Sunday, May 02, 2010

தினம் சில வரிகள் - 3


கமல்ஹாசன் முயற்சியில் மய்யம் பத்திரிகை மீண்டும் வரவிருக்கிறது என்று இரா.முருகன் எழுதியிருந்தார். வளர்மதி தலைமையிலான ஆசிரியர் குழு பத்திரிகையின் வடிவம், உள்ளடக்கம்,தொடர்ச்சியான வெளியீடு ஆகியவற்றைப் பார்த்துக் கொள்ளும் என்று தெரிகிறது. தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.

”கமல்ஹாசன் எழுத்தும் புரியாது, வளர்மதி எழுத்தும் புரியாது, ஆகையால் நல்ல கூட்டணிதான்” என்று நண்பரொருவர் ஜோக்கடித்தார். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் வலைப்பதிவு வழியாக,வளர்மதியை சொற்பமாகப் படித்திருக்கிறேன். அதில் தமிழில் தத்துவம்,மேலை இலக்கியம் உள்ளிட்ட விஷயங்களைத் தொட்டு எழுதியவர்களில் ஓரளவு நான் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எழுதியவர் வளர்மதி. மய்யம் பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்குப் பொறுப்பேற்கும் அளவுக்கு அறிவும், திறமையும் வளர்மதிக்கு நிச்சயம் உண்டு. உரையாடல்களில் பொறுமை,ஆசிரியர் குழுவை நெளிவு சுளிவுடன் நிர்வகிக்கும் மேலாண்மை, தனக்கு அதிகம் தெரியும் என்ற அதீத நம்பிக்கையைச் சற்றுத் தள்ளி வைத்தல், தான் சுமக்கும் கடந்தகால அரசியல் மற்றும் இலக்கிய சர்ச்சை சிலுவைகள் மய்யத்தைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளல் ஆகியவற்றில் வளர்மதி கவனம் செலுத்தினால் மய்யம் பத்திரிகையில் நிறைய எதிர்பார்க்கலாம்.

மேலாண்மை, நிர்வகித்தல் உள்ளிட்டவற்றை என் வேலை, ஈடுபட்ட தன்னார்வலப் பணிகள் தொடர்பாக நான் இங்கே நிறைய செய்த அனுபம் உண்டு. அது ‘வார்த்தை’ இதழை நடத்த பெரிதும் உதவியது. என்றாலும், ஆசிரியப் பொறுப்பில் இருப்பவர்க்கு, பெருந்தன்மையும், பொறுமையும், உடன்படாக் கருத்துகளுக்கு இடம் கொடுக்கும் பக்குவமும்,கருத்துகளை மறுப்பதில் நாகரீகமும் வேண்டும் என்பதை அப்போது இன்னும் உணர்ந்தேன். ஆகையால், மய்யம் பத்திரிகைப் பொறுப்பு வளர்மதிக்கு ஒரு சவால். அந்தச் சவாலில் வெல்வது அவர் கைகளில் மட்டுமே உள்ளது.

கமல்ஹாசனுடன் சேர்ந்து பணிபுரிவதற்கே வளர்மதிக்கு எதிராக கருத்துகள் அவருக்கு ஆகாதோரால் இங்கே வைக்கப்படும். தூண்டப்படினும் எதிர்வினையாற்றாமல், அவற்றைப் புறக்கணிப்பதில் வளர்மதியின் வளர்ச்சி உள்ளது.