிட்டர் ஆகியன ஒப்பீட்டளவில் ஊடகங்கள். உதாரணத்துக்கு, செய்தித்தாள்,வார இதழ், மாத இதழ் போன்றவை. அவற்றின் பெயரில் இலக்கிய வடிவம் என்று அழைக்க ஆரம்பித்தால், செய்தித்தாள் இலக்கிய வடிவம், வார இதழ் இலக்கிய வடிவம், மாத இதழ் இலக்கிய வடிவம் என்று சொல்லியிருப்போம். அப்படி நாம் சொன்னதில்லை. ஊடகம் எதுவாக இருப்பினும் வடிவமென்பது ஊடகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை. அப்படித்தான் டிவிட்டர் ஊடகத்தில் எழுதுவதையும் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஆதலால், டிவிட் ஓர் இலக்கிய வடிவம் என்கிற கருத்து எனக்கு இப்போது ஏற்புடையதில்லை. டிவிட்டர் ஓர் இலக்கிய ஊடகம் என்று சொல்லலாம். அதில் வருகிற டிவிட்கள் பல இலக்கிய வடிவங்களைக் கொண்டிருக்கலாம். (கதை,கவிதை,உரைநடை).அனைத்தையும் டிவிட் என்ற பொதுவடிவின் கீழ் அடக்குவதும் சரியாக இருக்காது.

என் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன். அம்மாற்றுக் கருத்துகள் கன்வின்ஸிங்காக இருக்கும் பட்சத்தில் என் கருத்துகளை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.